.

Pages

Friday, July 5, 2013

சகுனம்

குறுக்கே சென்றதால்
சகுனம் சரியில்லை!
பேருந்தில் அடிபட்டது
பூனை!

விதவையைக் காணாது
விலகிப் போனான்
விதவையாகிப் போனாள்
அவன் மனைவி!

ஊருக்கே குறி சொல்லுமாம்
 பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம்
துள்ளி

நோயுற்ற மனிதன்
நோக்குவானா சகுனம்?

சாலையைக் கடக்கும் திசைகாட்டி
சகுனம் பார்த்தா வழிகாட்டும்?

வேலைக்குச் செல்ல
வேண்டுமா சகுனம்
நாளைக்குக் கிட்டுமா
நல்லதொரு தருணம்?

பணத்தைக் கீழிருந்துப்
பற்றிக் கொள்ளச்
சகுனத்தைப் பார்க்காமல்
சட்டென எடுப்பதேன்?

பிறப்பும் நாம் நினைக்காமல்
இறப்பும் நாம் நினைக்காமல்
பிறக்கும் சகுனம் மட்டும்
பிறகு எங்கிருந்து வந்தது?

ஒற்றைப் பிராமணன் எதிர்படல்
உனக்கு ஆகாது என்றால்
இற்றைப் பொழுதில்
இகமெலாம் கல்வியில் சிறந்தவர் அவரே!

எண்ணெய்ப் பானை
எதிரே வரக் கூடாதென்றால்
எண்ணெய் வள நாட்டில்
எப்படிச் செல்வம் கொழித்தது?

விறகுடன் வருபவர்
விதியினை மாற்றுவாரா?
பிறகுதான் புரிவாய்ப்
பிழைகள் உன்னிடம்!

மண்வெட்டி எதிர்ப்படல்
மனிதனுக்கு ஆகாதெனின்,
மண்வெட்டி மனிதனும்
மாளிகைக் கட்டுவதேன்?

தும்மல் ஓசை
துளிர்க்கும் கெட்டசகுனமா
விம்மும் மூச்சை
விடுப்பது எங்ஙனம்?

ஆந்தை அலறல்
ஆகாதெனின், ஆளும்
வேந்தர் இரவில்
வீதியுலா வந்ததெப்படி?

போர் வீரனைப்
போர் வாளுடன்
பார்த்தல் கூடாதெனின்
யார்தான் வீரம்பெறுவர்?

வண்ணானைத் துணிகளுடன்
வருதலைக் காணக் கூடாதெனின்
என்னாளும் அழுக்காகிப் போகுமே
எண்ணமும் இல்லமும்!

பாய்விற்பவர் வருதலைப்
பார்ப்பதுக் கூடாதெனின்
பாய்வாங்கிப் படுக்காமல்
பசுந்தரையில் படுப்பீரோ?

”முக்காடிட்டவரைக் காணக் கூடாது”
முட்டாள்களின் கெட்ட சகுனம்!
முக்காட்டை மூளைக்கு இட்டு
முழுமையாய்ப் பகுத்தறிவை இழந்தவர்!

தொகுத்துள்ளச் சகுனங்களைத்
துடைத்தெறிவோம் இக்கணமே
பகுத்தறிவின் பக்கமாகப்
பாருலகை வழிநடத்துவோமே !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 04-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

23 comments:

 1. நல்லதொரு சமூகச்சாடல் !

  இதைவீட ஒரு விழிப்புணர்வு வேண்டுமா ?

  // தொகுத்துள்ளச் சகுனங்களைத்
  துடைத்தெறிவோம் இக்கணமே
  பகுத்தறிவின் பக்கமாகப்
  பாருலகை வழிநடத்துவோமே !//

  சகுனத்தை சமூகத்தை விட்டு விரட்டுவோம்.

  சிறந்த படைப்பிற்கு மிக்க நன்றி கவிக்குறள்

  ReplyDelete
  Replies
  1. ”விழிப்புணர்வு வித்தகர்” நடாத்தும் “விழிப்புணர்வுப் பக்கங்கள்” என்னும் இத்தளத்தில் இத்தகு விழிப்புணர்வுக் கவிதையைப் பதிய வேண்டும் என்ற பேரவாவிற்குத் தீனி போட்டுத் தலைப்பைத் தெரிவு செய்த இலண்டன் வானொலி நிலையத்தார்க்கே நன்றி!

   இக்கவிதையை எழுத எடுத்துக் கொண்ட நேரம் பத்தே நிமிடங்கள்; அதுவும் பயண ஏற்பாடுகட்கிடையில். ஆம். !இவ்வளவு நெருக்கடியான நேரத்தில், இலண்டன் வானொலிக்குக் குறிப்பிட்டத் தருணத்தில் அனுப்பி வைக்க எப்படி என்னால் எழுத முடிந்தது என்பதை எனக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டே விமானத்தில் பயணித்த வேளையில் எண்ணிக் கொண்டே வந்தேன்;

   காரணங்கள்:

   1)இயல்பாகவே மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் குணம் உண்டென்பதால்;

   2) வாதப் பிரதிவாதம் என்பதும் என் இயல்பில் உள்ளதென்பதால்.

   உங்களின் வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றிகள்! என் பேட்டியை எடுக்க இயலாமற் காலம் தாமதமாகிக் கொண்டே போவதாக நீங்கள் அடிக்கடி வருத்தத்துடன் சொல்வதைத் தமியேன் செவி மடுக்கிறேன்; இன்ஷா அல்லாஹ் என் கவிதைத் தொகுப்பு வெளி வர வேண்டும்; பின்னர் தான் என் பேட்டி வர வேண்டும் என்பதே என் பேரவா!

   கையில் சரக்கில்லாமல் கடை விரிக்கலாமா?
   சாதனையின்றியும் சாதனமின்றியும் சொல்லில் வீரம் இருப்பதாகவும், “தற்பெருமைக்காரன்” என்றும் என்னைப் பிறர் திட்டும் ஒரு நிலைக்கு ஆளாக்கி விடாமலிருக்கவே தமியேன் தயங்குகின்றேன், தவிர உங்களின் அன்பையும், பாசத்தையும், ஊக்குவிப்பையும் யான் அறியாதவன் அல்லன்!

   முதலில் அடியேன் அமைத்துக் கொடுத்த வண்ணம், முத்துப்பேட்டை ரத்தினமாம். வித்தகத்தின் புத்தகமாம், கவியருவி அன்புத் தங்கை மலிக்கா அவர்களின் பேட்டியை விரைவாக எடுத்துப் பதிக. அவர்கள் கவிவானில் எனக்கு முன்பாகவே பிரகாசிக்கத் தொடங்கிய உச்ச நட்சத்திரம் ஆவார்கள்! அவர்கள் நின்ற அமீரக மேடைகளில் தான் தமியேன் கவிபாடிக் கொண்டிருக்கின்றேன் என்பதும் அவர்களை எண்ணி அடியேன் பெருமிதம் கொள்கிறேன்.

   Delete
 2. இப்போ நேரம் நல்லா இல்ல அதுமில்லாம கிருத்திகைக்கு அடுத்த நாள் அவ்வளவா சரியில்ல. அதனால, அப்புறமா கமெண்ட் போடுறேனே.

  ReplyDelete
  Replies
  1. சகுனத்திற்கே சகுனம் பார்த்தச் சகோதரியின் வருகைக்கு நன்றி!

   Delete
 3. திருமாவளவன்July 5, 2013 at 10:40 PM

  // ஒற்றைப் பிராமணன் எதிர்படல்
  உனக்கு ஆகாது என்றால்
  இற்றைப் பொழுதில்
  இகமெலாம் கல்வியில் சிறந்தவர் அவரே!//

  பிராமணாளுக்கு வக்காலத்து வாங்குறேலே மற்ற சமூகத்தினர் கல்வியில் சிறந்தவரில்லையா ? குறிப்பிட்ட வார்த்தையை வாபஸ் வாங்குமைய்யா

  ReplyDelete
  Replies
  1. // பிராமணாளுக்கு வக்காலத்து வாங்குறேலே மற்ற சமூகத்தினர் கல்வியில் சிறந்தவரில்லையா ? குறிப்பிட்ட வார்த்தையை வாபஸ் வாங்குமைய்யா //

   @ சகோ. திருமாவளவன்

   உங்கள் முதல் வருகைக்கும் - கருத்துக்கும் நன்றி !

   உங்களின் எழுத்திலே அறிய முடிகிறது நீங்கள் ஒரு பிராமண வகுப்பை சார்ந்தவர் என்று.

   எங்கள் ஊரில் பிரபல கவிஞராக இருக்கும் கவியன்பன் அபுல் கலாம் அவர்கள் பிராமணரை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ இங்கே குறிப்பிடவில்லை. மாறாக சமூகத்தில் பின்பற்றப்படும் சகுனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இலண்டன் வானொலியில் ஒலிப்பரப்பிய இப்படைப்பை நமக்காக தந்துள்ளார்.

   திரும்பத் திரும்ப படித்துப் பாருங்கள் அதன் பொருள் உங்களுக்கு நன்கு விளங்கும்.

   Delete
  2. குறிப்பாக “ஒற்றை பிராமணாள்” என்ற ஒரு வாதம் சகுனம் பார்ப்பவர்களால் வைக்கப் பட்டதாலும், இன்னும் அவாள் கல்வி,பதவிகளில் உயர்வாகவே இருப்பதும் கண்கூடான ஓர் உண்மை என்பதும் அறிந்தே எழுதியதால் என் மீது குற்றம் இல்லை; இருப்பினும், கீழ்க்கண்ட வரிகளில்:

   ||”முக்காடிட்டவரைக் காணக் கூடாது”
   முட்டாள்களின் கெட்ட சகுனம்!
   முக்காட்டை மூளைக்கு இட்டு
   முழுமையாய்ப் பகுத்தறிவை இழந்தவர்!//

   எங்கள் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவை- அவர்கள் முகத்திற்கு முக்காடிட்டிருந்தாலும் “மூளைக்கு முக்காடு இடவில்லை” என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

   இதனையும் மறுப்பீரோ?

   அண்மையில் வெளியான அரசுத் தேர்வு மற்றும் ஐஏஎஸ் தேர்வுகளின் எங்களின் “முக்காடிட்ட”ப் பெண்மணிகள் சாதித்துள்ளனர் என்பதையும் கூறவும் வேண்டுமோ?

   Delete
 4. எல்லாம் மனதைப் பொறுத்து....!

  ReplyDelete
  Replies
  1. மனம்போல் வாழ்வென்று மனமார வாழ்த்திய உங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 5. கல்வியில் சிறந்தவர்களில் பிராமணர்களும் இருக்கிறாகள் என்பது உண்டு. கவிஞர் எழுதும்போது சகுனம் கருத்தில் பிராமணர் என்று குறிப்பிட்டாலும் எந்த வகுப்பினரையும் உயர்த்தும் எண்ணம் இருப்பதாக கருதாமல் விட்டுவிடலாம். நோக்கம் சகுனம் பார்பது தவறு என்பதை வழியுறுத்தி எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாமல் போகாது.
  பிராமணர் சகுனம் பார்ப்பதில் அவர்கள்தான் முதலிடம். அந்தவகையில் சிறந்தவர்கள் பட்டியலில் அவர்களுக்கு உள்ள இடம் எந்த இடத்தில் இருக்கும் என்பது யோசித்துகொள்ளலாம். அத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்த்து பலரை அடிமையாக்கும் வித்தையில் அவர்கள்தானே முதலிடம்!

  ReplyDelete
  Replies
  1. சகுனம் பார்ப்பவர்களும் அவாளே!
   சகுனத்தில் சாடப்பட்டவர்களும் அவாளே!

   என்பதை அழகாய்ச் சுட்டிக்காட்டி வருகை புரிந்து வாழ்த்தளித்த “உனக்கு நண்பன்” என்னும் எனக்கு நண்பராகிவிட்ட உஙகட்கு என் உளம்நிறைவான நன்றிகள்!

   Delete
 6. உங்க சகுனம் நல்லாருக்கு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. யூட்யூப் இணைப்பில் உங்கள்: கவிதை “சகுனம்” கேட்டேன்; கவிதையில் சாடல் இல்லை; மாறாக அழகான வழி காட்டல்; அதுவும் இறைநெறி- இறைமறைப் பற்றிச் சொல்லி ஈர்த்து விட்டீர்கள்.

   சிறப்பான வாழ்த்துக்கு சிறப்பான நன்றிகள்!

   Delete
 7. பதிவுக்கு நன்றி.

  மச்சான் நல்ல சுகமா?

  நான் உங்கள் இந்த அழகான கவிதைக்கு கருத்து இட காலண்டரைப் பார்த்தல் அதில் இன்று பிற்பகல் பன்னிரண்டு மணிக்குமேல் ஓகே என்று வித்தியாசமாக இருந்தது.

  நல்ல விதமாக வரித்து விட்டீர்கள்.
  பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. உங்களைக் காண மட்டும் அந்த “நல்ல நேரம்” பார்த்து அழைக்க வில்லையே?

   அழையா விருந்தாளியாக வரக்கூடாதென்பதாற்றான், விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்களிடம் ஓர் ஆலோசனை சொன்னேன்:

   “ மனித உரிமைக்காவலர் ஜமால், அன்பு நேசர் ஹபீப், அதிரைக் கலைக் களஞ்சியம் நாவலர் நூர்முஹம்மத் , பொருளாதார வல்லுநர் இப்றாஹிம் அன்சாரி காக்கா ஆகியோருடன் தமியேனும் கலந்து கொள்ளும் ஓர் அரிய சந்திப்பை ஏற்படுத்துங்கள்; என் விடுப்பு நாட்களும் அருகிக் கொண்டே இருப்பதும் கவனத்தில் கொள்ளச் சொன்னேன்.

   அவர்களும் “பிசி” யாக இருந்துவிட்டார்கள் மச்சான்!

   உங்களின் வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள்!

   Delete
 8. சகுனம் ..

  பற்றிய சாடல் சரியானதே ..

  ஒற்றை பிராமணன் எதிர் கொள்ளல்

  சரியில்லா சகுனம் என்ற நம்பிக்கை உண்டு

  என்ற தகவல் கவியன்பர் கவி மூலம் அறிந்தேன்

  மனு நீதி மூலம் ஒரு பெரிய சமூகத்தையே ஆட்டி படைக்கும்

  பிராமணர் எதிர் கொள்ளல் அப சகுனம் என்ற நம்பிக்கை

  பிராமணர் இனத்தை கொச்சை படுத்தும் நம்பிக்கை

  எப்படி அனுமதித்தார்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. பாடல் பாடும் பாரதி முதல் தமியேன் வரைக்கும் சாடல் இல்லாமல் பாடல் பாட முடியாது என்பதாலும், வாதப்பிரதிவாதம் என்பது என் இயல்பில் உள்ளதென்பதாலும், இந்தச் சகுனம் என்னும் கவிதையும் அமைந்து விட்டது அன்பரே!

   சகுனம் பார்ப்பவர்களும் அவாளே!
   சகுனத்தில் சாடப்பட்டவர்களும் அவாளே!

   என்பதை அழகாய்ச் சுட்டிக்காட்டி வருகை புரிந்து வாழ்த்தளித்த உங்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்1

   Delete
 9. பூனையும், பல்லியும் மனிதனின் முகத்தில் விழித்தோம் அதான் ஆயுசு இல்லாமல் போய்விட்டது என்று நினைத்தால்?

  எல்லா நேரமும் நல்ல நேரம் என்று செயல்பட்டால் நன்மையே விளையும்.

  நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. புதுமைப் பெண்ணாக- பாரதியின் கனவுகளை மெய்ப்பிக்கும் பெண்ணாக உங்களைக் காண்கிறேன், உங்களின் எழுத்துக்கள் வழியாக அன்புச் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களே!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 10. குறுக்கே சென்றதால்
  சகுனம் சரியில்லை!
  பேருந்தில் அடிபட்டது
  பூனை!/////

  பூனையின் குறுக்கே சென்றது யாரோ
  பாவம் பூனை

  சகுனம் பார்ப்பவன்
  சகுனி
  சரியாச்சொன்னீர்
  தாங்கள் ஒரு
  ஞானி

  ReplyDelete
  Replies
  1. பூனையின் குறுக்கேச் சென்றவர் நல்லவரில்லையென்பதால் பூனையும் செத்ததா? ஹா ஹா. இப்படியும் யோசிப்பதில் நீஙக்ள் கில்லாடி தான்!

   “ஞானி” என்னும் பட்டம் பெற ஞான் தகுதியுடையோன் அல்லன்.
   சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் என்னும் சமுத்திரத்தில், தத்துவ முத்துக்களைக் கொணரும், தத்துவக் கவிஞர் =அன்புச் சகோதரர்= நம் ஊனக்கண்களை விட்டும் விலகி= ஞானக் கணகளைத் திறக்கும் “நபிதாஸ்” என்பாரே, ஞானியாவார்!

   மிக்க நன்றி!

   Delete
 11. இன்னும் இரண்டே நாட்கள் காத்திருங்கள் புனிதம் மிகு அந் நாலை சங்கை மிகு ரமலானை

  ReplyDelete
  Replies
  1. ”ரமளான் கறீம்” என்னும் வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம், இவ்வாண்டின் புனிதமிகு ரமலானை; அமலால் நிரப்புவோம் ரமலானை, இன்ஷா அல்லாஹ்!

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers