.

Pages

Tuesday, December 3, 2013

தந்தை மகள் பாசம் [ கலிவிருத்தம் ]

...............................தந்தை மகள் பாசம்.........................
....................................(கலிவிருத்தம்)............................
தேன்மகளே  பூமகளே  தேடுகிறேன் உன்னை
நான்மறந்தேன் உன்முகத்தால் நாள்அதனின் துன்பம்
உன்பிறப்பில் என்மயிலே உன்உருவில் நானே
என்னைநானே கண்டுதானே இன்பமுற்றேன் மானே

நான்மயங்கும் நன்மனதின் நாயனவன் பண்பு
வான்அதிலும் கண்டிலனேன் வாஞ்சையான அன்பு
அன்பதனும் பண்பதனும் அங்கமான தங்கம்
உன்வடிவில் நான்பெறுவேன் ஓங்குபுகழ் எங்கும்

தன்வலியும் நானறியேன்  தாங்கிடுவேன் என்றும்
வன்மையான வேலைகளும் வார்திடுவேன் இன்னும்
பொன்மகளே இவ்வுலகில்  போரிடுவேன் உச்சம்
உன்சிரிப்பில் வாழ்ந்திடுதல் ஒன்றுதானே மிச்சம்

பொன்மணியும் சேர்த்திட்டேன் பூமகளே நன்றே
உன்மணவாழ் என்திருநாள் ஒன்றதுவே என்றே  
என்னுயிரே  ஓர்மகவை ஈன்றிடவே வேண்டும்
இன்பமுடன் அம்மகவை நான்முகர சொர்க்கம்

அண்ணலாரின் பொன்மகளாம் அன்னை(ஃ)பாத்தி மாபோல்
பெண்திலகம் யாருமுண்டோ பொன்மயிலே நீசொல்
வேண்டுகிறேன் அவ்வழியில் வென்றிடஉன் வாழ்வும்
கண்மணியே திண்மையுடன் கற்றுடுவீர் நாளும்        

நபிதாஸ்

வாஞ்சை : பரிவுகலந்த அன்பு
திண்மை : உறுதி

32 comments:

 1. அருமை... அருமை...

  தந்தையின் தூய அன்பு வெளிப்படுகிறது...

  ReplyDelete
  Replies
  1. ஆணவன் தனது முதல் பெண் குழந்தையை பெற்றவுடன் தன்னை பெண்ணாக அன்று பார்ப்பவர்களும் உண்டு. அது என்வாழ்வில் ஏற்பட்டது.
   அதனை ஞாபகம் செய்யும் விரதமாக.....
   //
   உன்பிறப்பில் என்மயிலே உன்உருவில் நானே
   என்னைநானே கண்டுதானே இன்பமுற்றேன் மானே
   //

   Delete
 2. அட...@! அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பரே தங்களது .@! உண்மையே.

   கவிஞர் கவிதீபம் அவர்களின் கவிதை படிக்க, உறங்கி கிடந்த கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வு விழித்துக்கொண்டது.

   Delete
 3. நல்ல கவி பாடியுள்ளீர் உங்களின் தந்தைக்கு[கவிதை] மகளின் வாழ்த்துக்கள் எந்தையே என் விந்தையே

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசமான வாழ்த்துக்கள்- மகளின்
   அத்தியாவசியமான சொற்கள்.

   Delete
 4. தமியேனும் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களும் இணைந்த எங்கள் கூட்டணியின் ஐந்தாம் வெளியீடு “வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல்”

  1) அருளைச் சுமந்த ஹாஜிகளே வருக!
  2) பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு
  3) வாழ்க்கை என்னும் பாடம்
  4) எதிர்நீச்சல்
  5) வெற்றி தரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல்
  (இந்தப் பாடலை (கலிவிருத்தம் அல்லது தானனன, தானனன, தானனன, தான என்னும் சந்த்க்குழிப்பில் வண்ணப்பாடல் வாய்ப்பாட்டில்) அமைத்துள்ளேன் என்று நபிதாஸ் அவர்களிடன் சொன்னேன்; உடனேப் பற்றிக்கொண்டு அவராகவே என் பாடல் வெளிவரும் முன்பாகவே (6 ஆம் வெளியீட்டு “ஆட்கொல்லி நோய்க்கு ஆட்கொள்ளாதே” என்ற பாடல் அவசரமாக வெளியிட வேண்டும் எனப்தால், ஐந்தாம் வெளியீடான அப்பாடல் நிறுத்தி வைக்கப்பட்டதும்) பிழையற, இலக்கணத் தூய்மையுடன் “மகள் பாசம்” பற்றிய பாடலை எழுதி என்னிடம் பிழைத்திருத்தம் வேண்டினார் அன்றே என் பார்வைக்கு வந்த இப்பாடலில் குற்றம், பிழைகள் ஏதும் காணவியலா வண்ணம் மிகச் சரியாகவே யாத்துள்ளார் என்பதை அன்றே மின்மடலில் ஞானகுரு நபிதாஸ் அவர்கட்குச் சொன்னேன். எங்கள் ஐந்தாம் வெளியீடுச் சற்றுத் தாமதமாக அடுத்த வாரம் இன்ஷா அல்லாஹ் ஆயத்தமாகிவிடும், எனினும், யான் வ்குத்துக் கொடுத்த அதே வாய்பாட்டில் இந்தப் பாடலும் அமைத்து விட்டதால் என் பாடலைப் பாடிய ஓர் ஆதம திருப்தியை அடைகின்றேன்.

  இனி, இந்தக் கனிமரம் பாக்கனிகளாய் ஈன்றெடுக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை என்ற அளவுக்கு, எந்த வாய்பாட்டில் யான் மரபுப்பாக்களை வனைகின்றேன் எனப்தைத் தானாகவே ஊகித்துக் கொண்டு அதன் இலக்கணம் பிறழாமல் “முழுமை பெற்ற்” பாடலாகவே வனைகின்ற இவர்களின் ஆற்றலைக் கண்டு வியக்கின்றேன். வாழ்க! வளர்க!

  இனி என்னிடமிருந்து அடுத்த இலக்கணம், வாய்பாட்டின் அமைப்பு வெளியாகும் அல்லது அறிவித்தல வரும் என்று மட்டுமே எதிர்பார்த்திருக்கின்ற ஓர் அவாவும் ஆர்வமும் இவர்களிடம் யான் பழகியதில் அறிந்து கொண்டேன். இஃதே யான் பெற்ற இனபம். மாஷா அல்லாஹ். இப்படிப்பட்ட - செருக்கில்லா மாணவராகவும், தனது “அறிவுத்தேன்” பாடத்தில் ஞான குருவாகவும் தமியேனுக்கு ஒரு சேரக் கிடைத்ததும் யான் பெற்ற பேறென்பேன். அல்ஹம்துலில்லாஹ்!

  ReplyDelete
  Replies
  1. ஆசானின் பாராட்டை பெற்ற நபிதாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்...

   Delete
  2. ஆக மொத்தத்தில் பாராட்டுக்கள் அதிரை நியுஸ் சேக்கனா M. நிஜாம் தங்களுக்கே முழுமையும் சேரும் என்பதில் நிறைவைத்தவிர வேறுமுண்டோ !

   தங்கள் வலைத்தளம் இன்றேல் இப்பொழுது மரபு பாக்கள் எழுத தூண்டுதல் இல்லாமல் போகிருக்கும்.

   உங்கள் வலைதளத்தில் மாட்டிய மீன்கள் நாங்கள்.

   Delete
  3. முகம் காணாமல் முழுமனத்தையும் கொள்ளையடித்து விட்டார் என் யாப்பின் இலக்கணத்திற்கு மாணவராகவும், ஞானத் தேடலுக்கு ஆசானாகவும் விளங்கும் நபிதாஸ் அவர்கள் என்பதால், அவர் முகம் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன்; இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் தாயகம் வரும் வேளையில், நிர்வாகி , தம்பி நிஜாம் அவர்கள் அன்பு நபிதாஸ் என்னும் கவிமுகத்தை நேரில் அறிமுகம் செய்து வைப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.

   Delete
  4. கவிஞரின் வார்த்தைகள்.......

   பிழையற, இலக்கணத் தூய்மையுடன் “மகள் பாசம்” பற்றிய பாடலை எழுதி என்னிடம் பிழைத்திருத்தம் வேண்டினார் அன்றே என் பார்வைக்கு வந்த இப்பாடலில் குற்றம், பிழைகள் ஏதும் காணவியலா வண்ணம் மிகச் சரியாகவே யாத்துள்ளார் ..........

   என்பது கவிதை வாசம் பலர் நுகர காரணமாகும்.

   கவிதீபத்தின் வெளிச்சத்தில் எங்கள் கவிதைகள்.

   Delete
  5. உண்மைதான், சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் என்பது ஓர் இலக்கியத் தடாகம்; இங்கு நாம் இளைப்பாறும் வேளையில் இலக்கியத்தாகம் தீர்த்துக் கொண்டும், கற்றுக் கொண்டும் வருகின்றோம். ஒவ்வொரு படைப்பாளிகளும், பதிவர்களும், பங்களிப்பாளர்களும் தனித்தனி ஆற்றலை அவரவர்ப் பெற்ற ஆற்றலில் வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் அடியேன் பற்றிப் பிடித்துள்ள மரபுப்பாவை நீங்கள் பற்றிப் பிடித்தீர்கள்; மேலும், ஆசான் - மாணவர் உறவை வெளிப்படுத்தவும் தயங்காதவர்கள் நீஙக்ள்;எங்கட்கெல்லாம் வாய்க்காத ஓர் அறிவுத்தேன் என்னும் ஞானத்தேடலுக்கு ஆசானாக இருந்து கொண்டே, அடியேனை ஆசானாகக் கருதி (இவரிடம் என்ன நாம் கேட்பது என்றல்லாம் கர்வம் கிஞ்சிற்றும் இல்லாமல்) மஹானுக்குரிய தகுதி படைத்த நீங்கள், மாணவர் என்ற வகைக்கும் இறங்கி வந்து இலக்கணம் கற்கின்றீர்கள் என்பதை ஒவ்வொரு மூச்சிலும் எண்ணி எண்ணி வியக்கின்றேன். யான் இதுவரைப் பார்த்தவர்களில்- பழகியவர்களில் நீங்கள் ஒரு தனி ரகம்; உங்களுடன் பழகுவதில் ஒரு தனி ஆதம சுகம். அதனாற்றான், என் கலைகளை - வித்தைகளை உங்கட்கே சமர்ப்பிக்க உள்ளேன். இன்ஷா அல்லாஹ்!

   Delete
 5. நல்ல கவி வடித்தீர்கள் ...
  இயற்கையாகவே மகள் மீது தந்தை காட்டும் அன்பு அதிகம் தான் ..இது தந்தையின் தாலாட்டு

  ReplyDelete
  Replies
  1. உண்மை. உண்மைதான்.

   தந்தையின் தாலாட்டு - என்று
   தகுதியான பாராட்டு.

   இயற்கையையொட்டி எழுதுவதில் மனங்கள் விரும்பும் என்ற உண்மையைப் பொதிந்த வார்த்தைகளைத் தந்தீர்கள். நன்றி !.

   Delete
 6. நல்ல கவி வடித்தீர்கள் ...
  இயற்கையாகவே மகள் மீது தந்தை காட்டும் அன்பு அதிகம் தான் ..இது தந்தையின் தாலாட்டு

  ReplyDelete
  Replies
  1. ஒரு கருத்து இருமுறை பதியப்பட, சார்ந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது, விரும்பப்பட்டது என்பது மகிழ்வைத் தரும்தான். நன்றி !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 7. தந்தை மகள் பாசம் மிக அருமையான வரிகளில் சொல்லிருப்பது அருமை வாழ்த்துக்கள் நபிதாஸ் அவர்களே.

  ReplyDelete
  Replies
  1. உச்சங்களை மிச்சம் இல்லாமல் சொல்ல "அருமை" என்ற சொல் உபயோகப் படுத்தப்பட் டுள்ளீர்கள். நன்றி, அறிஞர் ஹபீப் அவர்களே !

   Delete
 8. வணக்கம்
  பாச உணர்வை ஊட்டும் கவிதை அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்கள்
   நேச உணைவை காட்டும் வார்த்தைகள் அருமை.
   நன்றி !

   அன்புடன்
   நபிதாஸ்.

   Delete
 9. எனக்குத் தெரிந்து தந்தை மகள் பாசத்தில் இதுவரை கவிதை யாரும் வடித்ததில்லை.என்று நினைக்கிறேன்.நானும் எதிலும் வாசித்ததில்லை. தாங்களின் வித்தியாசமான சிந்தனைக்கும் அதில் சிந்தியுள்ள பாச உணர்வுள்ள ஆனந்தக் கண்ணீர் வரும் அற்ப்புத வரிகளுக்கும் மிக நிறைவான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உள்ளத்தால் எழுதும் வார்த்தைகள். அதில் தேடலைப் பற்றி உங்கள் எழுத்துக்கள்.

   எதையும் ஆழச் சிந்தித்து எழுதும் உங்கள் சிந்தனை வளம் உங்கள் கடின உழைப்பின் பலன். அதனால் சிந்தனைகள் சீறிக்கொண்டே வரும். உள்ளீடுகள் வாசம் அதில் மணக்கும். அவ்வாறான உங்கள் வாசனையில் என்னை ஆழ்த்தி விடுகிறீர்கள். உங்கள் ஆனந்தத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன். நன்றி !

   Delete
 10. \\கவிதீபத்தின் வெளிச்சத்தில் எங்கள் கவிதைகள்.\\

  உண்மையிலும் உண்மை என்று இப்பொழுது உணர்கின்றேன். அதனால் இத்தனை நாட்களாய் ஓர் இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருந்தேன். அத்னை இன்று இதோ சொல்லவைத்து விட்டன உங்களின் மேற்காணும் வரிகள்.

  அகில உலகக் கவிஞர்கள் மட்டத்திலான கவிதைப்போட்டியில் முதற்பரிசை வென்றதற்கு (என்கவிதை : அம்மா என்னும் அன்பே நேசி மற்றும் “புகழ்” ஆகிய இரு கவிதைகள்) உண்மையில் முதற்பரிசுக்குரிய “கவியருவி” என்ற பட்டம் தான் எனக்குத் தெரிவாகியிருந்து எனக்கு அதன்படி மின்மடலில் அறிவிப்பும் வந்தது; ஆனால், எனக்குச் சான்றிதழாக அனுப்பியதில் சிறப்புக் கவிதைக்கான “கவித்தீபம்” என்னும் பட்டம் என்று குறிப்பிட்டிருந்தது; அந்தத் தட்டச்சுப்பிழையைக் கண்டு உடன் பதறிப்போய் எனக்கு ஓர் அற்விப்பைச் சொன்னார்கள்,” தவறுதலாகத் தட்டச்சுப்பிழை ஏற்பட்டு விட்டது; உடன் உங்கட்கு வழங்கிய சான்றிதழ்க்கு மாற்றி “கவியருவி” என்று சரியாகத் தட்டச்சுச் செய்து அனுப்புகின்றோம்” என்றனர். நான் மறுத்துவிட்டேன். “நான் பட்டத்திற்காக அலைபவன் அல்லன்’ ஆயினும் நீங்கள் மனம்விரும்பி அழைக்க இப்பட்டம் உங்களால் எனக்கு ஓர் அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்கிறேன்” என்று மறுமொழி கொடுத்து விட்டு “க்வித்தீபம்” என்பதை அன்புடன் ஏற்றுக் கொண்டேன்; இப்பொழுது உங்களின் வரிகள் அதை உண்மைப் படுத்துகின்றன. ஆம், என் க்விதைகள் ஒரு தீபமன்றோ; அதனால் எத்தனைத் தீபங்கள் ஏற்ற முடியும்; எத்தனை பேர்க்கு வெளிச்சம் கிடைக்கும் என்பதை உள்ளடக்கியதாகவே ஏற்கின்றேன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே; அல்ஹம்துலில்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. அங்கீகாரங்கள் மனிதன் மூலம் அவன்தான் தருகிறான். அதில் ஆயிரம் உண்மைகள் இருக்கும். அவனே நன்கு அறிவான்.

   எங்கள் கவிதீபத்தில் தெரிவது கவியருவி தான்.

   Delete
  2. அன்பின் நபிதாஸ்,

   எங்கள் அலுவலகத்தில் அண்மையில் உண்டாகியுள்ள பெரும் பிரச்சினையின் காரணீயமாக என் சிந்தனை எல்லாம் என் எதிர்காலத்தைப் பற்றியதான ஒரு கவலையில் ஆழ்ந்துள்ளேன்; அதனால், இந்த வாரம் கவிதை எழுத இய்லாமற் போய்விட்டது. எங்களின் ஐந்தாம் வெளியீடு இதே கலிவிருத்தம் வாய்பாட்டில் யான் யாத்தது நம் பாட்கர்க்கும் பணிநெருக்கம் காரணீயமாக இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை தான் வெளிவரும். அதனால், இன்று எங்கள் யாப்பு வகுப்பில் நடத்தப்பட்ட இரு வண்ணப்பாடல்களின் வாய்பாடு (சந்தக்குழிப்பு) எமக்குக் கற்பிக்கப்பட்டும் யான் இன்னும் எங்கள் வகுப்புக்கும் “வீட்டுப்பாடம் “ ஆக கவிதையும் யாத்திடவில்லை; அதனால் உங்கட்கும் அந்த வாய்பாட்டை அறிவிக்கவில்லை. இன்னும் என் மனநிலையில் ஒரு தெளிவு வரும் வரையில் கவிதைகள் வனைவதில் தாமதம் ஏற்படலாம். அதனால், கடைசியாக யாத்து முகநூலில் பதிவு செய்த “அய்மான் (அபுதபி) சங்க பூஙகாச் சந்திப்பு” அன்று யான் இயற்றிப் பாடிய வாழ்த்துப்பா மட்டும் இன்னும் இத்தளத்தில் பதிவாகலாம், இன்ஷா அல்லாஹ் தம்பி நிஜாம் அவர்கள் விரும்பினால், என் மனம் தெளிவாகி ஒரு தீர்க்கமான- திடமான எண்ணத்துடன் மீண்டு வந்து மீண்டும் உங்கட்குப் பாடம் நடத்தவும் ஈண்டுக் கவிதைகள் பகிரவும் இறைவனிடம் கையேந்துங்கள்.

   Delete
 11. உங்கள் அலுவலக பிரச்சினையை எல்லாம் வல்ல நாயன் தீர்த்துவைக்க பிரார்த்திக்கின்றோம்.

  ReplyDelete
 12. பதிவுக்கு நன்றி.

  சகோ நபி தாஸ் அவர்களின் ஒவ்வொரு ஆக்கமும் அருமை, தந்தை மகள் பாசம். மிகவும் அருமை.

  இன்று மகள் மீது பாசமுள்ள தந்தைகள் எத்தனை சதவிகிதம்? அன்று உள்ளதை விட இன்று குறைந்துள்ளது என்று நான் கருதுகின்றேன்

  உங்கள் கருத்து என்னவோ.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 13. அதிகமாக எந்திரங்களோடு பழகுகின்றோம். எதனோடு நாம் அதிகமாக தொடர்பு வைக்கின்றோமோ அதன் குணம் நம்மில் வெளிப்படும். (அதனைத் தந்திரமாகப் பயன் படுத்துவோரைத் தவிர்த்து.) அதானாலோ மனிதனையும் எந்திரமாக பார்க்க, அதாவது தந்தை மகளைப் பார்க்க, மகள் தந்தையைப் பார்க்க சில மனித பாசங்கள் தாங்கள் குறிப்பிட்டதைப்போல் ஆகி இருக்கலாமோ....

  எழுதப்படுபவைகள்(ஆக்கங்கள்) அனுபவ உணர்வுகள்.

  தங்களின் இதுபோன்ற கேள்விகள் இன்பம் தருகின்றது.

  தற்போது நடைமுறையில் "அறிவுத்தேன்" ஒரு கேள்வியின் பதிலாகத்தான் தொடங்கி போய்க்கொண்டிருக்கின்றது.

  நன்றி !

  ReplyDelete
 14. கவிக்குரல் : முகம் காணாமல் முழுமனத்தையும் கொள்ளையடித்து விட்டார்.

  அடியேன் : அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும் என்பார்.
  அகத்திலே அனைத்தும் அடங்கும்.
  அகத்தையே கொள்ளையடித்து விட்டீர்களே ! ?

  ReplyDelete
 15. எக்ஸலண்ட்... நெகிழ்ச்சியான வார்த்தைகள்..

  ReplyDelete
 16. தங்களுடைய குரல் வளமே சூப்பர் எக்ஸலன்ட். தினமும் அம்மா பாடல் கேட்க தூண்டுகிறது.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers