ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது "குளு குளு குற்றாலம்'தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.
தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொஞ்சி உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இ.ந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் "குற்றால சீசன்' என அழைப்பார்கள். குற்றாலச் சாரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களையும் மகிழ்விப்பது உண்டு.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைச் செடி கொடிகளில் கலந்து வருவதால் குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீருக்குத் தனி மவுசு உண்டு. இங்குள்ள அருவிகளில் குளிப்பதே தனி சுகம். ஒரே நாளில், எத்துணை முறை, எத்துணை அருவியில், எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொண்டு குளிக்கலாம் சலிப்பே வராது என்பது கூடுதல் சிறப்பு.
இவை அதிரைப்பட்டினத்திலிருந்து ஏறக்குறைய 357 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மொத்தம் 9 அருவிகள் உள்ளன. இவற்றில் பாலருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவை தவிர மற்ற 6 அருவிகளும் மக்கள் அதிகம் விரும்பும் அருவிகளாக உள்ளன. குறிப்பாக, பேரருவியில் அதிகக் கூட்டம் காணப்படுவது உண்டு.பேரருவி: "மெயின் பால்ஸ்” என அழைக்கப்படும் பேரருவிதான் குற்றாலத்தில் பிரதானமானது. தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்படும். பெண்கள் குளிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
செண்பகா அருவி: பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல கட்டுப்பாடுகள் உள்ளன.
தேனருவி: செண்பகா அருவியின் மேல் பகுதியில் உள்ள தேனருவியின் அருகே பாறைகளுக்கு நடுவில் அதிக அளவில் தேன்கூடுகள் காணப்படும். இதனால் தேனருவி என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்த அருவியில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி: பேரருவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது ஐந்தருவியைத்தான். பேரருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவதால் “ஐந்தருவி” என அழைக்கப்படுகிறது. இதில், பெண்கள் குளிப்பதற்கென்று ஒரு கிளை அருவியும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக மூன்று கிளை அருவிகளும் உள்ளன. ஐந்தாவது கிளையில் தண்ணீர் வருவது குறைவு.
பழத்தோட்ட அருவி: “முக்கியஸ்தர் அருவி” என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்படும் இந்த அருவி, ஐந்தருவியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாதாரண மக்கள் இந்த அருவியின் அருகில் செல்லவே முடியாது.
பழைய குற்றால அருவி: குற்றாலம் பேரருவியில் இருந்து கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழைய குற்றாலம். பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளிப்பவர்கள் நிச்சயமாக பழைய குற்றால அருவியிலும் நீராடிச் செல்வது வாடிக்கை.
படகு சவாரி: ஐந்தருவிக்கு அருகே அமைந்துள்ள குளத்தில் படகு சவாரி செல்வது தனி சுகம். இந்தக் குளம் விவசாய குளம் என்பதால் சீசன் காலங்களில் மட்டும் படகு சவாரி நடைபெறும்.
மஸ்ஜீத் ஜாமிஆ : சில வருடங்களுக்கு முன் புதிய பொலிவுடன் புதுப்பிக்கப்பட்ட இம் மஸ்ஜித்தால் இச்சுற்றுலாத் தளத்திற்கு வந்துசெல்லும் முஸ்லீம் சகோதரர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், ஏறக்குறைய ஐந்து ஆயிரம் பேர் அமர்ந்து தொழக்கூடிய பகுதியையும் பெற்றுள்ள இவை ஐந்தருவிச் செல்லும் பாதையில் அமையப்பெற்றுள்ளது.
சாரல் திருவிழா : ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' என்ற பெயரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மூலிகை எண்ணெய் : தலையில் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய். இது உடல் சூட்டைத் தணிக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இங்கே விற்பனை செய்யப்படுகிற சந்தனாதி தைலம், அரைக்கீரை தைலம், பொன்னாங்கன்னி தைலம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் வாங்கி நமது உடலில் நன்றாகத் தேய்த்தும் குளிக்கலாம். இந்த மூலிகை எண்ணெய்களில் "போலி'கள் ஏராளம் என்பதால் கவனத்துடன் வாங்க வேண்டும்.
பழங்கள் : குற்றாலத்தில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களான மங்குஸ்தான், ரம்டான், துரியன், முட்டைப்பழம், மனோரஞ்சிதம் பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஹல்வா : “இருட்டுக்கடை” அல்வா, சுடச்சுட “திருநெல்வேலி” அல்வா, “மஸ்கோத்” அல்வா போன்றவைகளும், பல்வேறு சிப்ஸ் வகைகளும், நறுமணமிக்க மசாலா பொருட்களும், கருப்பட்டி, பனங்கல்கண்டு, மலைத்தேன், திருவில்லிபுத்தூர் பால்கோவா போன்றவைகள் கிடைக்கின்றன.
கவனத்தில்கொள்ள வேண்டியவை :
1. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியாகவுள்ள குற்றாலத்தில் பொது சுகாதாரச்சட்டம் 1939 பிரிவு 84, 85 மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011’ன் படி பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த அல்லது சேமித்து வைக்க தடை செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென்று அரசு விடுதிகள் மற்றும் தனியார் விடுதிகள் ஏராளமானவை உள்ளன. மேலும் குடும்பத்துடன் தங்குவதற்கென்று சமையல் வசதிகளுடன் கூடிய வீடுகளும் தின வாடகைக்கு கிடைக்கின்றன. இவற்றில் தங்குவதற்கு அதிகபடியான கட்டணம் வசூல் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க முன்வர வேண்டும்.
3. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கிடும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் “விலை மற்றும் பொருட்களின் தரம் “ போன்றவற்றை கண்காணிக்க முன்வர வேண்டும்.
4. குற்றாலம் அருவி பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள், தரமற்ற தண்ணீர் பாட்டில்கள், அழுகிய பழங்கள் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகின்றனவா ? என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
5. குற்றவியல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு பணிகளை காவல்துறையினர் மேலும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதிரைப்பட்டினத்திலிருந்து வழித்தடம் ?
பஸ் ரூட் : பட்டுக்கோட்டை – மதுரை – தென்காசி – குற்றாலம்
ட்ரைன் ரூட் : 1. தஞ்சை – திருநெல்வேலி , 2. திருச்சி – தென்காசி
பயணச்செலவுகள் : “ப்ளீஸ்” அதே மட்டும் கேட்காதிங்க...
சேக்கனா M. நிஜாம்
இறைவன்
நாடினால் ! தொடரும்....
மிக்க நன்றி சேக்கனா M. நிஜாம் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் அருகையான படத்துடன் சிறந்த கட்டுரை.வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி சேக்கனா M. நிஜாம் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும்