.

Pages

Friday, November 8, 2013

பெண்ணிவள்..!

காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு
......கனவிலும் நினைவிலுமே
ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்
..ஒடுங்கிடத் துணையாக
ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்
....ஆறுதல் பெற்றிடத்தான்
போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்
....புரிந்தவர் வென்றனரே!.

பெண்ணும் பொறுமையில் பூமி போலவே இருப்பாள்
....பேச்சினில் புகழ்ந்ததுமே
பெண்ணும் பொறுமையை இழப்பாள் பேச்சினில் வாய்மைப்
...பிறழ்ந்திடும் வேளையிலே
கண்ணும் இமைகளால் கவனம் செலுத்துதல் போல
...காத்திட விரும்புவாளே
விண்ணின் தாரகை  யல்லள் மேதினி கொள்ளும்
...விளக்கதன் சுடராவாள்!

பிள்ளை பெற்றிட மட்டும் இருப்பதாய் நினைத்தால்
....பிழைகளும் உன்னிடந்தான்
உள்ளம் உணர்வுகள் எல்லாம் உணர்ந்திட வேண்டி
....உதவிட ஏங்கிடுவாள்
கள்ளம் கபடமும் கொண்டு வாழ்ந்திட நினைத்தால்
....கனவிலும் மறந்திடுவாள்
வெள்ளம் போலவே  கவலைப் பொங்கிடும் போதில்
...விவேகமாய் முடிவெடுப்பாள்!

பலத்தில் ஆனையைப்  போல இருப்பதால் பெண்ணும்
.....பக்குவம் விழைந்திடுவாள்
நலத்தில் அக்கறை காட்டும் இவளது நலத்தை
...நளினமாய் மறைத்திடுவாள்
குலமும் கோத்திரப் புகழும் கொண்டவள் பிறந்தக்
.....குடிலையே  தேடிடுவாள்
விலகும் சொந்தமும் நம்மைச் சுற்றியே இருக்க
..விரும்புதல் இவள்குணமே!

யாப்பிலக்கணம்:
எழுசீர் விருத்தம்:
வாய்பாடு (மா, விளம், மா, விளம், மா
                    விளம், காய்) 1-6 மோனை
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 07-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

நாற்றம் மதுமலர் தேக்கம் நனையிதழ் ஊட்டம்
  நாடிடும் வண்டினமும்
போற்று மெழில்சுனை ஆட்டம் புதிதெழும் காற்றும்
  புரள் அலையோட்டமென
சாற்றும் மொழிதரும் பாட்டும் முழவொலி கேட்டும்
  மனமெழும் தீரமுடன்
நேற்றும் இன்றுடன் நாளை நிகழ்வது யாவும்
  நிலைகொள வழிசமைத்தாள்

சீற்றம் இடியொளி மின்னல் சொரிமழை வானம்
  சிதறிடும் மர இலைகள்
ஆற்றும் செயலிவை யாவும் அவனியில் சேரும்
  இயற்கையின் கடமைகளே
ஏற்கும் உடைகளும் உண்ணும் உணவுடன் இனிமை
  உறவுகள் அவள்தரவே
கூற்றன் கொடிதெனும் பாசக் கயிறிட கொள்ளும்
   கணம்வரை உயிரளித்தாள்

ஏற்றம் எழவிழும் தாக்கம் இழிமையின் துச்சம்
  இவைதரும் உணர்வழிய
மேற்கும் மறைகதிர் போக்கும் மதியின் பொன்கீற்றும்
   மகிழ்வுள்ளம் ஆக்கிவிட்டு
நூற்கும் நூலிழை சேர்க்கும் நாற்குணப் பெண்மை
   நினைவுகள் இனிமை யென்றாள்
போற்றும் செயலதும் புகழும் இயற்கையின்
  புலமை கவிஞரின் வழக்கமன்றோ

பெண்ணும் பெண்ணவள் பேச்சும் பேச்சினில் மாற்றம்
  பெரிதெழ ஆக்கியவள்
மண்ணும்  மண்விழை பொன்னும் பொன்முடி அரசும்
  படையுடன் போரெனவும்
எண்ணும்  மனதினில் இன்பம் இளமை யின் எண்ணம்
  இவைகளில் சாம்ராஜ்ஜம்
திண்ணம் விழநிலை கொள்ளும் திறனுடை0 பெண்ணும்
  தேர்ந்திட அழகீந்தாள்

முன்னும் கண்விழி அம்பும் மெய்யிடை போரும்
  மூளென தீயிடுவாள்
என்னும் வலிமையும் கொண்டால் இகமதில் இன்னும்
  எழும் வலி இவள் கொண்டால்
தன்னும் தன்நிலை- பேணுந் தன்மையில் ஆளும்
   தகமையைக் கொள்வளெனில்
மின்னும் தாரகையல்லள் மேதினி கொள்ளும்
   இன்னொரு சுடராவாள்

14 comments:

  1. மண்ணால் படைக்கப்பட்டவன்
    பென்னுள்ளிருந்துதான்
    உருவாகிறோம்

    பெண்மையை போற்றிடும் நல் கவி தந்தீர்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மச்சான் உங்களின் கவிதைக்கு கருத்து இடுவது என்றால் கொஞ்சம் சிரமம்தான், இருந்தாலும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வந்து கொண்டே இருக்கும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, மச்சானின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  3. பெண்மைக்கு புதிய வடிவம் கொடுத்த உங்கள் எழுத்து திறன் கவிக்குறல் அவர்களே வாழ்த்துக்கள். .

    ReplyDelete
    Replies
    1. புதிய வடிவம் ஏதும் இல்லை; இன்னும் ஓர் உண்மையை ஈண்டுப் பதிகிறேன்:

      மறைந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ஓர் இலக்கியக் கூட்டத்தில் (துபையில்) சொன்னார்கள் (அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கட்குப் பேராசிரியராகவும் இலக்கியங்களின் தேர்ந்தவராகவும் இருந்தவர்கள்)

      “ இற்றைப் பொழுதினில் இலக்கியம், கவிதைகள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் கருதுவீர்களேயானால், அவைகள் யாவும் முந்தைய படைப்புகளில் சொல்லப்பட்ட கருவை ஒத்துதான் இருக்கும்; ஆக எவரும் புதியதாகப் படைப்பதற்கில்லை; எல்லாம் உங்களுக்கே தெரியாமல் ஏற்கனவே படைக்கப்பட்டிருக்கும்; ஆயினும், கவிஞர்களின் மனவோட்டங்கள் எப்பொழுதும் அன்றும் இன்றும் என்றும் ஒத்திருப்பதால் அன்று எழுதியவைகளும் இன்று எழுதப்படுபனைகளும் ஒன்றாகவே தோற்றத்தில் தெரியும்; அதற்காக எழுதுவதை நிறுத்த வேண்டா.நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகின்றேன்; நீங்கள் ஏதேனும் ஓர் இலக்கியம், கவிதைப் படைப்பை என்னிடம் காட்டுங்கள்; அதனையொத்த ஒரு படைப்பை முந்தையவர்களின் படைப்பிலிருந்து என்னால் காட்டுகள் தர முடியும்” என்றார்கள் அந்தச் சபையிலே நாஙக்ள் ஒவ்வொன்றாகப் புதிய படைப்புகளைச் சொன்னோம; அதற்கு ஈடான = அதைவிடச் சிறந்த முந்தைய படைப்பையும் உடனுக்குடன் (அவர்களின் நினைவுத்திறம் மிகவும் சிறப்பானது) எடுத்துக் காட்டியது நாங்கள் வியந்தோம்; யானும் அதனை ஏற்கிறேன்; எனவேதான் “புதிய” என்பதை ஏற்க இயலாது. முந்தையவர்கள் போட்டப் பாட்டையில் தான் பாடுகின்றோம். அவைகள் நம் கரங்கட்குக் கிடைக்காமல் போனதால், ஒருவேளை இற்றைக் கவிஞர்களின் படைப்புகள் புதியனவாகத் தோன்றலாம்.

      மறைந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் சொன்னச் செய்தியை உங்கட்கும் இத்தளத்தினை வாசிப்போர்க்கும் எத்தி வைத்து விட்டேன் என்பதற்கு உங்களின் கருத்துரையே எனக்கு உதவியது.

      உங்களின் வருகைக்கும் என் எழுத்துத் திறன் வியந்து வாழ்த்தியமைக்கும் நன்றி.

      கற்றுக் கொடுக்கிறேன் என்று தானாகவே ஓர் ஆசான் சொன்னது உடன் “கற்றுக் கொள்கிறேன் ஐயா” என்று எவர் முந்திக் கொள்கின்றாரோ அவரகட்குத் தான் இத்திறன் வாய்க்கப்பெறும். அல்ஹம்துலில்லாஹ்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவ்வண்ணமே, எனக்குக் கிட்டிய வாய்ப்புகளையும் ஆசான்களையும் பற்றிபிடித்துக் கொண்டேன்.

      Delete
  4. பெண்மையைப் போற்றும் நற்க்கவி படைத்த கவித்தீபம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    தாயும் பெண்ணே ! தாரமும் பெண்ணே ! இத்தரணியில் வாழ தாம்பத்யம் முதல் மேம்படுத்த தேவையான அனைத்து உறவுகளையும் தன் கருவுக்குள் வைத்து அள்ளி வழங்குபவள். பெண்ணிவள்.போற்றப்படவேண்டியவள்

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையின் சாரத்தை முழுவதும் உள்வாங்கி அருமையான விளக்கம் தந்த அதிரை மெய்சா என்னும் அன்பு நண்பர்க்கு என் அகம்நிறைவான- சிறப்பான வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!

      Delete
  5. ..................................ஆண்ணிவன்...!...............................

    ஆற்றல் மிகுந்தவன் பொறுமை உள்ளவன் நல்ல
    .....அறிவுகள் கொண்டவனில்
    ஏற்றம் பெற்றிட எங்கும் உள்ளவன் ஏகன்
    .....இவன்தனில் தன்னைகண்டான்
    போற்றும் பண்புகள் யாவும் இவனிடம் தந்தும்
    .....புதுமைகள் பலகண்டான்
    மாற்றம் இவன்எலும் பில்தந் துபெண்மையாய் அழகாய்
    .....மாற்றியே வாழ்வுதந்தான்

    சாண்ணின் அளவினில் எட்டு என்கினும் உள்ளம்
    .....சார்ந்தது அகிலமேதான்
    ஆண்ணின் வழிதனில் அகத்தில் சிறந்தவர் அவரில்
    .....ஆண்டவன் தூதரானோர்
    காண்ணின் இவனிலே அவனின் அவனிலே இவனின்
    .....கருவது இரகசியம்
    வேண்டின் பெண்ணிலும் ஞானம் இருந்திட இவளும்
    .....வென்றநல் ஆண்மகனே

    பிள்ளை பெற்றதும் முதலில் ஆண்மகன் என்றே
    .....பெண்ணவள் பார்ப்பதேனோ ?
    உள்ளம் உறுதியால் உலகை வெல்வது ஆணின்
    .....உழைப்பிலே என்பதாலோ !
    துள்ளும் மனதினில் நல்ல பண்புகள் தந்து
    .....தோற்றமில் தனைக்காண்கவோ !
    தள்ளா வயதினில் தாங்கி பிடித்திட அவனே
    .....தகுமென என்பதாலோ !

    விரிந்த மார்புடன் துணிந்த நடையிலே அவனின்
    .....வீரமில் மனம்கவ்வும்
    சிரித்த முகம்தனில் காட்டும் அன்பினில் கரையும்
    .....சீரிய பென்மையுமே
    புரிந்தே பெண்மையின் குலைந்த அன்பினில் நெகிழ்ந்து
    .....பூரிப்பது ஆண்மைதானே
    தெரிந்த ஆண்ணிவன் கலாம் பெண்ணிவள் தந்த
    .....திறமையில் மகிழ்ந்தேனே

    ReplyDelete
  6. எழுசீர் விருத்தம் எழுதப் பழகி
    முழுதும் செருக்கின்றி முன்னோர் வழியில்
    எழுத மரபை இயல்பாய் விளங்கி
    எழுமுன் உணர்வினை ஏற்று




    விருத்தம் எழுத வருத்தம் இன்றியே
    பொருத்தம் உடையப் புலவனாய் வருவாய்
    எனக்குப் பின்னர் இந்த மரபை
    உனக்கு விட்டபின் உயிர்போம் வேளையில்
    அத்தனை கலையும் அடியேன் உன்னிடம்
    சொத்தென உனக்குச் சொல்லி விட்டு
    நிம்மதி அடைவேன் நீதான் ஏற்பீர்
    இம்மதி முகம்தான் எங்குமே தேடுதே!

    ReplyDelete
    Replies
    1. தந்த இலக்கணத்தில் தான்பழகி கோர்த்தேன்நான்
      எந்த கவியெழுதும் ஏற்றவழி - தந்தாயே
      சிந்தை மகிழ்ந்தும் சிறப்புடனே இன்னும்பல்
      விந்தை கவியெழுது வேன்.




      அகத்தில் உணர்ந்த அழகிய வார்த்தை
      முகத்தில் பார்த்து முகர்ந்தே பூரித்தேன்
      உமக்கு பின்னர் ஒருவனாக என்னை
      சமைக்க எத்தனிட்ட சாமர்த்தியம் நன்றே !
      பின்னர் என்று பிரித்தல் வேண்டாம்
      உன்னுடன் என்றே ஓர்மை வேண்டும்
      சொல்லில் உள்ளது சுரக்கும் வேண்டுதல்
      நல்லிதை உணர்ந்துஉம் நலம்பேண வேண்டுகிறேன்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers