.

Pages

Tuesday, May 13, 2014

ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் !

உற்றாரும் எதிரிகளாய் உறவினரும் வலம்வருவர்
பற்றாரும் பண்புகளை பகைமூட்டி வளர்த்திடுவார்
அற்றாரும் அதன்நடுவில் ஆட்சியாரால் கைதாவார்
பெற்றவரும் பதைபதைத்தே பீதியாலே பரிதவிப்பார்

மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி
நல்லுறவு நசிந்திட்டே நல்வாழ்வு சிதறிவிட்டே
நல்வணக்கம் புரிந்தோர்கள் நாசகரால் மாட்டினரே

தூண்டிடுவார் பாவிகளும் துவேசம் வளர்ந்திடவே
வேண்டாதார் உடைத்திட்டார் வேதனைத்தான் மிஞ்சியதே
ஆண்டவனை நம்பிடுவோம் அறிவோடு செயல்புரிவோம்
சீண்டுவாரின் நோக்கங்கள் சீர்குலையச் சிந்திப்போம்

பற்றிடவே ஆட்சியினை பாவிகளும் திட்டமிட்டார்
புற்றீசல் போலவே புகைமூட்ட கிளம்பிவிட்டார்
ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழிஎன்போம்
கற்றவரின் துனையினிலே கயவர்கள் வென்றிடுவோம்

சூழ்ச்சிகளும் சூத்திரமும் சூழ்ந்திட்டே சுற்றினாலும்
வீழ்ச்சிகளே ஏற்படுத்த விவேகமேதான் கொண்டிடனும்
பாழ்பண்ணும் குணங்களுமே பாய்ச்சிட்டப் போதிலுமே
வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும்

கேடுகெட்டார் சூழ்ச்சியினால் கீறிடுவார் வெடித்திடவே
வீடுகளை மனதினிலே வேண்டிட்டே பொறுத்திடணும்
போடுமிந்தக் கருத்துக்கள் பொதுவாக யாவருக்கும்
பாடுமிந்தப் பாவினிலே பகுத்தறிவுப் பார்த்திடுவீர்

நபிதாஸ்

கலிவிருத்தம் காய் காய் காய் காய் வாய்ப்பாடு.

10 comments:

 1. நபிதாஸின் 50 வது ஆக்கம் !

  50 என்ன ? 500,000 ஆக்கங்கள் படைக்க வாழ்த்தி வரவேற்ப்போம் !

  ReplyDelete
  Replies
  1. //
   மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
   சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி//

   எழுதும்போது அன்றைய நிகழ்வை மனவேதனையுடன் அன்றைய இரவில் எழுதப்பட்டது. இன்று 50 ஆக்கமாக வெளிவருகிறது. சமூக அக்கரையில் எழுதுவதெல்லாம் காலம்தாழ்த்தி வருவதிலும் நன்மை இருக்கலாம் என்று நினைக்க வேண்டியுள்ளது.

   Delete
 2. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி. நிகண்டு.காம்

   Delete
 3. வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும் என்பது சிறப்பு...

  பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. முத்துக்களை பிரிப்பதில் வல்லவர் தாங்கள்.
   நன்றி திண்டுக்கல் தனபாலன் வர்களே !

   Delete
 4. நாவினிலே சொல் மணக்க
  நாடிடும் படிக்க உம் படைப்பு
  அமைதிக்கு ஒற்றுமையென
  அனைவருக்கும் உணர்த்திட்ட
  ஆழமான உம் கவிக் கருத்து
  அதைப் படித்து அமைதியுற்றேன்
  ஆச்சரியத்தில் தனை மறந்தேன்.

  அன்னவரின் படைப்புக்கு
  என்னினிய நல் வாழ்த்து

  ReplyDelete
  Replies
  1. சொல்லிலே இனிமை
   சொன்ன விதமும் அருமை
   நல்லவர் உள்ளம்
   நல்லதை என்றுமே உரைக்கும்
   வல்லமை தங்களிடம்
   வாசம் புரிகிறது அறிகிறேன்
   அல்லும் பகலும்
   ஆசையுடன் ஆழமாய் எழுதுகிறீரே.

   Delete
 5. ஒற்றுமை உண்மையான அமைதிக்கு வழி
  சரியாக சொன்னீர்கள் ..ஆனால் சுய நலம் என்ற
  கொடிய நோய் ..மனிதர்கள் மத்தியில் ஒற்றுமையை
  குலைத்து விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வேரோடு
  சாய்த்து சோலையாக இருக்க வேண்டிய பூமி மயான பூமியாய் காட்சி தருகிறது ..நாம் நமது என்ற மனப்பான்மை
  ஒற்றுமையின் தாரக மந்திரம் ..எனது என்பது சுய நலத்தின் மொத்த உருவம் ...
  நாம் என்போம் ..நமது என்போம் வாழ்வில் வெற்றி காண்போம்

  ReplyDelete
  Replies
  1. ஒற்றுமை என்னும் கயிறு இன்று அதில் உள்ள பலப்பிரிகள் ஒவ்வொன்றையும் பற்றிப்பிடித்து ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதுப்போல் காட்சி தருகின்றனர். பிரிகளை விட்டு கயிறின் அனைத்துப் பிரிவும் நாம், நமது என்ற எண்ணம் எப்பொழுது ஏற்படுகிறதோ அன்றே ஒற்றுமை என்னும் கயிறு பற்றி பிடிக்கப்பட்டு வாழ்வில் வெற்றிக் காண்போம். ஆனால் தாங்கள் எழுதியப் பிரகாரம் சோலையாக இருக்க வேண்டிய பூமி மயானப் பூமியாகக் காட்ச்சித் தருகிறது என்பது கண்கூடு வேதனையே !

   நன்றி அதிரை சித்திக் அவர்களே.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers