.

Pages

Tuesday, November 19, 2013

அகம் நாநூறு ! புறம் பலநூறு !!

கீழ் புறம், மேல்புறம், வடபுறம், தென்புறம். பல பக்கம் வியாபித்து இருப்பது அந்தப்புறம் ! அரசர் காலத்து அந்தப்புறம் அல்ல இந்தப்புறம். இந்தப்புறம் அனைவர்களாலும் ரசித்து ருசிக்க இன்பமுடன் பேசப்படும் புறம்.
     
புறம் பேசுதல் பற்றி நபிகள் [ஸல்] அவர்கள் கூருவது என்னவெனில் சொந்த சகோதரனுடைய செத்த மாமிசத்தை யாரும் உண்ண விரும்புவீர்களா அப்படி உண்ண விரும்புபவர்கள் தாம் புறம் பேசித்திரிவார்கள் என்பதாக சூலுரைக்கிறார்கள் புறத்தைப்பற்றி விளக்கமும் தருகிறார்கள் ஒருவர் வெண்மை நிறத்தில் அணிந்திருக்கும் சட்டையில் ஒரு கரும்புள்ளி இருந்து அதை பார்த்த நபர் வேறொருவரிடம் கரும் புள்ளியை குறையாக சுட்டிக்காட்டினால் அதுதான் புறம் என்கிறார்கள் [ ஒருகணம் கண்முடி சிந்திக்க வேண்டுகிறேன் ]

எனது நண்பர் அவர் ஒவ்வொரு வருடப்பிறப்பிற்கும் அவரிடம் உள்ள கெட்ட செயல்களை சபதம் ஏற்று அதை கலைபவராக இருந்து கொண்டு இருக்கிறார். முதலில் சிகரட் பழக்கத்தை விட்டார், பின் மது அடுத்து சினிமாதியேட்டர் செல்லும் பழக்கத்தை விட்டார். எனது மற்றொரு நண்பர் கேட்டார் சினிமா பார்ப்பது குற்றமா என்றார் அதற்க்கு அவரின் பதில் என்னை மிகவும் பாதித்தது 2 1/2 மணிநேரம் வெட்டிப்பொழுது கழிவது, கவர்ச்சி காட்டும் பெண்களை பார்ப்பது பெய்யான கருத்தை மனிதர் மனதினுள் திணிப்பதில் சினிமா சிறந்த சாதனமாக  உள்ளது என்று சொன்னார் உண்மைதான்

இஸ்லாமியனான என் மனதில் உதித்தது அலாஹ்வை சுமார் 2 1/2 மணி நேரம் முழுவதுமாக மறந்திருக்க கூடிய இடமாக சினிமா தியேட்டர்கள் உள்ளதல்லவா ?
   
சினிமா தியேட்டர் செல்வதையும் விட்டு விட்டார் மறுவருடம் என்னிடம் சொன்னார் இந்த வருட பிறப்பிற்கு என் வீட்டில் உள்ள TV ஐ அப்புறப்படுத்தப்போகிறேன் என்றார் நானே காரணம் கேட்டேன் அவர் சொன்னார் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து விட்டார்கள் அவர்களோடு ஒன்றாய் அமர்ந்து விளம்பரம் கூட பார்க்க முடியவில்லை அவ்வளவு கலாச்சார சீர்கேடு என்றார் அத்தோடு தந்தைமேல் பிள்ளைகளுக்கு பயம் கலந்த மரியாதை இருக்கவேண்டும் தாயும் தந்தையும் மாறிமாறி பாசத்தையும் நட்பையும் காட்டி பிள்ளைகளை சீரழித்து விடக்கூடாது ஒன்றாய் அமர்ந்து கண்ட கண்றாவிகளை டிவியில் பார்த்தால் தந்தைமேல் உள்ள பயம் போய்விடும் ஆகையால் தான் இனி டிவி வேண்டாம் என்றார்!. இதுவரை சுய தவறுகளை விடுவதற்கு யாரிடமும் அனுமதி தேவை இல்லை வீட்டில் உள்ள டிவியை அப்புறப்படுத்த வீட்டார் சம்மதம் வேண்டுமல்லவா!? என்று நான் என்னிக்கொண்டேன்  ஆனால் அவர் சொன்னபடி செய்துவிட்டார்.

சபதம் மன்னருக்கு இப்பொழுது எடுக்கும் சபதம் சவாலாக இருக்கப்போகிறது காரணம் இந்த வருடத்தில் இருந்து புறம் பேசவோ,புறம் கேட்கவோ போவதில்லை என்றார் அவர் சொன்ன அடுத்த வினாடியே நிச்சயம் உங்களால் இதை நிறைவேற்ற முடியாது என்று அவரிடமே சொன்னேன் அவர் பார்ப்போமா என்று சபதம் செய்தார் நானும் சவால் விட்டேன் அவர் சபதம் மேற்கொள்ளும் நாளும் வந்தது நான் மூன்று நாட்களாக அவரை பார்க்கவில்லை நான்காம் நாள் என் நண்பனிடம் இருந்து போன் வந்தது அவன் கேட்டான் உனக்கும் சபதம் மன்னனுக்கும் என்ன பிரச்சனை என்றான் நடந்ததை சொன்னேன் அதற்க்கு அவன் சொன்னான் அவர் உன்மீது ரொம்ப வருத்தப்பட்டார் அவர் மனதை நோகடித்து விட்டாயாம் சவால்வேறு விட்டாயாமே என்றான் நான் சற்று அமைதியாக சொன்னேன் அவரின் சவால் என் விஷயத்தை உன்னிடம் சொன்னதிலேயே அவரின் சவால் தோற்றுப்போனது என்றேன் அதை அவனும் ஆமோதித்தான்.

நண்பர்களே நீங்கள் புறம் பேசுபவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொவீர்கள் உங்களையே சுயபரிசோதனை செய்ய இப்பொழுது ஒரு விஞ்ஞான சாதனம் வந்து விட்டது அதைக்கொண்டே சோதித்துப்பார்க்கலாம். நீங்கள் செல் பேசும் அத்துணை Call களையும் பதிவு செய்யுங்கள் மறுநாள் பொறுமையாக பதிவு செய்த அத்துணை கால்களையும்   போட்டு கேளுங்கள் நீங்கள் மற்றவர் பற்றி என்னவெல்லாம் பேசினீர்கள் அல்லது கேட்டீர்கள் என்பது தெரியும்.
   
இன்று செல் போன்கள்  அதிகம் விற்பனை ஆவதற்கு முக்கிய காரணங்களில் புறம் பேசுதலும் அடங்கும்! நபி [ஸல்] அவர்கள் கூறுகிறார்கள் சைத்தான் இரு கைகளிலும் தேன் கிண்ணத்தை வைத்து புறம் பேசுபவர்களது நாவிலும் புறம் கேட்பவர்களது காதிலும் தேனை தடவி விடுகிறானாம் [ தேனை சும்மா தடவினால் கசக்கவா செய்யும் ] அந்த காரணம்தான் நாம் அதிகமாக புறம் பேசுதல் கேட்டலில் இன்பம் கொள்கிறோம் சைத்தானின் முழு கட்டுப்பாட்டிலும் மனிதர்கள் சிக்குண்டு போய் இருக்கிறார்கள்.

சிகரெட் புகைத்தலுக்கு  எதிர்ப்பும் உண்டு ஆதரவும் உண்டு. பொய் பேசக்கூடாது என்பதற்கு ஆதரவும் உண்டு எதிர்ப்பும் உண்டு. வியாபாரத்தில் பொய் இல்லாமல் முடியாது என்பார்கள் 1000 பொய்யை சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்யலாம் என்பார்கள் ஆனால் புறம் பேசுவது பற்றி கேட்டால் அத்துனைபேர்களும் கோரசாக தப்பு தப்பு என்பார்கள் இந்த மனிதர்களை நான் சிகரெட் பாக்கெட்டோடு ஒப்பிடுவேன்.
     
சிகரெட் பாக்கட்டின் மேலே புகைப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பொறிக்கப்பட்டு இருக்கும் ஆனால் உள்ளே உடல் நலத்திற்கு கேடான 10 சிகரெட்டுகள் இருக்கும் உள் ஒன்று புறம் ஒன்று என்பது இதுதான். இன்றைய மானுடரும் அப்படியே புறம் ! ஆ ஆ ஆ அது பாவம் என்பார்கள் அவர்கள் புறம் பேசாத நாட்களே இருக்காது அப்படி பட்டவர்கள் தான் சிகரெட்  பாக்கெட் போன்றவர்கள் ஆவார்கள்
     
அலுவலகத்திற்கு லேட்டாக வந்த ஊழியரை மேனேஜர் கேட்பார் தாமதத்தின் காரணம் ? அவர்சொல்வார் பஸ் லேட்டாக வந்தது என்பார் பஸ் டிரைவரை கேட்டால் ட்ராபிக் என்பார் எல்லோருமே மற்றவர்கள்மேல் பழியை போடுவதிலேயே இருப்பார் தம் குறையை சொல்ல மறுப்பார் இதுதான் மானுடர் நிலை
       
ஒருவர் புறம் பேசுவதில்லை, புறம் கேட்பது இல்லை என்று முடிவெடுத்தால் அவருக்கு நண்பர் வட்டாரம் சுருங்கிவிடும் ஆம் நீண்ட நேரம் பேசுவதற்கு வேறு என்ன இருக்கிறது யாரவது அவரிடம் வந்து மற்றவர் பற்றி குறை கூறினால் அது போன்ற விஷயங்களை என்னிடம் பேசாதே என்று முகத்தில் அடித்தார்ப்போல் சொல்லவேண்டும்  அப்படி சொல்லும் பட்சத்தில் சிடுமூஞ்சி என்ற பெயர்தான் கிடைக்கும் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு போகும் ஊரில் கோர்ட் சூட்டோடு செல்லுதல் எப்படியோ அதுபோல் மற்றவர்கள் பற்றி பேசுவதோ கேட்பதோ இல்லை என்று முடிவு எடுத்தவர் நிலையும் அப்படியே
       
இறைவனிடம் கையேந்தி இந்தப்புறத்தில் இருந்து விடுதலை பெற நீயே அருள் புரிய வேண்டும் என்று பிராத்திப்போமாக  !

மு.செ.மு.சபீர் அஹமது

16 comments:

  1. சிறந்த ஒப்பீடு !

    குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் நிச்சயம் கேடுதான்

    ReplyDelete
  2. அவசியமானதொரு பதிவு. வாழ்த்துக்கள்.

    புறம் பேசுதலை புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்.

    அகம் ஒன்றும் புறம் ஒன்றும்
    அநீதிக்கு வழி வகுக்கும்
    ஆன்மாவின் சொல்லிதுவே
    ஆங்காங்கே ஒலிக்கட்டும்
    என்ற வரிகள் முரண்பாடு என்ற தலைப்பிலான எனது கவிதையில் குறிப்பிட்டு இருப்பேன்.

    புறம் பேசுவதே ரொம்பப் பேருடைய பொழுது போக்காக இருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால் இந்தக்காலத்து இளைஞர்களை விட அந்தக்காலத்து பெருசுங்க தான் அதிகமாக புறம் பேசுகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. பொழுது போக்குகிறேன் பேர்வழிகள்,வேலை வெட்டி இல்லாதவர்கள் [கவலைப்படா வாலிபர் கூட்டங்கள்]நாம் பேசுவது புறம்தான் என்று தெரியாமலே பேசுகின்றனர்

      Delete
  3. புதுமைக் கவிஞராய்ப் புறப்பட்டிருக்கின்றீர்கள் என்பதை புரிய வைக்கும் தலைப்பு; படித்ததும் தங்களின் எதிர்காலம் சிறந்த இடத்தில் இருக்குமென்ற நினைப்பு! இன்ஷா அல்லாஹ்.

    சதா திக்ர் என்னும் இறைதியானத்தில் திளைத்திருக்கும் தங்களின் நாவு என்பதும் யான் யூகித்தேன்; அதனை நிரூபணம் செய்யும் வண்ணம் இந்தப் புறம் பேசும் கொடிய ஷைத்தானின் வலையில் சிக்கி விட்டால் அந்த இறைதியானத்தில் கிடைக்கும் விவரிக்க இயலாச் சிறப்பையும் பேரின்பத்தையும் அனுபவிக்க முடியாமற் போய்விடுமே என்ற அச்சத்தில் எச்சரிக்கை விடுப்பதும் அறிய முடிகின்றது. இப்படிப்பட்ட நல்லுபதேசங்களை கவித்துவத் தலைப்பிலும் , கட்டுரையில் எளிய- இனிய நடையிலும் எழுதியிருப்பதும் தங்களின் எழுத்தாற்றலின் வளர்ச்சிக்கு ஒரு சாலச் சிறந்த சான்றாகும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல சபதம் ஏற்கும் நண்பரை பெற்ற நண்பரே ..
    வாழ்த்துக்கள் ..நாமும் ஏற்போம் இது போன்ற நல்லவர்களை நண்பராய் பெற்ற தை பாக்கியமாய் கருத வேண்டும்

    ReplyDelete
  5. கவியன்பரும், என் நண்பரும் விமர்சனம் செய்தமை சந்தோஷம் டிவி எனும் கொடிய சைத்தான் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது அது தரும் பயன்கள் நிறைய இருப்பதாய் மாயபிம்பம் காட்டுகிறது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தீய குணங்களை நம்மில் வளர்க்கிறது மருத்துவத்தில் ஹால்கஹால் புகுந்தது போல் டிவி பயான்களில் ஆலிம்கள்!

    ReplyDelete
  6. புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்...

    நல்லதொரு அலசலுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் அவர்களே தாரணி சிறக்க புரணி ஒழிப்போம்

      Delete
  7. செயல்படுத்த முடியாததை வழிகாட்டப்பட்டுள்ளதா என்ற எண்ணம் உண்டாகலாமா ! அதனால் எதோ ஒரு உணர்வு உந்த, எனவே செயல்படுத்த அருள்புரிவாய் என்று அவனிடமே அடைக்கலம் தேடுகிறார். அண்ணளவர்கள் எப்படி பேசி இருப்பார்கள் என்று ஒரு செய்தியைப் பற்றி சிந்தித்தால் வழி தெரியாமலாப் போகும் ?

    //அலுவலகத்திற்கு லேட்டாக வந்த ஊழியரை மேனேஜர் கேட்பார் தாமதத்தின் காரணம் ? அவர்சொல்வார் பஸ் லேட்டாக வந்தது என்பார் பஸ் டிரைவரை கேட்டால் ட்ராபிக் என்பார் எல்லோருமே மற்றவர்கள்மேல் பழியை போடுவதிலேயே இருப்பார் தம் குறையை சொல்ல மறுப்பார் இதுதான் மானுடர் நிலை //

    நாம் லேட்டாக வந்தோம் என்றுதான் சொல்லுவோமே. இயலாதது இல்லையே.

    //சபதம் மன்னருக்கு இப்பொழுது எடுக்கும் சபதம் சவாலாக இருக்கப்போகிறது காரணம் இந்த வருடத்தில் இருந்து புறம் பேசவோ,புறம் கேட்கவோ போவதில்லை என்றார் அவர் சொன்ன அடுத்த வினாடியே நிச்சயம் உங்களால் இதை நிறைவேற்ற முடியாது என்று அவரிடமே சொன்னேன் அவர் பார்ப்போமா என்று சபதம் செய்தார் நானும் சவால் விட்டேன் அவர் சபதம் மேற்கொள்ளும் நாளும் வந்தது நான் மூன்று நாட்களாக அவரை பார்க்கவில்லை நான்காம் நாள் என் நண்பனிடம் இருந்து போன் வந்தது அவன் கேட்டான் உனக்கும் சபதம் மன்னனுக்கும் என்ன பிரச்சனை என்றான் நடந்ததை சொன்னேன் அதற்கு அவன் சொன்னான் அவர் உன்மீது ரொம்ப வருத்தப்பட்டார் அவர் மனதை நோகடித்து விட்டாயாம் சவால்வேறு விட்டாயாமே என்றான். நான் சற்று அமைதியாக சொன்னேன் அவரின் சவால் என் விஷயத்தை உன்னிடம் சொன்னதிலேயே அவரின் சவால் தோற்றுப்போனது என்றேன். அதை அவனும் ஆமோதித்தான்.//

    சப்த மன்னர், "நான் இனி புறம் பேசுவதில்லை". என்று நடந்த விபரங்களை மட்டும் சொல்லி வாழலாமே.

    அனைவரையும் சிந்திக்க தூண்டி நடைமுறையில் புறம் பேசி வாழும் மனிதர்கள், புறம் பேசாமல் வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கிளறிய தங்களுக்கு, நன்றி !

    ReplyDelete
    Replies
    1. அறிஞர் நபி தாஸ் அவர்கள் மிக கவனம் செலுத்து ஆழ உழுதுல்லார்கள் என்பது அவர்களின் கருத்தாக்கத்திலேயே புரிகிறது எல்லா துவக்கத்திற்கும் அல்லாஹ்வின் உதவி முக்கியம் என்பத்தோடு முடித்திருக்கிறேன்

      நான் இக்கட்டுரை வடித்ததிலேயே நிறைய புறம் சொல்லி இருக்கிறேன்
      1.என் நண்பர் [சபதம் மன்னன்]பற்றி குறை சொல்லிவிட்டேன்
      2.செல்போன் பேசுபவர்கள் எல்லாம் புறம் பேசுபவர்களாக சித்தகரித்துள்ளேன்
      3.புறம் பேசாமல் இருப்பது மனிதர்களால் முடியாது என்பதுபோலும் சொல்லி இருக்கிறேன்
      இவைகள் அனைத்தும் புறம்தானே

      Delete
    2. தனிமனித தற்பெருமையும், தாழ்ச்சியும் பொதுவாக ஏற்படவண்ணம் பொது நன்மையை முன்னிட்டு எந்த செய்தியும் பேசலாம் அல்லவா ?

      Delete
  8. மிக அவசியமான பதிவு அருமையான வடிவில்.புறத்தை ஒளிப்போம் நிஜத்தை ஆதரிப்போம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தம்பி ஹாபீபின் ஆதரவு தொடந்து இருக்கட்டும் உங்கள் ஆரோக்கியத்திற்கு துஆ செய்கிறேன்

      Delete
  9. உண்மையில் புறம் பேசுதல் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் இஸ்லாம் பல கடுமையாகவே கூறியுள்ளது. எனினும் எப்பேற்பட்டவராயினும் இந்த புறம் பேசுவதிலிருந்து தப்பிப்பது கடினம்தான்.

    நம்மையே அறியாமல் பலர் புறம் பேசிக் கொண்டு இருக்கத்தான் செய்கிறோம்.. நல்ல கட்டுரை.

    ReplyDelete
  10. சிறப்பான பதிவு....
    புறம் பேசுவது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப்போனது வருத்தப்பட வேண்டிய விசயம்தான்..
    செல்போன்களில பேச குறைந்த கட்டணம் , add on கார்ட் என்ற ஓசியாக பேசுதல் மற்றும் centrex அழைக்கப்படும் நான்கு நம்பர்களில் ஓசியில் பேசுவது போன்றவையும் புறம் பேசுவதற்கும், வம்பு சண்டை செய்வதற்கும் பெரிதும் துணை .செய்கின்றன...

    இவை நமது வாழ்கையில் தவிக்க முடியாத ஒரு அங்கமாகி போனதற்கு இக்கால மற்றும் ஆரம்பகால ஆபாச பத்திரிக்கைகளும் ஒரு காரணம்..
    "கிசுகிசு " என்ற பெயரில் புறம் பேசும் வெளியிடுகிறான்..அதையும் தானே நாம் ஆர்வமாக படிக்கிறோம்?

    ReplyDelete
  11. நிசார் அஹமது நல்ல பத்திரிக்கையாளர் அவரின் ஆக்கங்கள் நம் வலைதளத்தில் வந்தால் நன்றாய் இருக்கும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers