.

Pages

Friday, January 24, 2014

நபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ]

'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் கவிதைக்கு முதன் முதலாக குரல் கொடுத்துள்ளார் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் 'புதுசுரபி' ரஃபீக் சுலைமான் அவர்கள்


சத்திய போதனை நித்தமும்  கூறவே
புத்தியைத் தீட்டினர் உத்தமர்த் தோழரே
சுத்தமாய் மாறினர் மொத்தமும் மார்க்கமாய்
எத்தனை சோதனை அத்தனை தாங்கினர்!

அண்ணலின் வாழ்வினை எண்ணிலாத் தோழரும்
கண்ணென  போற்றினர் மண்ணக வாழ்விலே
விண்ணகச் சோபனம் எண்ணியே வாழ்ந்தனர்
புண்ணியம் சேர்த்தனர் கண்ணியம் காத்தனர்!

இன்னலும் நோக்கிடாத் தன்னலம் பார்த்திடாச்
சொன்னதைச் செய்தவர் சொன்னதைச் செய்தனர்
நன்னபிக் கூறிய நன்னெறி மீதினில்
கன்னலாய் ஈர்த்திடத் தன்னுயிர் ஈந்தனர்!

வெம்மையாம் தீயினில் நம்மையும் வீழ்த்திடாச்
செம்மையாம் மார்க்கமும் செம்மலாம் தூதரும்
நம்மிடம் சேர்த்தனர் இம்மையின் வாழ்விலும்
நிம்மதி கூடிட எம்மிடம் தந்தனர்!

இற்றைய வாழ்வினில் வெற்றியை ஈட்டிடக்
குற்றமே  செய்திடா நற்றவப் பாதையில்
பெற்றிடு நேர்வழி; கற்றிடு மார்க்கமும்
உற்றவர் தோழரைப் பற்றியே சென்றிடு

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

'புதுசுரபி' 
ரஃபீக் சுலைமான்

17 comments:

 1. பதிவுக்கு நன்றி.
  தகவலுக்கும் நன்றி.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் மச்சான் அவர்களின் கருத்துப் பதிவுக்கு நன்றி

   Delete
 2. சிறந்த வரிகளுக்கு அழகிய குரல் வளம்

  பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எதிர்பாராத விதமாக அதிரைப் பாடகர் இளம்முரசு ஜஃபருல்லாஹ் அவர்களின் தொண்டையில் வலிஏற்பட்டிருந்து அதற்கான சிகிச்சையில் அவர்களூம் இருந்து விட்ட படியால் அவர்களும் இந்த வாரம் பாட இயலாமற் போனது; அதனால், திடீரென்று தாமாகவே இந்தப் புதுச்சுரபி ரஃபீக் சுலைமான என்னும் அன்புச் சகோதரர் அவர்கள் என்பாலும் என் கவிதைகளின் பாலும் மிக்க மதிப்புடன் உள்ளவராக தானே முன்வந்து இந்த வாரம் பாடலை அவர்களே பாடுவதாக ஒத்துக் கொண்டதால் யாம் இம்முயற்சியில் இறங்கினோம்; அவர்களும் தங்களுடைய பணிநெருக்கத்தினூடே குறிப்பட்ட காலத்தில் ஒலிப்பேழையில் பதிவு செய்து அனுப்பினார்கள்; அவரகட்கும், இங்குப் ப்திவு செய்த உங்கட்கும் பணிவன்பான நன்றிகள்.

   Delete
 3. கவியன்பன் காக்காவின் வழக்கமான வரிகளில் நபி(ஸல்) அவர்களின் சிறப்புக்கள்,.. கந்தர்வக் குரலில்.. இனிமை சேர்க்கிறது.

  ReplyDelete
  Replies
  1. என் அன்பின் பாடகர், சகோதரர் இளம்முரசு ஜஃபருல்லாஹ் சிகிச்சையினின்றும் மீண்டு வந்து மீண்டும் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் எமக்கு பாடல் விருந்தளிப்பார்கள் என்ற நல்லறிவுப்புடன் , உங்களின் வாழ்த்துரைக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. தங்களது பாடலை படிக்க என்னுள்......

  இத்தரை பூமியும் எத்தனை காலமாம்
  சுத்தமாய் தோன்றிடா நித்தியம் கேளுமே
  சத்தியம் தோற்றமும் வித்திட நாடியே
  உத்தமர் நாதரின் முத்திரைத் தேடியே.

  ReplyDelete
  Replies
  1. என் அடியொற்றி நீங்களும் மரபின் வழி நின்று அழகு தமிழ்ப்பாக்கள் தொடர்ந்து பயின்றும், முயற்சித்தும் உலகளாவிய போட்டியில் முதல் பத்துக் கவிஞர்களில் ஒருவராகவும் ஆகி விட்டீர்கள்; மாஷா அல்லாஹ். எனினும், இறுதிப் போட்டியின் முடிவில் (அப்போட்டிக் கவிதைகளைத் திருத்தம் செய்து ஆய்ந்துத் தன் புலமையின் வழிநின்றுத் தெரிவு செய்து தந்த என் ஆசான் கவிவேழம், தமிழ்மாமணி, இலதையார் என்னும் இராமஸ்வாமி சுப்பையர் (நியூஜெர்சி) அவர்களின் தேர்வின்படி, இலண்டன் வாழ் - ஈழத்துக் கவிஞர் கிரிகாசன் அவர்கள் முதற்பரிசிலை வென்று விட்ட அறிவிப்பைத் தாங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கின்றேன்:

   கவிதைப் போட்டி இறுதிச் சுற்று முடிவு

   நாள் : 2 5 . 0 1 . 2 0 1 4

   போட்டியின் இறுதிச் சுற்றில் பங்குபெற்ற கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள் அனைவரும் "வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு" என்ற தலைப்பில் மிக அருமையாக கவிதைகள் வடித்துத் தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள் . இருந்தாலும் போட்டியின் விதிமுறையின் படி ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டியி ருந்ததால் அமைப்பின் நடுவர்கள் குழு மிக சிரத்தையெடுத்து இறுதியில் கவிஞர் கிரிகாசன் அவர்களின் கவிதையைச் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுத்தனர் . பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும் . அடுத்தப் போட்டியின் தேதியும் பரிசுத் தொகையும் விரைவில் எதிர் பாருங்கள்.

   துபாய்த் தமிழர் சங்கமம் நடத்திய உலகளாவியக் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்றில் வென்று முதற்பரிசிலைப் பெறும் கவிஞர் கிரிகாசன் என்னும் கனகலிங்கம் (இலண்டன்) அவர்கட்கு “இறையருட் கவிச்செல்வம்” என்னும் பட்டத்தை உளம்நிறைவுடன் வழங்குகின்றோம்.

   கவியன்பன் கலாம்
   கலை இலக்கிய பிரிவு செயலாளர்
   துபாய்த் தமிழர் சங்கமம்.


   Delete
  2. தன்னன தானன தன்னன தானன என்னும் வண்ண மெட்டில்
   அல்லது
   கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் என்னும் வாய்பாட்டில் “கலிவிருத்தம்” அமைத்தும் இயற்றினேன்.

   பாடகர்களின் பாட்லுக்கும் வாயசைவுகட்கும் இந்த வாய்பாடும், அசைகளும், சீர்களும் ஒத்துவரும் என்பதே பாடல் எழுதுவோரின் கவனமும்; பாடுவோரின் இலகுவும் ஆகும்.

   அதனாற்றான், யாம் மரபின் வழி நின்றோம்; இவ்வண்ணம் பாடலால் உங்களின் மனங்களை வென்றோம்; மாஷா அல்லாஹ்; அலஹ்ம்துலில்லாஹ்.

   கைத்தட்டல்களுக்கும், கவியரங்களின் அதிர்வுகட்கும் ஏற்கும் வண்ணம் புதுக்கவிதைகளும் புனைவோம்.ஆயினும் இவ்வண்ணம் பாடகரால் இலகுவாகப் பாட இயலாது என்பதே அப்பாடகர்கள் ஒத்துக் கொண்ட பேருண்மையாகும்.

   சந்தமும், சிந்தும் எங்களின் சொந்தமாக்கிச் சொத்தாக்கிக் கொள்ள வந்த எம் பாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தையவன் போற்றிய வண்ணமே பாடல்களை அமைக்கின்றோம்; அவன் காட்டியவாறே - அவனே எழுதி- பெயரிட்ட “வசனகவி” “உரைவீச்சு” என்னும் புதுக்கவிதைகளும் புனைவோம்; பாடல்களாக அன்று; ஆயினும் கவியரங்கின் கைதட்டல்கட்காக மட்டும்!

   தாங்கட்கும் யான் கற்பிக்கும் வழிநின்று வண்ணப்பாடல் அல்லது யாப்பிலக்கண வாய்பாட்டில் பாக்களாய் வனையுங்கள்; அவைகள் இவ்விரு பாடகர்களின் வாய்வழியே பாடல்களாய் உலகமெலாம் ஒலிக்கும்; யான் உறுதியளிக்கின்றேன்., இன்ஷா அல்லாஹ். கவனமிருக்கட்டும்: பாடகர்கட்காக வனையும் பொழுது மேற்கூறிய வண்ணப்பாடல் அல்லது யாப்பிலக்கணப் பாக்களாய் வனைக. பொதுவாக உணர்வுகளை உசுப்பிடும் விதைகளாய் ஊன்றிட புதுக்கவிதை, ஹைக்கூ (குறும்பா- துளிப்பா) வனைக.

   வாழ்க வளமுடன்
   சூழ்க பலமுடன்

   இன்ஷா அல்லாஹ் ஆமீன்

   Delete
 6. இந்த ஜாடிக்கு எந்த மூடியும் சேரும் கவியன்பருக்கும் புதியவரவான புது சுரபிக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தன்னன தானன தன்னன தானன என்னும் வண்ண மெட்டில்
   அல்லது
   கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் என்னும் வாய்பாட்டில் “கலிவிருத்தம்” அமைத்தும் இயற்றினேன்.

   பாடகர்களின் பாட்லுக்கும் வாயசைவுகட்கும் இந்த வாய்பாடும், அசைகளும், சீர்களும் ஒத்துவரும் என்பதே பாடல் எழுதுவோரின் கவனமும்; பாடுவோரின் இலகுவும் ஆகும்.

   அதனாற்றான், யாம் மரபின் வழி நின்றோம்; இவ்வண்ணம் பாடலால் உங்களின் மனங்களை வென்றோம்; மாஷா அல்லாஹ்; அலஹ்ம்துலில்லாஹ்.

   கைத்தட்டல்களுக்கும், கவியரங்களின் அதிர்வுகட்கும் ஏற்கும் வண்ணம் புதுக்கவிதைகளும் புனைவோம்.ஆயினும் இவ்வண்ணம் பாடகரால் இலகுவாகப் பாட இயலாது என்பதே அப்பாடகர்கள் ஒத்துக் கொண்ட பேருண்மையாகும்.

   சந்தமும், சிந்தும் எங்களின் சொந்தமாக்கிச் சொத்தாக்கிக் கொள்ள வந்த எம் பாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தையவன் போற்றிய வண்ணமே பாடல்களை அமைக்கின்றோம்; அவன் காட்டியவாறே - அவனே எழுதி- பெயரிட்ட “வசனகவி” “உரைவீச்சு” என்னும் புதுக்கவிதைகளும் புனைவோம்; பாடல்களாக அன்று; ஆயினும் கவியரங்கின் கைதட்டல்கட்காக மட்டும்!
   இப்பொழுது புரிந்திருக்கும் உங்களின் “ஜாடிக்கு ஏற்கும் மூடி” எதுவன்று.

   பாடகர்கட்குத் தேவை பாட்லாசிரியர்; கவியரங்கிற்குத் தேவை கவிஞர்.

   இறையருளால், பாடலாசியரியாய்ப் பரிணாம வளர்ச்சி பெற்ற முன்னாள் கவிஞரும் யாமே!

   எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

   உங்களின் உள்ளம் நிறைந்தளித்த உன்னத வாழ்த்தினுக்கு எங்களின் அன்பான நனறிகள்.

   Delete
 7. இந்த ஜாடிக்கு எந்த மூடியும் சேரும் கவியன்பருக்கும் புதியவரவான புது சுரபிக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. கவித்தீபம் அவர்களின் சிறப்புமிக்க கவி வரிகள். சிறப்பாக குரல் கொடுத்து இனிமைசேர்த்த சகோ.ரஃபீக் சுலைமான் அவர்களுக்கும் மன நிறைவான வாழ்த்துக்கள். தாங்களது கூட்டணி தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. \\தாங்களது கூட்டணி தொடரட்டும்\\

   தயைகூர்ந்து இந்தக் கூட்டணி என்ற வார்த்தைப் பிரயோகத்தை இனிமேல் எழுத வேண்டா என்று மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

   இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் முதல் மீண்டும் தன் தொண்டைப் புண் சிகிச்சை முடிந்து இறைவன் நாடியபடி நம் அதிரைப் பாடகர் இளம்முரசு ஜஃபருல்லாஹ் அவர்கள் பாடுவார்கள் எம் பாடல் வரிகட்குத் தொடர்ந்து. என்வே, இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நோயினால் அவர்களுக்குத் துன்பம தரக்கூடாது என்றே யாம் புதிய்வாரக எம்மிடம் தானே முன்வந்து பாடுவதாக ஒத்துக் கொண்டதால் அப்பொறுப்பை சகோதர புதுச்சுரபி என்னும் ரஃபீக் சுலைமான் அவர்களிடம் ஒப்புவித்தோம். அதனை நம் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். மீண்டும் பாடுவதற்கு ஏற்றவாறு அவர்களின் தொண்டைப் புண் சரியாகி விட்டது ; மாஷா அல்லாஹ்
   இதோ அவர்களின் தனிமடல்:

   Wa alaikku mussalaam

   insha allaah

   I can sing this week

   Jafar hassan
   hassan.jafar@gmail.com


   பொதுவாகக் கூட்டணி என்ற சொல்லில் அரசியலும் உள்குத்தும் அதிகம் நெருடலாகிப் பிளவுகட்கு வழிகோலும் என்பதை யாம் அறிவோம்.

   Delete
  2. அன்புள்ள கவித்தீபம் அவர்களுக்கு என்னைப் பொருத்தமட்டில் உள்குத்தல்,அரசியல் அடுத்தவர்களின் மனதை நோகடிப்பது இவையாவும் எனக்குத் தெரியாது. சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லும் பழக்கம் உள்ளவன் ஒருவருடன் இன்னொருவர் இணைந்து செயல்படுவது அது கூட்டணிதானே.! அந்த நோக்கத்தில் தான் கருத்துப் பதிந்தேன். எதையும் நாம் மனதில் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

   Delete
 9. //சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லும் பழக்கம் உள்ளவன்\\

  தமியேனுக்கும் அந்தக் குணமிருப்பதாற்றான் “பட்” என்று மனத்தினில் பட்டதைக் கேட்பேன்; ஆயினும், இங்குக் குறிப்பிட்டது உள்குத்தல் என்பது உங்களை அல்ல; இந்தக் கூட்டணி உடையுமா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் எம்மிடம் கிடைத்துள்ளது; அவர்கட்குத் தீனி போடும் வண்ணம் “கூட்டணி” என்னும் வார்த்தையைத் தவிர்த்தல் நலம் என்பதே எம கருத்தாகும்; “கூட்டு முயற்சி” என்பதே சரியானச் சொல்லாடல் என்று கருதுகின்றேன்

  என் உளத்தூய்மையை அறிந்தவனே என்னை மன்னிப்பானாக!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers