.

Pages

Thursday, August 23, 2012

வருந்த வைக்கும் மருந்து விலை !!!



ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.


சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.


மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய “எங்கள் புராடக்ட்’களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்” என இதுபோன்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை !

டாக்டரால் பரிந்துரை செய்யும் மெடிக்களுக்கு சென்று மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதனால் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும் இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமான ஓன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20 சதவீதம் வரை M.R.P விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.

குறிப்பாக அரசால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி கூட்டுறவு மருந்து கடை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அலோபதி மருந்துகளோடு சித்த, ஆயுர்வேத, யுனானி ஆகிய இந்திய மருந்துகளும் இவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers