.

Pages

Thursday, October 18, 2012

[ 1 ] பூனைக்கு மணி கட்டுவது யார் ?


பூனையிடமிருந்து எப்படி நம்மைக் காப்பாற்றிக் கொள்வது ?

திட்டம் வகுக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தது எலிகள். நிறைய ஐடியாக்கள் அலசப்பட்டன.

ஒரு சுண்டெலி எழுந்து நின்று, என்னிடம் ஒரு செயல்திட்டம் இருக்கிறது. பூனையின் கழுத்தில் ஒரு மணி கட்டிவிடலாம். பூனை வருவதை அது அடையாளம் காட்டிவிடும் என்றது.

இந்தத் திட்டத்தால் கவரப்பட்ட மற்ற சுண்டெலிகள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க, வயதான ஒரு எலி மட்டும் கையை உயர்த்தி, அது சரி, பூனைக்கு யார் மணி கட்டுவது ? என்று கேட்க, மற்ற எலிகள் வாய் அடைத்து நின்றன.

எலிகள் ஒன்றுகூடி, பூனைக்கு மணி கட்டத் திட்டமிடும் இந்த எளிமையான கதையை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்துக்காட்டும் விதத்தில், அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் மாதம் ஒரு கட்டுரை என அமைத்து தொடராக வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். [ இறைவன் நாடினால் ! ]

வட்டி - உடல் உழைப்பில்லாமல் நமக்கு கிடைக்கும் பணமல்லவா இது ! வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுவர்கள் லட்சாதிபதிகளாகவும் !? கோடீஸ்வரர்களாகவும் !? மாறுகின்றனர். மற்றவர்களோ அதுவும் குறிப்பாக ஏழைகள் பரம ஏழைகளாகவும், பரம ஏழைகள் கையேந்துபவர்களாகவும் மாறுகின்றனர்.

வட்டியின் வகைகளாக முதலில் பணத்தைக் கொடுத்து அதற்கு வட்டி, அப்புறம்  வட்டிக்கு வட்டி, டபுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி போன்ற பெயர்களில் பண வசூலும், சீட்டு, குத்தகை, அடமானம், ஒத்திக்கு போன்ற பெயர்களில் ஈடுபடும் இவ்வியாபாரத்தால் !? சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று சிலவற்றைப் பார்ப்போம்....

சம்பவம் ஓன்று :
வட்டிக்கு பணம் வாங்குவதை தொழிலாகக் கொண்ட ஒரு பெண்மணி தினமும் தெருவில் உலா வரும் சைக்கிள்காரன் ஒருவனிடம் பணத்தைப் வட்டிக்கு பெற்றாள். கொடுத்தப் பணத்தை வசூல் செய்வதற்காக சைக்கிள்காரனும் தினமும் அவள் வீடு தேடி வருகிறான்.

ட்ரிங்... ட்ரிங்... சைக்கிள் பெல்லின் காதைப் பிளக்கும் சவுண்டால் அக்கம் பக்கத்தில் உறங்கும் குழந்தைகள் கண் விழித்து அழும் குரல், அடுத்த வீட்டுக்காரர்களோ தன் வீட்டிற்கு யாரோ வந்துள்ளனர் என நினைத்து கதவை திறந்து பார்க்கும் அவல நிலை. அந்தப்பெண்மணியோ தான் ஈன்றெடுத்த தன் பருவ வயது மகளிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புகிறாள். இது தினமும் வாடிக்கையாக தொடர்கின்றன....இறுதியில் மகளோ தன்னைப் பெற்றவர்களின் கெளரவம், அவர்களின் மனிதாபிமானம்,  அன்பு,  பாசம், இதற்கும் மேலாக  தங்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு  வீட்டை விட்டு அவனுடன் ஓடுகிறாள்.

சம்பவம் இரண்டு :
தொழில் தொடங்க நினைக்கும் ஒருவன்  வட்டிக்கு பணம் வாங்கி தொழில் துவங்கினான். தொடங்கிய சில நாட்களிலேயே வட்டிப் பணத்தை கட்ட வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அவனால் கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது இதனால் தான் துவங்கிய தொழிலை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான்.

சம்பவம் மூன்று :
தன் கணவன் பைபாஸ் சர்ஜரிக்காக தன் வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து பணம் பெறுகிறாள் ஒரு பெண்மணி. ஒரு காசு, இரண்டு காசு, மூன்று காசு என்று சொல்லி வட்டியை குடும்ப தொழிலாகக் கொண்டவனிடம் வெற்றுப் பேப்பர்களில் அவன் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்தை போட்டுக்கொடுக்கிறாள், அவனும் வீட்டை சர்வேயர் வைத்து அளவீடு செய்து உறுதி செய்துவிட்டு பணத்தைக் கொடுக்கிறான். இறுதியில் அவளால் வாங்கிய பணத்திற்கு வட்டியை முழுவதும் செலுத்த முடியாமல் தான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டையும், நிலத்தையும் அவனிடமே இழக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு நடு வீதிக்கு வரும் சூழல்.

சம்பவம் நான்கு :
அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் ஒருவன் தன் மகளின் திருமண செலவீனங்களுக்கு மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய வரதட்சனைக்காக வட்டிக்கு கடன் படுகிறான். வட்டிக்காரனோ தினமும் அவன் வீட்டிற்கு சென்று நெருக்கடியைக் கொடுக்கிறான். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறுதியில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறான்.

சம்பவம் ஐந்து :
இருந்த இடத்திலே சொகுசாக வட்டித் தொழிலில் ஈடுபடும் ஒருவனுக்கு பணம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. இவற்றைக்கொண்டு அசையும், அசையா சொத்துக்கள் என வாங்கி குமித்துக்கொண்டு வருகின்றான். இறுதியில் கொடூர நோய்க்கு ஆளாகி வட்டிப் பணத்தைக்கொண்டு வளர்த்த தன் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு நாதியற்று அவனின் உயிர் பிரிகின்றன. ஆறடியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் அவனை போட்டு புதைக்கப்படுகிறது

இதுபோன்ற அவல நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது எது ?

வட்டியே !

சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  இல்லையெனில் சமூகத்தில் மேலே குறிப்பிட்டதுபோல் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுவரும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். இக்குடும்பக் கொல்லியை தொடர விடாமல் ஊரைவிட்டு மட்டுமல்ல சமூகத்தை விட்டே துரத்த ஓன்றுபட்டு போராட வேண்டியது அவசியமானதொன்றாகிறது.

பூனையின் கழுத்தில் ஒரு மணி கட்டிவிட்டால் பூனை வருவதை அது அடையாளம் காட்டிவிடும். இதனால் நாம் தப்பித்துவிடலாம் என்று கருதிய சுண்டெலிகளின் எளிய கதையின் அடிப்படையில் கீழ்க்கண்ட செயல்திட்டமாக...

1. இது போன்ற மக்களிடேய அதன் கொடுரத்தை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

2. வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடும்பமும் முன்வந்து, ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளலாம்.

3. அறியாத மக்களிடையே COUNSELLING செய்து, அவர்களுடைய அறியாமையை அகற்றிட முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

4. உரியவர்களை இனம்கண்டு நிபந்தனைக்கு உட்பட்ட “வட்டியில்லாத கடன்”களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.

5. மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ்  சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்புகளைக் கருத்தில் கொண்டு, சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து, தெருவில் புழங்கும் வசூல் ராஜாக்களையும், நமதூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்களையும் தடை செய்வதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

போன்றவற்றை செயல்படுத்தினால் இக்குடும்பக் கொல்லியை ஊரைவிட்டு மட்டுமல்ல சமூகத்தை விட்டே துரத்திவிடலாம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பூனைக்கு மணி கட்டுவது தொடரும்...

4 comments:

  1. உயிரோட்டமுள்ள பதிவுக்கு முதலில் நன்றி.

    அன்பின் தம்பி எம்.நிஜாம் அவர்களில் இந்தக் கட்டுரையை படித்துவிட்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நல்ல யோசனைகள். இணைந்து செயல்பட நான் தாயராக இருக்கின்றேன்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    HO Palayankottai TN.,
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. தம்பி நிஜாம்!

    தாங்கள் இது போல் பல மணிகளை பல பூனைகளின் கழுத்தில் கட்டி வருகிறீர்கள். மணி கட்டுவதை விடவேண்டாம். ஒருநாள் அநீதிகள் சாகும்.

    ReplyDelete
  3. நிஜாம் விழிப்புணர்வுகள் பலவிதம் அதுலே இது வாழ்க்கையே சீரழிக்கும் விதம். எழுத்திலிருந்து கொஞ்சம் செயலிலும் காட்ட புறப்படு, தேவைப்படும்போது உதவிக்கு நாங்கள் இருக்கோம், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. தம்பி நிஜாம் ..எடுத்து வைக்கும்
    சமூக அவலங்களை ..
    வாசகர் மனதில் பதிய
    கவியாய் வடிப்பேன்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers