.

Pages

Thursday, May 9, 2013

ஒரு வாரிசு உருவாகிறது...

நாடெங்கும் கொடிக் கம்பம்
நட்டுவச்சாச்சு
நட்டநடு வீதியெங்கும்
செலையும் வச்சாச்சு

வீடெங்கும் புகுந்தலசி
ஓட்டுக் கேட்டாச்சு
வெவரமாகப் பேசினவன்
இடுப்பொடிச்சாச்சு

காடுமலை மேடுயெல்லாம்
மேடை இட்டாச்சு
கள்ள ஓட்டுப் போட்டு இப்போ
ஆட்சி வந்தாச்சு

ஏடெங்கும் பொய்யெழுதிப்
புகழும்வந்தாச்சு
ஏழெட்டுத் தலைமுறைக்குக்
காசும் சேத்தாச்சு

கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு

ஆடு மாடு மந்தையான
மக்கள் மாறிடுமா
ஆட்சி நம்மக் கையைவிட்டு
ஓடிப்போயிருமா

பாடுபட்டுப் புளுகிவச்ச
சத்தியங் கேட்டு
பழயபடி இந்தமொறையும்
நமக்குத்தான் ஓட்டு

ஏடெடுத்துப் புகழெழுது
செத்த பயலுக்கு
எனக்கும் அதுல பொய்யெழுது
நல்ல பெயருக்கு

நாளைக்கு நான் புதுச்சட்டம்
போட்டுறப் போறேன்
நாடெங்கும் லஞ்சத்தையே
அமுலிலாக்கிடுவேன்

வேளைக்குயோர் ஊழலுன்னு
வரிசைப் படுத்திட்டேன்
வேறெதுக்கு ஓட்டு வாங்கி
ஜெயிச்சு வந்திருக்கேன்

ஏழை ஜனங்க ஏமாறும்
வழியைத் தெரிஞ்சிக்க
எட்டடுக்குக் காரனுக்கு
ஒதவி செஞ்சிக்க

காளை மனசுக் காரங்களைத்
தூண்டி விட்டுக்க
காரு கடை வீதியெல்லாம்
நாசமாக்கிக்க

கோலெடுத்துக் கொடுத்துவிடு
சாதிச் சண்டைக்கு
கொடுத்தவனைத் தெரியவேணாம்
மக்கள் கண்ணுக்கு

ஆளுக்குஆள் சாதிவெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க

கேளுயின்னும் எத்தனையோ
புத்தி வச்சிருக்கேன்
கேட்டெனக்குப் பின்னுமதைச்
செய்ய நெனைச்சிக்க

பாலுமோரு தயிருயெல்லாம்
ஓரினச்சாதி
பந்தபாசம் நம்மளுக்கும்
அந்த மாதிரி
அன்புடன் புகாரி

5 comments:

  1. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலமாக அமையும்

    இதைவிட ஒரு விழிப்புணர்வு வேண்டுமா ? என கேட்பது போல் உள்ளது கவிதை

    தொடர பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாட்டுப் புற பாடலில்
    நாட்டு நடப்பை
    கவிதையாய்
    நாட்டு நற்று வைத்தீர்
    நன்றாகவே!

    ReplyDelete
  3. அருமையான வரிகள் அனுபவம் மிக்க திறமை வாழ்த்துக்கள் அதிரை புஹாரி காக்கா அவர்களே.

    ReplyDelete
  4. பாராளு மன்றத் தேர்தலுக்கு தோதான கவிதை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நம்மமக்க காதுக்கு
    செய்திவந்துடிச்சி

    நாமெல்லாம் திருந்தி வாழ
    நேரம் வந்துடிச்சி

    புகாரியின் கவிதைக்கு
    புகழும் வந்துடிச்சி

    புத்திகெட்டவன் புரிந்துகொள்ள
    நாளும் வந்துடிச்சி

    நாட்டுப்புற பாட்டு மெட்டில் கவி வார்த்து நல்லபாடம் சொல்லியிருக்கிறீர்கள்.

    என் நிறைவான வாழ்த்துக்கள் அன்பு நண்பரே.



    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers