.

Pages

Friday, August 17, 2012

குடை அப்பாவின் "EID MUBARAQ" !



பள்ளிவாசலில் ஈத் தொழுகைக்கு ஓதப்படும் தக்பீர் ஒலித்துக் கொண்டிருந்தது. சாரை சாரையாய்ப் புது ஆடைகள் அணிந்தும், தலையில் விதவிதமான தொப்பிகள் அணிந்தும் பெரியவர்கர்ளும் சிறுவர்களும் பல்வேறு வாசனைத் திரவியங்களின் வாசனையைப் பரப்பியபடி பள்ளிவாசலில் குழுமியபடி இருந்தனர். பள்ளிவாசலின் முக்கால் வாசிக்கும் அதிகமான முன் வரிசைகள் நிரம்பி விட்ட நிலையில் வந்து கொண்டிருந்தவர்கள் பின் வரிசைகளில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

அனைவரும் தக்பீர் உச்சரித்துக் கொண்டிருந்த வேளையில் குடை அப்பா மட்டும் அனைவருக்கும் ஒரு பெரிய தட்டில் இருந்த பேரீச்சம் பழங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். குடை அப்பாவைப் பார்த்த அனைவரின் முகங்களிலும் ஆச்சரியம் படர்ந்திருக்க தக்பீர் ஓதிக் கொண்டிருந்த சிலர் அப்சலைப் பற்றி பக்கத்திலிருந்தவர்களிடம் ஏதோ கூறி புன்னகைத்துக் கொண்டனர்.

குடை அப்பா இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அதற்குள் தொழுகை நேரம் நெருங்கிவிட, தொழுகையை நடத்திட இமாம் எழுந்து நிற்க, அதுவரையிலும் தக்பீர் ஓதிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவரைப் பின் தொடர்ந்து எழுந்து நின்றனர். அங்கே திடீரென ஒரு நிசப்தம். இமாம் தொழுகையைத் துவங்கி முடித்து குத்பா ஓதிக்கொண்டிருந்தார்.

குடை அப்பாவைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறிக் கொண்டிருந்ததில் காரணம் இல்லாமலில்லை. குடை அப்பாவுக்கு வயது எப்படியும் அறுபதைத் தாண்டியிருக்கும். இந்த வயதிலும் நல்ல திடகாத்திரமாய் இருந்தார். சோன்பப்டியை நினைவு படுத்தும் தலைமுடி. வெள்ளையில் கொஞ்சமாய் கருப்பு கலந்த குறுந்தாடி. அனைவரிடமும் கலகலப்பாய் பேசும் சுபாவம். தேடி வருபர்களுக்கு எப்படியும் உதவும் மனப்பான்மை. சாதி மதம் பாராமல் அனைவருடனும் பழகும் போக்கு. பெருநாளுக்குப் பெருநாள் மட்டுமே பள்ளிவாசலில் தென்படும் பழக்கம்.

மற்ற நாட்களில் யாராவது, "என்ன அப்பா பள்ளிவாசல் பக்கமே பார்க்க முடியலியே ! பள்ளிவாசலுக்கும் வாங்க அப்பா. அல்லாஹ்வோட கொடை கிடைக்கும் "என்று சொன்னால்" நான் என்னப்பா  பாவம் பண்றேன்! எல்லாம் அவனுக்குத் தெரிந்தது தானே" என்று பதில் சொல்வதிலிருந்தே கேட்டவர் "இவனைக் கேட்டதைக் காட்டிலும் சும்மா இருந்திருக்கலாமே ! அப்படின்னா பள்ளிவாசல் போறவங்க எல்லாமே பாவம் பண்ணியவங்களா !" என்று நொந்து கொள்ளச் செய்து விடுவார். வெள்ளிக்கிழமைகளில் கூட மற்றவர்கள் கடைகளை மூடிவிட்டு பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருக்க இவர் மட்டும் கருமமே கண்ணாய் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார். மழைக்காகக் கூட பள்ளிவாசல் பக்கம் ஒதுங்கி இவரை யாரும் பார்த்திருக்க முடியாது.

அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அவருக்குள் அந்த அளவுக்கு விரக்தி இருந்தது. தந்தை அவர் பிறப்பதற்கு முன்பே ஓர் விபத்தில் இறந்து விட்டார். பின்னர் வயது முதிர்ந்த தாத்தாவின் பொறுப்பில் சேர அவர் அரைஞாண் கயிறு விற்றுக் கிடைத்த சொற்ப வருமானத்தில் தன்னையும் பேரனையும் இருவேளை வயிறு வளர்க்கப் பெரும்பாடு பட்டார். அவரும் ஆறு வயதாக இருக்கும் போது ஒரு மழை நாளில் இரவு வீடு திரும்பும் போது சாலையில் அறுந்து கிடந்த மின்சாரக்கம்பியில் கால் பதித்து மின் அதிர்ச்சியால் இறையடி சேர அன்று முதல் இன்று வரையிலும் எத்தகைய ஒட்டும் உறவும் எவரோடும் இல்லாமலேயே காலத்தைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு எதிர் நீச்சல் போட்டு உழைத்து இன்று ஒரு சிறுகடை வியாபாரியாய் திருமணம் கூட செய்து கொள்ளாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏட்டுக் கல்வியோ, மதப் போதனையோ, பந்த பாசமோ எதுவுமே அவருக்குக் கிடைக்காததும் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அவரின் தற்போதைய சொத்து நற்பெயரும், நல்ல நண்பர்களுமே.

இப்படியாக இருந்தவர் இந்த ரமலான் மாத துவக்கத்திலிருந்தே தவறாமல் நோன்பு நோற்பதும், ஐந்து வேளைத் தொழுகைக்கு தவறாமல் பள்ளிக்குச் செல்வதும், நோன்பு திறப்பதற்கு நெடுநேரம் முன்னதாகவே பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் கஞ்சிக் குவளைகளில் நோன்பாளிகளுக்காகக் கஞ்சி பரிமாறுவதும், தண்ணீர்,பழங்கள் பரிமாறுவதும், குர்ஆன் ஓதுபவர்களுக்குக் குர்ஆனை விநியோகிப்பதும், நோன்பு திறந்து முடித்த பின் அவ்விடத்தைச் சுத்தம் செய்வதும் என்று பணிவிடைகள் செய்வதும், இதற்கு முன் அவரைப் பள்ளியில் பார்த்திராத அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததில் வியப்பேதுமில்லை.

இமாம் குத்பாவை ஓதி முடித்த பின் அனைவரும் எழுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஈத் முபாரக்! என்று கூறி வாழ்த்துக்களைப் பரிமாற குடை அப்பாவையும் பலரும் சூழ்ந்து முறையாய் வாழ்த்த குடை அப்பாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். குடை அப்பாவை நோக்கிப் பலரும் தேடிவந்து வாழ்த்த குடை அப்பாவின் கண்களோ வேறு எவரையோ தேடின.

திடீரென அவரின் கண்களில் ஒரு ஒளி. அவர் தேடிக் கொண்டிருந்த சிறுவன் மீராஷா . எப்போதாவது தன் தந்தையுடன் கடைக்கு வருவான். அப்படி வருகின்ற போது குடை அப்பாவிடம் வந்து வாயாடிக் கொண்டிருப்பான். மிகவும் சுறுசுறுப்பானவன். இச்சிறுவயதிலேயே கல்வி ஞானமும், மார்க்க ஞானமும் கொண்டவன்.

சமீபத்தில் ஒரு நாள் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் குடை அப்பாவிடம், " அப்பா நீங்கள் ஏன் என் வாப்பாவைப் போல் ஐந்து வேளை பள்ளிக்குப் போவதில்லை. நாமெல்லாம் பெரியவர்களாகி செத்து அல்லாஹ் கிட்டப் போகும் போது அல்லாஹ் நான் உன்ன பூலோகத்தில் அனுப்பி வெச்சேனே நீ என்ன செஞ்ச ?-ன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க ?" என்று கேட்ட கேள்வியே அவரின் இந்த மாறுதலுக்கான காரணமாய் ஆனது.

அவரும் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். நமக்கோ வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் இருக்கும் ஆயுளோ எவ்வளவு என்று தெரியாத பட்சத்தில் இருக்கிற நாட்களையாவது அல்லாஹ்விற்காக சேவை செய்யலாமே என்று தோன்றிய இறையச்சமே அவரின் மாற்றத்துக்கான காரணமாய் அமைந்து விட்டது.

குடை அப்பா கூட்டத்தை முந்திக் கொண்டு சென்று சிறுவன் மீராஷாவைக் கட்டித் தழுவி "ஈத் முபாரக் !" என்று கூறியபடியே சட்டைப் பையில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை முதன்முறையாக தன் வாழ்நாளில் ஈத் பரிசாக வழங்க வெளியே எடுத்தார்.....

நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers