.

Pages

Thursday, June 11, 2015

[ 21 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி

(77)
உணர்வுகள் உள்ளத்தில் உண்டாகித் தங்கக்
குணமாகும் பண்பே கொடையாம் - மணத்திடத்
தந்தவைத் தானெனத் தன்னைகூறும் சூத்திரமாய்
அந்தமா யோனின் அமைவு.

(78)
அமைதியில் உள்ளம் அசையாமல் ஓர்மைச்
சமைந்திடின் தூக்கம் தழுவும் - இமைகள்
விரிந்திடும் சாந்தம் விகசிக்கும் வாழ்வில்
சொரிந்திடும் இன்பத்தின் சொத்து

(79)
சொத்தென்றால் உள்ளமைதிச் சோதி நிலைத்திட
நித்தியனில் சுத்தமாகும் நிம்மதி - முத்தான
இப்பிறப்பில் எல்லாமே எட்டிடுமித் தத்துவமே
தப்பாமல் நிற்கும் தலம்.

(80)
தலமென்ற உள்ளத்தில் தங்கும் தலைவன்
அலங்கரிப்பான் நல்வாழ்வை ஆங்கே - இலகுவாக
இல்லாமை இல்லாமல் என்றும் வழங்கிடுவான்
நல்லிதனை உன்னிலே நாடு.

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (77
பொருள்: உணர்வுகள் உள்ளத்தின்கண் உண்டாகித் தங்கிட அதுவே குணமாகும். அக்குணம் நற்பன்புடையதாய் இருக்குமானால் அதுக் கொடையாகும். அந்தக் குணங்கள் வாசமாக மணத்திட அக்குணம் வெளிப்பட்டோன் அதுத் தன்குணம் என்றுக் கூறிடும் சூத்திரமாக அந்த எல்லாம் வல்ல மகாப்பெரியோன் அமைவு இருக்கின்றது.

வெண்பா (78
பொருள்: உள்ளம் எச்சலனமும் இல்லாமல் ஒர்மையாக அதில் அமையயேற்பெற்றால் மெல்லத் தூக்கம் தழுவும். அந்நிலையில் உறங்கமும் இல்லாமல் இருக்கும் அமைதி மலரும் வழியறிந்தோர் வாழ்வில் அமைதியே வடிவாகிப் பிரகாசிப்பார். அந்நிலையில் ஆனந்தம் சொரிந்திடும்.

வெண்பா (79
பொருள்: ஒருவன் பெறவேண்டிய பாக்கியம் என்றச் சொத்து ஒன்றென்றால் மனஅமைதி என்றச் சோதித் தன்னில் நிலைத்திட நித்தியனில் இணை போன்ற அசுத்தங்கள் அழிந்து பரிசுத்தமாகும் அவ்வமைதியாகும். பெறர்க்கரிய முத்தான இப்பிறப்பில் எல்லாமே அடையப்பெறும் அமைதியின் தத்துவமே ஒருவன் அதுத் தப்பிவிடாமல் பற்றி நிற்கும் தலமாகும்.

வெண்பா (80
பொருள்: தலமென்ற உள்ளத்தில் இறைவன் தங்க ஆட்க்கொண்டுவிட்டால் நல்வாழ்வை அவ்வுள்ளத்தின்மூலம் வெளிப்படுத்தி அலங்கரிப்பான். இல்லாமையே இல்லையென்ற நிலையில் வேண்டும் தகுந்ததை வழங்கிடுவான். அதனை அடைய நீ நாடவேண்டும்.

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers