.

Pages

Friday, October 4, 2013

முதியோர் தின சிந்தனைகள் !

நன்றுபல முதியோர்கள் செய்துவந்த கருமங்கள்
    ….நல்லதொரு மனிதாநீ…..தெரிவாயோ ?
இன்றுவுள இளைஞர்கள் பெற்றவரை முதியோர்கள்
      …இல்லமதில் இடுவார்கள்…..அறிவீரோ ?
கன்றுகளும் பசுதேடிச் செல்லுவதை அறியாமல்
      …காலமது இளைஞர்கள் …..திசைமாற்றிக்
கொண்டுசெலும் நரகத்தை நோக்கியெனப் புரியாமல்
   ….கொன்றுவிடும் குணப்பண்பைக் ...குழிதோண்டி !

வண்ணமுள நிலையோடு வட்டமிடும் பருவந்தான்
    ......வாலிபத்தின் முறுக்கோடு.... .குறும்பாக
எண்ணமெலாம் குழைத்திட்ட இன்பமதை நினைத்தாலே
.........இப்பொழுது முதுமைக்கு ......வெறுப்பாக
கண்ணிமைக்கும் பரப்பில்தான் கட்டிவைத்தோம் நினைக்கின்ற
     ....காலமதின் சுவட்டின்கண் ......பதிவாக
.மண்ணுடைய சுகங்கள்தான் இப்பொழுது  நிறம்மாறும்
      ....மண்ணிலேநீ மடிதல்தான்.......விதியாக

 பள்ளிகளில் படித்திட்டக் காலநிலை அசைபோட்டால்
...........பக்குவமாய் மனத்தில்தான் ......ஒளியாகும்
துள்ளிவரும் அதன்முன்னே இம்முதுமை இருள்போக
...........தோல்வியாகிப்  புதுத்தெம்பு .......வெளியாகும்
வெள்ளமென வழிகின்ற பாசமழை நனையாமல்
..........வீம்பெனவே கழிக்கின்ற ....பொழுதாகும்
உள்ளபடி விரக்திக்கு வித்திடுமே முதியோர்க்கு
........உள்ளமெங்கும் வடுவாகிப்..... பழுதாகும்

குறிப்பு:
யாப்பிலக்கண வாய்ப்பாடு: வண்ணப்பாடல்-”ஆனந்தக் களிப்பு”  (நந்தவனத் திலொராண்டி.... பாடல் வகை)

தன்தனன தனதான தன்தனன தனதான
தன்தனன தனதான .....தனதான

கூவிளங்காய் புளிமாங்காய்  கூவிளங்காய் புளிமாங்காய்
....கூவிளங்காய் புளிமாங்காய்... புளிமாங்காய்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

17 comments:

 1. சிந்தனைகள் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அருமையான வாழ்த்தினுக்கு அகம்நிறைவான நன்றிகள், ஐயா திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

   Delete
 2. நல்லதொரு விழிப்புணர்வு !

  கவித்தீபத்துக்கு வாழ்த்துகள்...

  உலகின் 100 வயதை கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 3.16 லட்சம் என்கிறது ஆய்வு அறிக்கை !

  குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் செய்துவைத்தும், தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தும் அவர்களின் எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளன. ஆடம்பரமாக வீட்டைக் கட்டி அதற்கு தாய் தந்தையர் பெயரைச் சூட்டி மகிழும் பிள்ளைகள் அவர்களை கவனிக்கத் தவறி விடுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை !

  வருவாய் இழந்து, உடல் தளர்ந்து, நோய்வாய்பட்ட சூழ்நிலையில், அவர்களின் மனம் புண்படும்படி கொடுமைகள் நடப்பது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

  ReplyDelete
 3. 1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

  2. தான் தூக்கி வளர்த்த மகன்/மகள் ஆகியோரின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

  3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

  4. மகன்/மகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்....

  5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

  6. தேவையான நேரத்தில் உன்ன உணவுக் கொடுக்காமல் பசிக் கொடுமையால் அவதிப்படுபவர்களாகட்டும்...

  7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

  8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

  9. பிள்ளைகள் மூலம் முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு அன்றாட பொழுதுகளை துயரத்துடன் கழிப்போரும்...

  10. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

  என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

  ReplyDelete
 4. வயதான தாத்தா - பாட்டி ஆகியோருக்கு ஆதரவாக சட்ட திட்டங்கள் இருந்தாலும் யாரும் புகார் செய்ய முன்வருவதில்லை என்பதால், கொடுமைகள் வெளியில் தெரியாமலே போய் விடுகிறது. அனாதைகளைப் போல நடத்துவதை சமூக அவமானமாகக் கருதி, அவர்களுக்கு வயதான காலத்தில் அன்பும், பரிவும், பாசமும், உயிர்வாழ உணவும், இருக்க இடமும், உடுத்த உடையும் வழங்குவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

  மூத்த தலைமுறையினரின் வாழ்க்கை அனுபவங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது என்பதையும் இளம் வயது அறிவுக்கு புலப்படாத பல விசயங்களை மூத்தவர்களின் அனுபவத்தால் நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  அரசின் சார்பாக வருமான வரிவிலக்கு, ரயில், விமான பயணங்களில் கட்டண சலுகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை போன்றவற்றை வழங்கி கெளரவிக்கும் போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்/தந்தையருக்கு நமது கடமைகளை செலுத்த மறந்துவிடுகின்றோம்.

  ReplyDelete
 5. இன்றைய இளைஞன்-இளைஞி ! நாளைய தாத்தா - பாட்டி !!

  வாழ்க தாத்தா - பாட்டி ! வளர்க அவர்களின் ஆரோக்கியம் !!

  ReplyDelete
  Replies
  1. என் கவிதைக்குப் பதவுரையாக- விளக்கவுரையாக- விரிவான ஆதாரங்களுடன், தெளிவான விளக்கம் அளித்தமைக்கு, விழிப்புணர்வு வித்தகர்கு என் உளம்நிறைவான நன்றிகள் உரித்தாகுக!

   Delete
 6. கூவிளங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்
  ....கூவிளங்காய் புளிமாங்காய்... புளிமாங்காய்

  புளி,மாங்காவெல்லாம் விற்பதுபோல் தெரிகிறது? நமக்கு படிக்கிற காலத்தோடு அதுவெல்லாம் சரி இப்பொழுது மறந்து விட்டது வாழ்த்துக்கள் கவியன்பரே

  ReplyDelete
  Replies
  1. மரபெனும் தேனடைக்கு அல்லது அச்சுப்பனியாரத்திற்கு- அல்லது வடிவத்தில் வார்க்கப்படும் “சாக்லெட்” க்கு, அந்த அந்த வடிவமுள்ள பாத்திரத்தில் வார்க்கப்படும் வார்த்தைக் கலவைககளால், அவ்வடிவம் பெறும்; இதற்கான அந்த அச்சுப் பாத்திரம் தான் இந்த வாய்பாடு; இதனை ஈண்டுப் பதிவதன் நோக்கம்: புளிமாங்காய் விற்பதற்கல்ல; மாறாக, நபிதாஸ் போன்ற ஆர்வமுள்ள மரபுக் கவிஞர்கள்- ஞானப்பாடல்களில் தேர்ச்சியும் உள்ளவர்கள் தொடர்ந்து அவ்வண்ணம் வனைய வைப்பதற்கான ஓர் உத்தி;இலக்கணம் என்பது “கைப்பு” என்று ஓடி விட வேண்டா. இலக்கணம் என்னும் ஒரு மரபுக்குள் தான் எல்லாமே இயங்க வேண்டும்.

   1) இல்லறம் சுகம் பெறவும் இலக்கணம் தான் இருக்கின்றது,

   2) தொழில் சிறப்பாய் அமையவும் இலக்கணம் தான் இருக்கின்றது.

   3) வெற்றிக்கான அனைத்திலும் இலக்கணம் தான் இருக்கின்றது.

   பள்ளிப்பாடத்தோடு மறந்து விட்டதால் - துறந்து விட்டதால் என்ன எல்லாமே போய்விடுமென்று எண்ணினால், படிப்பின் பலன் தான் என்ன? யாமிருக்கப் பயமேன்? கைப்பு என்று ஓடி விடாமல், என்னருகில் வாருங்கள், இனிமையாக- எளிமையாக இலக்கணம் எல்லாம் கற்றுத் தருகிறேன்; உங்கட்கு உலகளாவியக் கவிஞரின் தகுதியைப் பெற்றுத் தருகிறேன்.

   வாழ்த்தினுக்கு நன்றி, தொழிலதிபர் அவர்களே!

   Delete
 7. பெற்று வளர்த்து பேணிக்காத்து எல்லாமுமாக இருந்தவர்களை இன்றைய தலைமுறை பாராமாக நினைப்பது எத்தனை இழிவான விடயம்..
  வணக்கத்துடன் சசிகலா.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரி சகிகலாவுக்கு , உங்களின் அன்பான வணக்கத்தையும் வாழ்த்தினையும் ஏற்கிறேன்; நன்றிகள்!

   Delete
 8. முதுமை காலம் நலமாய் இருக்க ..

  நம் கையில் காசு ..இருக்க வேண்டும் .இலையேல்

  முதுமை காலம் கஷ்ட காலமாக மாறிவிடும்

  நல்ல கவி தந்தீர்கள் கவி தீபம் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. சரியாகச் சொன்னீர்கள், அதிரைத் தமிழூற்றே!
   உங்களின் வாழ்த்தினுக்கு உளம்நிறைவான நன்றிகள்!

   Delete
 9. முதுமையை நன்கு உணர்த்தியுள்ளீர்கள் கவித்தீபம் அவர்களே.! வாழ்த்துக்கள்.!

  முதுமை என்ற வயோதிக காலம். அனைவர்களுக்கும் நலமாய் அமைந்திட நமது இளமையிலேயே அதற்க்கான நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதே காரணமாகும்.

  ஆகவே இளமைக்காலங்களில் நாம் நமது சொந்த பந்தங்களுடன் உண்மையாக இருப்போமாக.!

  ReplyDelete
  Replies
  1. ஆம். அதிரை மெய்சா அவர்களே! முதுமையை மெல்ல மெல்ல அண்மிக்கும் இக்கால கட்டத்தில் வாழும் என்னாலும் முதுமையைப் பற்றிச் சிந்திதேன்; அதனால் இக்கவிதையை முதியோர்த் தினச் சிந்தனையாக அமைத்தேன். உங்களின் வாழ்த்தும் துஆவும் பலிக்கட்டும் (ஆமீன்)
   இன்ஷா அல்லாஹ் பெருநாளில் உங்களைச் சந்திக்கும் பாக்யம் கிடைத்தமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.

   Delete
 10. முதியோருக்கு கிடைத்த பரிசு உங்களின் இந்த கவி எழுத்து அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அன்பின் நேசர் ஹபீப் அவர்கட்கு, மிக்க நன்றி.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers