.

Pages

Wednesday, September 18, 2013

கூகிள் பேராண்டிக்கு தாத்தா எழுதும் கடிதம்...


வசதியாகத்தான் இருக்கிறது பெயரனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது !

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன் !

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன் !

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று !

அன்புடன்...
தாத்தா

நன்றி மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு

10 comments:

  1. 1. இன்னும் வயதான பெற்றோர்களை பணிபுரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் சமூகத்தில் ஏராளமாகவே உள்ளன...

    2. குறிப்பிட்ட வயதில் அவர்களின் முதுமை கருதி தங்களின் வீட்டில் ஓய்வு எடுக்க அனுமதிப்பது கிடையாது...

    3. வயதானவர்களுக்கு தங்களின் வீட்டில் அதிகாலை நேரங்களில் அவர்களின் வயிற்றுப்பசிகளை ஆற்றுவதற்கு உணவுகளை கொடுக்க தாமதப்படுத்துவது...

    4. வயதானவர்களை அவர்களின் முதுமை கருதி அவர்களுக்கு உரிய அன்றாட கடமைகளை செய்வது கிடையாது.

    5. வயதானவர்களை அதிகளவில் வழிபாட்டுத்தளங்களில் காணலாம்.

    இன்னும் இதைபோல ஏராளமாக...

    இன்று அவர்களுக்கு ! நாளை நமக்கு !!

    சிந்தியுங்கள் சகோதரர்களே !

    ReplyDelete
  2. அன்புள்ள தாத்தா !

    //கூகிள் பேராண்டிக்கு தாத்தா எழுதும் கடிதம்...// "கூகிள் பேராண்டி" விபரம் புரியவில்லை ? விளக்கம் தாருங்கள் தாத்தா.

    ReplyDelete
  3. நீங்கள் எறிந்த பந்துதான்
    உங்களிடம் திரும்பி வருகிறது.

    எனவே
    தாத்தாக்கள் கதையைக் கேட்ட
    தந்தைகள்
    தவறாமல் தான் விரும்பியதை
    தந்திடுங்கள்.
    பேராண்டி மனம் குளிர
    வளர்த்திடுங்கள்.
    பேராண்டி முதலும் இலாபமுமாய்
    தந்திடுவார்.

    நன்றி ! தாத்தா.

    ReplyDelete
  4. பால்குடித்த மிருகங்கள் என்றோ
    .......பார்த்துவிட்டுப் போகுமிடமாம்; மனையாள்
    வால்பிடிக்கும் மனிதர்கள் பெற்றோர்
    ......வாஞ்சையும்தான் காணுமிடமும் ஆங்கு!

    ReplyDelete
  5. இன்னும் வயதான பெற்றோர்களை பணிபுரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் சமூகத்தில் ஏராளமாகவே உள்ளன...//

    மிக சரியாக சொன்னீர்கள் நிஜாம் ..உழைத்த காசை கொஞ்சம்

    கடைசி காலம் வைத்திருந்தால் மட்டுமே பிள்ளைகள் மதிக்கும்

    ReplyDelete
  6. உண்மைகள்...

    மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி...

    ReplyDelete
  7. பேரன்மார்களும் தாத்தா மார்களும் உணரப்பட வேண்டிய வரிகள் அருமை. முன்பொருகாலத்தில் நம்வீட்டிலும் ஒரு வயசான தாத்தா பாட்டி இருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்வோம். ஆனால் அன்று சுகமாய்த் தெரிந்தவர்கள் இன்று சுமையாய் தெரிகிறார்கள். காரணம் நாகரீகம் வளர்ந்து மனிதன் இயந்திர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு பாசங்கள் மனதை விட்டு தூரப்போய் விட்டன.

    ReplyDelete
  8. வேலைப்பளுவின் காரணம் கொண்டுன் தளத்திற்குள் வர இயலவில்லை புது புது ஆட்களாய் வருகிறார்கள் வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று தாத்தாவின் பெயரென்னவோ?ஹாஸ்டல் படிப்பு பேரனை முதியோர் இல்லம் பெரிதுபடுத்த வில்லைபோலும் தாத்தாவின் மகன் எங்கே போனார்?
    அதிரையை பொறுத்தவரை முதியோர்களுக்கு பெரிய தொந்தரவுகள் [மற்ற ஊர்களை ஒப்பிடுகையில்]இல்லை எனலாம்
    வாழ்த்துக்கள் தொடந்து எழுதுங்கள் பெரியவரே

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. தாத்தாவின் கவிதை நெஞ்சில் சுள்ளென்று உரைத்தது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers