.

Pages

Thursday, August 8, 2013

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் !

அளவற்ற அருளாளனின் - என்றும்
            நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில் - நாளும்
            குறைவற்று வாழ்பவனின்
நிறைவான அருள்நாளிது - நெஞ்சம்
            நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை - ஏந்திக்
            கொண்டாடும் திருநாளிது

மண்ணாளும் செல்வந்தரும் - பசியில்
            மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே - தொழுது
            உயர்கின்ற நன்நாளிது
இல்லாதார் நிலையறிந்து - நெஞ்சில்
            ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க - வறுமை
            அழிந்தொழியும் திருநாளிது

சொந்தங்கள் அள்ளியணைத்து - நட்பின்
            பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால் - உறவைச்
            செப்பனிடும் சுகநாளிது
உள்ளத்தின் மாசுடைத்தும் - தளரும்
            உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும் - வலிய
            நோன்பில்வரும் பெருநாளிது

நபிகொண்ட பண்பெடுத்து - அந்த
            நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ - நம்மைச்
            சேர்த்திழுக்கும் பிறைநாளிது
சமத்துவமே ஏந்திநின்று - என்றும்
            சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி - எவர்க்கும்
            அன்புசிந்தும் பொன்னாளிது

அன்புடன் புகாரி

13 comments:

 1. கவிஞருக்கும், உற்றார் - உறவினருக்கும், நண்பர்களுக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சேக்கனா, ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்

   Delete
 2. மரபின் கட்டுக்குள் மணம் வீசும் புதுமலர்ப் பாமாலையை எங்கட்குப் பெருநாள் அன்பளிப்பாக வழங்கிய அன்புடன் புகாரி என்னும் என் அன்பு நண்பர்க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஏதோ எனக்குத் தெரிந்த சில சந்தங்களைச் சொந்தமாக்கித் தந்தேன் :-)

   நன்றி நண்பா

   ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்

   Delete
 3. இன்பம் பொங்கும் ஈதுல்ஃபித்ர் வாழ்த்துகள்:

  ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
  நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை
  ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
  சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே

  புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
  எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
  மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
  கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

  இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
  பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
  கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
  சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே

  ReplyDelete
 4. அனைவர்களுக்கும் என் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மேலான சேவை செய்யும் மெய்சாவுக்கு ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள்

   Delete
 5. அசையும் சீரும் அழகாய் அமைந்து
  இசையின் ஓசை நயமாய் இனித்து
  சந்தங்களுடன் கோத்திட்ட இனிமை;
  சொந்தங்களுடன் சேர்ந்திட்ட ஈத்போல்!

  ReplyDelete
 6. மல்லிகைப்பூ வாசமும்
  மருதாணி கரங்களும்
  இல்லாமல் பெருநாளா;
  இல்லறத்தில் வெறுநாளே!

  ReplyDelete
 7. // நாயகத்தின் வழிநடந்து
  சுபிட்சங்கள் பெற்றுவாழ - நம்மைச்
  சேர்த்திழுக்கும் பிறைநாளிது //

  நல்ல சிந்தனை தந்த கவிங்கருக்கு ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வளங்கூட்டி வாழுங்கள், இஸ்லாத்தின் மெய்யறிய பாடுவோம். ஈகைத் திருநாள் இனிய நல் வாழ்த்துக்கள் நபிதாஸ்

   Delete
 8. ரமலான் மாதம்
  ஈன்ரெடுத்த குழந்தை
  ஈத் எனும் குழந்தை
  போற்றிடுவோம்
  வாழ்த்திடுவோம்
  அனைவர்களுக்கும்
  எனது அன்பான
  ஈத் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ஓர் மாதம் தவமிருந்து
  அமல்கள் திறம்பட
  நிறைவேற்றி
  பெற்ற பரிசாம்
  இவ் ஈத்
  போற்றிடுவோம்
  எனது அன்பு நிறைந்த
  வலைதள அன்பர்கள்
  அனைவர்களுக்கும்
  எனது அன்பான
  நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers