.

Pages

Monday, June 10, 2013

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் !

இயற்கை சீற்றங்களான புயல் ,  நில நடுக்கம், சுனாமி போர்வை நிகழ்ந்து முடிந்த பின்  நம்மில் பலர்  நடந்து கொள்ளும் முறைகள் இயற்கை சீற்றங்கள் விளைவிக்கும் சேதத்தை விட அதிக சேதம் விளைவிக்கின்றன.  கடந்த மாதம் மகாசென் புயல் தமிழ்நாட்டை தாக்காமல் போய்விட்டதே என்று வருத்தப் பட்டோரும் இருக்கவே செய்தனர். கடந்த மாதம் மட்டும் மேலும் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகி வலுவிழ்ந்ததற்காக வருத்தப் பட்டோரும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் புதுவையையும்,  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட “ தானே” புயலுக்கு பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல. நான் பழைய செய்திகளை எழுத வரவில்லை. இததகைய கொடும் இயற்கை சீற்றங்களுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் சிலர்  நடந்து கொண்ட முறைகளைப்ப்றி கேள்விப்படும்போதும், படிக்கும்போதும் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மாண்புகள்  கரைந்து கொண்டிருப்பதையும், மனிதப்பண்புகள் மருவி மறைந்து கொண்டிருப்பதையும் உணர முடிகிறது என்பதையே குறிப்பிட விரும்புகிறேன்.

“தானே” புயல் தானே வந்து அடித்து விட்டுப் போய்விட்டது.

ஆனால   அதன் பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வில் அடித்த புயலும் அதன் விளைவுகளும்  மனிதப்பண்புகள் மீது மாறா கலங்கங்களை ஏற்படுத்திவிட்டன. இயற்கையின் இத்தகைய சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் பலர் வாழ்வின் ஆதாரங்களை இழந்து தெருவுக்கு வந்து விடுகிறார்கள். சிலரோ சில நாட்களில் பல லட்சங்களை பார்த்துவிடுகிறார்கள்

பச்சிளம் குழந்தைகள் பாலின்றி தவித்தன.
வீடுகள் விளக்கின்றி மூழ்கின. குடிக்ககூட நீரில்லை.
அடுப்பெரிக்க விறகில்லை- படுத்துறங்க பாய் இல்லை- நிற்பதற்கு நிழல் இல்லை- வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை.  சாலைபோக்குவரத்து இல்லை. நோயாளிகளுக்கு மருந்து இல்லை. தொலை தொடர்பு இல்லை. மின்சாரம் இல்லை- செல் போன்களுக்கு பேட்டரி சார்ஜ் இல்லை. ரீ சார்ஜ் செய்ய முடியவில்லை.

பச்சிளம்குழந்தைகள் பாலின்றி தவித்து இருக்கலாம். ஆனால் லிட்டருக்கு நூறு ரூபாய் கொடுத்தால் பால் தாராளமாக கிடைத்தது. குடிக்க தண்ணீரின்றி மக்கள் தவித்து இருக்கலாம் ஆனால் குடிநீர் என்று கூறி விற்கப்பட்ட ஒரு வாளி தண்ணீருக்கு விலை ஐம்பது ரூபாய். மண்ணெண்ணை பதுக்கிவைக்கப்பட்டு அநியாய விலைக்கு  விற்கப்பட்டது. ரீ சார்ஜ் கார்டுகள் இரட்டை விலை கொடுத்தால் கிடைத்தன. அவசர நோயாளிகளை ஏற்றி செல்ல ஐந்து மடங்கு பணம் கொடுத்தால் ஆட்டோக்கள் வரத்தயாராக இருந்தன. இப்படி புயல் அடித்த பகுதிகளில் பகல் கொள்ளை புயல் அடித்தது. மறைந்து வரும் மக்கள் பண்புகளுக்கு மாறாத சான்று பகர்ந்து கலங்கமாய் நின்றன.

கடந்த 2011- ல் ஜப்பானில் சுனாமியும், பூகம்பமும் வந்த போது அந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் காட்டிக்கொண்ட சமூக வாஞ்சையும் ஒத்துழைப்பும் உலகளவில் பாராட்டப்பட்டன. ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டோர் அந்த ஐந்து லிட்டரை மட்டுமே போதும் என்று வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். ஒரு பொட்டலம் உணவு தேவைப்பட்டோர் அதை மட்டுமே வாங்கிச்சென்றனர். கூடுதலாக கொடுத்தாலும் வாங்க மறுத்தனர். இதுதான் சமூக வாழ்வு - சமுதாய நேசம். ஆனால்  இங்கோ , தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அடித்து பிடித்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்றனர்.

கடும் வெயிலில் நடுக்காட்டில் ஒருவன் வழிமாறிப்போனான். தாகத்தால் நாவறண்டு தவித்தான். வெகுதூரத்தே  கையால் தண்ணீர் அடித்து குடிக்கும் ஒரு குழாய் தெரிந்தது அதை நோக்கி ஓடினான். அருகில் சென்று பார்க்கும்போது அந்த கை குழாய் அருகில் ஒரு குவளையும்  அதனுள் ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீரும் வைக்கப்படிருந்தது. தாகத்தால் தவித்து ஓடிவந்தவன் அந்த குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தனது தாகத்தை தீர்த்துவிடவில்லை. மாறாக அந்த குவளையில் இருந்த  தண்ணீரை கைகுழாய்க்குள் ஊற்றி மெல்ல மெல்ல  குழாயிலிருந்து தண்ணீரை அடித்து குவளையில்  பிடித்து பின் குடித்து தனது தாகம் தீர்த்துக்கொண்டதுடன் அல்லாமல் அடுத்து வருபவருக்கும் உதவும் என்று அதே குவளையில் மீண்டும் நீர் அடித்து நிரப்பி வைத்துவிட்டு இடம் பெயர்ந்தான். தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பவர்கள் அடுத்தவர் நலனையும் பேணவேண்டும் என்பதற்கு இந்த உருவக சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.

கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம்.  புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது .

தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை மேலோங்கி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த சமுதாயமே சுயநல சமுதாயமாக மாறிவருகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று பலர் செயல் பட்டு வருகிறார்கள். தான் சார்ந்து இருக்கும் சமுதாய நலன் பேணவேண்டுமே என்கிற மனிதப்பண்பு அருகி, மருகி, மாய்ந்து வருகிறது.

விபத்து நடந்த இடங்களில் –விமான விபத்தாக இருந்தாலும் சாலை விபத்தாக இருந்தாலும் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற ஓடி வரும் எண்ணத்தில் வருபவர்களைவிட அவர்கள் கழுத்தில் காதில் இருப்பதை அபகரிக்க ஓடி வருபவர்களே அதிகம். மங்களூரில் இது நடந்தது. காஞ்சீபுரத்திலும் இது நடந்தது. நாடு இரவில் சாலை  ஓரங்களில் விபத்தை எதிர்பார்த்து கூட்டங்கள் குடித்துவிட்டுக் காத்துக் கிடக்கின்றன. வக்கிர எண்ணங்களின் உச்சநிலை.
சூழ்நிலைகளை பயன்படுத்தி சுருட்டும்  கூட்டம் – கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டம் புகைவண்டி நிலையங்களில் - பேருந்து நிலையங்களில்  –பொது மருத்துவமனைகளில் மட்டுமல்ல – பிணகொட்டகைகளிலும் கூட நிறைந்து மலிந்து காணப்படுகின்றன. இறந்தவர் உடலை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்திகள், அழுது ஓலமிடும்  சொந்தக்காரர்களின் சோகத்தை அளவிட்டு அதற்கேற்ப  விலைவைக்கும் அவலங்கள் கண்கூடாக காணக்கிடைக்கின்றன. கேட்டதொகை கொடுக்காவிட்டால் பிணமும் நகராது; இறப்பு சான்றிதழும் கிடைக்காது.

அரசு மருத்துவ மனைகளில் அரசு தரும் ஊதியம் பெற்றுக்கொண்டே பணியாற்றும் பலர் கீழிருந்து மேல் மட்டம் வரை  நோயாளிகளின் அவசர அவல நிலைமைகளை பயன்படுத்தி பணம் பிடுங்குகிறார்கள். உடல் உறுப்புகளை திருடுகிறார்கள். பிறந்த குழந்தைகளை கடத்தி விற்கிறார்கள். கடத்தப்பட்ட குழந்தைகளின் உறுப்புகளை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

புதைக்கப்பட்ட பிணங்களை கூட தோண்டி எடுத்து அதில் விட்டு வைக்கப்பட்ட தங்கம்  வெள்ளிகளை திருடுபவர்கள் அணியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் வந்து நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலி சங்கிலிகளை அறுக்கின்றனர்.

வாடகை கொலையாளிகள் என்ற புதுவித வர்த்தக அமைப்பும், கைக்கு இவ்வளவு காலுக்கு இவ்வளவு உயிருக்கு இவ்வளவு என்று விலை நிர்ணய கலாச்சாரமும் அமுலுக்கு வந்துவிட்டது. இரும்புக்கு டாட்டா, செருப்புக்கு பாட்டா, அதிரையில் தேங்காய், மணப்பாரையில் முறுக்கு, பண்ருட்டியில் பலாப்பழம், நெய்வேலியில் நிலக்கரி என்பதுபோல் இந்த குற்றத்தை செய்வதற்கு இங்கிருந்து ஆள் கிடைக்கும் என்ற புதுவகை கமர்சியல் ஜியாக்ரபி உருவாகிவிட்டது.

வியாபாரிகள் நவீன முறைகளில்  கலப்படம் செய்து சமுதாயத்தை நோயாளிகளாக்குகின்றனர். சமுதாய இயக்கங்கள், சமூக நல இயக்கங்கள் என்ற பசுத்தோல் போர்த்திய புலிகள்  சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பெயர் சொல்லி நிதி திரட்டி சொந்த பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.           வழிபாட்டுத்தலங்கள்   கட்டுவதாகவும் , அநாதை விடுதிகள் நடத்துவதாகவும் குமர்களுக்காக நிதி வசூல் செய்வதாகவும் கூறி பொய் நெல்லை குத்தி பலர் பொங்க நினைக்கிறார்கள். உயிர் காக்கும் மருந்துகளை போலியாகவும் தயாரித்து விற்பனை செய்து  , காலாவதியான மருந்துகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்ய கிட்டங்கிகளில் குவித்துவைத்தும் அவைகளில் தேதிகளை மாற்றி பணம் பண்ணும பாவிகளையும் பார்த்தோமே.  நினைத்தாலே குலைநடுங்கும் செயலை செய்துவிட்டு ஆடம்பர கார்களில் உலா வருகிறார்களே!

அனாதைகளாக இருப்பவர்களைப் பற்றிய பட்டியல் தயாரிக்கப் பட்டு அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. முதியோர்களின் முன்னோரின்  சொத்துக்கள் எவர்  பெயரிலோ இலஞ்சம் கொடுத்துப் பட்டா பெறப்படுகின்றன.

காவல் நிலையங்களில் கட்டை பஞ்சாயத்துக்களும் , நீதி மன்றங்களில் இல்லாதோர் எளியவர்களுக்கு உரிய நியாயமான தீர்ப்புகள் கிடைக்காத தன்மைகளும், பள்ளிக்கூடம், சாலைகள் அமைக்கும் ஒப்பந்தகாரர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  கைகோர்த்து ஒன்றுக்கும் உதவாத மட்டமான பொருள்களை பயன்படுத்தி கட்டப்பட்ட அரசு மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கும், போடப்பட்ட சாலைகளுக்கும் சான்று தருவதும் அவை குறைந்த வருடங்களில் இடிந்து விழுந்து இளம்பிஞ்சுகளும் உயிர்களும்  பலியாவதும்  அதிகரித்து வருகின்றன. ஏழை எளியவர்களின் நிலங்கள் அரசியல்வாதிகளாலும், செல்வாக்குப்படைத்தவ்ர்களாலும் ஏமாற்றி பிடுங்கப்படுகின்றன.

கோயிலுக்குப் போனால் செருப்பு ; ஆஸ்பத்திரிக்குப் போனால் உறுப்பு ; காவல் நிலையத்துக்குப் போனால் கற்பு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன.  .

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகுமே தவிர குறையாது.

இதற்கு என்ன தீர்வு ? சமூக அக்கறையும், சமுதாய வாஞ்சையும் , மனிதாபிமான உயர்நோக்கும் எப்படி உருவாகும்? தழைக்கும்? வளரும்?
மனித சமுதாயம் தன்னை சீர்படுத்திக்கொள்ளவேண்டுமானால் இறைவனின் கட்டளைகளுக்கு பயந்து நடக்கவேண்டும் என்ற உணர்வு- அப்படி நடக்காவிட்டால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம்- ஆகியன தனிமனிதனிடம் மேலோங்க வேண்டும் அவைகள் மேலோங்கினால் மட்டுமே தவறுகள், சுயநலம், சுரண்டல், அநீதி  ஆகியவை சமுதாயத்தைவிட்டு ஒழியும். ஆகவே இதற்கு தீர்வு இஸ்லாம்தான். மறைந்து கொண்டிருக்கும் மனித தன்மைகளை மீண்டும் வளர்த்துக்கொண்டுவர மாற்று மருந்து இஸ்லாம்தான். இஸ்லாம் தழைத்துள்ள பகுதிகளில் இத்தகைய சமூக அவலகுற்றங்கள்  ஒப்பிடுகையில் குறைவு என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. .

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் சுரண்டலும், கொள்ளை இலாபமும் எப்படி ஒழிக்கப்படும் என்பதையும்  தனிமனித ஒழுக்கங்கள் எப்படி மேம்படும் என்பதையும் அதற்கான நிருபிக்கப்பட்ட சான்றுகளையும் , இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடு செய்தோர் தண்டிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளையும் ஒரு தனி ஆக்கத்தில்தான் இன்ஷா அல்லாஹ் காணவேண்டும் .

திருமறை கூறுவதன்படி ,

“காலத்தின்மீது சாத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக்கொண்டும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்தவிர’” ( 103: 1-3)

சிந்திப்போம்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

16 comments:

  1. கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம். புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது .///
    கேட்டீரா மாந்தரே ஆசிரியரின் ஆக்கத்தை மூங்கிளுக்கு துளைபோட்டு துன்புறுத்தினாலும் அது தருவது இசை கால்பந்தோ உதை படுகிறது காரணம் இப்பொழுதுதானே புரிகிறது

    மரங்களின் மகத்துவத்தை நம் ஆக்கம் பறைசாட்டும் காத்திருங்கள்

    ReplyDelete
  2. கடும் வெயிலில் நடுக்காட்டில் ஒருவன் வழிமாறிப்போனான். தாகத்தால் நாவறண்டு தவித்தான். வெகுதூரத்தே கையால் தண்ணீர் அடித்து குடிக்கும் ஒரு குழாய் தெரிந்தது அதை நோக்கி ஓடினான். அருகில் சென்று பார்க்கும்போது அந்த கை குழாய் அருகில் ஒரு குவளையும் அதனுள் ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீரும் வைக்கப்படிருந்தது. தாகத்தால் தவித்து ஓடிவந்தவன் அந்த குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தனது தாகத்தை தீர்த்துவிடவில்லை. மாறாக அந்த குவளையில் இருந்த தண்ணீரை கைகுழாய்க்குள் ஊற்றி மெல்ல மெல்ல குழாயிலிருந்து தண்ணீரை அடித்து குவளையில் பிடித்து பின் குடித்து தனது தாகம் தீர்த்துக்கொண்டதுடன் அல்லாமல் அடுத்து வருபவருக்கும் உதவும் என்று அதே குவளையில் மீண்டும் நீர் அடித்து நிரப்பி வைத்துவிட்டு இடம் பெயர்ந்தான். தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பவர்கள் அடுத்தவர் நலனையும் பேணவேண்டும் என்பதற்கு இந்த உருவக சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது.////
    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் வாராந்திர எல்லா ஆக்கங்களும் அருமை அதில் ஒன்றுகூட சோடை போனதில்லை, படித்து சுவைத்து விட்டு, இன்ன சுவை என்று விவரிக்க தெரியாமல் இன்று வரை திகைத்துக் கொண்டு இருக்கின்றேன், காரணம் அதில் அடங்கி உள்ள சாராம்சம்தான்.

    இந்த ஆக்கத்திலும் கால் பந்தையும் புல்லாங்குழலையும் ஒப்பிட்டு அதாவது அதற்க்கு தேவை காற்று, அந்த காற்று எவ்வாறு மதிக்கப்படுகிறது என்ற உதாரணமும் அருமையிலும் அருமை.

    மேலும் தொடர பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. வசூல் ராஜாக்களுக்கு நல்லதொரு சாட்டையடியான ஆக்கம் !

    இவர்கள் தானாக திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

    கட்டுரையின் இறுதியில் நல்லதொரு திருமறை உபதேசத்துடன் முடித்திருப்பது தனிச்சிறப்பு !

    எக்காலத்திற்கும் ஏற்றதொரு நல்லதொரு விழிப்புணர்வு !

    வாழ்த்துக்கள் மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் அவர்களுக்கு

    ReplyDelete
  5. //கடந்த 2011- ல் ஜப்பானில் சுனாமியும், பூகம்பமும் வந்த போது அந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் காட்டிக்கொண்ட சமூக வாஞ்சையும் ஒத்துழைப்பும் உலகளவில் பாராட்டப்பட்டன. ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டோர் அந்த ஐந்து லிட்டரை மட்டுமே போதும் என்று வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். ஒரு பொட்டலம் உணவு தேவைப்பட்டோர் அதை மட்டுமே வாங்கிச்சென்றனர். கூடுதலாக கொடுத்தாலும் வாங்க மறுத்தனர். இதுதான் சமூக வாழ்வு - சமுதாய நேசம். ஆனால் இங்கோ , தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடித்து பிடித்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்றனர்.//


    முனைவர் காக்கா அவர்களின் இவ்வரிக்ளைப் படித்ததும் அன்று “ஜப்பான் உறுதியாய் ஜெய்ப்பான்” என்னும் தலைப்பில் நான் எழுதிய கீழ்க்காணும் கவிதை நினைவுக்கு வந்ததால் ஈண்டுப் பதிகிறேன்:

    எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான்

    தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான்

    கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை

    சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை

    எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு

    பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு

    நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல்

    சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல்

    சோதனைகள் வந்தாலும் மீட்சியுடன் உழைத்திடவேச் சோரா(த) திண்மை

    சாதனைகள் செய்தாலும் களித்திடாத நடுநிலைமைச் சார்ந்த தன்மை

    வேதனைகள் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றி வெல்லும் வேட்கை

    போதனைகள் நமக்கெலாம் ஜப்பானின் விடாமுயற்சி போற்றும் வாழ்க்கை

    குறிப்பு: நாத்திகம் பேசும் நாடான ஜப்பானில் நற்பண்புகள் உள்ள மக்களைக் காண்கிறோம்; ஆனால், சமயங்கள் பலவற்றைப் பின்பற்றும் நம் நாட்டில் நற்பண்புகள் , குறிப்பாக மனிதநேயம் இல்லை என்பதும் ஆய்வுக்குரிய விடயமாகும்.

    முனைவர் அவர்களின் கருத்தாழம் மிக்க இவ்வாக்கம் அரசியல் வியாதிகளின் கண்களில் பட வேண்டும்; மனசாட்சி என்று ஒன்று இருந்தால் திருந்துவார்கள். அருமையான ஆக்கத்தை அளித்து எங்களைச் சிந்திக்கத் தூண்டிய முனைவர் அவர்கட்கு நெஞ்சம் நிறைவான வாழ்த்துகள்; பாராட்டுகள்!

    ReplyDelete
  6. //கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம். புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது.//

    அருமையான விளக்கம்!

    முழுக்கட்டுரையும் மறுபடி மறுபடி படிக்க வேண்டிய ஒன்று!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. கால் பந்து புல்லாங்குழல் உவமை மிக அருமை ...

    ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ,அரசு அதிகாரிகள் கால்பந்தை

    போல உதைக்க பட வேண்டியவர்கள் ..

    முழுக்கட்டுரையும் மறுபடி மறுபடி படிக்க வேண்டிய ஒன்று!
    பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் காக்கா பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல விளக்கத்துடன் ஆக்கம்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  9. // கோயிலுக்குப் போனால் செருப்பு ; ஆஸ்பத்திரிக்குப் போனால் உறுப்பு ; காவல் நிலையத்துக்குப் போனால் கற்பு ஆகியவை காணாமல் போய்விடுகின்றன.//

    வரிகள் கண்ணத்தில் அறைந்தார் போல் உள்ளது. சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய அய்யாவின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பதில் மனமகிழ்வடைகிறது.

    அய்யாவின் எழுத்துப்பணி வளர்க. நன்றி!

    ReplyDelete
  10. அருமையான ஆக்கம் உலகில் நடக்கும் அவலங்கள் ஒரு அலசல் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.இல்லா விட்டால் இப்படித்தான் நாடுமுழுவதும் நடக்கின்றது.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வார்த்தைகள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவைகள். எதயையும் எடுத்துக் காட்டாக ரசித்தது என்று பார்த்தால் கட்டுரை அனனத்தையும் எழுதவேண்டிவரும்.

    மனசாட்சிகள் மங்கிவரும் இக்காலத்தில் இதை படித்தால் ஒன்றாவது திருந்தாமலாப் போகும்.

    பிடிவாதங்களும், பரந்தமனப்பானமையின்மையும், புரிந்தோம் என்ற அறியாமைகள் இருந்துவரும் இக்காலத்துக்கு பொருத்தமான கட்டுரை.

    மனிதன் மனிதனாக வாழவேண்டும். அதனையே அவ்வாறு புனிதர் நபி பெருமானார்(ஸல்)அன்னவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்துகாட்டி வாழச்சொன்னார்கள். அவ்வாறு வாழ்ந்தவர்கள் இறைநேசர்கள் என்றவர்கள்.

    சிந்தனை கிளறிய உங்கள் ஆக்கம் சிறப்பானது. வாழ்க நீவீர்! நலமுடன் வாழ்க பல்லாண்டு!

    மனிதர்கள் சிந்திப்பார்கள்!

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் இபுராஹிம் காக்கா மிக அருமையான ஆக்கம் நல்ல விளக்கத்துடன் ஆக்கம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் காக்கா

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் இபுராஹிம் காக்கா மிக அருமையான ஆக்கம் நல்ல விளக்கத்துடன் ஆக்கம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் காக்கா

    ReplyDelete
  14. தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள அத்தனையும் உண்மை. நம் நாட்டு மக்களிடையே மனிதத்தன்மையும் தேசப்பற்றும் குறைந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்க்கு காரணம் அந்நிய மண்ணை நேசிப்பதே.

    அல்ல அல்லக் குறையா அமுதமாக தாங்களின் ஆக்கம் படித்து ஏக்கம் உண்டாகிறது. தொடரந்து எதிர்பார்ப்புடன்,,.....நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஒவ்வொருவரும் உணரவேண்டிய கருத்துகள் .

    ReplyDelete
  16. அன்புடன் படித்து கருத்துரை தந்த நல்ல இதயங்கள் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

    முகமன் சொல்லிய Almasm அவர்களுக்கு வ அலைக்குமுஸ் ஸலாம்.

    இறைவன் நாடினால் மீண்டும் சந்திக்கலாம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers