.

Pages

Monday, September 1, 2014

பதர்

பதர்கள் பல உண்டு
படிப்பினை அதிலுண்டு
நிதர்சன வாழ்வில்
நிதம்நாம் காண்கின்றோம்

நெல்மனியில் பதர்
நீயும்நானும் காண்பது
சொல்லில் பதர்
சொறிகிறோம் நிதம்

செயலில் பதர்
செய்வதே தினம்
இயல்பாய் நாம்மில்
இருக்கும் குணம்

எண்ணத்தில் பதர்
எக்கச்சக்கம் எப்போதும்
உண்ணுவதில் பதர்
உயிரழிக்கும் உரம்

மனிதரில் பதர்
மதியுடன் உணர்
புனிதராய் திகழ
புத்தியை மாற்று

உயிரில்லா நெற்கோலம்
உற்பத்தி ஆகிவிடும்
பயிராக முடியாது
படிப்பினையும் உண்டு

எண்ணத்தின் உயிர்
ஏற்றமிகு நம்பிக்கை
வண்ணமாய் வடித்தே
வாழ்விலே மிளிர்

நம்பிக்கை உயிர்
நன்கே விதைத்தே
தெம்பாக வாழத்
தெரிந்திட நம்பு

உதரிடும் நம்பிக்கை
உண்டாக்கும் பதர்
பதரில்லா எண்ணம்
படைத்திடு  நித்தம்

நம்பிக்கை எண்ணம்
நாடியதை நிகழ்த்தும்
நம்பாதோர் திண்ணம்
நம்மின்பதர் தோற்றம்

நபிதாஸ்

17 comments:

  1. 'பதர்' என்ற சொல்லுக்கு அறிந்தவர்கள் விளக்கம் தரவும்

    ReplyDelete
  2. பதர் என்கிற வார்த்தைக்கு எனக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை
    .
    கவிவரிகளின்படி பார்த்தால் பதர் என்கிற சொல்லுக்கு உபரி,கழிவு, தவிடு என்பதாக பொருள்படுமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. பதர் என்ற சொல்லிற்கு அர்த்த விளக்கம்தான் இக்கவிதை.

    அகராதி விளக்கம்:
    பதர் என்றால் (1) உள்ளீடற்ற நெல். (2) உபயோகமற்ற நபர்.

    அதன்படி:
    மணியில்லா நெல் பதர் என்றால்...
    விளைவு இல்லா செயல் பதர்.
    பயன்தரா எண்ணம் பதர்.

    ReplyDelete
  4. உயிரில்லா நெற்கோலம்
    உற்பத்தி ஆகிவிடும்
    பயிராக முடியாது
    படிப்பினையும் உண்டு//நான்கே வரிகளில்
    நல்ல ..கவி கண்டேன்

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் சிந்தனையை செலுத்தி
      முக்கிய கரு, அதனை இரசித்த தங்களுக்கு நன்றிகள்.

      Delete
  5. பதிவுக்கு நன்றி.‎
    கவிதைக்கு நன்றி.‎

    பதர்.‎
    அருமையான தலைப்பு, அவரவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்தால் ‎தான் எப்படி என்று நன்கு புலப்படும், ஆனாலும் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ‎பக்குவம் இல்லையென்றால்! அது பதரை விட மோசம் என்றே ‎சொல்லலாம். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய், பயனின்மை, பயனற்றவன்; பயனற்றவள்; வெற்றாள்; வெட்டி

      Delete
    2. பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள் (கிறித்தவக் கீர்த்தனம்)

      Delete
    3. காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும் கோதுமை மணிகள் தங்கட்டும் (கிறித்தவக் கீர்த்தனம்)

      Delete
    4. பங்குனி மாதம் பதர் கொள் (பழமொழி)

      Delete
    5. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். தூற்றுதல் என்பதற்கு நெல்லையும், பதரையும் பிரித்தல் என்பது பொருள். பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் லேசாக இருக்கும். அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும். காற்று வீசவில்லை என்றால் காரியம் நடக்காது. ஆகையால் அது வீசும்போதே வேலையைச் செய்துவிடவேண்டும். வாய்ப்பு நேரும்போது நழுவ விட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு காரிய சித்தி பெறவேண்டும் என்பது பொதுக் கருத்து.

      Delete
    6. பரஷ் பதர் (The Philosopher's Stone, 1958) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும்.

      Delete
    7. தாக் பதர் என்பது டேராடூன்-சக்ரதா சாலையில் அமைந்துள்ள ஒரு அமைதியான சுற்றுலாத்தலம். இந்த இடத்தில் ஒரு நீர்மின்சார உற்பத்தி ஆலை உள்ளது. பனிசறுக்கு போன்ற பல்வேறு தண்ணீர் விளையாட்டுகள், படகு, நீர் சறுக்கு, மற்றும் படகோட்டம் போன்ற விளையாட்டுகளில் இங்கு ஈடுபட்டு திளைக்கலாம்.

      Delete
    8. வழக்கம்போல் தங்களது விளக்கங்கள் பதர் என்ற சொல்லுக்கு மெருகூட்டுகின்றன.

      Delete
  6. பரோட்டாவிற்கு மடிப்பு வைத்து அடுக்கு போடுவதையும் பதர் போடுதல் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கத்தில் உள்ள சொற்கள் மருவி நிற்பதும் உண்டே.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers