.

Pages

Tuesday, April 23, 2013

பகுத்தறிவில் சிறந்தது மதமா !? அறிவியலா !?

உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்துக்கும் உள்ள வெளிப்படையான பொதுத்தன்மைகள்: ஊண், உடலுறவு, உறக்கம். உயிர்வாழ் உணவு. இனம்பெருக உடலுறவு. இவற்றுக்காக உழைப்பதால் ஏற்பட்ட உடற்சோர்வு போக்க உறக்கம். 'தான் உயிர்வாழ இரைதேட வேண்டும், பிறருக்கு தான் இரையாகிவிடக்கூடாது' என்ற சுயநலம் பேணாத உயிர்கள் இயற்கை தகவமைப்பிலிருந்து விடுபட்டு அழிந்துவிடும். உயிர்வாழ்க்கையின் இயக்கம் தொடருவதற்கு இம்மூன்று பொதுத்தன்மைகளும் தடையின்றி செல்ல வேண்டும்.

உயிரினங்களை மனிதன் அறிவின் அடிப்படையில் பகுத்துள்ளான்.அவற்றில் அதிகபட்ச அறிவு கொண்ட உயிராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ளான். தனது எடையைவிட எட்டுமடங்கு பாரம் சுமக்கும் திறன் எறும்புக்கு உண்டு.குடிநீரின்றி பலநாட்கள் உயிர்வாழும் திறன் ஒட்டகத்துக்கு உண்டு.காற்றும், நீருமின்றி கல்லுக்குள் காலம் தள்ளும் உடலமைப்பு தேரைக்கு உண்டு.இருந்தும் இவைகளை எல்லாம்விடவும் அறிவில் சிறந்தவனாக மனிதன் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறான்.

பிரபஞ்சத்தில் பூமியைவிட அளவில் பெரிய எத்தனையோ கோள்கள் இருந்தபோதும் 82% உப்பு நீரால் சூழப்பட்ட வெறும் 18% நிலத்தில் மட்டுமே மனிதர்கள் உளர். விஞ்ஞான அறிவுகொண்டு வடிவமைத்த கலன்கள் உதவியால் பூமியின் சுழல்வட்டப்பாதையின் எல்லைதாண்டி பயணிக்குமளவு முன்னேறியுள்ளான். இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவுகளிலிருந்தும் தற்காத்துக்கொண்டு மீண்டுள்ளான்.எங்கிருந்து வந்தோம் என்ற பிறப்பின் ரகசியங்களையும் ஓரளவு அறிந்துள்ள மனிதன், விடைதெரியாமல் திகைத்து நிற்கும் ஒற்றைப்புள்ளி மரணம் !

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தனக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு 'வலிவன வாழும்' என்ற தத்துவத்தைச் செயல்படுத்தி வருகிறான். எப்படியும் வாழலாம்,இப்படித்தான் வாழ வேண்டும் என்ற மாறுபட்ட இருநிலைகளில்தான் மனித வாழ்க்கையின் தத்துவங்கள் அடங்கியுள்ளன. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதையே மதங்கள் எனும் வழிகாட்டால் நெறிகள் போதிக்கின்றன.அதைப் பேணாதவர்கள் எப்படியும் வாழலாம் என்ற பிரிவினர்.ஊண்-உடலுறவு - உறக்கம் என்பன தவிர்த்து எங்கிருந்து வந்தது மதம்? மதமின்றி உயிர்வாழ முடியாதா? மனிதன் மட்டுமே மதநம்பிக்கை கொள்வது ஏன்?

மதங்களில்தான் எத்தனை பிரிவுகள்! மனிதன் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மதம் அவசியமென்று கொண்டாலும் ஏன் இத்தனை மதங்கள்?வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தெளிவுள்ள ஏதேனும் ஒரு மதத்தை மட்டும் உலக மக்கள் அனைவரும் பின்பற்றினால் ஊண்,உறவு,உறக்கம்போன்று வழிகாட்டும் மதமும் பொதுவாகி உலகம் சண்டைகளற்று அமைதியாக இயங்குமே? தனது வயிற்றுக்குப் பொருத்தமான உணவையும்,உணர்வுக்குப் பொருத்தமான இணையையும் அடையாளம் கண்டுகொண்ட மனிதனால் தனக்குப்பொருத்தமான மதத்தை மட்டும் ஏன் அடையாளம் காண முடியவில்லை ?

எல்லா மதங்களுமே மனிதன் மேன்மையடையும் வாழ்க்கை நெறிகளையே போதிப்பதாகச் சொல்லப்பட்டாலும் மதநம்பிக்கையாளர்களிடம் இல்லாத அமைதி மதநம்பிக்கையற்றவர்களிடம் காணப்படுகிறதே.ஆயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகும் மதங்களால் மனிதவாழ்வு அடைந்த நன்மைகளைவிட, நூறாண்டுகளேயான அறிவியலால் அடைந்த நன்மைகள் அதிகம்தானே! மதங்களின்றி அறிவியலால் இயங்கமுடியும். ஆனால், அறிவியலின்றி மதங்களாலும், மதவாதிகளாலும் தனித்து இயங்க முடியுமா ? ஆக, மதங்களைவிட அறிவியல்தானே பகுத்தறிவின்படி சிறந்தது!

குறிப்பு: நண்பர்களே, நான் அறிந்த நல்ல/கெட்ட விசயங்களை யாருடைய மனமும் நோகாதபடி எழுதியுள்ளேன். மதம் குறித்த உரையாடல்களை அவ்வபோது வாசிக்க நேர்ந்ததால்,மதவாதிகளிடம் இதற்கான தெளிவான கருத்து இருப்பின் அறிய ஆவலாக உள்ளேன்

அறிவுடைநம்பி
arivukkadal@gmail.com
நன்றி :http://ungalsakotharan.blogspot.in/2013/04/blog-post_21.html
உங்கள் சகோதரன்
ஜாஃபர்

22 comments:

 1. அருமையான ஆய்வு !

  அறிவியலால் சமூகம் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்றாலும் மனிதனின் ஆத்மா அமைதியடைந்ததா என்றால் இல்லை என்றேக்கூறலாம்.

  மதமொன்றில் கூறப்படும் கருத்துகளை முழுமையாக [ 100 % ] புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றி நடக்கும் ஒருவரிடம் மன அமைதியைக் காணலாம்.

  ReplyDelete
 2. ஆழமான கருத்து

  சிந்திக்க தூண்டும் ஆக்கம்

  சகோ ஜாபர் தங்கள் வரவு நல்வரவாகுக

  ReplyDelete
 3. சகோ. ஜாஃபர் அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம் !

  சமூக விழிப்புணர்வு பக்கங்கள் குழுமத்தின் சார்பாக சகோதரரை அன்புடன் வரவேற்று தொடர வாழ்த்துகின்றோம்.

  சகோ. ஜாஃபர் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
  தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரில் உள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

  சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

  சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை அதிரைத் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

  இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

  ReplyDelete
 4. என் தளத்தில் வந்த கட்டுரையை பதிந்தமைக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

  பல்வேறு விழிப்புணர்வுகளை தொலை நோக்குடன் ஆராய்ந்து பதிந்துவரும் நண்பர் நிஜாமின் இந்தத் தளத்தில் என் தள கட்டுரையும் வெளி வருவதில் எனக்கு பெருமிதமே..

  தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்ல அலசல்... பாராட்டுக்கள்... நன்றி...

  சிறந்தது என்பதை விட நல்வழியில் செல்வதும், செல்ல வைப்பதும் அதை விட சிறந்ததே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

  ReplyDelete
 6. புதிய வருகை சகோதர் ஜாஃபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு விழிப்புணர்வு மிக்க சிந்திக்க கூடிய ஆக்கம்.

  ReplyDelete
 7. ஆள் இல்லாமல் ஆகாய விமானத்தை அனுப்பி சந்திரமண்டலத்திற்குச் சென்று ஆராய்ச்சி செய்து வரச் செய்-கின்றானே. இவை அறிவியல் வளர்ச்சியால தானே

  ReplyDelete
 8. இத்தளத்திற்கு புதிய பதிவாளராக வருகை தந்திருக்கும் சகோதரர் ஜாஃபர் அவர்களுக்கு முதலில் சலாமுடன் என் வாழ்த்துக்கள்.

  முதல் பதிவானாலும் முகம் நிமிர்ந்து பார்க்கக்கூடிய நல்லதொரு பதிவு.

  இன்னும் நல்ல விழிப்புணர்வு பதிவுகளை தாங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

  ReplyDelete
 9. நமது தளத்திற்கு முதல் அடி எடுத்து வைத்த ஜஹபர் அவர்களுக்கு நல் வரவாகுக
  அல்லாஹ் இறை வசனத்தில் இரவை பகலை எறும்பை ஒட்டகத்தை சுட்டிக்காட்டி மனிதர்களே சிந்திக்கவில்லையா சிந்திப்போருக்கு நிறைய விஷயங்கள் இருப்பதாக கூரி உள்ளான் ஆதிமனிதன் ஆதமுக்கு கல்வியறிவை புகட்டியவன் படைத்தவந்தானே சைத்தானின் சூழ்ச்சி மனிதனை பல மதங்களுக்கு வழிவகுத்துவிட்டது ஆராய்ச்சிகளுக்கு முன்பே குர்ஆனில் உலகம் உருண்டை எனவும் சந்திரனுக்கு பிரகாசிக்கும் தன்மை மட்டுமே உள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது நீங்கள் சொல்வதுபோல் மதங்கள் அவசியமில்லை ஒரே மார்க்கம் அவசியம்
  அறிவைமட்டும் கேட்டு வாழ்க்கை நடத்துபவனும் மனதை கேட்டு[மனசாட்சி]வாழ்க்கை நடத்துபவனுக்கும் வித்யாசம் உள்ளது

  ReplyDelete
 10. உங்களின் அன்பான வருகையை அன்புடன் வரவேற்கிறேன், அன்புத்தம்பி ஜாஃபர் அவர்களே! மிகவும் வலுவான மற்றும் விவாதத்துக்குரிய ஓர் ஆக்கத்துடன் நுழைந்திருக்கின்றீர்கள். தீர்ப்புகள் சரியாகச் சொல்லப்படாமல் மிகவும் நுணுக்கமான; “கரணம் தப்பினால் மரணம்” என்ற சொலவடைக்கிணங்க இவ்வாக்கத்தில் நம்பிக்கைக்கும். அறிவுக்கும் போட்டி வைத்துள்ளீர்கள். நம்பிக்கை என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது; அறிவென்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. உங்களின் வாசித்தலின் நேசித்தலையே இக்கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.

  வாசி; வாசிக்கப்படுவாய்
  எழுது; எழுதப்படுவாய்;
  படிப்பாளியானால் படைப்பாளியாவாய்
  கண்டது கற்கின் பண்டிதனாவான்

  என்பதை உங்களின் சொல்லிலும் செயலிலும்- நீங்கள் பத்திரிகைத் துறையில் நுழைந்துச் சாதனைகள் செய்திருப்பதிலும் யான் அ|றிவேன். அதிலும், குறிப்பாக அடியேனை(உம்ரா செய்ய வந்த நேரத்தில்) மக்காவில் வைத்து நீங்கள் எடுத்த பேட்டியின் போதில் யான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தேன்.

  வருக! தொடர்ந்து ஆக்கங்கள் தருக!!

  ReplyDelete
 11. மதங்களைவிட அறிவியல்தானே பகுத்தறிவின்படி சிறந்தது!

  உண்மையில் சிறந்தது. நல்ல பகிர்வு அனைவரையும் சிந்திக்க வைத்த வரிகள்.

  ReplyDelete
 12. பதிவுக்கு நன்றி.

  இத்தளத்திற்கு புதிய பதிவாளராக வருகை தந்திருக்கும் சகோதரர் ஜாஃபர் அவர்களுக்கு முதலில் சலாமுடன் என் வாழ்த்துக்கள்.

  முதல் பதிவானாலும் முகம் நிமிர்ந்து பார்க்கக்கூடிய நல்லதொரு பதிவு.

  இன்னும் நல்ல விழிப்புணர்வு பதிவுகளை தாங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 13. மதங்களில்தான் எத்தனை பிரிவுகள்! மனிதன் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மதம் அவசியமென்று கொண்டாலும் ஏன் இத்தனை மதங்கள்?///நியாயமான கேள்வி

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. சகோ ஜாபர் ..1400 ஆம் ஆண்டு என திருத்தம் செய்ய

  வேண்டும்

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. வருடத்தை திருத்தி சுட்டிக் காட்டிய சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு நன்றி

  இதோ திருத்தத்துடன் மீண்டும்

  இக்கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  இந்தக் கட்டுரையின் ஆக்கம் என்னுடையது இல்லை என்றாலும் இதனை ஆதரித்து என் தளத்தில் பதிந்தேன்.

  இந்தக் கட்டுரையின் உள்ளார்த்ததில் எனக்கு தனிப் பட்ட முறையில் உடன்பாடு இல்லை. விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நல்ல தீனி என்பதாலேயே இதனை நான் ஆதரித்தேன்..

  அறிவோடு மதம் போட்டியிட முடியாது. மதம்/ மார்க்கம் இதுதான் அறிவின் மூலம். அந்த மார்க்கம் இஸ்லாம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளவன் நான் என்னை அதிலிருந்து கடுகளவும் அசைத்துவிட முடியாது.

  ஒரு ஆராய்ச்சியாளன் சுமார் 25 ஆண்டுகள் ஆராய்ந்து ஒரு கண்டுபிடிப்பை அறிமுகப் படுத்தினான்.. அதாவது விந்துவுக்கும் மண்ணிற்கும் சம்மந்தம் உண்டு என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் வெற்றி. இதனை உலகுக்கு அறிமுகப் படுத்தியபோது மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான்.

  இது குறித்த விவாதத்தை நேரலையாக விளக்கினான் அந்த ஆராய்ச்சியாளன். இதனை மதீனா பல்கலைக் கழக பேராசிரியர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்துகொண்டு அந்த ஆராய்ச்சியாளனின் விவாதத்தை கேட்டனர்.

  விவாதத்தின் சில நிமிடங்களில் மதீனா பலகலைக் கழக மேதைகள் திடீரென கையில் ஒரு புத்தகத்தை எடுத்து அதில் ஒரு பக்கத்தை புரட்டி, அதில் ஆராய்ச்சியாளன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை ஏற்கனவே சொல்லப் பட்டிருப்பதை காட்டினார்கள், ஆம் 1435 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது மண்ணிலிருதுதான் மனிதன் படைக்கப் பட்டான் என்று. அந்தப் புத்தகம் திருக்குர்ஆன்.

  உடனே நொந்துபோனான் அந்த ஆராய்ச்சியாளன். 25 வருட உழைப்பை ஒரு நிமிடத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டதே இந்த புத்தகம் என்று அதே நொடியில் இஸ்லாத்தை ஏற்றான்.

  இதை கடவுளே இல்லை என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததோடு தன்னை பெரிய அறிவாளியாகக் காட்டிக் கொண்டவர்தான் ஒரு மேடையில் சொன்னார். இப்போது அவரும், திருக் குர்ஆனை தெளிவாகப் புரிந்துகொண்டு இஸ்லாத்தை ஏற்று ஒரு முஸ்லிமாக வழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.

  ஆக அறிவுக்கு ஆதாரம் மதம் அது இஸ்லாம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே என் வாதம்.

  ReplyDelete
 18. அருமையான முடிவுரை

  ReplyDelete
 19. அருமையான முடிவுரை !

  வாழ்த்துகள் நண்பருக்கு

  ReplyDelete
 20. "எங்கிருந்து வந்தோம் என்ற பிறப்பின் ரகசியங்களையும் ஓரளவு அறிந்துள்ள மனிதன்,"

  "எங்கிருந்து வந்தோம்" இதனை விழக்கமாக எழுதவும்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers