.

Pages

Friday, January 31, 2014

அறியாமை அகன்றால் !?

அறியாமை ஆளுமையை
..........அகம்மாக ஆக்குகின்றாய்
அறிவான உண்மைகளை
..........அறியாமல் நீக்குகின்றாய்

தெளிவானப் போதனையில்
........... தெளியாமல் ஓடுகின்றாய்
அளித்தார்கள் ஈர்ப்பறிவை
..........அலசாமல் நாடுகின்றாய்

இனிதான ஈனமதோ
..........இதமாக ஈர்த்திடுதோ ?
கனிவான வாழ்வுகளோ
...........கசப்பாக மாறியதோ ?

பலதானப் பாதகமோ
..........பண்பாகிப் போனதுவோ !
நலவான நேர்வழியோ
..........நரகாக மாறிடுதோ !

நடிப்பானத் தீமைகளோ
..........நலமாகித் தோன்றிடுதோ !
துடிப்பானப் பாதைகளோத்
..........துணிவாகி ஈர்கிறதோ !

பெரியோரைப் போற்றுகின்ற
..........பெருவாழ்வு மீறுகின்றாய்
புரியாதப் போதனையைப்
..........புறம்பேசி ஏசுகின்றாய்

மனிதாஉன் மாண்புகளோ
..........மடிந்தாகிப் போகிறதே !
இனிதான வாழ்வுகளோ
...........இடிந்தோடிப் போகிறதே !

தெளிவான நாதரிடம்
..........திறன்யாவும் கேட்டிடுவீர்
ஒளிவான வாழ்வையுமே
.........உயர்ந்தோங்க வாழ்ந்திடுவீர்

தெரியாதச் சேதிகளோ
..........தெளிவாகிப் போயிடுமே !
புரியாத வார்த்தைகளோ
..........புகழ்தேடிப் போற்றிடுமே !

இளம்வாழ்வில் ஏகனையே
..........இதயத்தில் ஏற்றிடுவாய்
வளம்வாழ்வு மான்புகளை
..........வதனத்தில் பூத்திடுவாய்

பணிவானப் போக்குகளைப்
.........பலமாக ஏற்றிடுவாய்
தணிவாகிக் கோபமதைத்
..........தகர்த்தாட்டி நீக்கிடுவாய்

தனக்காக வேண்டுபவைத்
..........தமதோர்க்கும் வேண்டுமென்பாய்
புனர்வாழ்வு காட்டிடுவாய்
..........புவியோரும் போற்றிடுவார்

உலகோரும் போற்றிடவே
.......... உனக்கான வாழ்வுகளை
நலமாக நானிலமே
..........நயம்காண வாழ்ந்திடுவாய் !

குணம்யாவும் கோர்வையிலே
..........குலம்போற்ற ஓங்கிடுவாய்
உணவான யாவையுமே
..........உலகோர்க்கே ஈந்திடுவாய்

உனைஈன்றத் தாய்குலத்தோர்
..........உளம்போற்றி வாழ்த்திடுவார்
உனைவாழ்த்தக் காண்பதிலே
..........உவப்பாகிப் பேர்பெறுவார்

அளித்தோங்கி ஆர்ப்பதிலே
..........அகம்யாவும் வாழ்த்திடுதே
தெளிவாகி வாழ்வதிலே
..........திசையாவும் போற்றிடுதே.

நபிதாஸ்

15 comments:

  1. ஒவ்வொரு வரிகளும் உண்மை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வரிகளையும்
      .....உயர்வுடன் உணர்ந்திட்டே
      அவ்விதம் உண்மையாக
      .....அழகிடும் அறிஞர்நீர்
      இவ்விதம் எழுதிடுதல்
      .....இன்பமாம் படித்திட்டால்
      கவ்விடக் காண்போமே
      .....கற்பவர் நடந்திடலில்.

      Delete
  2. பதிவுக்கு நன்றி.

    நபி தாஸ் அவர்களே, உங்கள் கவிதைக்கு சொல்லவா வேண்டும்.

    அருமை.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. என்கவிதை உங்களுக்கு
      .....இவ்விதமாய் வாழ்த்திடவும்
      அன்பினாலே எழுதுகின்றீர்
      .....அச்சமுடன் பார்க்கின்றேன்
      இன்றிதுபோல் எழுதிடவே
      .....இணையத்தின் சேக்கனாவும்
      உங்களுடை மச்சானின்
      .....உயர்நடையின் கவிகண்டே

      Delete
  3. அறியாமையை போக்கிடும் விதத்தில் வரிகள் அருமை.

    சில சொற்களின் அர்த்தம் புலப்பட வில்லை.

    ///குணம்யாவும் கோர்வையிலே
    ..........குலம்போற்ற ஓங்கிடுவாய்///

    ///அளித்தோங்கி ஆர்ப்பதிலே
    ..........அகம்யாவும் வாழ்த்திடுதே///

    ReplyDelete
    Replies
    1. ///குணம்யாவும் கோர்வையிலே
      ..........குலம்போற்ற ஓங்கிடுவாய்///

      நற்குணங்கள் உன்னிடத்தில்
      .....நலுவிடாது சேர்ந்திட்டே
      உற்றார்கள் உறவினர்கள்
      .....ஒழுக்கமுடன் வாழ்ந்துவரும்
      நற்குலம்நீ போற்றிடவே
      .....நல்லவனாய் வாழ்ந்திடுதல்
      சொற்பதத்தில் தந்திட்டேன்
      .....சொல்வதிலும் காண்பீரே.


      ///அளித்தோங்கி ஆர்ப்பதிலே
      ..........அகம்யாவும் வாழ்த்திடுதே///

      இல்லார்க்கும் வேண்டுவோர்க்கும்
      .....இன்பமுடன் கொடுப்பதிலே
      நல்லிவர்கள் பெற்றதனால்
      .....நம்மினிலே அவர்தனிலே
      சொல்லிடவும் இயலாத
      .....சொக்கிடும்நல் உணர்வுகள்
      அல்லாதே ஆகிடுமா
      .....அன்பருமே அறிந்திடுவீர்

      உள்ளத்தில் ஓரின்பம்
      .....ஓசையில்லா தனியின்பம்
      அள்ளிக்கொள் அவ்விதத்தில்
      .....ஆண்டவனும் நேசிப்பான்
      உள்ளமுமே நிறைந்திட்டே
      .....உவந்திட்டே அனைவருமே
      கள்ளமில்லா மனதினிலே
      .....கவர்ந்திடுவார் வாழ்த்தினிலே.


      இவ்வித கேள்விகள்
      .....இன்பமும் தந்திடும்
      அவ்விதம் என்றுமே
      .....ஆசையில் கேட்கிறேன்.

      Delete
  4. கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் வருகையில்
      .....அகம்நிறை மகிழ்வுகள்
      சொன்னதில் கொள்ளுதல்
      .....சொல்லிடும் நிறைவுகள்
      என்னதான் எழுதிடின்
      .....ஏற்பவர் சொல்லினில்
      பின்னிடும் மனதினில்
      .....பிசகிலா இன்பமே.

      Delete
  5. நபிமீது காதலை நாளும் வளர்த்த
    நபிதாஸும் போட்டியில் நற்கவி தந்து
    இறுதி வரைக்கும் இயற்றியப் பாக்கள்
    உறுதிப் படவே உணர்ந்தோம் புலமையின்
    ஞானமும் கண்டதால் ”ஞானக் கவி”யென்று
    வானமும் வையகமும் வாழ்த்து வழங்கிடக்
    கிட்டும் புகழுக்குக் கிட்டிய நற்சான்றாம்
    பட்ட மிதுவும் பரிசு

    ReplyDelete
    Replies
    1. பரிசுகள் தந்திடுதல் பாவனையத் தூண்டும்
      புரிந்திடும் நன்மக்கள் போற்றித் தருவார்
      இருப்பினும் உண்மை இறையவன் தந்த
      அருள்நிறைக் கொண்டே அகத்திலே ஊறும்
      திறன்மிகு ஆற்றல்தான் தேடினும் காணா
      பிறவியில் நம்மிலே பேறுகள் போலாம்
      மதிதனில் தோன்றிடும் மாற்றம்மும் மாறாப்
      பதியவன் தந்திடும் பரிசு

      Delete
  6. //உங்களுடை மச்சானின்
    .....உயர்நடையின் கவிகண்டே//

    குருவின் நடையென்றிருப்பின் குதூகலம் இன்னும் கூடுமன்றோ?

    ReplyDelete
    Replies
    1. கூடும் குதுகலம் ஆனால்
      .....கொண்ட இலக்கணம் தடுக்கும்
      பாடும் சுதந்திரம் வேண்டும்
      .....பாவின் உணர்வுகள் தடுக்க
      தேடும் உண்மைகள் காலம்
      .....போகின் மாறிடும் அன்றோ
      நாடும் கலைகளே பட்டே
      .....நம்மில் சேர்ந்திடும் நன்கே.

      Delete
  7. வஞ்சித் துறையில் வனைந்தக் கவியிலே
    நெஞ்சத் துறையும் நெகிழ்வு

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. நெகிழ்வில் நனைந்த நெறியிலுமே யாப்பை
    மகிழ்வில் தருகின்ற மாண்பு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers