.

Pages

Friday, November 22, 2013

பிரபல பதிவர் ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பனின் வாழ்க்கை என்னும் பாடம் !


இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :

'கவியன்பன்' கலாம் இயற்றிய எழுத்து வடிவில் உள்ள கவிதை :
வாழ்க்கை என்னும் பாடம் :
வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர்ந்தால் நாக்கு
...........வெளிக்காட்டும் செந்நிறத்தின் அழகு போல
வெற்றிகளை ஈட்டிவரும் சான்றோர் வாழ்வு
........... வீரியமாய்த் தந்திரமும் இணைந்த  தாலே
சுற்றிவரும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டு
..........சுழற்றியதை முறியடித்தார் விரைந்து சென்று
கற்றிடுவோம் அவர்வாழ்வில் முன்னேற் பாட்டை!
..........கழற்றிடுவோம் நம்வாழ்வில் ஐயப் பாட்டை

பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
........பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்
சொல்லுக்கும் செயலுக்கும் வேறு பாடோ
.......சோதனைகள் கொண்டுவரும் முன்னேற் பாடே
வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
......விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக்
.....கருணையாளன் உணவளித்துக் காப்பா னன்றோ

வாய்கொண்டு விழுங்குகின்ற முயற்சி போல
.........வாழ்க்கையிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும்
நோய்கொண்டு வாடினாலும் மருந்தை நாடி
.........நோகாமல் சிகிச்சைகள் செய்வோம் தேடி
தாய்கொண்டு வந்தவுடல் அழிவைத் தேடித்
........தானாக மாய்வதற்குக் குழியைத் தோண்டித்
தேய்கின்ற நிலைமைக்கு சைத்தான் நம்மைத்
.......தீண்டுகின்ற சூழ்ச்சிகளை அறிதல் நன்றே!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 14-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

22 comments:

 1. /// கல்லுக்குள் மறைந்துள்ளத் தேரை வாழக் ///

  வரிகள் அற்புதம்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. இறைஞானம் உடையோர்க்கு இரணம் என்னும் உணவை அளிக்கு இறைவனின் அற்புத்ததை இப்படித்தான் எங்கட்குச் சிறுவயதில் உபதேசித்தனர். அதன் வெளிப்பாடே இப்பாடல் வரிகள், ஐயா. உங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள், ஐயா.

   Delete
 2. Nice voice with fantastic poem !

  Weldon brothers kavikkural & jaafar

  keep it up

  ReplyDelete
  Replies
  1. With your great appreciation we (myself and Brother/ Singer Jafar) will reach more reputation. In Sha Allah., We respect your authorization and enthusiasm on your creation of these songs for ever.

   Jazakkallah khairan

   Delete
 3. வாவ்..வவ்....பேஷ்......பேஷ்...கவித்தீபம் & ஜாஃபரின் கூட்டணியில் கலக்கலான வரிகளில் கனியினும் சுவைமிகு குரலில் ''வாழ்க்கை என்னும் பாடம்'' வானுயர எழுந்து நிற்கிறது. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்ஷா அல்லாஹ் மேன்மேலும் அனைத்துப் பாடல்களும் அன்புத்தம்பியும் பாடகருமான ஜாஃபர் அவர்களின் தேனினும் இனிய குரலில் என் கவி வரிகள் உயிர் பெற்று உலா வரும்; முழுமையாக் குறுந்தட்டிலும் வெளியிடுவோம்; உங்களின் வாழ்த்தும் துஆவும் வேண்டுகின்றோம். உங்களின் அருமையான வாழ்த்துக்கு எங்கள் கூட்டணியின் சார்பாக அகம்நிறைவான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 4. வணக்கம்
  அழகான உவமை மிக்க கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உவமைகளயும் உருவகங்களையும் உள்வாங்கி உணர்ந்து எழுதிய உங்களின் உணர்வுபூர்வமான கருத்துரைக்கு எங்களின் அன்பான நன்றிகள் உரித்தாகும்.

   Delete
 5. பல்லுக்குள் அகப்பட்ட நாக்கைப் போலப்
  ........பக்குவமாய்ச் சுழலுதலே வாழ்க்கை என்போம்/////

  எனக்கு பிடித்த வரிகள் உங்கள் கூட்டணி மேலும் நல்ல கருத்துக்களை பாடலாய் தந்திடல் வேண்டும் அடுத்து ஏற்கனவே புகழ்பெற்ற பாடலின் ராகத்தில் [பழைய ஹிந்திப்பாடல்]பாடினால் வரவேற்ப்பு நன்றாக இருக்கும் இசை கலக்கவேண்டாம் அடுத்து பதிவில் குரல் சரியாக கேட்கவில்லை சற்று கூடுதலான சப்தம் வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரியும் இவ்வரிகளை இடும்பொழுதே என் உள்மனத்தினில் ஓர் உதிப்பு உண்டானது; இவ்வரிகள் உங்களை ஈர்க்கும் என்று; அதனை உறுதி செய்தீர்கள்; நன்று. உங்களின் கருத்தைப் பாடகர் அவர்கட்கு அறிவிக்கிறேன்; ஹிந்திப் பாடல் மெட்டு என்பதும் மற்றும் எந்தச் சினிமாப் பாடல் மெட்டுக்குள்ளும் என் வரிகள் அடைக்கலம் ஆவதும் யான் விரும்புவதில்லை; ஆனால், எனக்குக் கற்பிக்கப்பட்ட இலக்கண வாய்பாடே போதும் இந்தப் பாடகரின் வாய்ப்பாடும் என்பதற்கு இது வரை வெளியான எங்கள் கூட்டணியின் 3 வெளியீட்டிற்கான ஆதரவும் உறுதியளிக்கும். ஏனெனில், என் பாடல்களில் இந்தப் பாடகரின் வாயசைவுக்குள் அடங்கும் சீர், அசைகளைக் கொண்ட வண்ணப்பாடலாகவும், மரபு இலக்கண யாப்புக் கவியாகவும் தான் அமைத்துக் கொடுக்கிறேன். முதலில் பாடியப் பாடல் தூய வண்ணப்பாடல் மெட்டு என்பதால் இந்தப் பாடகர்க்கு இலகுவாக வாய்த்து விட்டது என் வாய்பாடு அமைப்பு; இரண்டாம் பாடலில் வண்ண்ப்பாடல் அல்லாமல் யாப்பிலக்கண வாய்பாட்டில் (விளம், மா, தேமா) என்னும் அசைக்குள் வைத்தேன்;இசைத்தேனாய் இசைத்தார் இந்தப் பாடகர் அவர்கள்; அதனால், மீண்டும் இந்தப் பாடலையும் மீண்டும் அவர்க்கு ஒரு சோதனை ஓட்டமாகவே யாப்பின் எண்சீர்க் கழிநெடிலடியில் (மா, மா, காய், தேமா) என்னும் வாய்பாட்டின் அமைப்பில் அசைகளிட்டேன்; இசைப்பதில் வல்லவர் இவரே என்பதை என் சோதனையில் வென்றும் விட்டார்; அதற்கான சான்றுகளாய் உங்களனைவரின் பாராட்டும் ஈண்டுக் காண்கின்றேன். இன்று அப்பாடகர்க்கு யான் அனுப்பியுள்ள நான்காம் வெளியீட்டிற்கான பாடலும் யாப்பின் வாய்பாட்டின் அமைப்பில் (தேமா, மா, காய் )அமைத்துக் கொடுத்துள்ளேன் (வஞ்சி விருத்தமாக அல்லது அறுசீர்க் கண்ணியாக)இப்பாடலின் அமைப்பு அவர்க்கு இலகுவான வாயசைப்பும் குரல் நெளிவு ஏற்கும்; உங்களின் ஆலோசனைபை அவர்கள் ஏற்று இன்னும் கூடுதலான உச்ச நிலையில் ஓங்கி ஒலிப்பார்கள் என்றே நம்புகிறேன்; அவர்களின் பணிகட்கிடையில் சற்று ஓய்வெடுக்கும் தருணத்தில் இப்படிப்பட்ட பதிவுகள் அதிலும் தங்கும் அறைக்குள்ளிருந்து கொண்டு பதிவதென்பதும் ஓர் அரிய பெரிய விடயமாகும்; எங்கள் கூட்டணியின் அங்கத்தினர் இப்பாடகர்க்கு யான் உயிர் உள்ளளவும் கடப்பாடு உடையவனாகின்றேன்.

   உங்களின் கருத்துரைக்கும் ஆலோசனைககும் என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

   Delete
 6. ........................புறம் பேசுதல் கூடா........................

  புசிக்கும்உன் பிறந்தானின் செத்த மெய்யாம்
  ..... புறமென்று புரியாது கூறும் சொற்கள்
  கசிந்திடும்சொல் உள்ளதானும் இல்லா தானும்
  .....கருத்தினிலே வதைத்திட்டால் புறமே ஆகும்
  உசிதமான உண்மைபொது நன்மை எனில்
  .....உரக்க(க்)கூறின் புறமென்று ஆகா தாமே
  வசிக்கும்வாழ் கைச்சட்டம் வகுத்து தந்தார்
  .....வாழ்ந்தேதான் வழிகளுமே காட்டும் வேந்தர்.

  உறவுகளும் பிறர்களுமே மனதில் சாந்தி
  .....ஊன்றிதான் வாழ்ந்திடுதல் வேண்டும் என்றார்
  திறனுடனே சிந்தித்தால் புறமும் துன்பம்
  .....தீதுமமை திகுழைக்கும் ஏகன் ஏற்கா
  புறம்பேசும் வழக்கிலாகி வாழும் யாவர்
  .....புறம்கலக்கா பேசுதலே கடினம் என்பார்
  அறமறிந்து பேனுபவர் புறமை நீக்கி
  .....அவர்வாழ்வை அடிபிறழா நலமாய் வாழ்வார்.

  துவிதம்போக் கும்நபிகள் நேச அன்பர்
  .....துணிவுசபீர் அகமதுடை புறத்தின் ஆக்கம்
  கவின்மிகுந்த கருத்ததனில் கவனம் கொண்டு
  .....கவிகலாமின் நல்வாழ்கை நடையில் இன்று
  பவிசுதர சேர்திட்டேன் வாழ்கை பாடம்
  .....பதிவோடு படித்திடுதல் வாழ்வில் ஏற்றம்
  பவித்திரம னப்பதிவே வாழ்வின் நோக்கம்
  .....பத்திரமாய் பாவித்தல் மனிதன் பண்பே.

  பவிசு- உயர்வு
  பவித்திரம்- பரிசுத்தம்

  ReplyDelete
  Replies
  1. அல்ஹம்துலில்லாஹ்; மாஷா அல்லாஹ்.

   எல்லாப் புகழும் இறைவனுக்கே! என் பயிற்சியும், ஞானகுரு நபிதாஸ் அவர்களின் விடாமுயற்சியும் வெற்றி இலக்கை எட்டி விட்டன என்பதற்குச் சான்றாக, இந்த எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஒன்றே போதும். எந்தப் பாவடிவத்தின் இலக்கணமும் எளிதில் (கற்பூரமாக)ப் பற்றி பிடித்து உடன் பயிற்சியை ஏற்று முயற்சியில் வெல்லும் இவர்களைப் போன்றோர் இன்னும் என்னிடம் கற்க மாட்டார்களா என்று ஏங்குகின்றேன்.

   அன்பின் ஞான குருவே!

   உங்களின் “அம்மா” கவிதையை இன்னும் யான் பார்க்கவில்லை; சில நாட்களாக என் கண்னிப் பழுது நீக்கம் செய்யப்படச் சென்று விட்டதால் என்னால் கணினி இன்றி என் கவிதைப் பணிகள் முடங்கி விட்டன. சென்ற வாரம் இலண்டனுக்கும் கவிதை அனுப்ப இயலவில்லை; இன்ஷா அல்லாஹ் இன்று உங்களின் அம்மா கவிதையைப் பார்த்து பிழைத்திருத்தம் இருந்தால் தெரிவிக்கின்றேன்.

   உங்களின் இந்த எண்சீர்க் கழிநெடிலடி மிகவும் அற்புதமாக வந்துள்ளதால், உங்களின் ஞானங்களை இந்த வடிவப்பாட்டின் வாய்பாட்டின் அமைப்பில் அமைப்பது மிக்வும் எளிமையாகும்.

   Delete
  2. அன்பின் ஞானகுருவே! உங்களின் அம்மா கவிதையைப் படித்தேன்; விருத்த அமைப்பில் பிழைகள் காண இயலா.

   அருமை அருமை
   உங்களை அடைந்ததில் பெருமை பெருமை

   உங்களின் “அம்மா” கவிதை மிகவும் உருக்கம்; இலக்கணப் பொருத்தம்

   ஒற்றுப்பிழைகள்:

   //தந்தாய் தன்னாய்.\\ த்ந்தாய்த் தன்னாய் (ய் அடுத்து ஒற்று மிகும்)
   //முடியா பந்தம்\\ முடியாப் பந்தம் (ஈறுகெட்ட எதிர்மறையில் மிகும்)

   //.....உறங்கிட தாலாட்(டு)ப் பாடும்.// உறங்கிடத் தாலாட்(டு) பாடும்
   6ம் வேற்றுமைத் தொகை (உடைய) மற்றும் குறியீடு அடைப்புக்குள் “குசுடுதுபுறு” இருந்தாலும் ஒற்று மிகா.

   Delete
  3. நபிதாஸ் அவர்களின் 'அம்மா' என்ற தலைப்பிட்ட கவிதை வருகிற செய்வாய்கிழமை தளத்தில் பதியப்படும்.

   Delete
  4. எம் ஞானகுரு நபிதாஸ் அவர்கள் செருக்கில்லா மாணவராய் எம்மிடம் தான் இயற்றிய மரபுப்பாக்களைப் பிழைத் திருத்தம் வேண்டி அனுப்பினார்கள்; என் கணினிப் பழுது நீக்கம் செய்யப்படச் சென்று விட்டதால் உடன் பார்க்காமற் போனதால் சென்ற வாரம் வர வேண்டிய இப்பா இன்ஷா அல்லாஹ் வரும் செவ்வாய்க் கிழமை வரும் வண்ணம் தமியேன் பார்த்துப் படித்துத் திருத்திய வகையில் மரபின் இலக்கணம் பிறழாது விளம், மா, தேமா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டின் அமைப்பில் ஓர் அறுசீர் விருத்தம் வனைந்துள்ளார் என்பதைக் கண்டும், படித்தும் வியந்தேன்; இவ்வளவு விரைவில் பாடங்களைக் கற்பூரம் போல் பற்றிக் கொண்டார். இன்ஷா அல்லாஹ் அதிரை வ்லைத் தளங்களில் இனிமேல், மற்றுமொரு மரபுக் கவிஞரைக் காணலாம்., எல்லாப் புகழும் இறைவனுக்கே!

   இப்படிப்பட்ட மாணவர்களைத் தான் தமியேன் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

   அன்புத்தம்பி விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கள் அப்படிப்ப்ட்ட மாணவ்ர்களை எமக்கு அறிமுகம் செய்வீர்களாக!

   Delete
 7. கருத்திட்ட அனைத்த சகோதரர்களுக்கும் நன்றி/ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

  அன்பின் சபீர் அஹமது காக்கா, உங்களின் கருத்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி..

  ஒலியின் சப்தத்தை அதிகரிக்க முயற்சிக்கிறேன்

  ஹிந்தி பாடல் மெட்டு ஆலோசனை நானும் நினைத்ததுதான்.. விரைவில் அந்த முயற்சியும் மேற்கொள்ளப்படும்..


  நாகூர் ஹனீபா உள்ளிட்ட தமிழ் இஸ்லாமிய பாடகர்கள் ஆரம்ப காலத்தில் ஹிந்தி மெட்டுக்கு பாட்டு பாடித்தான் புகழ் பெற்றுள்ளார்கள்

  அதேபோல முந்தைய் காலம் பாடலுக்கு மெட்டிடப் பட்டது, பின்பு மெட்டுக்கு பாடல் என மாறியது.

  மீண்டும் தற்போது கவிதைக்கு மெட்டிட்டு சில பாடல்கள் வந்துள்ளன.

  ஆனால் நான் கவிதைக்கு தகுந்தாற்போல் மெட்டை தடவி பாடுகிறேன்.. மேலும் மெருகேற்ற முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. பாடகரின் ஆர்வத்திற்கு நன்றி.

   என் கணினிப் பழுது நீக்கி இன்றுதான் வந்ததால் என் ஓய்வு நாளான இன்று எம் கூட்டணியின் நான்காம் வெளியீடான “எதிர்நீச்சல்” உங்களின் இனிய குரலில் இன்று ஒலிப்பதிவில் வீற்றிருக்கும் என்று நம்புகிறேன். இப்பாடலும் எளிய இலகுவான வாய்பாட்டில் (தேமா, மா, காய்) அசைகளை இட்டுள்ளதால் உங்கட்கு மெட்டுக்குள் உட்காரும் என்ற உறுதியை அளிக்கிறேன்.

   \\ஆனால் நான் கவிதைக்கு தகுந்தாற்போல் மெட்டை தடவி பாடுகிறேன்.. மேலும் மெருகேற்ற முயற்சிக்கிறேன்..\\

   உங்களின் இந்த வரிகள் என்னை வியக்க வைக்கின்றன. திரைப்படப் பாடகர்கள் கூட இப்படிக் கவிதைக்கு ஏற்ப குரலை வளைக்கவோ, நெளிக்கவோ முடியாமற் கஷ்டப்பட்டுள்ள வேளையில், உங்களின் துணிவும், பணீவும் தான் உங்களை உயர்த்திக் காட்டி விட்டன. அல்ஹம்துலில்லாஹ்; ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ் ஆஃபியா.

   Delete
 8. இறையருட்கவிமணி, பேராசிரியர், கா.அப்துல்கஃபூர் சாஹிப் அவர்களின் கவிதை வரிகள், இசைமுரசு இ.எம். ஹனீஃபா அவர்களின் குரலில் உட்கார்ந்து கொண்டது போல் அமையும் இன்ஷா அல்லாஹ் இனி அடுத்து வரும் வெளியீடு.

  இறையருட்கவிமணி அவர்களும் மரபுப்பாக்கள் மட்டுமே வனைந்து இசைமுரசு அவர்களிடம் வழங்கிப் பாட வைத்தர்ர்கள். அந்த மாமேதையிடம் பயின்ற என் ஆசான் அதிரை அஹ்மத் காககா அவர்களிடம் தமியேன் பயின்று அவர்கள் என்னிடம் உறுதி வாங்கிய வண்ணம் “மரபுப் பாக்களைப் பற்றிப் பிடித்துக் கொள்: என்ற என் ஆசான் அவர்களின் சொல்லுக்கிணாங்கி, என் ஆசானின் ஆசான் பேராசான் இறையருட்கவிமணி அவர்களும் இசைமுரசு அவர்களும் இணைந்த ஓர் அரிய கூட்டணியை அல்லாஹ் எமக்கு அளித்துள்ளான்; அல்ஹம்துலில்லாஹ்

  ReplyDelete
 9. பாடல் பாடியவிதம் அருமை. இனிமையான குரல் வளம். கவிஞரின் எண்ணங்கள் கேட்பவரின் மனதில் பதியும். ஆனால் பாடல் ஒலி அமைப்பு சரி செய்யப்படவேண்டும்.

  ReplyDelete
 10. அருமையான கவி தீபம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வெற்றிலை சுண்ணாம்பு கூட்டணி ..
  வாய் சிவக்கும் ..கவியன்பர் கலாம் காக்கா ..சகோ ஜாபர்
  கணீர் குரல் கூட்டணி ..இத்தளம் சிறக்கும்

  ReplyDelete
 12. வில்லுக்குள் பூட்டிவைத்த அம்பைப் போல
  ......விவேகத்தைப் பூட்டிவைப்போம் அன்பி னாலே
  என்ன அருமையான சிந்தனை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers