.

Pages

Friday, June 21, 2013

கதியற்றோர் வாழ்வு ?

கரைசேராக் கட்டையெனக் காலமெலாம் கருத்தின்றித்
திரைமேலே தினந்தோறும் திண்டாடுந் தீந்தமிழா !
இரைக்காகச் செய்நன்றி இவ்வுலகி லேத்துமந்த,
குரைக்கின்ற நாய்கூட குவலயத்தில் மேலன்றோ ?

கதியற்றோர் நிலைகளையும் கண்டுமிரக் கமின்றியுமே
நிதியற்றோர் நிற்கின்ற நிர்கதியை நினைக்காமல்
விதியென்று அவர்களையும் விரட்டிவரும் கூட்டத்தார்
மதியொன்று இருப்பவரோ மனசாட்சி இல்லையிங்கு !

வீணானச் செலவினங்கள்; விளம்பரத்தில் பேரார்வம்
தேனாகச் சொல்தடவித் தெரிவிக்கும் வாக்குறுதி
ஊணாக உடைமையாக உண்மையிலே அகதிகட்குத்
தூணாக வந்துதவாத் துரோகமென்று அறிவீரோ ?

புலம்பெயர்ந்தோர் கதியற்றப் புரியாதப் புதிரன்றோ
நலம்பயக்கும் திட்டங்கள் நடுக்கடலில் நிற்போர்க்குப்
பலம்கொடுக்கும்; அவர்வாழ்வில் பலன்கொடுக்கும் செய்வீரோ ?
நிலம்கொடுத்து வாழ்வாதா ரங்களெலாம் கொடுப்பீரோ ?

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 20-06-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

13 comments:

  1. Replies
    1. thanks for your comment posted even while your on moving to kutralam. enjoy the trip.

      Delete
  2. /// அவர்வாழ்வில் பலன்கொடுக்கும் செய்வீரோ...?
    நிலம்கொடுத்து வாழ்வாதா ரங்களெலாம் கொடுப்பீரோ...? ///

    அருமை... நல்வாழ்வு விரைவில் மலரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. புலம்பெயர்ந்தோர் என்றே அழையுங்கள்; அகதிகள் என்று அழைக்காதீர்கள் என்பதாக சோழத் தமிழும் ஈழத்தமிழும் கலந்து பேசும் அவர்களின் ஏக்கத்தில் விழுந்தவைகளே என் ஈரத்தமிழ்! அவர்களின் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் என்பதே எல்லா நல்ல மனங்களின் அவாவும் ஆகும்.

      உங்களின் அருமையான வாழ்த்துரைக்கு என் அகமுறையும் நன்றிகள்!

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    மச்சான், உங்களுடைய சில கவிதைகளுக்கு என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை, காரணம் கவிதையின் சாராம்சத்தின் மிகுந்த காரம்தான். தொண்டையை அடைக்குது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. ஆதாரம் கவிதையின் ஆகாரம் என்பதால், சில காரம் இருக்கத்தான் செய்யும் மச்சான்.

      பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. கதியற்றோரின் கண்ணீர் துடைக்கும் வரிகள். உறுவாக்கிய விதமும் சிறப்பு வாழ்த்துக்கள் கவி அன்பரே..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அளவுக்கு உருக்கமும், ஏக்கமும் ததும்பும் கவிரசம் பிழியவில்லை என்றாலும், இந்தக் கொச்சகக் கலிப்பாவை இரசித்துப் பாராட்டியமைக்கு என் இதயம் கனியும் நன்றிகள்

      Delete
  5. இந்த செய்யுளுக்கு பயந்துதான் ரொம்பப்பேர் ஆங்கில மீடியத்துக்கு
    மாறுனாங்க இங்கேயும் வந்து பயமுருத்துரீங்களே

    ReplyDelete
    Replies
    1. என் செய்வது? என் வழி தனிவழி; அஃது அன்னைத் தமிழ் வழிக் கல்வியில் செய்திடும் செய்யுள் வழி.

      வருகைக்கும் இடுகைக்கும் வளமான நன்றிகள்!

      Delete
  6. உலகில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் அகதியாக்க படுகிறார்கள்

    என்ற கருத்து கணிப்பு ...இக்கவிதையை படித்தபின்னர் நினைவுக்கு

    வந்து போனது ..சிரியாவில் நடக்கும் கொடுமை பெரும் கொடுமை

    ReplyDelete
    Replies
    1. ஆம். அதிரைத் தமிழூற்றே!

      அரசியல் வியாதிகளின் சுயநலத்தால் அவதிக்குள்ளாகி, அகதிகளாகிவிட்டவர்களின் நிலைகளை எண்ணிப் பார்க்கவே, உலக அகதியர் தின சிறப்புக் கவிதையாக இத்தலைப்பைத் தந்தனர், இலண்டன் தமிழ் வானொலி நிலையத்தார்.

      உங்களின் கருத்துரைக்கு உளம்நிறைவான நன்றிகள்!

      Delete
  7. மிக்க நன்றி. ஆசையின் ஆசை நிறைவேற நிர்வாகியின் ஆசை வேண்டி நிற்போம்.

    attn:mr.shaikkana nijam

    please consider the kind request of AASAI asap.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers