.

Pages

Monday, October 21, 2013

நிலையில்லா ஓட்டங்கள் !

பசியென்ற ருசிமட்டும்
படைப்பில் இல்லையெனில்
இயக்கங்கள் நின்றிருக்கும்
இரையெடுத்த மலைப்பாம்புபோல்.

தாய் இறக்கி விட்டபின்
மண்ணில் மாயும்வரை
நிலையில்லா ஓட்டங்கள்
இன்பமும்  துன்பமும்
பார்வையின் வெளிப்பாடே !

உள்ளார்க்கு  எல்லாமே
எந்நாளும்  அரங்கேறும்
இல்லார்க்கு உறவுகளும்
புள்ளியாய் தூரத்தில்!

வழியெல்லாம் சிந்தியவிதை
களம்சென்று சேர்வதில்லை
ஒளியாய் உலாவிவரும்
நிலவில் ஒளியில்லை!
பணம்  படுத்தும்பாடு கண்டேன்
அதுபடும் பாடும் கண்டேன்
குணம்கொண்ட மனிதர்கள்
பணமின்றி வாடுகின்றார்!

மரித்த பூவே மாலையாகும்
மனிதமனம் நினைப்பதில்லை
மணம்வீசும் நேரம்வரை
புவிதனில் ஆராட்டு!

நல்நோக்கத்தை மனமணிந்து
ஆக்கத்தை உழைப்பாக்கி
அன்போடு சீராட்டின்-நாளை
அகிலமே வணங்கி நிற்கும்!
சசிகலா

12 comments:

  1. //நல்நோக்கத்தை மனமணிந்து
    ஆக்கத்தை உழைப்பாக்கி
    அன்போடு சீராட்டின்-நாளை
    அகிலமே வணங்கி நிற்கும்!//

    நிலையில்லா ஓட்டங்கள் இடையேயும் மனதில் நிலை நிறுத்தி யோசிக்க வைக்கும் வரிகள் ...... தென்றலாய்! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. /// நல்நோக்கத்தை மனமணிந்து
    ஆக்கத்தை உழைப்பாக்கி... ///

    சிறப்பான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நிலையில்லா ஓட்டத்தின் ஒவ்வொருவரிகளும் உண்மைநிலையை உணர்த்தும் வரிகள்..

    பசி மறந்தும் மிக ருசித்து எழுதியுள்ளீர்கள். அருமை.

    ///உள்ளார்க்கு எல்லாமே
    எந்நாளும் அரங்கேறும்
    இல்லார்க்கு உறவுகளும்
    புள்ளியாய் தூரத்தில்!// சிந்திக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  4. மணம்வீசும் நேரம்வரை
    புவிதனில் ஆராட்டு!

    அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. ஒவ்வொரு நான்கு வரிகட்குள்ளும் ஒளிந்து கொண்டு ஒளிவீசும் ஆழமான சிந்தனை வீச்சுகள்!

    ReplyDelete
  6. //நிலையில்லா ஓட்டங்கள் ! //
    ஓட்டம் என்றால் ஓடுதால்.
    நிலையான ஓட்டம் என்றால் ஓடிக்கொண்டிருத்தல்.
    நிலையில்லா ஓட்டம் என்றால் ஓடிக்கொண்டேயில்லை மாறாக ஓடுதலும் நிற்றலும்.
    அவ்வாறு தானே.

    ReplyDelete
  7. ஒரு கணம் சிந்திப்போம்:

    உலகம் இயங்குகின்றது என்றால் என்ன பொருள்? இந்த உலகம் என்பது ஓர் ஆகுபெயர்த் தானே (உலகம் சிரித்தது என்றால் உலகத்தில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று உணரப்பட்டால் ஆகுபெயராம்), இப்பொழுது ஒரு கணம் சிந்திப்போம்: இவ்வாறாக:

    உலகில் உயிரினங்கள் இல்லை; எதுவுமே இல்லை; அதனால் மூச்சும் இல்லை; அப்படியானால் ஓட்டமும்- இயக்கமும் எப்படி இருக்கும்? ஆகவே, இயக்கமும்- ஓட்டமும் எல்லாம் உயிரினங்களின் அசைவில் தான் உலகம் இருப்பதாக உணரலாம் அல்லவா? ஞானியார் நபிதாஸ் விளக்குக.

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கணம் சிந்திப்போம்:

      உலகம் இயங்குகின்றது என்றால் என்ன பொருள்? இந்த உலகம் என்பது ஓர் ஆகுபெயர்த் தானே (உலகம் சிரித்தது என்றால் உலகத்தில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று உணரப்பட்டால் ஆகுபெயராம்), இப்பொழுது ஒரு கணம் சிந்திப்போம்: இவ்வாறாக:

      உலகில் உயிரினங்கள் இல்லை; எதுவுமே இல்லை; அதனால் மூச்சும் இல்லை; அப்படியானால் ஓட்டமும்- இயக்கமும் எப்படி இருக்கும்? ஆகவே, இயக்கமும்- ஓட்டமும் எல்லாம் உயிரினங்களின் அசைவில் தான் உலகம் இருப்பதாக உணரலாம் அல்லவா? ஞானியார் நபிதாஸ் விளக்குக.//

      உலகம் சுற்றுகிறது. அதனால் உலகில் உள்ள அணைத்து உயிரினமும் அசைகிறது. எனவே உலகம் அசைகிறது.

      உயிருள்ளவைகள் அசைகிறது என்றால் உலகம் உயிர் உள்ளது.

      இமய மலையும் வளர்கிறது என்ற செய்தி. அதனால் உலகில் உயிர் இல்லாத எதுவும்; இடமும் இல்லை.
      உலகில் உயிர் இருப்பதால்தான் உலகில் உயிரினங்கள் இருக்கின்றது. உயிர் இல்லையேல் அசைவில்லை.
      உலகில் உயிர் இருப்பதால்தான், லெமூரிய கண்டம் நீருக்குள்ளும், நீருக்குளிருந்த இமயமலை வெளியிலும் அவ்வப்போது ஏற்பட்ட சுனாமியால்(உயிர் அசைவால்) ஏற்பட்டதாக செய்தி. எனவே உயிர் எங்கும் உள்ளது. இறையாற்றல் இல்லாத இடமே இல்லை.

      தேங்கிய நீர். உதாரணம் ஒரு குட்டை. அதை சில நாட்கள் கவனித்து வந்தால். கரையில் சிறு சிறு அசைவு இருக்கும். மத்தியில் இளம் பச்சை வண்ணம் தெரியலாம். இன்னும் சில நாட்கள் சென்றால். கரையில் அசைந்தவைகள்; நெளிந்தவைகள் சிறு சிறு புழு பூச்சிகளாக இருக்கும். மத்தியிலும் மற்ற இடத்திலும் இரண்டு; மூன்று இலைகளுடன் வேர்களும் கீழ் நோக்கிய பூண்டுகள்(சிறு தாவரங்கள்) தெரியும். அதுபோல் மழைகாலங்களில் பல உயிரினக்கள் தோன்றுவதை காணலாம். உள்ளதுதான் வெளியாகும். ஆக உலகம் உயிர் உள்ளது. அவ்வாறென்றால் உலகில் உயிரினங்கள் உள்ளது என்பதைக்காட்டிலும் உலகமே உயிர் உள்ளது எனக்கொள்ளுதல் உண்மை. உலகில் உயிர் இல்லாத இடமே இல்லை. உயிர் இருக்கும்போது அசைவுகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

      கை அசைகிறது என்றால் நீ அசைக்கிறாய்; அசைகிறாய் என்பதாகும். உலகம் சிரித்தது என்றால் ஆகு பெயரும்தான் ஆனாலும் நீ சிரித்தால் உலகம் சிரித்ததுதான்.

      உலகம் இருப்பதையும் அறியத்தான் மனிதன் படைக்கப்பட்டான். வேதத்தின் கூற்று பிரகாரம் இவன் அனைத்தையும் அறிந்துகொண்டே இருப்பான். அவனை அறிந்தவன் தெளிவு பெறுவான்.

      அசைவு என்பதில் உணர்வும் உண்டு. அதனால் உலகம் இருப்பதை அறிகிறோம்.

      நன்றி !
      பாவலர் அபுல்கலாம்.

      Delete
  8. வணக்கம்
    மரித்த பூவே மாலையாகும்
    மனிதமனம் நினைப்பதில்லை
    மணம்வீசும் நேரம்வரை
    புவிதனில் ஆராட்டு!

    கவிதையின் வரிகள் ஆழ்மனதில் ஊறும் வரிகள்அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சிந்தனை தரும் வரிகள்... அருமை !

    ReplyDelete
  10. சிறப்பான வரிகள் எளிமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே

    ReplyDelete
  11. தாமத வருகைக்கு மன்னிக்கவும். வருகை தந்து வாழ்த்திய . கருத்தினை பற்றி விரிவாக விவரித்த வரிகளை தந்த
    ABULKALAM BIN SHAICK ABDUL KADER
    நபி தாஸ் சகோதர உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers