.

Pages

Wednesday, October 30, 2013

[ 7 ] அறிவுத்தேன் [ ஒன்றேயது பலவானது ]

ஒன்றிலே உண்டானது
ஒன்றேயது பலவானது
உண்டாகும் முன் வொன்றே
நன்றேயிது அறிவீரே !

எவ்வாறு ?

அரூப நிலை உள்ளது/இருப்பது. அல்லது அரூப நிலை மட்டுமே உள்ளது/இருப்பது. அல்லது அரூபநிலை எங்கும் உள்ளது/இருப்பது அதனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் உண்டாகின. அவ்வரூபத்திற்கு தனது நிலையில் கூடுதல், குறைவு என்பதில்லாது(தங்கமும் மோதிரமும் போல்) உருவ இருப்புகள் அதில் உண்டாகுகின்றது என்று கவனத்தில் கொண்டோம்.

வெளி, நெருப்பு, வளி, நீர், மண்- இவைகள் ஐம்பூதங்கள் என்றழைக்கப் படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.

வெளி என்ற வெட்டவெளியான ஆகாயம். இது எல்லையற்றது. நாம் வசிக்கும் பூமி, அதையடக்கிய சூரிய குடும்பம், விண்ணில் தெரியும் நட்சத்திரங்கள், இவைகளை உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் (Milky Way Galaxy), இது போன்ற அல்லது அல்லாமல் எண்ணிக்கையற்ற அறிவு வீச்சுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ மன்டலங்கள், இவ்வாறு விரிந்துகொண்டே செல்லும் அற்புதங்கள், சொற்பதங்களால் எழுதமுடியாத; சிந்தனைக்கு அப்பாற்பட்ட விரிவானதாக வெளி உள்ளது எனலாம்.

ஒப்பிட முடியாது. இருப்பினும் மகா பெரியது என்பதை நாம் புரிந்துகொள்ள இவைகளை எழுதவேண்டியுள்ளது. அதாவது, பகலில் ஒரு சிறு துளி ஓட்டையின் வெளிச்சத்தில் நம் பார்வையில் தெரியும் காற்றில் பறக்கும் தூசி போன்று நாம் வசிக்கும் பூமியானது இவ்வெளியில் இருக்கலாம்.

இன்னும் ஒரு கோணத்தில் சொல்வதென்றால் இன்னொன்றையும் பார்ப்போம். ஒளியானது ஒரு இடத்தை விட்டு கிளம்பி ஒரு வருட பயணம் சென்று அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு என்கின்றனர். நம் பால் வீதி மண்டலத்தில்,  எத்தனையோ ஒளி ஆண்டுகளுக்கு முன் கிளம்பிய நட்சத்திர ஒளி, நம் பார்வையில் தெரியும் அந்த ஒளிக்குரிய நட்சத்திரம் பார்க்கும் போது தற்சமயம் அழிந்து இல்லாமல் கூட இருக்கலாம், அத்தகைய தூரங்கள். இரண்டு நட்ச்சதிரத்திர்க்கு இடையிலேயே இவ்வாறென்றால் இதுபோல் எண்ணிறைந்த நட்சத்திரங்கள் நம் மண்டலத்திலும், எண்ணிறைந்த மண்டலங்கள் வெளியிலும் இருக்கின்றது.

மேலும் மனிதனால் பூமியிலிருந்து தற்போதைய அறிவு வளர்ச்சியைக் கொண்டு இப்பால் வீதி மண்டலத்தில், அடுத்த நட்சத்திரம் என்ற சூரிய குடும்பத்துக்குள்  நுழையமுடியாது. அதற்குள் இவன் ஆயுள் முடிந்துவிடும். இது ஒரு மண்டலம்(Galaxy) சம்பந்தப்பட்டது. இது போன்ற எண்ணிறைந்த மண்டலங்கள்(Galaxies)  இருக்கும் வெளியை நம் அனுமனத்துக்குகூட அறிந்து விளங்க நமக்கு ஆயுள்கள் போதாது. மகாப் பெரியது. இது உருவம் உண்டாகாத அரூப நிலையில் இருந்து தோற்றம் பெற்ற வெளி. அரூபம் இல்லாமல் வெளி இல்லை. அருவிலிருந்து உருவான வெளி. (தங்கமும் மோதிரமும் போல்).

நெருப்பு என்ற ஒளிரும் எரி சக்தியான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) சுய இச்சையால், அதனுள், அதனில் (இச்சை)அசைவால்,  அதுவே சூடு(உஷ்ணம்) ஏற்பட்டு நெருப்பாக, பிரிவாக தோற்றம் தெரிகிறது. (அன்பின் அபரிமித உச்சத்தில் உஷ்ணம் உண்டாகும்.)

அமைதி தன்னில் சுய அன்பின் நிமித்தம், நெருப்பாக ஆகின்றது. அதுவின் அதிகம் நெருப்புக் கோளங்களாக ஆகின்றது. எண்ணற்ற ஆற்றல்கள் எவ்வாறெல்லாமோ அவ்வாறெல்லாம் அதில் ஆகிக்கொண்டே இருக்கின்றது. அமைதியில் அமைதி ஆற்றலாகிறது. வெளியின் குணமும் அனைத்திலும் அவ்வாறே இருக்கும், அதில் குறை;நிறை என்பதில்லை. இவ்வாறு வெளியின் வெளிப்பாடான விருப்பம் நெருப்பான ஆற்றலாகின்றது. வெளியே நெருப்பாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்). .

வளி என்ற காற்றான வெளி. இது வெளியின்(ஆகாயத்தின்) அசைவு. வெளி தன்னில் வெளியான நெருப்பின் நேசம் வேளியிலே தனிய வெளியே காற்றாகிறது.

வெப்பம் உண்டாகும் போது குளிர்சியும் உண்டாகும். வெளியில் ஒரு இடத்தில் உண்டான வெப்பத்தை வெளியில் விட,(உண்டான வெப்பம் சமநிலையடைய குளிர்ச்சியை நோக்கி செல்ல) வெப்பம் விரிவாகி, அதன்மூலம் வெளியில் வேற்று நிலை உண்டாகி வெளியே காற்றாகிறது.

தேநீர் கடையில் நீரை வெப்பமாக்கும் கொதிகலனின் மேல்வாயின் மேப்பரப்பில் வெளி அசைவதை பார்க்கலாம். வெளியின் சுபாவ சமநிலையிருப்புக்காக, உண்டாகிய வெப்பம் அவ்வெளியில் கரைந்து அதனால் வெளியே காற்றாகிறது. அசைந்தால் காற்று அசையாவிட்டால் ஆகாயம் என்பார். வெளியே நெருப்பாகி, வளியும் ஆகிறது. வெளியே வளியாகின்றது(தங்கமும் மோதிரமும் போல்).

நீர் என்ற திரவமான வெளி. வெளியில் நெருப்பு சக்தி உண்டாகும் போது குளிர் தன்மையும் உண்டாகும். அசையும் காற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்களும் உண்டு. ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இணைந்து குளிர்சியை பெற்று நீராக(திரவமாக) மாறுகின்றது. இதுபோல் காற்றில் உண்டாகி இருக்கும் மற்ற வாயுக்களும் திரவமாக(நீர் போன்று) ஆகும். வெளியே திரவமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).

மண் என்ற கடினமான வெளி. வெளியின் ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவைகள் இணைந்து குளிர்ந்து நீராகிறது என்று பார்த்தோம். அது இன்னும் குளிர்ந்து பனிக்காட்டி யாகின்றது. புளுட்டோ என்ற கிரகத்தில் பனிக்கட்டி இரும்பை உடைக்கும் வலிமை உள்ளது என்கின்றனர். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போல் மற்ற மற்ற வாயுக்களும் ஒவ்வொரு வேறுபட்ட குளிர்ச்சி விகித நிலையில் இணைந்து குளிர்ந்து நீர் போல் திரவமாகி, இன்னும் குளிர்ந்து திடமான மண் ஆகி நிலமாகின்றது. (தங்கமும் மோதிரமும் போல்).

தங்கத்தை வெப்பப்படுத்த திரவ தங்கமாகிவிடும். இன்னும் பன்மடங்கு வெப்பப் படுத்த திரவ தங்கம் காணாமல் போய்விடும். மாறாக குளிர்ந்தால் கடின தங்கமாகிவிடும்.

பூமியின் மையப்பகுதி நீர் போன்று திரவமாகத்தான் இருக்கின்றது. வெப்பகுளிர் சமநிலை உண்டாக சுழற்சி ஏற்படுகிறது. அதன்படி பூமியின்; பூமியில் சுழற்சியாலும், மேற்பரப்பு அழுத்தத்தாலும் பூமியின் மையப்பகுதியில் இருக்கும் நீர் போன்ற திரவம் மேற்பரப்புக்கு வந்து (எரிமலை) குளிர்ந்து மண்ணாகி மலையாகியுள்ளது.  வெளியே மண்ணாகின்றது.(தங்கமும் மோதிரமும் போல்).

இவ்வாறு ஒன்றிலே உண்டாகி, அந்த ஒன்றே பலவாகி நிற்கின்றது. அவ்வாறு பலவாகி நிற்பவைகள் உண்டாகும் முன் ஒன்றாகவே இருந்தது என்பதை நன்கு உணரவேண்டும்.

பிரபஞ்சம் ஒன்றில்தான் அனைத்தும் உண்டாகியுள்ளது. அதாவது அப்பிரபஞ்சமே அவ்வாறு பலவாக மாறியிருக்கிறது. ஒன்றின் தத்துவத்தை இதன் மூலம் அறிய வேண்டும்.

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றின் உருவம் என்றால் என்ன ?  
நபிதாஸ்

22 comments:

  1. ஒன்றின் தத்துவ விளக்கத்திற்கு நன்றி... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உள்ளது ஒன்று. உணர்ந்தமைக்கு நன்றி !

      Delete
  2. விண்ணுக்கும் மண்னுக்கும் சம்பந்தமுண்டு
    எண்ணுக்கும் எழுத்துக்கும் முடிவுரையன்று
    கண்ணுக்கும் கனவுக்கும் வெகுதூரமுண்டு
    காற்றுக்கும் கானகத்திற்க்கும் களைப்பில்லை என்றும்
    அத்தனையும் அவன்கையில்
    அடங்கிற்றே அவன் படைப்பில்
    எத்தனைதான் அதிசயங்கள்
    இவ்வுலகின் இரகசியங்கள்
    மின்னும் ஒளிகள் வான்வெளியில்
    இன்னும் புலப்படாமல் இப்புவியில்
    அத்தனையும் அறிந்து விட்டால்
    அவனை நாம் மறந்திடுவோம் ..!

    ReplyDelete
    Replies
    1. //கண்ணுக்கும் கனவுக்கும் வெகுதூரமுண்டு //

      காண்பது கண்.
      காணும் பொருளும் காண்பவனும் வெகுதூரம் எங்கனம் ?
      காண்பது கண் என்றால் அகக்கண்ணும் கண்.
      அகக்கண் காண்பதும் எங்கனம் வெகுதூரம் ?

      உன்னை அறிந்தால் அனைத்தும் உன்னிடத்திலே.
      அகக்கண் காண்பதெல்லாம் உன்னைப்பற்றியே.
      உன் எண்ணங்களே, எண்ண தேவைகளே காட்சிகளாய் தெரிகின்றது.
      உன்னைப்பற்றி எனில் வெகுதூரம் எங்கனம் ?

      அகக்கண்ணால் காண்பது கனவு.
      புறக்கண்ணால் காண்பது நிகழ்வு.
      நினைவில் அகக்கண்ணால் கனவு காணச்சொல்கிறார் நிகழவேண்டும் என்பதற்காக நம் முன்னாள் ஜனாதிபதி APJ எதுவும் வெகுதூரம் ஆகக்கூடாது என்பதற்காக.

      //அத்தனையும் அறிந்து விட்டால்
      அவனை நாம் மறந்திடுவோம் ..! //

      எப்படி முடியும் ?
      "நான் மறைவான பொக்கிஷமாக இருக்கின்றேன். என்னை அறியப்பட வேண்டும். அதற்காக படைப்பினங்க்களைப் படைத்தேன்." என்ற ஒரு தத்துவ வெளிப்பாடு இருக்கின்றது. அன்பரே !

      //அத்தனையும் அவன்கையில்//
      அடங்கிற்றே அவன் படைப்பில் //

      அவன் வல்லமையை எப்படைபிலும் அடக்கமுடியாது.

      //எத்தனைதான் அதிசயங்கள்
      இவ்வுலகின் இரகசியங்கள்//

      உண்மை. அறிய அறிய அத்தனையும் இரகசியங்களே.

      நன்றி !

      Delete
    2. பின்னூட்டக் குறிப்பில் நான் சொல்லவந்தது வேறு.தாங்கள் விளங்கிக்கொண்டது வேறு.

      //கண்ணுக்கும் கனவுக்கும் வெகுதூரமுண்டு //

      இங்கு நான் சொல்லவந்தது யாதெனில் கண்ணை மூடினால் தான் கனவு வரும் என்பதாகச் சொல்வார்கள். கண்ணை மூடாமலே எத்தனையோ ஆயிரம் கனவுகளை ஒவ்வொரு மனிதனும் நினைவலைகள் மூலமாக கண்டு கொண்டு இருக்கிறான். அதையே நான் நான் அப்படிச் சொல்லியிருந்தேன். அடுத்து.....

      //அத்தனையும் அறிந்து விட்டால்
      அவனை நாம் மறந்திடுவோம் ..! //

      இந்த அகில உலகையும் படைத்து அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே. அதில் யாதொரு சந்தேகமும் இல்லை.மனிதனின் கண்ணுக்கும், அறிவுக்கும், சிந்தனைக்கும், உணர்வுக்கும் புலப்படாத அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே.! அவைகள் அனைத்தும் மனிதனுக்கும் புலப்பட்டு விட்டால் இறைவனை மறந்து விடுவான்.என்பதையே அப்படி சொல்லி இருந்தேன்.

      //அத்தனையும் அவன்கையில்//
      அடங்கிற்றே அவன் படைப்பில் //

      நான் இங்கு அவன் என்று குறிப்பிட்டது படைத்த இறைவனைத் தான் சொல்லியிருந்தேன். எல்லாமே அவனிடத்தில் தான் உள்ளன. அவைகள் அனைத்தும் அவனால் படைக்கப் பட்ட இந்த படைப்பினங்களிடத்தில் தான் உள்ளன. அதை தேடிக்கண்டுபிடித்துக் கொள்ளவது நமது கடமையாக இருக்கிறது.

      //எத்தனைதான் அதிசயங்கள்
      இவ்வுலகின் இரகசியங்கள்//

      இவ்வுலகில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எண்ணிலடங்கா ஒவ்வொரு நிகழ்வுகளிலும்,கண்டுபிடிப்புக்களிலும் அதிசயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அதனை நாம் கண்கூடக் காண்கின்றோம். இன்னும் இதுபோல் எத்தனை அதிசயங்கள் தான் உள்ளனவோ அந்த இறையோனிடத்தில் ...... அத்தனையும் மனிதன் அறியப் பெற்றால் இப்பூலோகம் என்னவாகும்..????

      ஆகவே இறைவனால் அருளப்பட்ட மனித சக்திக்குட்பட்டவைகளை மட்டும் சிந்தித்து இறைவனுக்கு மனிதன் செய்யக்கூடிய கடமைகளைச் சரிவர செய்து படைத்த இறையோனின் நெருக்கத்தைப் பெறுவோமாக.!





      Delete
    3. நல்லது அதிரை.மெய்சா அவர்களே !

      தாங்கள் எழுதியதில் நான் புரிந்தபடி கருத்துள்ளதால் அவ்வாறு எழுதினேன்.

      உண்மைகள் தவறுதலாக விளங்கிவிடக்கூடது என்பதற்காக அவ்வாறு எழுதினேன்.

      Delete
  3. ஒன்று எப்படி பலவானது ? கட்டுரையாளர் சற்று தெளிவாக விளக்கம் தரவும்

    ReplyDelete
    Replies
    1. விதை ஒன்று. அது வேர் விட்டு முளைத்து இலையாகி, மரமாகி, கிளையாகி, பூவாகி, கனியாகி, இவ்வாறு பலவாகி, விதைகளாகி, பின் மரங்களாகி... இவ்வாறு ஒன்று பலவாக தெரிகிறது. ஆன்னாலும் அவை அந்த விதை ஒன்றின் பல நிலைகளான ஒன்றுதான்.

      Delete
  4. ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
    உருவான செந்தமிழில் மூன்றானவன்,
    நன்றான வேதத்தில் நான்கானவன்,
    நமச்சிவாய என ஐந்தானவன்,

    இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
    இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
    சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
    தித்திக்கும் நவரச வித்தானவன்!

    பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
    பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
    முற்றாதவன்! மூல முதலானவன்!
    முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!

    ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
    அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
    தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
    சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!

    காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
    நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
    ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!

    படம்: திருவிளையாடல்

    ReplyDelete
  5. நல்ல பதிவு .....
    அரூபத்திலிருந்தே கல்லும் உருவானது....அப்படி இருக்கும்பொழுது கல்லை வணங்குதலும் அவனை (அரூபத்தை) வணங்குவதாகத்தானே அர்த்தம்?

    ReplyDelete
    Replies
    1. திரு புரட்சிமணி அவர்கள் வருகைக்கு நன்றி !

      அரூபத்திலிருந்தே கல்லும் உருவானது என்பதில் கல்லைத்தவிர ஏனவைகள் உள்ளது என்பதும் பொருள் உள்ளதே !

      எனவே, அரூபத்தின் மூலம் கல்லானாலும், அரூபத்திலிருந்து கல்லும் மட்டுமன்றி எண்ணிலடங்கா அறிந்தவைகள், அறியாதவைகள் படைப்பினங்கள் இருக்கின்றனவே !

      கல்லை மட்டும் வணங்கினால் எவ்வாறு அனைத்தையும் வணங்கியதாக ஆகும். கல்லை மட்டும் வணங்கும் போது அக்கல்லுக்குரிய ஆற்றல்தான் கிடைக்கும். சர்வத்தையும் வணகும் போது சர்வ வல்லமையும் கிடைக்குமே ! எனவே ஏன் பூரணத்தை விட்டுவிட்டு பூரணத்தின் ஒரு சிறு பகுதியை வணங்க வேண்டும் ?

      மனிதனின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மனிதனாகா ! கையும் மனிதனில் உள்ளது. எனவே கையை மட்டும் எப்படி மனிதன் என்று கூறுவது ?

      மேலும் திருவிளையாடல் பாடலுக்கும் இதுவே பதில்.

      ஒன்றானவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன் எப்படி ஒன்றாகி இருக்கின்றான் என்பதை எழுதிய ஆசிரயர் விளக்குகிறார். அதற்காக ஒவ்வொன்றையும் அவன் எனக்கொளல் சரியாகுமோ ?

      நன்றி !

      Delete
    2. நல்ல விளக்கமாய் தெரிகிறது வாழ்க வளமுடன்

      Delete
    3. திரு புரட்சிமணி அவர்கள் வினவியதற்கு மறுமொழிதனை இரசித்த, உருசித்த மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களுக்கு நன்றி !

      Delete
  6. வணக்கம்

    தத்தும்மூலம் பதிவை விளக்கிய விதம் அருமை வாழ்த்துக்கள்

    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. திரு ரூபன் அவர்கள் வருகைக்கு நன்றி !

      உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி !

      Delete
  7. எழுச்சி மிக்க வரிகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! ஹபீப் அவர்களே.

      Delete
  8. தானத் தனதான தானத் தனதான)



    ஞானத் தொளிதேடா ஞானக் குருடாகிப்
    போனப் பொழுதாகிப் போகத் திரையாகி
    ஈனக் கருவாகி ஏசிப் பகையாகி
    வானத் திருளாகி வாழத் தெரியாதோர்

    ReplyDelete
  9. இந்தப் பின்னூட்டப் பாடலின் வாய்பாடு:

    (வண்ணக் கலிவிருத்தம்:

    தானத் தனதான தானத் தனதான)

    தேமா, புளிமாங்காய்

    இப்பாடலை வனைவதற்குக் கிட்டிய ஞானம் இதோ:

    அன்று மனிதன் அனைத்திலும் பரத்தினை முதலாய்க் கொண்டு சிந்தித்தான்; அனைத்திலும் சத்தியத்தை நிலை நிறுத்தினான்; உத்தம பணி நித்தியன் பணியேறு ஒரு நிலை நின்றான். இன்று அவன் அனைத்திலும் இகத்தை முதலாய்க் கொண்டு சிந்திக்கின்றான்; அசத்தியத்திற் சித்தஞ்சிதறத் தலைவிரித்தாடுகின்றான்; தனது வாழ்வே நித்திய பணியென முத்தியை மறந்து சுழல்கின்றான். இதனாலே அசத்தியம் முடிவானில் தலை தூக்க சத்தியம் அடிவானில் மறைந்து கொண்டிருக்கிறது.​

    ஞானமெனும் பேரொளி மண்டிருளில் மறைய ஞானக்கண் குருடடைந்து மனிதன் மருட்கொள்கின்றான்; குருட்டுக்கண்ணால் ஞான ஒளியைக் காண முடியாதவன் அதனை எதிர்க்கின்றான். எனவே, ஞானம் ஈனமெனக் கருதுகின்றான். வானம் முட்டப் பகை எழுப்புகின்றான். ஏகம் அனைத்துமாகும்; அனைத்தும் ஓருடலாகும்; அஃதே ஒற்றுமையாகும். இங்கே வேற்றுமையைக் காண்பது எங்கே?
    ​​
    ஞானக்கலை ஏகக்கலையாகும். ‘ ஏகக்கலை மறைந்தமையாலே இன்று எங்கும் மானக்கொலை ஏற்படுகின்றது; நிம்மதி குலைகின்றது;



    ReplyDelete
    Replies
    1. என் பின்னூட்டப் பாடலின் நான்கு சீர்கள் அடிதோறும்,

      தேமா, புளிமாங்காய், தேமா, புளிமாங்காய்

      என்ற கலிவிருத்தமாகவும் அமைக்கலாம்
      அல்லது
      தானத் தனதான தானத் தனதான
      என்னும் வண்ணப்பாடலாகவும் அமைக்கலாம்.

      Delete
  10. தேனைத் தந்துநோகும் தேகம் குணமாகும்
    இணைக் கெதிராய் இருக் கவும்வேண்டும்
    வீணைப் புரியாமல் விளைந் தபண்ணாகும்
    தாமைத் தெரியாத தானின் வழியாவும்.

    (வண்ணப்பாடல்)


    உன்னை யறிந்தாலே உண்மை தெளிவாகும்
    தன்னின் நிலையாவும் தங்க வழியாகும்.
    இன்னும் எழுதினாலும் என்ன பயனுண்டு
    கண்ணும் கருத்தாக கற்க வேண்டுமாமே.

    (கலிவிருத்தம்)

    ReplyDelete
  11. அன்பின் பாவலர் நபிதாஸ் அவர்கட்கு,

    சிறப்பான யாப்பின் முயற்சிக்குச் சிறப்பான வாழ்த்துகள்:

    முதல் பாடலில் முதலடியின் இரண்டாம் சீர்

    \\தந்துநோகும்\\ கூவிளாங்காய்

    1) புளிமாங்காய் வரவேண்டும்,
    2) பொதுவாக விளாங்காய் (குறில்நெடில்) வரக்கூடாது.

    இரு =நிரை கூடாது (, நேர் நேர் (நெடி குறில் ) வேண்டும்
    விளை= நிரை கூடாது (, நேர் நேர் (நெடி குறில் ) வேண்டும்

    இரண்டாம் அடியின் இரண்டா சீர்:
    \\கெதிராய்\\ புளிமா (புளிமாங்காய் வரவேண்டும்)

    இரண்டாம் பாடலின் மூன்றாம் அடியில்:
    //எழுதினாலும்\\ கருவிளாங்காய்

    1) புளிமாங்காய் வரவேண்டும்
    2) விளாங்காய் (தினா= குறில் நெடில்) வரலாகாது.

    முழுமையை நோக்கிப் பயணிக்கின்றீர்கள்; எம் பயிற்சியை முழுமையாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் ஆர்வமும் உள்ள தங்கட்கு விரைவில் முழுமையான யாப்பின் வழி நின்று மரபுப்பா வனைந்திட வல்லவன் அருளால் தமியேனின் கற்பித்தலில் ஆகும் என்ற நம்பிக்கையும் வந்து விட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

    \\கருத்தாக கற்க\\ கருத்தாக க் கற்க =ஒற்று மிகல் வேண்டும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers