.

Pages

Tuesday, August 28, 2012

பள்ளிக் ‘கல்விக்குழு’ சீரும் சிறப்பா செயல்படுதா !?



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இக்குழுவின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும் என்பது அரசால் குறிப்பிடப்படுகிறது.

குழுவின் நிர்வாகிகள் :

1. குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள்
அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு
உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.

3. பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.

4. இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில்
விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

குழுவின் பணிகள் : 

1. ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. இப்பகுதியை சுற்றி வசிக்கும் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும்,     அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

4. குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக
கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் : 

1. ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு
குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது
துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.

3. பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

5. பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும்.

சரி விசயத்திற்கு வருவோம்....

அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்விக் கூடங்கள் பல உள்ளன. இவற்றில் நிர்வாகிகளாக செயல்படுபவர்கள் நான்கில் மூன்று பங்கினர் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் அரசின் விதிக்கு மாற்றமாகவே இக்குழுவின் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதாவது குழுவின் தலைவரின் பிள்ளைகள் தான் பொறுப்பு வகிக்கும் அந்தந்த பள்ளிகளில் கல்வி பயில வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர் எனச் சொல்லி பதவி விரும்புவோர், அவருக்கு வேண்டியவர், இவருக்கு நெருக்கமானவர், தெருவாசிங்க, இவரு முக்கிய புள்ளிப்பா ன்னு சொல்லி தொடர்ந்து பொறுப்பில் இருப்பது அரசால் குறிப்பிடப்படும் நிர்வாகக்குழு முறைக்கு மாற்றமாகவே உள்ளன.

சரி இவ்வாறு தொடர்ந்து பொறுப்பில் இருக்கும் இவர்களால் மாதத்துக்கு ஒருமுறையாவது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோர் பங்களிப்புடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றின் நிலை என்ன ? பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ? ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை எவ்வாறு அமைய வேண்டும் ? பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் எவ்வாறு இருக்க வேண்டும் ? என இதுபோன்ற ஆலோசனைகள் செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு வருடம் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் பள்ளியின் சார்பாக நடைபெறும் கொடிஏற்றம் நிகழ்ச்சிக்கும், ஆண்டு விழா நிகழ்ச்சிக்கும், அரசால் வழங்கும் நிதி உதவியை பெற காசோலையில் கையொப்பம் இடுவதற்கும் அதன் நிர்வாகிகள் சார்பாக ஓன்று கூடுதல் நடைபெறுவதாக ஒரு கருத்து நிலவுகின்றன.

பள்ளிகளின் தலைமை ஆசிரிய ஆசிரியைகளுக்கு அன்பான வேண்டுகோள் !

சமூக மேம்பாட்டுக்கும்,  மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. உங்களால் கற்றுத்தருகிற இக்கல்வி அவர்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் உதவ வேண்டும். இக்கல்வியை திறம்பட கற்பித்தல் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி அவர்களால் நம் சமூகம் முன்னேற்றமடைவதோடு மட்டுமல்லாமல் நமது நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

இதற்காக அரசால் குறிப்பிடப்படுகின்ற பள்ளிக் ‘கல்விக்குழு’வின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுடையோரை இனங்கண்டு அவர்களை நியமனம் செய்வதன் மூலம் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இதனால் மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகள் சிறப்பானவையாக அமையப்பெற்று பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் உயர்ந்து காணப்படும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

1 comments:

  1. அருமையான பதிவு.
    நிஜாம் காக்கா வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers