.

Pages

Monday, August 26, 2013

படைத்தவன் படைத்தது பற்றாக்குறையா ?

பொருளாதாரம் என்றால் என்ன என்பதற்கு பலர் விளக்கங்கள் அளித்து இருந்தாலும்   லயனல் ராபின்ஸ் என்கிற பொருளியல் வல்லுநர் சுட்டிக்காட்டிய கோட்பாடு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைந்தது. அந்தக் கோட்பாட்டின் சாராம்சங்களை சாறுபிழிந்து தருவது இந்த தலைப்பில் விவாதிக்கவும்   தொடர்ந்த விளக்கங்களுக்கும் விளங்கிக் கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும்.

லயனல் ராபின்சின் கோட்பாட்டின் அடிப்படை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை :

மனிதனின் தேவைகள் அதிகம். ( Countless Desires)

அந்தத்  தேவைகளை நிறைவேற்றும் பொருள்கள் அல்லது சேவைகள் பற்றாக்குறையானவை . ( Scarce Means)

அவ்விதம் வரையறைக்குட்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகள் மனிதனுக்கு ஒரே நேரத்தில் எழக்கூடிய மற்ற தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள மாற்றிப் பயன்படுத்தத் தக்கவை . ( Alternative Uses).

இறைவன் வழங்கி இருக்கக் கூடிய உலகின் வளங்கள் மற்றும் தனிமனிதனின் உடல் உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் உட்பட யாவுமே ஒரு வரையறைக்குட்பட்டதே. வரையறைக்குட்பட்டதை எப்படிப்  பயன்படுத்துகிறோம் என்பதே  நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளை அமைந்து இன்பம் அல்லது துன்பத்தை விளைவிக்கிறது.

அருள்மறை இதையே இவ்வாறு கூறுகிறது ,

“எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் கருவூலம் நம்மிடம் இல்லாமல் இல்லை. எந்தப் பொருளையும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே நாம் இறக்கி வைக்கிறோம் . 
And there is not a thing but its (sources and)  treasures are with Us; but We only send down thereof in due and ascertainable measures” ( Al Hijr 15: 21) .

மேலும் இறைவன் கூறுகிறான்

“ நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதனதன் அளவில்  ஒரு குறிப்பிட்ட விதி முறையின்படி     படைத் திருக்கின்றோம்.”  Verily, all things We have created in proportion and measures “ ( Al Qamar 54:49).  

உலகம் பின்னாளில் மட்டுமல்ல இந்நாள்வரை ஒப்புக் கொண்ட  லயனல் ராபின்சின் பொருளியல் தத்துவம் இஸ்லாத்தின் வித்திலிருந்து வீறிட்டுக் கிளம்பிய கோட்பாடே என்பதற்கு இவையே சான்றாகும். நவீனப் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக இஸ்லாமிய மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ளவேண்டியவை இவை.  ஆங்கிலேயர்கள்தான் அனைத்து கலை மற்றும் அறிவியல் கருத்துக்களின் புதுப் பரிமாணங்களுக்குச்  சொந்தக்காரர்கள் என்று உலகம் நம்பும் வகையில் வடித்து வைத்து புட்டிப் பாலாய்  புகட்டப்  பட்ட வரலாற்றுப் புரட்டுக்களை இடுப்பொடிக்க உதவும் வாதங்கள் இவை.

இறைவனால் அளவிட்டு வழங்கப் பட்ட வளங்களை கைப்பற்றி அவற்றை  வகைப் படுத்தி , வளப்படுத்தி அதே இறைவனால் தனக்கு வழங்கப் பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்தி எதை , எங்கு,  எதற்காக நமது   இம்மை மறுமைகளின்   வாழ்வுக்கு ஏற்றதாய் மாற்றிக் கொள்வதுதான் மனிதன் மேற்கொள்ள வேண்டிய  பொருளாதார நடவடிக்கைள் என்பதே இதன் பொருள்.

அதே நேரம், படைப்பினங்களின் மனம்  துவண்டுவிடாதவண்ணம்  இறைவன் அருளி இருக்கிற அளவற்ற செல்வங்களையும் அவை பற்றி நம்பிக்கை ஊட்டும்  விதத்தில் அவன் வழங்கி இருக்கிற கீழ்க்கண்ட வரிகளையும் நாம் எண்ணிப் பார்த்துக் கொள்வது நமது தன்னம்பிக்கையை தளரவிடாமல் செய்யும் இறைவாசகங்கள் .

“ உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்டையும் சென்று சேருமிடத்தையும் அவன் நன்கு அறிகிறான்”  “There is not a moving creature on earth but its sustenance is on Allah.” ( ஹூத்   11:6 ) 
என்றும்

“எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை . அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான்; உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான்.”  How many creatures that carry not their own sustenance. It is Allah Who feeds them and you “ ( அல் அன் கன்பூத் 29:60 ) 

மேலே காணப்படும் இறைவாசகங்களில் ஒரு புறம் பற்றாக்குறை அல்லது அளவோடு படைத்திருப்பதையும் மறுபுறம் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் பொறுப்பேற்று  இருப்பதையும் எண்ணிப் பார்க்கும்போது பொருளாதாரக் கோட்பாடுகளின் அம்சங்களாகிய பற்றாக்குறை மற்றும் தன்னிறைவு  ( SCARCITY & SUFFICIENCY ) ஆகியவற்றின் கூட்டுக் கோட்பாடே இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு என்கிற எண்ணம் நம்மிடம் உறுதிப்படும் என்பதை உணரலாம்.  பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படுகிற நேரங்களில் அவற்றிற்கான  தீர்வு இறைவனின் வழிகாட்டுதலின்படியும் அண்ணல நபி அவர்களின் வாழ்வு முறைகளையும் சீர்தூக்கி   மனிதன் நடைமுறையான மார்க்கம் பேணும்  முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே இங்கு நாம் அறிய வேண்டியது ஆகும் .

இறைவன்  வழங்கி இருக்கிற மூலவளங்களை தனது வாழ்வுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும்  ஏற்றபடி தனது உழைப்பின் மூலமும் அறிவின் மூலமும் கண்டறிந்து,  பயன்படுத்தி தனது  மனம் திருப்திஅடையும் அளவுக்குத்தக்கபடி  பயன்படுத்தி கொள்வதற்கு மனிதனுக்கு உரிமைகள் உள்ளன. வேறொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் இறைவன் மனித இனத்துக்கு மட்டுமல்ல தன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் வழங்கி இருக்கிற வாழும் வாய்ப்புகளையும் செல்வங்களையும்  மனித இனம் தனக்கு உரித்தாக்கிக் கொள்வதும் அவற்றில் வெற்றி காண்பதும்   அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், முயற்சிகள், வாய்ப்புகள் திறமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துவதிலேதான் அமையும். இது தனி மனித வளம் சார்ந்த திறமைகளை வளர்ப்பது மற்றும் செயல்படுத்துவதன் வெற்றிகளைக் குறித்து நாம் விளங்கவேண்டியதாகும். மனித வளங்களில்  மறைந்திருக்கும் மேம்பாடுகளை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கோட்பாடு இங்கே வெளிப்படுகிறது.  திருமறை தீர்க்கமாகக்  கூறுகிறது,
 
“ ( அதாவது பாவச்சுமையை ச் ) சுமக்கக்கூடியது எதுவும் மற்றொன்றின் ( பாவச் ) சுமையை சுமக்காது. மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததேயல்லாமல் ( வேறு) இல்லை.”  Namely, that no bearer of burdens can bear the burden of another; that human can have nothing but what he strives for “ ( அன்னஜ்ம் 53: 38-39). 

மேலும்

“ அல்லாஹ்விடமே நீங்கள் உணவைத்தேடுங்கள் “  Then seek your sustenance from Allah  “ (அல் அல்கன்பூத்   29:17) .

மேலேகண்ட நாம் விவாதித்த கருத்துக்களில் நாம் காண்பது இறைவன் படைத்து வழங்கி இருக்கும்  உலக வளங்கள் மனித குலம் ஒட்டு மொத்ததுக்கும் பற்றாதா    என்று அடிமனதில் கேள்விகளை எழுப்பலாம்.
ஆனால் எல்லோருக்கும் எல்லாம் படைத்திருப்பதாகவும் தேவைகளை இறைவனிடமே கேட்கவேண்டுமென்றும் அப்படியே கேட்டாலும் அவரவர் திறமைக்கு ஏற்றபடியே மெய் வருத்தக் கூலி வழங்கப்படும் என்றும் இறைவாசகங்களில் இருந்து  நாம் உறுதியுடன் விளங்கலாம்.  பற்றாகுறை என்பது படைத்தவன் படைத்ததல்ல.  மனிதனுடைய ஊதாரித்தனம், திறமையின்மை, பேராசை, பதுக்கல் , விரயம் செய்வது , வீணாக்குவது , தேவைக்கு மேலே சேர்த்து வைக்கும் எண்ணம் , முக்கியமாக நிர்வாகக் குறைபாடுகள், வேண்டியவர்களுக்கு சலுகைகள் ஆகியவையே பற்றாக் குறையை ( SCARCITY)  ஏற்படுத்துகின்றன.

மனிதன்,  என்னுடைய பொருள் , என்னுடைய பொருள் என்று ஆவலாகப் பறக்கிறான். உண்மையில் மனிதனுடைய பொருள் யாது என வினவப்பட்டபோது அவனுடைய பொருள் என்பது அவன் உண்டு முடித்திருக்கும் உணவு, அவன் அணிந்து கிழிந்துபட்ட ஆடைகள், அல்லாஹ்வுடைய வழியில் அவன் செலவழித்திருக்கும் செல்வம் ஆகிய மூன்றும்தான் என்று அண்ணல் பெருமானார்( ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி ( முஸ்லிம் ) குறிப்பிடுகிறது. 

திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது  “ தேவைக்கு மேலே சேர்த்து  வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன், இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார்.

பற்றாக்குறை பற்றி இன்னும் சூடாக விவாதிக்க இருக்கிறோம் இறைவன் நாடினால்... அடுத்த வாரம்.
'மனிதவள ஆர்வலர்'
இப்ராஹீம் அன்சாரி
குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளரும் மூத்த சகோதரருமாகிய இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தின் மூலம் நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்றுவருவது குறிப்பிடதக்கது.

8 comments:

 1. பற்றாக்குறையைப்பற்றிய விளக்கம் அருமை !

  // திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது “ தேவைக்கு மேலே சேர்த்து வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன், இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார். //

  சிந்திக்கதூண்டும் குறிப்பு

  இறைவன் போதுமான அளவு பொருளை நமக்காக படைத்திருந்தாலும் அவற்றை பிரித்துக்கொள்வதிலும் அவற்றை பிறரிடமிருந்து அபகரித்துக்கொள்வதிலும் உள்ள மனப்பாங்கு மாறவேண்டும்.

  ReplyDelete
 2. // மனிதனுடைய ஊதாரித்தனம், திறமையின்மை, பேராசை, பதுக்கல் , விரயம் செய்வது , வீணாக்குவது , தேவைக்கு மேலே சேர்த்து வைக்கும் எண்ணம் , முக்கியமாக நிர்வாகக் குறைபாடுகள், வேண்டியவர்களுக்கு சலுகைகள் ஆகியவையே பற்றாக் குறையை ( SCARCITY) ஏற்படுத்துகின்றன.//

  நன்றி அய்யா

  ReplyDelete
 3. பற்றாக்குறையை உருவாக்குவது “யூக வாணிபம்” தானே?

  ReplyDelete
 4. ///
  இறைவன் வழங்கி இருக்கிற மூலவளங்களை தனது வாழ்வுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் ஏற்றபடி தனது உழைப்பின் மூலமும் அறிவின் மூலமும் கண்டறிந்து, பயன்படுத்தி தனது மனம் திருப்திஅடையும் அளவுக்குத்தக்கபடி பயன்படுத்தி கொள்வதற்கு மனிதனுக்கு உரிமைகள் உள்ளன.///

  அனைவரும் தனது தேவைகளுக்கு மட்டும் பணம் சேர்த்து அவரவர் தேவைகளுக்கு மட்டும் செலவு செய்து வந்தால் நம் நாட்டில் ஏற்ப்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் பண வீழ்ச்சியை சரி செய்து விடலாம். யார் இதன்படி நடப்பார்கள்.?

  தேவைக்கு மிஞ்சிய சொத்துக்களும் பணமும் இருந்தும் பேராசை மனிதனை விட்டுப் போவதில்லை. என்பதே உண்மை.

  ReplyDelete
 5. திருடன் என்பவன் யார் என்று ஒரு கவிஞரிடம் கேட்கப்பட்டபோது “ தேவைக்கு மேலே சேர்த்து வைப்பவனே திருடன்! ஏனென்றால் இவன், இறைவன், எல்லோருக்குமாகப் படைத்ததிலிருந்து திருடுகிறான் ” என்று கூறினார். ///

  நல்ல மனம் படைத்த கவிஞன் ..இதனை எடுத்துரரைத்த
  ஆசிரியர் பணி பாராட்ட தக்க பணி வாழ்த்துக்கள் காக்கா

  ReplyDelete
 6. பதிவுக்கு நன்றி.

  அருமையான கட்டுரை, இறைவனிடம் கையேந்துவதை விட்டுட்டு இந்த மனிதன் சுரண்ட ஆரம்பித்து விட்டான்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers