.

Pages

Tuesday, January 21, 2014

எது நல்வாழ்வு !?

அன்பெனும் வன்வலையில் ஆட்கொண்ட மாந்தரும்
தன்னுடைச் சித்தம் தவிர்கின்றார் - நன்மைகள்
உண்டெனத் தன்னை உகந்ததாய் மாற்றியுமே
கொண்டதில் சிந்தனைக் கொள்.

கொள்கை அதனிலே கோணல்கள் கண்டாலும்
உள்ளம் அசையாதே உட்படுதல் - பள்ளமெனப்
பாய்ந்தே உலகமெனப் பார்க்கும் கிணற்றினுள்ளே
வீழ்ந்தத் தவளை விதி.

விதிமுறைகள் எல்லாமே வித்தகர் ஆக்கம்
மதித்திடனும் நல்மனதில் மாந்தர் - சதிகாரர்
சூழ்ச்சிகளில் வீழ்ந்திடாதே சுத்தசுயச் சிந்தனைகள்
சூழ்ந்திட்டே வாழச் சுகம்

சுகக்கேடு உண்டாகும் சுத்தம் தவிர்க்க
அகக்கேடு உண்டாகும் ஆங்கே - இகவாழ்வை
சுகமாக வாழ்ந்திடச் சூழ்ச்சிகள் கொண்டே
சகமனிதன் சாகச் சரண்.

சரணமாகி சர்வனிடம் சம்பூர்ணம் கொள்ள
மரணம்தான் ஆகிவிடும் மாயை - கரணமது
போட்டாலும் மாயோன் புகலிடமே நல்இலக்காய்
ஆட்கொள்ள வாழ்தல்தான் அன்பு.

நபிதாஸ்

12 comments:

  1. அன்பே அனைத்தும்...

    சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. சர்வன் என்ற நித்தியன் ஏகன் இறைவனை பரிபூரணமாக நேசிப்பதே அன்பு. அவ்வன்பில் மாயைகள் மாண்டுவிடும். அதைவிடுத்து சில சதிகாரர்களின் அன்பு பிடியில் சிக்கி, தன் வாழ்வு சீரழிந்து போகும் வண்ணம் தன் சிந்தனையையும், வாழ்வியல் விதிமுறைகள் மீறும்படி வாழ்தலும், சகமனிதன் உணர்வுகள் மிக ஆழமாக புண்படுத்தும் விதமான அவ்வாறு சொற்ப சுய இன்பம் தரும் வாழும் முறையான அந்த கண்மூடித்தனமான தவறானோர் மிது கொண்ட அன்பு, உன்னை நாசம் செய்துவிட காரனமாகாதே, என்ற பொருளில் வனைந்த அந்தாதி வெண்பாவிற்கு வாழ்த்திட்ட தங்களுக்கு நன்றி.

      Delete
  2. விதிமுறைகள் எல்லாமே வித்தகர் ஆக்கம்//////

    உலக சட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுபாடும் காலத்திற்கு காலம் வேறுபாடும் இறைச்சட்டம் ஒன்றே என்றென்றும் ஒன்றே

    ReplyDelete
    Replies
    1. ஆம் ! எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த ஏகன் அவனின் இறைச்சட்டம் ஒன்றே, என்றும் மாறாத, எங்கும் மாறாத சட்டம். அதனையும் மீறும்படி அன்பில் கட்டுண்டு, மீறும் வழி நடப்போர் வழி செல்லாதே, என்ற பொருளை எடுத்துக்காட்டிய உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.

      Delete
  3. அன்பால் அரவணைப்போம்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நல்வழி நிறைந்த ஏகன் வழி மீது தீராத அன்பு கொண்டு, அவன் காட்டும் வழி சென்று அனைவரையும் அவ்வன்பால் அரவணைப்போம், என்று கருத்துக்களை இருவரி வெண்பா கவிதை வரிகளில் கருத்திட்ட தங்களுக்கு நன்றி.

      Delete
  4. தாவிப்பிடித்த தரமானவரிகள்

    பாவியெனச் சொல்லி
    நோவியழும் மனிதனுக்கு
    நோகாமல் தந்திட்ட
    வரிச்சிறப்பு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //பாவியெனச் சொல்லி
      நோவியழும் மனிதனுக்கு //

      ஆம் ! அந்த இழிநிலைக்கு போகாத வண்ணம் அடுத்தவர் சொல்லிலும் தன் சுய சிந்தனையச் செலுத்தி உண்மைகளை உணர்ந்து; கண்டு வாழா வேண்டும் என்ற கருத்தை எடுத்துக்காட்டிய தங்களுக்கே வாழ்த்துக்கள் பல.

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    எது நல்வாழ்வு?
    என்று கேட்டு அருமையாக தொகுத்த நீங்கள் வடித்த கவிதை மிகரும் அருமை.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அருமை வாழ்த்துக்கு; பாராட்டிற்கு நன்றி.

      Delete
  6. தொடங்கிய முதல் சீரில் இறுதி வெண்பாவின் இறுதிச் சீரில் முடியும் வண்ணமும், ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றுச்சிரின் முதல் சொல்லே அடுத்த வெண்பாவின் முதல் சொல்லாய் அமைத்தும் “ஒரு பா ஒரு ப்ஃது” என்னும் அடிப்படையில் அந்தாதி வெண்பாவை அழகாய் வனைந்த என் அன்பிற்கும் கற்றலில் ஆர்வத்திற்கும் உரிய மாணவர் நபிதாஸ் அவர்கட்கு நன்றி; யான் பேற்ற இன்பம் உன்றன் கற்றலில் காண்கின்றேன்.

    பண்பால் சிறந்து படிப்பால் உயர்ந்ததால்
    வெண்பா எழுதிட வென்றுவிட்டாய்- கண்போல்
    இலக்கணம் காத்துநீ இன்னும் கனிவாய்த்
    துலங்கிட அல்லாஹ் துணை.

    குறிப்பு:
    கவிதைப் போட்டிக்கான இறுதிச் சுற்றுத் தகுதியில் உங்களின் படைப்பு “வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு” பெற்றுக் கொண்டு அந்த இறுதிச் சுற்றின் தேர்வை நடத்தித் திருத்தி முதற்பரிசிலுக்குரிய படைப்பைத் தெரிவு செய்யும் என் ஆசான் அவர்களிடம் ஒப்படித்துள்ளேன்.

    குடியரசு நாள் (26-01-14) அன்று முதற்பரிசுக்குரியவரை அறிவிப்பார்கள், துபாய்த் தமிழர் சங்கமம் நிர்வாகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ! கவிக்குயில் அவர்களே !
      தாங்கள் போன்றோர் தான் அந்தாதிகளை எடுத்துக்காட்டமுடியும். அவ்வாறு காட்டியமைக்கு நண்றிகள் பல.

      அன்பெனும்.....கொள்.
      கொள்கை...........விதி.
      விதி.......................சுகம்.
      சுகக்கேடு.............சரண்.
      சரண......................அன்பு.
      அன்பு......................அன்பெனும்....

      மற்றும், இதுபோன்ற கவிதைப் போட்டியில் கலந்துக் கொண்டது இது முதல்தடவை என்பதை யாவருமே அறிய முடியும். காரணம் மரபுகள் மனதில் முறையாக பதிந்தது மூன்று மாத முதற்கொண்டே. எனவே பாவலர்கள் மத்தியில் என் பாவும் பயணம் செய்வது இறைவன் அளித்த வெகுமதியே, என்று கொள்கிறேன்.

      நன்றி.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers