.

Pages

Thursday, November 7, 2013

[ 8 ] அறிவுத்தேன் [ ஒன்றின் உருவம் ]

ஒன்றே இருப்பது
உருவா கிருப்பது
ஒன்றின் உருவம்
என்பது எதுவது ?

ஒன்றின் உருவம் என்றால் என்ன ?

ஒன்றிலே உண்டாகி, அந்த ஒன்றே பலவாகி நிற்கின்றது. அவ்வாறு பலவாகி நிற்பவைகள் உண்டாகும் முன் ஒன்றாகவே இருந்தது என்பதையும், அரூபமே உருவங்கள் ஆகின்றது என்பதையும் நாம் முந்தைய விளக்கத்தில் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இருப்பது ஒன்று. அது எல்லாமாகி இருக்கின்றது. இப்பொழுது இப்பூமியில் ஒரே ஒரு மரம் மட்டும் இருப்பதாகக் கொள்வோம். அம்மரம் ஒரு விதையிலிருந்து உண்டாகி இருக்கும் என்றுதான் நாம் வழக்கமான அறிவுப்படி விளங்குவோம். ஆனாலும் பூமியில் வேறுப்பட்ட வெப்ப, குளிர், சுழற்சி, ஈர்ப்பு,  சூரியனிலிருந்து உள்ள தூரம், இவைகள் போன்றவைகள் இதற்கும் அப்பாற்பட்டவைகள் ஆன இக்காரணிகளின் ஒருங்கிணைப்பில் மரம் மற்றவைகள் சுயமாகவும் உண்டாகுகின்றன.

புதிதாக வேயப்பட்ட கீற்றுகள் கொண்டு கட்டப்பட்ட ஒரு வீட்டில் வெயில், மழை சுழற்சிக்குப்பின் கூரையிலிருந்து பூரான் கீழே விழும். பழைய சாக்கு அதனை மண்பானையைக் கொண்டு மூடி வக்க சில நாட்களுக்கு பின் தேள் உண்டாகும் என்பர். செத்த மீனிலிருந்து(கருவாடிலிருந்து) புழுக்கள் உண்டாகும். இவ்வாறும் உயிரினங்கள் தோன்றுகின்றன. பின் அவ்வாறு உண்டாகிய பல உயிரினங்கள் அவைகளில் பெரும்பாலானவைகள் காரணி இசைவுகள் இல்லாமல்/அமையாமல் தன் இனத்தை தானாகவும் உற்பத்தி செய்து கொள்கின்றன.

இப்பூமியில் ஒரே ஒரு மரம் மட்டும் இருப்பதாகக் கொண்டதை தொடருவோம். மரத்தையும் பூமியையும் பார்க்கும் போது மரமும், பூமியும் தெரிகின்றது. மரம் என்பது பூமிக்கு வேறு எங்கிருந்தோ வந்ததல்ல ! பூமியே மரமாக மாற்றம் கொள்கிறது. தாயின் வயிற்றில் (கர்ப்ப பையில்) உள்ள சதை பிண்டம் எப்படி கண், காது, கை, கால் போன்ற உறுப்புகளாக மாறுகின்றதோ அது போல் மரம் பூமியில் இருக்கின்றது.

பூமியோ திரவத்திலிருந்தும், திரவமோ காற்றிலிருந்தும், காற்றோ ஆகாயத்திலிருந்தும் உண்டாகியதை முன்பு பார்த்துள்ளோம். அதன்படி வெளி என்ற ஆகாயம் மரமுமாகின்றது.

பூமியின் உயிர் ஆற்றல் மரத்திலும், ஆகாயத்தின் உயிர் ஆற்றல் பூமியிலும் என்பதால் ஆகாயத்தின் உயிர் ஆற்றல் மரத்தில் இருந்து மரத்தை வளரச்செய்கிறது. ஆகாயத்தின் உயிர் அரூபம்.

அரூப உயிரென்றும் ஆகாயமென்றும் அன்று. ஆகாயமே அரூப உயிர். அரூப உயிரே ஆகாயம். அரூப உயிரே மரமும் ஆகும். அரூபத்திற்கு உருவமில்லை. ஆனாலும் அரூபமே உருவமாக தெரிகிறது. உயிர்தத்துவம் இல்லாவிட்டால் நாற்றமெடுத்த மீனில்(கருவாட்டில்) புழுக்கள் உண்டாகாது. சில காரணிகளைக் கொண்டு சில நேரங்களில் உயிரினம் உண்டாகும்.

பார்க்கும் என்ற ஒரு நிலை இருக்க உருவம் தெரிகின்றது. ஒன்றே அனைத்தாகி இருக்கும்போது, பார்வையும் அவ்வொன்றிலிருந்து என்கின், எதைப் பார்க்க ? வேறு என்ற மற்றவைகள்தான் இல்லையே. எனவே பார்வையே உண்டாகாது ! பார்வைக்குரியவைகளும், பார்வையும் இல்லை. அதுபோல் உருவத்துக்குரியவைகளும், உருவமும் இல்லை !

ஒருவன் ஒன்றைப்பற்றி மிக ஆழமான, பரிபூரணமான சிந்தனயில் மூழ்கியிருக்கும்போது அவன் கண்களுக்கு எந்த உருவமும் ஏன் தன் உருவமும்கூட தெரியாது. ஒருவர் கூப்பிட்டாலும் அல்லது அவர்முன் கையசைத்தாலும் உடன் தெரியாது. சிந்தனை களைய தொடங்கும்போது உணரும்; கேட்கும்; தெரியும்.

உண்டாகிய அனைத்தும் அரூபத்திலிருந்தே. ஆனதால் அவைகள் ஒன்றினது உருவம்; உருவங்கள். வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி என்பது போல் பலவாக தெரிந்தாலும் அவை ஒரு மரத்தின் தோற்ற அமைவுகள். மரம் என்று பார்க்கும் போது அம்மரத்தில் அவைகள் அடங்கிவிடுகின்றது. அவைகளை தனித்து பார்க்க/கவனிக்க வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி போல் பலவாக தெரிகிறது. ஒன்றே/ஒன்றாகாக இருக்கும் போது ஒன்றிற்கு உருவம் என்றும் அரூபம் என்றும் என்றில்லை, இல்லை. இருக்கின்றது, இருப்பு இருக்கின்றது. இவ்விடத்தை பூஜ்யம் என்றாலும் ஒன்று என்றாலும் ஒரே அர்த்தம் தரக்கூடியது.

ஒன்றாக உணரும் போது, அறியும் போது வேறில்லை என்ற தெளிவில் அரூபம் இருக்கும். ஒன்றே உருவாகி இருப்பதால் அதை தவிர்த்த வேறு இல்லாததால் எதைப் பார்க்க ? பார்வையே இல்லை ! உருவமும் இல்லை ! ஒன்றின் உருவம் என்பது அரூபமே.

எனவே வேறொன்று இல்லாது ஒன்றே இருக்கும்போது உருவம் இல்லை. இரண்டு இருந்தால்தான் ஒன்றை ஒன்று பார்கமுடியும். அப்பொழுது உருவம் தெரியும். ஒன்றாகிவிட்டால் எங்கே உருவம் ? அல்லது ஒன்றுமட்டும் இருந்தால்  உருவமின்மைதானே. ஆழச்சிந்தனையுடன் தெளிவு பெறவேண்டும்.

ஒன்றே இருந்து
பார்த்தல் கேட்டல்
தன்னில் நிகழ்தல் -இது
அரூப மன்றோ !

ஒன்றின் பார்த்தல், கேட்டல் போன்ற செயல்கள் அரூபமா ? எவ்வாறு ?
நபிதாஸ்

20 comments:

  1. Replies
    1. ஆர்வத்தைப் பொறுத்து கருத்து சொரிவுள்ள வாசகங்களை திரும்ப திரும்ப கவனமாக வாசிக்க விளக்கங்கள் மனதின் தெளிவிர்கேர்ப்ப வந்துகொண்டே இருக்கும். படித்ததைப் பற்றி சிந்திக்கவும். எங்கும் விளக்கங்கள் வேண்டின் தயங்காது கேட்கவும். உங்களுடைய கேள்விக்காக எழுத ஆரம்பித்தாது இன்று தொடராக செல்கிறது. ஒருவரின் கேள்விக்கு உண்டான பதில் பலருக்கு பல சிந்தனையைத் தரும். நன்றி.

      Delete
  2. ஞான குருவே!

    மண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டு, மண்ணாகவே இருந்து, மண்ணுக்கே சென்று மடிவதும் இந்தக் கருத்தை ஒட்டியது தானே!

    ஆதம் (அலை) என்ற நம் ஆதிபிதா அவர்களை மண்ணால் படைத்தான், இறைவன், பின்னர் அவர்களின் துணைவியாரின் கருவிலிருந்து வெளியான கோடானு கோடி வாரிசுகளில், நம்மைப் பெற்றவர்களின் குருதியில் உள்ள உயிரணுக்களும் மண்ணிலிருந்து பெறப்பட்ட காய்கறி, உணவுகள், பழங்களைக் கொண்டே உருவானது; பின்னர் அவற்றை உண்டு , கழித்தக் கழிவுகளும் ம்ண்ணுக்குச் சென்று உரமாகி, அவ்வுரத்திலிருந்தே மீண்டும் காய்கறி, பழங்கள், உணவுகள் உற்பத்தியாகி, அவைகளை நம் பெற்றோர்கள் உண்டு களித்து உருவான அந்த உயிரணுவின் துளிகளால் நாமும் உருவாக்கப்படிருக்கின்றோம், படைத்தவனால் என்கின்ற இந்த “சுழற்சி| முறையை வைத்துச் சிந்தித்தால் “மூலப்பொருள்” ஒன்றிலிருந்தே எல்லாம் உருவாகிப் பலவாகியிருக்கின்றன என்று தான் நீங்கள் எங்களுக்கு அறிவிக்கின்றீர்கள் என்று யூகிக்கின்றேன், சரியா?

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமிய கருத்து வாசகப் பிரகாராம் தாங்கள் எழுதியது முற்றிலும் உண்மை.

      மண்ணிலிருந்து மனிதன் படைக்கப் பட்டான். குரங்கிலிருந்து உருமாற்றம்/பரிணாம வளர்ச்சி என்பது இல்லை. உள்ளமையும் ஒன்று. இறைவன் மகா வல்லமை, நிகரற்ற நிலை என்பதெல்லாம் கருத்துக்களில் மாறாமல் எழுதப்பட்டுள்ளது. இக்கருத்துக்கள் எல்லோருக்கும் ஏற்புடையதே. எழுதியவைகளை உரைநடைதான். ஆனாலும் நிறுத்தி நிதானாமாக ஆளச் சிந்தனையுடன் வாசித்தால் மிகவும் நன்று.

      காய்கறியும், கனியும் மண்ணிலிருந்துதான் பெறுகின்றோம். அவைகள் மண்ணில் எங்கோ தனித்து இல்லை. மண்ணே மற்ற பூதங்களுடன் அவ்வாறு வெளியாகி உள்ளது. மனிதன் இப்போ மண்ணால்தானே படைக்கப்படுகிறான் ! பின் மண்ணாகித்தானே போகிறான். இவன் விடும் கழிவும் மண்ணாகித்தான் போகிறது. மண்ணில் விட்ட கழிவை தினம் பார்த்துவந்தால் காணலாம். அங்கு மற்குவியல் பல நாட்களுக்கு பின் இருக்கும். எனவே இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

      // “மூலப்பொருள்” ஒன்றிலிருந்தே எல்லாம் உருவாகிப் பலவாகியிருக்கின்றன என்று தான் நீங்கள் எங்களுக்கு அறிவிக்கின்றீர்கள் என்று யூகிக்கின்றேன், சரியா?//

      முற்றிலும் சரியே. ஆனால் மூலப்பொருள் ஒன்றுதான் இருக்கின்றது. வேறில்லை.

      Delete
  3. இவ்வாக்கத்தை மீண்டும் மீண்டும் பொறுமையாக படித்து சற்று யோசித்து உட்கொள்ள வேண்டிய விஷயங்கள் இதற்க்கு விமர்சனங்களோ வியாக்கியானங்களோ சொல்வதற்கில்லை நல்ல விஷயமாகப்படுகிறது எக்காரணம் கொண்டும் மார்க்கத்திற்கு புறம்பான விஷயம் உள் புகாமல் பார்த்துக்கொள்ளவும் god bless you

    ReplyDelete
    Replies
    1. Thank you. இல்லாததை எழுதவில்லை. இருப்பதை பொதுவில் எழுதுகிறேன். உள்ளவர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். எல்லோரும் நன்மை பெறவேண்டும் என்ற நன்னோக்கம் மட்டுமே. தேவைப்படும் இடங்களில் இன்னும் விளக்கம் தரக் காத்திருக்கின்றேன்.
      நன்றி !

      Delete
  4. ///படைத்தவனால் என்கின்ற இந்த “சுழற்சி| முறையை வைத்துச் சிந்தித்தால் “மூலப்பொருள்” ஒன்றிலிருந்தே எல்லாம் உருவாகிப் பலவாகியிருக்கின்றன என்று தான் நீங்கள் எங்களுக்கு அறிவிக்கின்றீர்கள் என்று யூகிக்கின்றேன், சரியா?///

    இக்கருத்தே எனது கருத்துமாகும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே.

      ஒன்று, ஒன்று, ஒன்றை, ஒன்றில், ஒன்றினது, ஒன்றுக்கு, என்று ஒன்றைப்பற்றி தான் என் எழுத்துக்கள் இக்கட்டுரைகளில் இடம்பிடித்துள்ளன. எனவே மூலப்பொருள் ஒன்று. அந்த ஒன்றிலிருந்தே பலப்பல பொருள்களும் என்றாலும் ஒன்றே பலவாகியும், அந்த ஒன்றின் "தன்னை அறிந்தவன் தன தலைவனை அறிந்தவன்" என்பதுப் போலவே தான்.

      Delete
  5. ஜஸாக்கல்லாஹ் கைரன் அன்பர் அதிரை மெய்சா அவர்களே!

    “தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்” என்பதும் இதனடிப்படையில் தானோ?

    ReplyDelete
    Replies
    1. பாவலரே, சரியான கோட்டில்தான் தங்களது சிந்தனை தொடர்கிறது.

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    அறிவுத்தேன் ஒரு நல்ல தொடர், படிக்க சுவையாகவும் அருமையாகவும் இருக்கின்றது.

    கூட்டி கழித்துப் பார்த்தால் எல்லாமே ஒரு பூஜ்யத்துக்குள் இருந்து வந்ததுதான்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே பூஜ்யத்திற்குள் இருந்து வந்ததுதான் என்பதை ஏற்கும் மனம் தானும் அந்த பூஜியத்திற்குள் இருந்து வந்தவன் என்பதை முழுமையாக ஏற்கவேண்டும். தன்னைத் தெரியவேண்டும்.

      பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்பார். ஒன்று என்பதை முன்னாள் போட்டால் மதிப்பு பத்துமடங்கு என்பார். ஆனால் இங்கு பூஜ்யம் மகா மதிப்பு வாய்ந்தது. தனித்தது. அதனோடு எதையும் சேர்ப்பதற்கு எதுவும் இல்லை.

      Delete
  7. ஒருவன் ஒன்றைப்பற்றி மிக ஆழமான, பரிபூரணமான சிந்தனயில் மூழ்கியிருக்கும்போது அவன் கண்களுக்கு எந்த உருவமும் ஏன் தன் உருவமும்கூட தெரியாது. ஒருவர் கூப்பிட்டாலும் அல்லது அவர்முன் கையசைத்தாலும் உடன் தெரியாது. சிந்தனை களைய தொடங்கும்போது உணரும்; கேட்கும்; தெரியும்.

    இதை நானும் அனுபவித்து இருக்கிறேன். அறிவியல் பூர்வமான பல சிந்தனைகளை எழுப்பிச்செல்கிறது தங்கள் விளக்கம்.

    ReplyDelete
  8. ஒன்றின் குணம் அனைத்திலும் இருக்கும். அவைகளை அறிவது அறிவு. அவைகளின் பொருத்தத்தில் இருப்பது உயர்வு. அந்த ஒன்றைப்பற்றி அறிவதே படைக்கப்பட்டதின் இலட்சியம். இவ்வாறும் சிந்தனைகள் வரவேண்டும்.

    ReplyDelete
  9. அன்பின் ஞான குருவே!

    “பூஜ்யத்தில் இருந்து கொண்டு
    ராஜ்யத்தை ஆண்டுகொண்டுப்
    புரியாமலே இருப்பான்;
    ஒருவன் ; அவன் தான்
    இறைவன்”

    எனபதன் விளக்கம் இதுதானே?

    தங்களிடம் பாடம் படிக்கக் கால்மடக்கிச் செவி சாய்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சிஷ்யன்.

    ReplyDelete
  10. பூஜியத்துக்குள்ளே ஒரு
    ராஜ்யத்தையாண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன்-அவனை
    புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்.
    என்பதிலும் உண்மை மறைபொருளாகத்தான் உள்ளது.
    வணக்கத்தின் உரைநடை விளக்கத்தில் தாங்கள் தேடும் உண்மைகள் மறைந்தும் தெரிந்தும் உள்ளது, பின்னும் வரும். உரைநடையில் தேவைகளுக்கேற்ப உண்மையும் தெரியும். எல்லா உண்மைகளும் சர்வ சாதரணமாகத்தான் உள்ளது அகக்கண் விழித்தோர் அதனை காண்பார். எனினும் சூரியன் வெளிச்சமே மகா பிரகாசம். சகஜம் போதும். பற்றிய சூரியன் பணிவது மகா உயர்வு.

    ReplyDelete
    Replies
    1. அகக்கண்ணைத் திறந்து அமர்ந்து கொண்டதனாற்றான், அடியேனுக்கு உங்களின் விளக்கம் புரிகின்றது; அதுவேபோல், அறிவுக்கண்ணைத் திறந்து வெளிப்படையாக விரும்பிக் கேட்டுத் தெளிவு பெறும் “செருக்கற்ற” உங்களின் பணிவாற்றான் மரபும் இலக்கணமும் கற்றுப் பாக்கள் யாத்திடத் தங்களால் முடிகின்றது என்பதும் யாம் அறிவோம்.

      Delete
    2. தான் என்ற செருக்கு நீங்கிடின் தலைவனை காணலாம்.

      Delete
  11. நல்லதோர் படைப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers