செருப்பு இல்லையே என்று அழுதுகொண்டிருந்தேன் கால் இல்லாதவனை காணும்வரை- என்று ஒரு பழமொழி படித்து இருக்கிறேன்.
இதே போல்தான் இருந்த்து ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி இருந்த நிலையில் இருந்த எனக்கு.
ஒரு கண் ஒரு வாரம் மூடி இருந்த நிலைகூட தாங்க முடியாத துன்பம் தந்தபோதுதான் - பிறவியிலேயே இரு கண்களும் இழந்தவர்களின் நிலையையும், இடையில் விபத்துகளில் கண்களை பறி கொடுத்தவர்களின் நிலையையும் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.
இறைவன் தந்ததை வைத்து திருப்தி அடையவேண்டும். இதையாவது தந்தாயே யா அல்லாஹ் என்று இறையை புகழும் மனப்பக்குவம் வேண்டும். நம்மைவிட இல்லாதவர்கள் இருக்கும் நிலைகள் உலகில் இருப்பதை உணர்ந்து நமக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருத வேண்டும். வல்ல இறையோனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒருகண் மூடி ஒருவாரம் ஓய்வில் இருந்தபோதுதான்...
"தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க" என்ற நாலடியார் வரிகளும்-
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு" என்ற கண்ணதாசன் வரிகளும் நினைவுக்கு வந்தன.
அது என்ன ஒரு வாரம் ஒருகண் மூடி இருந்த நிலை என்று சில அன்பர்கள் கேட்பதாக தெரிகிறது. அதைப்பற்றி ஒரு விழிப்புணர்வுக்காக நீங்கள் எழுதவேண்டும் என்று ஒரு அன்புத்தம்பி கட்டளை இட்டார். ஆகவே இந்தக்கட்டுரையில் அந்த அனுபவங்களைப்பற்றி எழுதப்போகிறேன். எவ்வளவு நாள்தான் நானும் பொருளாதாரம், மத்திய அரசு, மன்மோகன் சிங்க், அலுவாலியா என்று எழுதுவது ? கொஞ்சம் மாறுதலுக்காக மருத்துவம் பற்றி மருத்துவமனைப்பக்கம் ஒரு ரவுண்டு அடித்து வர மனம் நாடுகிறது. அதுவும் வழக்கம் போல அனுபவம்தானே மீண்டும் பேசப்போகிறது ?
கடந்த ஆண்டு 16/04/2012, அன்று காலை எனக்கு துபாய். N.M.C. SPECIALITY HOSPITALலில். வலது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாடுக்காக அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை செய்தவர் அனுபவமிக்க இந்திய கண் மருத்துவர் டாக்டர். அமித் நாக்பால் என்கிற கர்நாடகத்தை சேர்ந்தவர். மழலை மொழியில் தமிழ் பேசுவார். "ரெண்டு வாருக்கு தலேலே தண்ணீ எண்ணே போடாதீங்கோ" என்பது அவர் பேசும் தமிழுக்கு உதாரணம். ரெண்டு வார் = இரண்டு வாரம். இது இருக்கட்டும் சப்ஜெக்டுக்கு வருவோம்.
எனக்கு ஏற்பட்ட குறைபாட்டை CATARACT என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்களில் ஒன்று மனித விழிகள். இந்த விழிகளில் ஒவ்வொரு லென்ஸ் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாம் உணர்கிற வகையில் காட்சிகள் இந்த விழி லென்சில் விழும். அதைத்தான் நாம் இன்னது என்று அறிந்து வருகிறோம். இந்த விழி லென்சின் மீது ஒரு மேகத்தைப்போன்ற அல்லது ஒரு மூடு பனியைப்போன்ற மூட்டம் விழுந்து படிவதும்- அதன் காரணமாக தெளிவற்ற பார்வை எற்படுவதும்தான் CATARACT காடராக்ட் ஆகும். மழை காலங்களில் – மார்கழி மாதங்களில் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடுகிறதே அதுமாதிரி நமது கண்களில் படியும் ஒருவகை மூட்டமாகும். இதன் காரணமாக நாம் காண்பதை தெளிவாக காண இயலாது- படிக்க முடியாது.
பொதுவாக மேகம் என்பதை மப்பு என்று வழக்கு மொழியில் கூறுவார்கள். மப்பு என்று வந்துவிட்டாலே அது ஒருவகை ஸ்தம்பிப்புத்தான். இயங்க முடியாது. குழந்தைகளுக்கு வயிற்றில் மப்பு என்று கேட்டிருக்கிறோம். வயிற்றை சுண்டிப்பார்த்தால் வலையப்பட்டி தவில் மாதிரி சத்தம் வரும் குழந்தைகள் எதுவும் சாப்பிட முடியாது. அதே போல் குடிகாரர்கள் பாஷையில் மப்பு எகிறிவிட்டதாக சொல்வார்கள். ஆகவே மப்பு என்பது இயங்காத்தன்மை. இப்படி ஒரு மப்புத்தான் நமது விழிகளில் ஏற்படும். இது ஒரு நகராத ஆனால் வளர்கிற மேகக்கூட்டம். பார்வைப்படலத்தின் மேல் படுத்து உறங்கும் மேகக்கூட்டம்.
எனது விழிகளை கணிணி மூலம் பெரிதுபடுத்திகாட்டிய மருத்துவர் என்னையே அதைக் காணச் சொல்லிக் காட்டியபோது வீட்டில் கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும்போது நாம் அருகில் நின்றால் சில மாவுத் துளிகள் நமது ஆடைகளில் தெறித்து விழுந்து ஒரு வட்டமாக புள்ளிகளாக வெண்மையாகத் தென்படுமே அதுபோல் இருந்தது.
பெரும்பாலும் காடராக்ட் குறைபாடு நமது வயதோடு தொடர்புடையதாகும். குறிப்பிட்ட வயதைக் கடந்தோருக்கு கண்களில் இந்த குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். இந்த குறைபாடு இரண்டு கண்களிலுமோ அல்லது ஏதாவது ஒரு கண்ணிலுமோ ஏற்படலாம். ஒரு கண்ணில் ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கு இது " அடுத்த வீட்டில் புளியானம் தாளிப்பது மணப்பதுபோல்"பரவாது. அத்துடன் இக்குறை ஏற்பட்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் தொற்றாது. ஒட்டுவாரொட்டி அல்ல.
காடராகட் உண்டாகக் காரணங்கள் எவை ?
நமது விழிகளில் அமைக்கப்பட்டுள்ள லென்ஸ், நீராலும் புரோட்டினாலும் ஆனது ஆகும். ஒரு அபூர்வ படைப்பாக இந்த புரோட்டினின் வழியாகத்தான் காட்சிகள் லென்சுக்குள் செலுத்தப்படுகின்றன அத்துடன் லென்சுகளை தூய்மைப்படுத்திவைப்பதும் இந்த புரோட்டின்தான். வயதாகிறபோது இந்த புரோட்டின் சுருங்கி அல்லது உருண்டு , திரண்டு லென்சின் ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்வதால் நாம் பார்ப்பது மறைக்கிறது. இதை உடனே சரி செய்யாவிட்டால் இந்த உருண்டு திரண்ட புரோட்டின், (இட்லி மாவு என்றே வைத்துக்கொள்ளுங்கள்.) விழி லென்சில் படர்ந்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தலும், நீரழிவு நோயும் (SMOKING & DIABETES.) கூட இந்த காடராக்ட் தன்மை ஏற்படுவதற்கு காரணங்களாக அமையலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
யாருக்கெல்லாம் காடராக்ட் உண்டாகும் ?
1. வயதானவர்களுக்கு – நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் சோதித்துக்கொள்வது முக்கியம்.
2. இனிப்பு நீர் என்ற இனிமைப்பெயர்கொண்டவர்களுக்கு ஏற்படும்.
3. புகைப்பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.
4. தொடர்ந்து வெயிலில் நின்று வேலை செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்படும்.
எப்படி தடுத்துக்கொள்ள முடியும் ?
வயதாவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாது. [ மேக் அப்தான் போடலாம் ] ஆனால் வாழ்க்கையின் பழக்கங்களை ஒழுங்கு படுத்தித் தடுக்கலாம். வெயிலில் வேலை செய்ய வேண்டியவர்கள் குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுடன், தலையில் தொப்பி போட்டுக்கொள்ளலாம். [ யாரங்கே ! தொப்பி போடுவதை எதிர்ப்பவர்கள் ? இது மருத்துவம் – இதற்காகவாவது போடக்கூடாதா? ] சூரியனின் நுண்கதிர்கள் கண்ணுக்குள் நேரடியாக பாய்வதில் இருந்தும் , தொப்பி இல்லாத தலைவழியாக எமிகிறேஷன் இல்லாமல் இலங்கை வழி போவதுபோல் தலையின் வழியாக கண்ணுக்குள் பிம்பம் அடித்து நுழைவதையும் தடுக்கலாம்.
புகைப்பிடிப்பதைத்தடுத்துக்கொள்ளலாம். வாய்வழியாகவும், மூக்கின் வழியாகவும் விடுகின்ற புகையிலையின் நச்சுப்புகை கண் படிவங்களின் மீது படியாமல் தடுக்க முடியும்.
மது குடிப்பதை தவிர்க்கவும் நிறுத்தவும் வேண்டும். [ புதிய மதுபானக்கடைகள் திறப்பதை எதிர்த்து போரிடவேண்டும். பெருநாள் தினங்களில் கூடுதலாக கல்லாக்கட்டுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றுக்கு நாம் வெட்கப்படவேண்டும். ] உணவுப்பழக்க வழக்கங்களை நோய்தடுப்புக்கு உதவும் வகையில் சீரமைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சி சோறுதான் வேண்டும் என்று அடம்பிடிக்ககூடாது. கறி கிலோ நானூறு அல்ல நாலாயிரம் விற்றாலும் வாங்கித்தான் தீருவேன் என்று கச்சை கட்டக்கூடாது. காய்கறிகளா அவை நமக்காக படைக்கப்பட்டதல்ல இதெல்லாம் யார் சாப்பிடுவது என்று காரணம் கற்பித்து ஒதுங்கக்கூடாது. புரோட்டவையும் கறி சால்நாவையும் புரட்டி அடிக்கக்கூடாது. தழைத்த கீரைகள், காய்கறி, பயறுவகைகள், பழங்களை காலம் முந்தும் முன்பும்- நோய் முற்றும் முன்பும் சாப்பிடப்பழகிக் கொள்ளவேண்டும்.
காடராகட் நோய் தாக்கியுள்ளதன் அறிகுறிகள் யாவை ?
பொதுவாக கீழ்க்கண்டவைகள் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
1. மேகம் அல்லது பணி மூட்டம் போன்ற புலப்படுதல்/கண்மறைத்தல் ( மப்பு )
2. நிறங்களின் வெளிறிய புலப்பாடு,
3. வாகனங்களின் தலைவிளக்குகள், வீட்டின் விளக்குகள், சூரிய வெளிச்சம் ஆகியவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக தோன்றுவது- கண் கூச்சம், வெற்றிடங்கள் சுற்றியும் விளக்குகள் எறிவதாக தோன்றுவது,
4. இரவுகளில் குறைந்து காணப்படும் காட்சிப் புலப்பாடுகள்
5. ஒரே பொருள் ஒரு கண்ணில் பலவாகத்தோன்றுவது
6. பார்வைக்குறைபாடுகளுக்கான கண்ணாடிக்கான மருத்துவரின் சீட்டுக்களில் அடிக்கடி வித்தியாசமான ஏற்றதாழ்வுகலான பவர்கள்.
இப்படிப்பட்ட பிரச்னைகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
காடராகட் இருப்பது மருத்துவ ரீதியில் எப்படி உறுதி செய்யப்படுகிறது?
முக்கியமாக இருவகை மருத்துவ சோதனைகளால் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
1. VISUAL ACUITY TEST- இந்த முறையில் உங்களின் கண்களின் பார்வை சக்தியின் அளவு மாறுபட்ட தூரங்களில், எழுத்துக்களின் அளவுகளில் வைத்து கணிக்கப்படும்.
2. DILATED EYE EXAMINATION. – இந்த முறையில் சொட்டு மருந்துகளை கண்களில் விட்டு கண்களை /விழிகளை அகலப்படுத்த செய்து பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள லென்ஸ்களின் மூலம் உறுதி செய்யப்படும். இந்த சொட்டு மருந்துகளை கண்ணில் விட்ட பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு உங்களால் சரியாக பார்க்க முடியாது. எனவே இந்த சோதனைக்கு செல்லும் முன்பே துணைக்கு ஆள் அழைத்து செல்லவேண்டும். கார் ஒட்ட இயலாது- கூடாது. இரண்டு மூன்று மணிகளுக்குப் பிறகு சரியாகிவிடும்.
[ இந்த மருந்தை என் கண்ணில் ஊற்றிய செவிலியர் சகோதரி சார் வண்டி ஓடிக்குமா என்று கேட்டார்- என் வண்டி என்ன முருங்கைப் போத்தா என்று அதிரைக் குறும்புடன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே இல்லை டிரைவர் வந்திருக்கிறார் என்றேன். ]
சிகிச்சை முறைகள் :
மிக சிறிய அளவிலோ அல்லது ஆரம்ப நிலையிலையோ இந்நோய் தொடங்குவது கண்டறியப்ப்படும்போது கொஞ்சம் பெரிதுபடுத்திக்காட்டும், பிரதிபலிப்புத் தன்மைகள் குறைந்த மூக்குக் கண்ணாடிகள் அணிந்துகொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடே.
நிரந்தரமான பரிகாரம் வேண்டுமானால் அறுவை சிகிச்சை ஒன்றே வழியாகும். இந்த அறுவை சிகிச்சை என்பது, ஏற்கனவே மேகம் மூடிய விழி லென்சை பிறவிக் கண்ணிலிருந்து அகற்றிவிட்டு ஒரு செயற்கையான லென்சை அந்த இடத்தில் அமைப்பதாகும்.
உங்களின் இரண்டு கண்ணிலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஒரே நாளில் இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படக்கூடாது என்று சட்டம் தடுக்கிறதாம். முதலில் ஒரு கண்ணில் செய்துவிட்டு அதன் பின் குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகே அடுத்த கண்ணிலும் செய்யப்பட வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளையும், ரத்தக்கொதிப்பு முதலான அமசங்களையும் சோதித்து அவைகள் ஒரு சீரான நிலையில் இருந்தால் மட்டுமே அறுப்பதற்கு நாள் குறிப்பார்கள். ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசிகளைப்போட்டு அதைக் குறைத்துக்கொண்டே கத்தி வைப்பார்கள். அத்துடன் BIOMETRY TEST என்ற சோதனையும் செய்வார்கள். இந்த சோதனை உங்கள் கண்களிண் லென்சின் அளவுகளையும், கண்களின் வளைவுகளையும் கணக்கிடுவதாகும். [ பூனைக்கண், சீனன் கண், சறுகல் கண், ஒன்னரைக்கண் எல்லாவற்றிற்கும் பொருத்தமான லென்சை தேர்ந்தெடுப்பதற்காக இது நடத்தப்படுகிறது.]
அறுவை சிகிச்சை நடப்பதற்கு பனிரெண்டு மணி நேரம் முன்பு முதல் நீங்கள் எதுவும் சாப்பிடவோ பருகவோ கூடாது. பயத்தில் எனக்கு வரண்டதுபோல் தொண்டை வரண்டுபோனால் ஜூம் ஆவுக்கு போகும்போது ராஜா ஜாஸ்மின் அத்தர் போல் சில துளி நீரை நாக்கில் தடவிக்கொள்ளலாம்.
இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ மொழியில் PHACOEMULSIFICATION WITH IOL IMPLANTATION என்று பெயர். இயற்கையான விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையான INTRAOCULAR LENS (IOL) என்கிற பெயரில் அழைக்கப்படும் லென்சை விழித்திரையில் பொருத்துவார்கள். இந்த பொருத்தப்படும் லென்ஸ் ஒரு உயர்வகை பிளாஸ்டிக் அல்லது அக்ரிலிக மூலப்பொருள்களால் ஆனது. [ பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால் சிலரின் கண்களைத் தோண்டவேண்டி வரும் :) ] . இந்த மூலப்பொருளுக்குத் தகுந்தபடி இதன் விலை வித்தியாசப்படும். அக்ரிலிக் வகையில் உள்ளதே விலை அதிகம். [ கம்பெனிதான் செலவை ஏற்கிறது என்பதாலும் நண்பர் அஸ்லத்துக்கு பயந்தும் எனக்கு அக்ரிலிக் லென்ஸ்தான் வைக்கச் சொன்னேன். ] இந்த லென்ஸ் பொருத்தப்பட்டதும் அது உங்கள் உடலின் ஒரு அங்கமாகிவிடும். அப்படி ஒரு உறுப்புப் பொருத்தபட்டிருப்பதே தெரியாது உறுத்தாது.
சுன்னத் மாப்பிள்ளையை கொண்டுபோவதுபோல் துணிகளை மாற்றி தள்ளுவண்டியில் கொண்டுபோனார்கள். வழியனுப்பிய மனைவிக்கோ ஏதோ என் கிட்னியை எடுக்கக்கொண்டுபோகிறார்கள் என்ற உணர்வு விம்மலில் தெரிந்தது. உரலில் உட்காருவதற்கு பதில் படுக்கையில் படுத்துக் கொள்ளவேண்டும். ஆடாமல் அசையாமல் இருக்கும்படி தலைமை மருத்துவர் கூறுவார். அவரைச் சுற்றி உதவியாளர் கூட்டம் நிற்கும்.
முதலில் கண்களில் விழிகளை அகலப்படுத்தும் சொட்டு மருந்துகளை விட்டார்கள். அதன்பின் ஒரு சிறிய ஊசி போடுகிறேன் என்று சொல்லி கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய ஊசியைப் போட்டார்கள். அத்துடன் ஏதோ பாராங்கல்லை தலையில் வைத்தது போல் மறத்துவிட்டது. கண் கனத்துவிட்டது. காது கேட்டது. உடலின் மற்ற பாகங்களில் உணர்வு இருந்தது. சிகிச்சை நடக்கும்போது முகத்தை மூடி , சிகிச்சைக்குரிய கண்ணை மட்டும் திறந்து வைத்து இருந்தார்கள். மூக்கின் துவாரங்களில் ஆக்சிஜன் குழாயை சொருகிவிட்டர்கள். சிகிச்சை நடக்கும்போது ஏதோ கண்களில் மொசைக் போடுவதுபோல் உணர்ந்தேன். சரிதான் இட்லி மாவை சுரண்டி எடுக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து பிரியாணியை "தம்" போடுவதுபோல் காற்றுக்கூட புகாமல் கண்ணை மூடி டேப் வைத்து ஒட்டிவிட்டு , ' ஓகே மிஸ்டர் அன்சாரி. ' என்றார் எனது மருத்துவர். [அதாவது அந்த ஓகே அவரைப் பொருத்தவரை 13470/= திர்ஹம் ]. அதன்பிறகு "கந்தூரியில் கூடு முடிந்தகாலை கடைகளைப் பிரிப்பதுபோல்" முகமூடி, ஆக்சிஜன் முதலிய எல்லாவற்றையும் பிரித்துவிட்டு என்னை மீண்டும் தள்ளுவண்டியில் படுக்கவைத்து முதலில் அரைமணிநேரம் ரெகவரி அறையிலும் பின்னர் எனது அறையிலும் கொண்டுவந்து விட்டுச்சென்றுவிட்டார்கள். உடனே லெண்டில் சூப் தந்தார்கள். அதன்பிறகு மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, தயிர், வேகவைத்த புரோகோலி ஆகியவை தந்தார்கள். அன்று மாலை ஐந்து மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். "தம்" போடப்பட்ட கண்ணை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்து இரண்டு வகை சொட்டு மருந்துகளை அடுத்தடுத்து விடவேண்டும் அத்துடன் ஐந்து நாளைக்கு ஆண்டிபயாடிக் மற்றும் வலிவந்தால் சாப்பிட ஒரு பெயின் கில்லர். சாப்பாடு ஒன்றும் தடை இல்லை. சுகர் மட்டும் கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த லென்ஸ் பொருத்தப்பட்டு ஒரு வாரம் வரை கண்களில் வெளிச்சம்படாமல் மூடி இருக்க வேண்டும். அதன்பின் கண்திறந்து பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். பார்ப்பவை முன்பு தெரிந்ததற்கும் இப்போதும் ' பளிச்" என்று மின்னலடிக்கும் வெண்மையாகத் தெரியும். ஊசியில் நூலைக் கோர்க்க முடியும். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு கணிணி , தொலைக்காட்சிப்பெட்டிகளை காணமல் இருப்பது நல்லது. [ யார் விடுகிறார்கள்- ஒரு நாளைக்கு எத்தனை ஈமெயில்கள் – பார்க்காமல் விட்டால் லேப்டாப் பிதுங்கி ஜிப கிழிந்துவிடும் நிலை ] . இரண்டு நாட்களிலேயே எந்த பிரச்னையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் கையால் கட்டுப்பிரிக்கும்வரை விட்டுவிட்டேன். ஒருவாரம் கழித்து கட்டுப்பிரித்து திறந்தே விட்டுவிட்டார். சொட்டு மருந்துகள் மட்டுமே இடவேண்டும். இரண்டுவாரம் அலுவலகத்துக்கு மருத்துவ சான்றிதழ். விடுப்பில் , முதலில் செய்தவேலை ஏற்கனவே எழுதிவைத்து இருந்த மாற்றம்! ஏற்றமா? ஏமாற்றமா? கட்டுரையை நெறியாளருக்கு சரிபார்த்து அனுப்பியதுதான்.
சிகிச்சைக்குப் பிறகு ?
சிலருக்கு அறுவை சிகிச்சைக்குபிறகு அரிப்புகள் வரக்க்கூடுமாம். அத்துடன் நீர் வடிதல், ஊளை தள்ளுதல் ஆகியவையும் ஏற்படக்கூடுமாம். அப்படியானால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். கீழே குனிந்து எதையும் எடுக்க முயற்சிக்க கூடாது. கனத்த பொருள்களை தூக்கக்கூடாது. தூசிகள் வரும் இடங்களுக்குப் போகவோ வசிக்கவோ கூடாது. அறுவை சிகிச்சை செய்யப்பட கண்ணின் பக்கமான பற்களில் வைத்து வேகாதவைகளை நீண்ட நேரம் மெல்லக்கூடாது. அதிக சத்தம்போட்டுப் பேசக்கூடாது. குலுங்கக் குலுங்க சிரிக்கக்கூடாது. (இதுதானே கஷ்டம்) மற்றபடி நடக்கலாம், மாடிப்படிகளில் ஏறலாம். வெங்காயம் அல்லாத மற்ற காய்கறிகளை வெட்டிக்கொடுத்து வீட்டுக்கு உதவலாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகளை தொடர்ந்து கண்ணில் விட்டுக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்படாத கண்ணுக்கு சொட்டு மருந்துகளை விடுவது நல்லதல்ல.
ஒருமாதம் கழித்து மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொண்டு புதிய அலைவரிசையில் தேவைப்பட்டால் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்ளலாம். கண்ணாடி அணியாமல்தான் இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
இந்த பதிவை கூடியவரை எல்லா விவரங்களுடனும் பதிந்து இருப்பதாக கருதுகிறேன். படிப்பவர்களுக்குப் பயன்படும் என்று கருதுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் தந்த செவிலியர் சகோதரி ஸ்வப்னா அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இதைப்பற்றி எழுதவேண்டுமென்று அறுவை சிகிச்சைக்கு செல்ல முடிவு எடுத்த போதே முடிவு எடுத்தேன்.. தம்பி சபீர் அவர்கள் தூண்டினார்கள்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி
கடந்த வாரம்தான் எனது தந்தையார் அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஊர் திரும்பினேன். மருத்துவமனையில் இருந்த இரண்டு நாட்களும் அழகிய அனுபவங்கள்...
ReplyDeleteஇந்த உலகத்தை மிகத் தெளிவாக பார்வையிட நமது இருவிழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கட்டுரையில் கண் பாதுகாப்பு மற்றும் அதற்குரிய சிகிச்சை முறைகளை 'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்கள் நல்லதொரு அனுபவத்துடன் அழகாக தொகுத்து விளக்கியுள்ளார். இவை நமக்கு நல்லதொரு விழிப்புணர்வாக அமையும்.
காக்கா ஒரு டவுட் ப்லீஸ் !?
ReplyDeleteசிகிச்சை முடிந்த சில மணி நேரத்திற்கு பின் ஏன் காக்கா சிகிச்சைக்குள்ளான கண்ணில் பச்சைச்துணி அணியச் சொல்றாய்ங்க :)
பச்சை கலருக்கும் கண்ணிற்கும் எதோ ஒரு ஒற்றுமை உண்டுதானே !?
தடுத்துக்கொள்வது, அறிகுறிகள், சிகிச்சை முறைகள், சிகிச்சைக்குப் பிறகு... என அனைத்தும் பலருக்கும் உதவும் பல தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅங்கங்கே [...] ரசிக்க வைத்தது...!
ஸ்வப்னா அவர்களுக்கும், சபீர் அவர்களுக்கும் நன்றிகள் பல...
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteஇப்பதிவை இங்கு அனுமத்தித்துப் பெருந்தன்மையுடன் பதிவு செய்த விழிப்புணர்வு வித்தகர் அவர்கட்கு முதற்கண் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆம். இங்குப் பதியப்பட்டுள்ள அருமையான இவ்வாக்கம் மீள்பதிவாக இருந்தாலும் மக்கட்கு “நன்மை” செய்ய வேண்டும் என்ற நோக்கில் பதிவாளரும், கட்டுரையாளரும் இணைந்து- மனமொப்பிச் செயல்பட்டதால், இதுவரை இக்கட்டுரையைக் காணாதிருந்தவர்கட்கும் ஓர் அரிய வாய்ப்பாக அமையும். இஃதே போன்று என் கவிதைகளும் மீள் பதிவாக இருப்பினும் நிபந்தனைகளின்றிப் பெருந்தன்மையுடன் எல்லார்க்கும் எல்லாம் போய்ச் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பதிந்து வருகின்றார், விழிப்புணரவு வித்தகர் சேக்கனா நிஜாம் என்னும் இத்தளத்தின் நிர்வாகி-- நெறியாளர், ஒற்றுமையை நாடும் உங்களின் உளத்தூயமைக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டும்; இன்னும் நிரம்ப வலைத்தளங்கல் தொடங்குவீர்கள்; எங்களின் ஆதரவும் உண்டு.
நிற்க., முனைவர் அவர்களின் இக்கட்டுரையைப் படித்து விட்டு (மீண்டும் மீள்பதிவில் இங்குப் படித்து விட்டு) அதனால் எனக்கும் நன்மை தான்! முதலில் பதிந்த பொழுது எழாத ஐயங்கள் இப்பொழுது எனக்கு ஏற்பட்டன - இப்பொழுது இங்குப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது.
எனக்குச் சுமார் 5 ஆண்டுகட்கு முன்னர்த் தலைவலி அதிகமாக இருந்ததால் மதுரை அர்விந்த் கண் மருத்துவமனையில் காட்டிச் சிகிச்சை பெற்றேன்; அங்குக் கதிரியக்கம் வழியாக “குளுக்கோமா” என்னும் கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை செய்தார்கள்; இப்பொழுது மீண்டும் தலைவலித் துவங்கி விட்டது. மீண்டும் அது போன்றதொரு சிகிச்சை செய்ய வேண்டுமா?
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஒளியைத் தேடி ஒரு பயணம்.
இது தலைப்பு.
ஒளியைத் தேடி பயணம் செய்யும் நாம், ஒளியின் மகிமையையும் தெரிந்து கொள்வதற்காக ஒரு பதிவை இங்கு கொடுத்து சரியான முறையான கண்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை கொடுத்ததற்காக பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/
நன்றி சொந்தமே !
Deleteஉங்களின் திரட்டியில் இணை[ந்]த்து விடுவோம்.
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க
ReplyDeletevery good article.
ஒளியைத் தேடி ஒரு பயணம்...
ReplyDeleteதிகட்டத் நகைச்சுவை கலக்கலுடன் திடமான விழிப்புணர்வு வரிகளில் அருமையான ஒரு ஆக்கம்.
வாழ்த்துக்கள்.
ஒளியைத் தேடி ஒரு பயணம்...
ReplyDeleteஆஹா என்ன ஒரு அருமையான தலைப்பு.
இக்கட்டுரைக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது.
ஒளியைத் தேடி ஒரு பயணம்...அழகிய தலைப்பு அருமையான தெளிவான நகைச்சுவையான ஒரு அனுபவம்.
ReplyDeleteஇது போன்று என் உம்மாவிற்கும் இருக்கின்றது நான் ஊர் சென்று அவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருகின்றேன் இன்ஷா அல்லாஹு என்று அந்த கண் அறுவை சிகிச்சையை அல்லாஹுத்தாலா லேசாக்கி வைக்கணும் என துவா செய்யுங்கள்.
இன்ஷாஅல்லாஹ்
Deleteஇன்ஷா அல்லாஹ் !
Deleteஅய்யா மிகச்சிறந்த படைப்பு
ReplyDeleteமிகப் பயனுள்ள கட்டுரை.... சட்டென வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். மற்றவருக்கு இல்லாததை நினைத்து நமக்கு இல்லாததை பற்றி ஆறுதல் கொள்வது அருமையான மன உணர்வு. நன்றி.... இன்சா அல்லாஹ் !
ReplyDeleteபடித்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.
ReplyDelete