.

Pages

Tuesday, May 28, 2013

பூனைக்கு மணி கட்டுவது யார் !?

முன் குறிப்பு : அன்று மருத்துவம் தெய்வீகத்து சமம் என்று கருதப்பட்டது, ஆனால் இன்று ஒரு சில மருத்துவர்களும், மற்றும் பல மருந்து கடைகள் வைத்துருப்போரும் செய்யும் தவறுகளினால் மருத்துவத்துக்கே கெட்டப் பெயர் வந்து கொண்டிருக்கு.  

வைத்தியம் என்றால் என்ன ? இப்படி ஒரு கேள்வியை பொது மக்களிடம் கேட்டால் ஆளாளுக்கு ஒரு பதிலைத் தருவார்கள். அல்லது ஏம்பா உனக்கு என்ன பைத்தியமா என்னிடம் வந்து வைத்தியத்தைப் பற்றி கேட்கிறாய் என்பார்கள். மேலும் ஒரு வியாதியை குறிப்பிட்டு கேட்டாலும் அதுக்கும் அவர்களுக்கு தெரிந்த வைத்திய முறையை சொல்லுவார்கள், அப்படி பார்த்தால் எல்லோரும் வைத்தியரா என்றால், எல்லோரும் ஒரு வகையில் மருத்துவத்தை அறிந்து வைத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

இன்று நம்மிடையே சுற்றிக் கொண்டிருக்கும் வைத்திய முறைகள்.

ஆயுர்வேதம். / யூனானி. / ஹோமியோபதி. / அலோபதி (ஆங்கிலம்).

இன்னும் அனேக மருத்துவங்கள் நம்மைச் சுற்றி சுற்றி வந்தாலும்.  போலிகளுக்கு குறைவே கிடையாது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆயுர்வேதம் என்பது இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறையாகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளில் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. முனிவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மருத்துவ நூல்கள்தான் இன்றைய ஆயுர்வேத மருத்துவ முறையாகும்.

யூனானி மருத்துவம் முறை கிரேக்க-அரேபிய வைத்திய முறையாகும். யூனானி மருத்துவ முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறதாயினும் இந்த மருத்துவம் பற்றிச் சிதறிக் கிடந்த தகவல்கள் பாரசீக மருத்துவரான இப்னு சீனா (980-1037) என்பவரால் தொகுக்கப்பட்டன. ஆயுர்வேத மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த யூனானி மருத்துவ முறை இந்தியாவில் மாற்று வைத்திய முறையாக காணப்படுகிறது.

ஹோமியோபதி அலோபதிக்கு எதிராக ஜெர்மனியில் தோன்றிய மருத்துவம், ஹோமியோபதி உலகின் மருத்துவத்தில் இரண்டாவதாகும், சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்தில் எம்.டி.பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

அலோபதி அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம் அலோபதி பருத்துவம் என்ற பெயரில் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையாகும்.

மருத்துவத்தைப் பற்றிய ஆரம்ப கால குறிப்புகளில் பின்வரும் ஐந்து வகை ஆதாரங்கள் நமக்கு கிடைக்கின்றன.

அ) இந்தியாவின் ஆயுர்வேத குறிப்புகள்.
ஆ) எகிப்தின் பாப்பிரஸ் மருத்துவ குறிப்புகள்.
இ) பழமை வாய்ந்த சீன மருத்துவ குறிப்புகள்.
ஈ) செவ்விந்திய மாயா மருத்துவ குறிப்புகள்.
உ) கிரேக்க மருத்துவ குறிப்புகள்.

அன்று ஊருக்கு ஒரு வைத்தியர் இருப்பார், முகத்தைப் பார்த்து, இமைகளை கொஞ்சம் நீக்கிவிட்டு கண்களைப் பார்த்து, கை பிடித்து நாடி நரம்பெல்லாம் தொட்டு பார்த்துவிட்டு மருந்து கொடுப்பார், வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணைத் தேய்த்து குளிப்பது, வருடத்திற்கு இரண்டு முறை பேதிகள் கொடுத்து வயிற்றை சுத்தம் செய்வது, இப்படி வழக்கத்தில் இருந்து வந்தது, நோயும் அதோடு பறந்தும் போனது. மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தாய்மார்கள் குழந்தைகளை வீட்டிலேயே சுகப் பிரசவமாக பெற்று வந்தார்கள், பிரசவத்தை கவனிப்பதற்கென்றே அந்தந்த பகுதிகளில் கை மருத்துவத்தில் கைதேர்ந்த ஒரு பெரிய மனுஷி இருப்பார், அவருடை கைப் பக்குவத்தில் வீட்டிலேயே சுகப் பிரசவமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் என் கூடப் பிறந்த அத்தனைபேரும் இம்மாதிரியான கை மருத்துவ முறையில் வீட்டிலேயே சுகப் பிரசவமாக பிறந்ததாக என் தாய் சொல்லுவார்கள். முப்பது வயதை கடந்தவர்களில் 90%சதவீதத்தினர் வீட்டிலேயே சுகமாக பிறந்தவராக இருப்பார்கள்.

இன்று நவீனம் என்ற பெயரில் மக்களின் ஆரோக்கியம் பல வழிகளில் சீரழிந்து வருகின்றது என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் யாரும் உண்டா?

அன்று மருத்துவம்  ஒரு உறுதிமொழிக்குள்  கட்டுப்பட்டு இருந்தது நோயாளிகள் நிரந்தர சுகம் அடைந்தார்கள், நோயாளிகளும் மருத்துவர்களும் மன நிறைவு அடைந்தனர். அதே மருத்துவம் இன்று ஒரு வியாபாரத்திற்குள் கட்டுப்பட்டு கிடக்கின்றது நோயாளிகள் தற்காலிக சுகம் அடைகிறார்கள், நோயாளிகளும் மருத்துவர்களும் மன நிறைவு அடையாமல் திண்டாடி வருகின்றனர். இப்படியான இந்தச் சூழலில் மருந்து கடைகளின் உதயம், மேலும் மருத்துவர்கள் நோயாளிகளை வெளியில் அலைய விடக்கூடாது என்ற (தூய உள்ளத்தோடு) தங்களுக்கு அருகிலேயே மருந்து கடைகளை நிறுவி இருக்கின்றனர்.

அப்பப்பா சொல்லி மாளாது, ஒவ்வொரு மருந்து கடைகளிலும் அலைமோதும் மக்கள் கூட்டம் அந்த அளவுக்கு வியாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது, ஒருத்தருக்கு ஒரு வியாதி வந்து விட்டால் அவ்வளவுதான், அவர் சாகும்வரை மாத்திரை மருந்துமாக அலைய வேண்டியதுதான், அதுதான் அவரின் தலையெழுத்து. இதுதான் தலையெழுத்து என்று இருக்கும்போது இன்னொரு வியாதி முன்பிருந்த நோயிக்கு நட்பு நோயாக வந்து விடும்.

சில நாட்களுக்கு முன் நான் மாலை நேரம் காற்று வாங்க மெதுவாக நடந்து கொண்டு போகும்போது, மருந்து கடை ஒன்றில் ஒருவர் மருந்து வாங்கி வரும்போது கை தவறி கீழே விழுந்து விட்டது, சட்டென்று நான் அதை எடுத்து பார்த்ததில் அது வெறும் மாத்திரைதான், அவரிடம் கொடுத்து விட்டு, இது எந்த மாதிரியான நோய்க்கு உண்டான மருந்து என்று வினவ அவர் சொன்ன பதிலை கேட்டு எனக்கு தூக்கி வாரிப்போட்டது,. நீங்க இப்படி செய்யக்கூடாது ஒன்னு இருக்க மற்றொன்று ஏற்பட்டுவிடும் ஆகவே முறையாக மருத்துவரிடம் ஆலோசனை செய்து அதுக்கு தக்கவாறு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தேன்.

மருந்து கடைகள் வைத்துருப்போர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மொத்தமாகவோ அல்லது உதிரியாகவோ மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்கக் கூடாது, அனேக இடங்களில் போலி மருந்துகளும் நல்ல மருந்துகளோடு நைசாக கடைக்குள் வருவதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன, பொதுவாக சாதாரண மருந்துகள் மருந்து கடைகள் என்றில்லாமல் எல்லா கடைகளிலும் கிடைகின்றது, கூடிய விரைவில் காய்கறி கடைகளிலும் கிடைத்தாலும் ஆச்சரியப்படவேண்டியது இல்லை. மருந்து விஷயங்களில் கடை உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகவரில் “நலம் பெற வேண்டுகிறோம்” என்று எழுதினால் மட்டும் போதாது, நீங்கள்  நோயாளிகளுக்காக ஒவ்வொரு நாளும் உண்மையான விசுவாசத்தோடு பிரார்த்திக்க வேண்டும்.

மருத்துவர்கள் தன்னிடம் வரும் நோயாளிகளை நிரந்தரமாக குணப்படுத்த முயற்சிக்க வேண்டும், ஒரு சில மருத்துவர்களிடமும் மருந்து கடைகளிடமும் ஏகப்பட்ட நோயாளிகள் வாடிக்கையாகவே மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு தற்காலிக சுக மனிதனாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சில மருத்துவ மனைகளை தவிர அநேக மருத்துவ மனைகள் சுகாதாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு அவதி தரும் இடமாக இருக்கின்றது.

நம் பாரதத்தில் பல இடங்களில் போலியான பதிவு எண்களை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட மருந்துவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது, இந்த விஷயத்தில் நோயாளிகளின் விழிப்புணர்வு மட்டும் இல்லை பொது மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

மருந்து கடைகளில் மருந்து வாங்கும்பொழுது அதன் தயாரிப்பு தேதி மற்றும் முடிவு பெரும் தேதியை மறக்காமல் கவனிக்க வேண்டும், மேலும் மருந்து கடை ஊழியர்களிடம் இந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்று கேட்க தவற வேண்டாம். இப்படி ஒவ்வொரு நோயாளியும் கேட்க்கும் பட்சத்தில் மருந்து கடை காரர்களுக்கு பயம் வந்து விடும்.

ஆக மொத்தத்தில் மருத்துவர்கள், மருத்துவ மனைகள், மருந்து கடை உரிமையாளர்கள், நோயாளிகள், பொதுமக்கள் அனைவரும் மருத்துவம் விஷயத்தில் மிகுந்த அக்கறையுடன் விழிப்புணர்வோடு இருந்தால் தரமற்ற மருத்துவத்திலிருந்து தப்பிக்கலாம்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

35 comments:

  1. உங்களுக்கு மருத்துவத்திற்கு PHD கொடுத்தாலும் தகும் நேர்த்தியான நிறைய விளக்கங்கள்
    வைத்திய வகைகள்
    1.சித்தா
    2.தொடு வைத்தியம்
    3.அக்கு பஞ்சர்
    பிசியோ தெராபி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      எனக்கு PHD வேண்டாம், சுகம் மட்டும் போதும்.

      Delete
  2. ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.

    சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஏறக்குறைய நான்காயிரம் வேதிப்பொருட்களை வேறு வேறு கூட்டணிகளில் பயன்படுத்திதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாத்திரைக்கு வெவ்வேறு கம்பெனிகளில் வேறு வேறு பெயர்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய "எங்கள் புராடக்ட்'களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்" என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  4. டாக்டர்களே தாங்கள் நடத்தும் கிளினிக்கிள் மருந்துக் கடைகளை ஏற்படுத்தி சேவை செய்வது பரவலாகக் காணப்பட்டாலும் மருந்து கடை நடத்துனர்களின் போட்டியால் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் டாக்டருக்கு 'பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், ஊக்கத்தொகை, இன்பச் சுற்றுலாவிற்கான பேக்கேஜ், அன்பளிப்புகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை அசத்தி விடுகின்றனர். இதனால் டாக்டரால் பரிந்துரை செய்யும் மருந்துகளை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  5. இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை என்பது நமக்கெல்லாம் வியப்பைத் தந்தாலும் அரசால் நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிலோ, அல்லது கூட்டுறவு மருந்து கடை மூலமாகவோ M.R.P விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து கிடைப்பதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  6. மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே !? என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.

    இறுதியாக 'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதால் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமானதொன்றாகும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  7. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்

    காலச்சூழலுக்கேற்ற ஆக்கம் !

    தொடர வாழ்த்துக்கள் மனித உரிமை ஆர்வலருக்கு...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  8. முன்பு இருந்த மன நிறைவு, இப்போது இல்லை என்பதும் உண்மை... (மருத்துவத்தில் மட்டுமல்ல)

    பயன் தரும் விழிப்புணர்வு தகவல்களுக்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உண்மையில் முன்பு இருந்த மன நிறைவு இப்போது எதிலும் இல்லை.

      ஒருவன் எந்த ஒரு வியாதியும் இல்லாமல் நல்ல சுகத்தோடு இருந்தாலும் அந்த சுகத்திலும் அவன் மன நிறைவு அடைவதில்லை.

      Delete
  9. அஃது எப்படி, மச்சான்! “பூனைக்கு மணி கட்டுவது யார்?” என்று (வேறொரு தளத்தில் வந்திருக்கும் ஆக்கத்திற்குச் சுருக்கமாக ஒரே வரியில் ) ஒரு பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். இப்பொழுது நான் எண்ணிய அதே வரிகளையே உங்களின் எண்ணமும் ஆட்கொண்டு, அதனைத் தலைப்பாகவே இட்டு விட்டீர்கள்!

    எல்லாப் பிரச்சனைகட்கும் துணிவாக முடிவோ, தீர்ப்போ, திருத்தமோ செய்யாமல் இன்னும் பிரச்சனைகள் நீண்டு கொண்டே போவதால் ஏற்படும் விரக்தியே உங்களின் தலைப்பால் யான் அறியும் உண்மையாகும்.

    எதுவரைத் திருத்தம் ஏற்படுமோ அதுவரைக்கும்...................

    மிகுந்த ஆய்வுடன் கூடிய நெடிய ஆக்கம் அளித்து எங்கட்குப் பற்பல விடயங்களை அறிய வைத்தமைக்கும் நன்றி, மச்சான்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      மச்சான், பிள்ளையை பெற்றெடுப்பது மட்டும் என் வேலை, அந்த பிள்ளைக்கு பெயர் வைக்கும் உரிமையை நமது விழிப்புணர்வு வித்தகரிடம் ஒப்படைத்து விட்டேன், அவர் எந்த பெயர் வைத்தாலும் பொருத்தமாக வைப்பார் மச்சான்.

      அதெல்லாம் சரி நீங்கள் எப்போது ஊர் வர இருக்கின்றீர்கள்?

      Delete
    2. அப்படியானாலும் சரியே! விழிப்புணர்வு வித்தகர் இத்துறையில் மிகவும் அனுபவம் பெற்றவராகி விட்டார்; எந்தக் கட்டுரை/கவிதைக்கு எப்படி “ஈர்ப்பான” ஒரு தலைப்பிட்டால் படிக்க வரும் கண்களையும் விரைவில் தன் ச.வி.ப.த்தில் தொடர்ந்து ஈடுபாடுடன் படிக்க வைத்து, தொடர்ந்து பற்பல இணையத்தொடர்புகளும் தேடி வர வைத்துவிடுகின்றார். அவரின் கடின உழைப்புக்கு முன்னால் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை மச்சான்! அவர்க்குக் கண் திருஷ்டி படாமல் இருக்கட்டும்!

      இன்ஷா அல்லாஹ் ஜூன் 6ல் சந்திப்போம்.

      Delete
    3. இன்ஷா அல்லாஹ் ஜூன் 6ல் சந்தித்து சிந்திப்போம் மச்சான்.

      Delete
  10. விழிப்புணர்வு பக்கங்கள் தளத்திற்கு ஏற்ற

    விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மருத்துவத்தில் மிகுந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

      நான் கேள்விப்பட்ட வகையில் ஒரு சில மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சைக் கொண்டு பிரசவம் பார்க்கும்போது கிட்னிக்கு ஆட்டை போடுகிறார்களாம்.

      ஆகவே, தாய்மார்களே மிகவும் உஷார், உஷார், இந்த காலத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.

      Delete
    2. கல்வியும் ,மருத்துவத்துறையும்

      வியாபார துறையாக மாறி நெடுன்காலமாகி விட்டது

      Delete
    3. நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே.

      Delete
  11. அனைவரும் அறியப்பட வேண்டிய நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.

    பூனைக்கு மணி கட்ட ஆள் தேட வேண்டிய அவசியம் இல்லை மனித உரிமைக்காவலரே.! உங்களின் இத்தகைய படைப்புக்களை படித்தால் எல்லா கள்ளப்பூனைகளும் காணாமல் போய் விடும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      என் ஆக்கத்துக்கு கூடுதலாக சுவை சேர்த்த உங்கள் வரிகளுக்கு நன்றி.

      Delete
  12. ஒரு சில மருத்துவ மனைகளை தவிர அநேக மருத்துவ மனைகள் சுகாதாரம் இல்லாமல் நோயாளிகளுக்கு அவதி தரும் இடமாக இருக்கின்றது. நம் பாரதத்தில் பல இடங்களில் போலியான பதிவு எண்களை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட மருத்துவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றது, இந்த விஷயத்தில் நோயாளிகளின் விழிப்புணர்வு மட்டும் இல்லை பொது மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் இருப்பார்களா?.

    மிக பயனுள்ள பதிவு, பயன் தரும் விழிப்புணர்வு தகவல்களுக்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்... காக்கா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நமதூரில் இருக்கின்ற ஷிபா மருத்துவ மனையை எப்படி கொண்டு வரலாம் தெரியுமா?

      Delete
  13. உண்மையான விழிப்புணர்வை ஊட்டும பதிவு.

    தம்பி! நாம் சந்திக்கும்போது நீங்கள் உங்கள் தொப்பியை கழற்றிக் காட்டி இப்போதாவது என்னைத் தெரிகிறதா என்று கேட்டீர்கள். அப்போதும் தெரியவில்லை. அந்தத் தலைக்குள் இவ்வளவு விஷயம் இருப்பதும் தெரியவில்லை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      உங்களின் பின்னூட்டம் சிந்திக்கவும் வைக்கின்றது, சிரிப்பையும் வரவழைக்கின்றது.

      Delete
  14. விழிப்புணர்வு மிக்க பதிவு.

    முன்பல்லாம் நாட்டு வைத்தியம் முன்னோக்கி இருந்தது கலப்படம் இல்லாமல். இப்போது நாம் நல்லா இருந்தால் கூட நாம் வாங்கும் பொருள்களில் கலப்படம் நாம் சாப்பிடும் உணவுகளில் கலப்படம் இதை தாண்டி மருத்தவரிடம் போனால் அங்கு மருந்து கலப்படம் இப்படியே எங்கு போனாலும் கலப்படம் கலப்படம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      இன்றும் நாட்டு வைத்தியம் நடைமுறையில் இருக்கு, நான் கூட நாட்டு வைத்திய முறையைத்தான் விரும்புகின்றேன்.

      நேற்று கூட எனக்கு சரியான உடம்பு வலி அதாவது சல்லகடுப்பு என்று சொல்வார்களே, அது.

      என்ன செய்தேன் தெரியுமா? கண்ட திப்லி, அரிசி திப்லி, சித்தரத்தை, வசம்பு, வால்மிளகு, வெள்ளைமிளகு, நன்னாரி வேர், ஓலைத்தாமரை வேர், ஓமம் இவைகளை கஷாயம் மாதிரி நன்றாக காய்ச்சி வடிகட்டி இனிப்புக்கு கற்பட்டியைச் சேர்த்து இரண்டு முறை குடித்தேன். இப்போது உடம்பு கல கலவென்று இருக்குது.

      Delete
  15. ஜமால் காக்காவின் மருத்துவ பதிவு அருமை

    மிக பயனுள்ள பதிவு, பயன் தரும் தகவல்கள் நிறைந்துள்ளது ஜசக்கல்லாஹ் ஹைர்...

    தொடர்ந்து பல தகவல்களை எழுதுக...
    இன்னும் பல பதிவுகளை தருக..

    ReplyDelete
    Replies
    1. தம்பி உன் கருத்துக்கு நன்றி.

      இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து பல பதிவுகளை தருவேன்.

      Delete
  16. பயனுள்ள பதிவு,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers