.

Pages

Monday, March 5, 2012

அதிரையின் “விருந்தோம்பல்” பண்புகள் !


விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஓன்று. நமதூரில் எவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன...............?
1.       திருமண வலீமா விருந்து
2.       வீடு குடிபுகுதல் விருந்து
3.       விருந்தாளிகளுக்கு வைக்கப்படும் விருந்து
4.       நண்பர்களுக்கு வைக்கப்படும் விருந்து
5.       ஹஜ் செல்லும்போதும் / முடித்துவிட்டு வரும்போதும் வைக்கப்படுகின்ற விருந்து
6.       பெருநாள் விருந்து
என இவ்வாறெல்லாம் விருந்துகள் உபசரிக்கப்படுகின்றது.
“லுஹர்”த் தொழுகை முடித்தவுடன் வைபவங்கள் நடக்கும் வீட்டின் அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு அல்லது  திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இம்மதிய விருந்துகள் உபசரிக்கப்படுகின்றன. ஊரிலே “கலரிச் சாப்பாடு” என்றொரு பெயரிலும் இவற்றை அழைப்பதுண்டு.
இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஏழை, பணக்காரான் என்றப் பாகுபாடுகள் இல்லாமல் தமிழகத்திலேயே “சஹனில்” ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய ஊர்களில் நமதூரும் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.


“ஐந்து கறி” என்று விருப்பமாக அழைக்கப்படும் இவ்வுணவை அனைவர்களும் விரும்பி சாப்பிடுவது கூடுதல் சிறப்பாகும். இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் தயாரிக்கப்படுகிற கம கம மணத்துடன் நெய்ச் சோறு, செம்மறி ஆட்டுக்கறியில் கூடுதல் ஆயில் ( ! ) இட்டு தயாரிக்கப்படுகிற கறி ஆணம், நாவிற்கு சுவையைக்கூட்ட நாட்டுக் கத்தரிக்காயில் பச்சடி, உருளையில் குருமா, செரிமானத்திற்கு என்று சொல்லியே ( ! ? ) அனைவரும் விரும்பி பருகக்கூடிய புளியானம் ( ரசம் ) போன்றவைகள் ஒரு வகையாகவும்.................................
மற்றொன்று “பிரியாணி” நமதூருக்கே பெருமை சேர்க்கக்கூடிய உணவாகவும் அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணக்கூடியதாகவும் உள்ளது. இவை சீராகச் சம்பா, துளசி பழையது, பாஸ்மதி போன்ற உயர் ரக அரிசியில் சமமான அளவு செம்மறி ஆட்டுக்கறிச் சேர்த்து தயாரிக்கப்படுகிறப் “பிரியாணி” சுவையாகவும், நறுமண மிக்கதாகும் இருக்கும். மேலும் கூடுதலாக துண்டுகளிட்ட பொரிச்ச கோழி, வெங்காயத் தயிர் ஊறுகாய், எலுமிச்சை கலரி ஊறுகாய் போன்றவைகள் இவற்றில் இடம்பெற்றிருப்பது வயிறார உண்பதற்கு கூடுதல் சிறப்பாகும்.
“தால்ச்சா”..............!  இதன் ருசியே தனி, “ஐந்து கறி, “பிரியாணி” போன்ற சாப்பாடுகளுக்கு கூடுதல் இணைப்பாக இவை அதில் இடம்பெற்றிருக்கும்.
இனிப்பு வகைகளாக..............................
1.       சேமியாவில் தாயாரிக்கப்படுகிற “பிர்னி”
2.       “பீட்ரூட்”டில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
3.       கோதுமையில் தயாரிக்கப்படுகிற இனிப்பு
4.       ரவாவில் தாயாரிக்கப்படுகிற “கேசரி”
5.       பேரிட்சை பழத்தில் தாயாரிக்கப்படுகிற இனிப்பு
போன்றவைகளில் ஏதாவது ஓன்று இவ் “ஐந்து கறி” மற்றும் “பிரியாணி” உணவில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் ஒவ்வொரு சஹனிலும் மூன்று தண்ணிர்ப் பாக்கெட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கும்.
“ஐந்து கறி” , “பிரியாணி” போன்ற உணவுகள் திருமண நிகழ்ச்சிகள், வீடு குடி புகுதல், ஹஜ் செல்லும்போது / முடித்துவிட்டு வரும்போது என இதுபோன்ற தினங்களில் மதிய உணவாக ஒவ்வொரு சஹனிலும் தலா மூவர் வீதம் அமர்ந்து பரிமாறுவார்கள்.  
“மறு சோறு” போதும்........ போதும்........ என்று சொல்லும் அளவுக்கு அனைவர்களுக்கும் வழங்கி தங்களின் சகோதரத்துவ அன்பைக் காட்டுவார்கள்.

“வாங்க “காக்கா” !
பேப்பரு தாங்க......
மூணு பேரா உட்காருங்க....
அங்கே ஒரு சஹன் வைங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே.......
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க ! “

இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் “கலரிச் சாப்பாட்டில்” அங்காங்கே ஒலித்துக்கொண்டே இருக்கும்........................

என்ன சகோதர்களே ! உங்களுக்கும் அப்படி ஒலித்தா......................?

கவனத்தில் கொள்ளவேண்டியவை :
வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம் ( இன்ஷா அல்லாஹ் ! )


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால்  !   தொடரும்.....................

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers