.

Pages

Tuesday, February 11, 2014

ஆமாம் ஒன்றே !

ஒன்றே தன்னிலே உருவாய் எங்கும்
நன்றே நின்னிதில் நனவாய் தங்கி
இன்றே தன்னிலே இதனைப் பொங்கி
அன்றே இல்லதை அகற்றி ஓங்கே.

ஓங்கி உன்னிலே உணர்வைத் தூண்டி
தாங்கித் தன்னிலே தருவாய் அன்பை
ஏங்கி என்றுமே இருக்காய் உண்மை
வாங்கித் தந்திடும் வழியில் கொண்டே

கொண்டே வாழ்ந்திடக் கொடுக்க இன்பம்
அண்டை வீட்டிலும் அகலும் துன்பம்
உண்ட ஊன்களும் உருசி காட்டும்
கண்டே நம்மிலும் கசியும் அன்பே.

அன்பாய் நிற்பதில் அறிவோம் நன்மை
பொன்னாய் மின்னிடும் புகழும் உன்னில்
ஒன்னாய் கொள்ளுதல் உயர்வும் நின்னில்
சொன்னார் நலமுடன் சுவர்க்கக் கோமான்

கோமான் கொள்கையின் குணத்தைக் கொண்டே
சீமான் வாழ்வினைச் சுயத்தில் காணே
பூமான் தன்னிலே புரிந்தால் நன்றே
ஆமாம் என்பதே அவனே ஒன்றே.

நபிதாஸ்

நேர் நிறை ஒன்றிய ஆசிரிய குறு அந்தாதி

14 comments:

  1. ஒன்றை நன்றாய் சொன்ன விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுதான் என்பதை விளங்கிவிட்டால் அதுவே மிக உயர்வானது.

      Delete
  2. யாப்பின் வழிநின்று யாத்த விருத்தமே
    தோப்பின் வளமாய்த் துளிர்த்து

    ReplyDelete
    Replies
    1. துளிர்த்தே வளருமெம் தோப்பினுள்ளே வாசம்
      அளித்த வருகையே அன்பு.

      Delete
  3. கலிவிருத்தம் அந்தாதி கண்டனன் ஈண்டு
    பொலிவுடன் ஏற்றம் புரிந்து

    ReplyDelete
    Replies
    1. புரிந்ததே நாற்சீர் புனைதல் கலிவிருத்தம்
      தெரிந்ததே நாலின் தெளிவு

      Delete
    2. அடுக்கடுக்காய் யாப்பின் அழகு மரபில்
      தொடுப்பார் இதுவென் துணிபு.

      Delete
    3. \\கலிவிருத்தம்
      தெரிந்ததே \\

      தளைதட்டல், கலித்தளை ஆதலால் குறள் வெண்பாவாகாது; குறட்டாழிசை ஆகக் கொள்ளலாம்.

      Delete
    4. தளைதட்டும் வெண்பா தலைநிமிர தூண்டும்
      வளைந்திட்டே கற்க வகுத்து

      Delete
    5. தலைகுட்டிச் சொல்வேன் தளைதட்டல் காணின்
      நிலையெட்டும் உச்சி நினைத்து

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    உங்களின் கவிதை மிகவும் அருமை.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்தினுக்கு நன்றிகள் பல.

      Delete
  5. யாப்பிலக்கணத்தில் வார்த்துள்ளீர்கள்.ஆகவே புரிவதில் கடினமே.! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வார்த்தைகள் இலகுவானது. ஆனால் கருத்துக்கள் கடினமானது என்பதை அறிவேன். இக்கருத்துக்கள் எப்படி இலகுவாக எழுதிடினும் சுய ஆழ் சிந்தனை அதிகம் கொண்டே ஒன்றின் தத்துவம் புரிய இயலும். ஒவ்வொருவரும் தன்னை, தன்னை படைத்தவனை அறிவது கடமை.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers