.

Pages

Thursday, January 31, 2013

கமலுக்கு ரசிகனின் கடிதம் !

உலக நாயகன் கமல் அவர்களுக்கு உங்கள் தீவிர ரசிகன் [ தீவிரவாதியுள்ள ] எழுதும் மடல்...

தங்களுடைய அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து ருசித்து இருக்கும் உங்கள் ரசிகன் கான்.

சமீப காலமாக தாங்கள் எடுக்கும் படங்களில் இஸ்லாத்தை சாடுவதாக சில அமைப்புகள் மூலமாக தான் நான் அறிந்தேன் இருந்தும் தங்களின் படத்தை உதாசினப்படுத்தியதில்லை வெற்றியடைய பாடுபட்டு இருக்கிறேன்.

இன்று தாங்கள் எடுத்து இருக்கும் விஸ்வரூபம் [ படம் ] என்னையும் பாதித்திருக்கின்றது ! என்ன காரணங்கள் என்பதை ஒவ்வொன்றாக நான் வரிசைப்படுத்துகிறேன்.

1. இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகளை தமிழர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?

2. சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் பகத்சிங்கையும் இந்தியர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?

3. இலண்டன்காரனுக்கு [ வெள்ளையனுக்கு ] சுபாசும், பகத்தும் தீவிரவாதி அமெரிக்கனுக்கு ஆப்கானிஸ்தானும், பலஸ்தீனியனும், சதாம் ஹுசேனும்  தீவிரவாதி. நீங்கள் அமெரிக்கனா வெள்ளைக்காரனா ? நீங்கள் அமெரிக்கா கண்ணோட்டத்தோடு ஆப்கானை ஏன் பார்த்தீர்கள் ?

4. அமெரிக்கனுக்கு வக்காலத்து வாங்குவது போல் அமெரிக்கன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்பதாய் வசனம் வைத்தீர்களே ஏன் ?

5. ஈராக்கிலும் , ஆப்கானிலும், பலஸ்தீனிலும் [ இஸ்ரேல் ] குழந்தைகளை கொன்றக் காட்சிகளை செய்திகளில் தாங்கள் பார்க்க வில்லையா ?

தங்களின் இந்த செயல் ஆஸ்கருக்காக ஆசைப்பட்டு அமெரிக்கா கண்ணோடத்தோடு ஆப்கானை பார்த்து [ ஆப்கானியர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே ] படம் எடுத்தது என்பதாய் நான் உனர்கிறேன்.

நிறைய பிரச்சனைகளை இதன் மூலம் சந்தித்துவிட்டீர். இனையதளத்தில் வெளியிட தியேட்டர்காரர்கள் எதிர்த்த பொழுது, இந்த படத்தின் உரிமையாளன் நான். இது எப்படி வெளியிட வேண்டும் என்பதை நான் தான் முடிவெடுப்பேன் என்று வீராப்போடு பேசியதை நானும் ரசித்தேன்.

இஸ்லாமியர்கள் தங்கள் படத்தை எதிர்க்கும் பொழுது ,சிறு கூட்டம் என்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 300 ஆதாரங்கள் இருக்கின்றது என்று மேலும் எங்கள் மனதை புண்படுத்தினீர்கள் !

இன்றோ இந்த மாநிலத்தை அல்லது இந்த நாட்டை விட்டே வெளியேறப்போகிறேன் என்கிறீர்கள் ! உங்களுடைய கர்வம் என்னானது  ? தாங்கள் பிறந்த மன்னை விட்டு போக நாங்கள் விடமாட்டோம்.

நன்றி..!  உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

மு.செ.மு.சபீர் அஹமது

7 comments:

  1. கமலுடைய சொந்த வாழ்க்கையில் அப்படி இப்படி இருந்தாலும் கமல் ஹாசனை பல திறமைகளும் நிறைந்த நல்ல ஒரு கலைஞ்சன் என்ற பார்வையில் நானும் கமல் படங்களை ரசித்து பார்த்ததுண்டு. அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் மதிக்கத்தக்க ஒரு கலைஞ்சனாக இடம் பெற்று இருந்தார்.

    ஒரு கலஞ்சனாக பாராட்டுக்குரியவரே...!

    அதே சமயம் அடிமேல் அடியாக அனாதை போல் சொந்த நாட்டிலேயே அகதிபோல் உரிமைகள் பல பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சிறுபான்மை சமூகத்தை எப்படி அவருக்கு தீவிர வாதிகளோடு உறவாக இணைத்து காட்டு வதற்கு மனம் வந்தது...? என்று தான் புரிய வில்லை...!

    கமல் ஹாசன் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் இதுவரை என்ன துரோகம் விளைத்தது ..?

    எந்த நோக்கில் இந்தப்படம் எடுக்கப்பட்டது..?

    இந்தப்படத்தின் மூலமாக கமல் என்ன மெஸ்ஸேஜ் சொல்ல வருகிறார்..?

    இதுவரை தெளிவான பதில் இல்லாத அவருடைய பேச்சுக்குப்பின்.............!?!?!

    ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கிடக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.


    ReplyDelete
  2. சபாஷ் !

    கேள்விகள் அனைத்தும் நம்மை சிந்திக்க வைக்கும் !

    கமல் அவர்கள் தீவிர ரசிகனுக்கு பதில் தருவாரா !? அவருக்கு எங்கங்க நேரம் இருக்கு !? என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகிறது ! :)

    ReplyDelete
  3. உரிமை மறுக்கப்பட்டவர்களின் போராட்டம் பயங்கரவாதமா? ***** பீட்டர் அல்போன்ஸ்

    ***********

    நெல்லையிலிருந்து சென்னைக்கு புகை வண்டியில் பயணம் செய்து
    கொண்டிருந்தேன். வேத வியாக்கியானங்களில் விற்பன்னராகத் திகழ்ந்த அருமை
    நண்பர் ஒருவரும் என்னுடன் பயணம் செய்தார். தன்னை அறிவு ஜீவி என்று கூறிக்
    கொள்கின்ற அவர் தேவைக்கு அதிகமாகவே பேசக் கூடியவர். ட்ரைன் புறப்படும்
    நேரத்தில் ஒரு முஸ்லிம் சகோதரரும் பர்தா அணிந்த அவரது மனைவியும் நாங்கள்
    இருந்த பெட்டியில் வந்து ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகி விட்டது.
    அதிகமாக பேசக் கூடிய அந்த வேத விற்பன்னர் பேச்சை நிறுத்தி விட்டார்.
    அதோடு, அடிக்கடி தலையைத் தடவுவார்...அண்ணாந்து பார்ப்பார்...மன அமைதி
    இல்லாததுபோல் தவித்தார்." உடம்புக்கு சரியில்லையா?" என்று நான்
    கேட்டதற்கு " அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்று கூறிவிட்டார்.

    அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்ததும் " இரவெல்லாம் ஏன் தூங்கவில்லை?"
    என்று அவரிடம் கேட்டேன். "எப்படிய்யா தூக்கம் வரும்? இந்த பாயும் அவர்
    பொண்டாட்டியும் நம்ம கூட இருக்கும்போது தூக்கம் வருமா?" என்று திருப்பிக்
    கேட்டார். " ஏன் ? என்ன விஷயம்? " என்றேன். ஏதாவது பாம் வச்சு ரயிலு
    வெடிச்சுடுமோன்னு பயமா இருந்தது, அதனாலே ராத்திரி பூரா தூங்கமே இவங்களை
    வாட்ச் பண்ணிகிட்டே இருந்தேன்" என்றார் அந்த அறிவு ஜீவி. இறங்கும் போது
    அந்த முஸ்லிம் சகோதரர் என்னிடம், " உறவுக்காரங்க வெளிநாட்டிலிருந்து
    வாராங்க... அவங்களை அழச்சிட்டுபோக விமான நிலையம் போறோம்.போயிட்டு வர்றோம்
    அண்ணா" என்று கூறி விட்டுச் சென்றார். 'அடப்பாவி, இதை முதல்லேயே
    சொல்லியிருக்கக் கூடாதா?" என்று சங்கடப் பட்டார் அந்த அறிவு ஜீவி நண்பர்.

    ப்ளைட்லே போகும்போது தாடி,தொப்பியோடு யாராவது ஒரு ஆள் நம் பக்கத்துலே
    உக்காந்தாலே, " நாம ஒழுங்கா போயி சேருவோமா"னு பயம் நிறைய பேருக்கு
    வந்திருக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தை, இஸ்லாமிய சமூகத்திற்கு
    இழைக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதி என்றுதான் நான் நினைக்கிறேன்.
    இனம்,மதம், மொழி, நாடு என்ற எல்லைகளையெல்லாம் கடந்தது பயங்கரவாதம். எந்த
    ஒரு இனத்திற்கும் சொந்தமானதல்ல. அது உலகம் தழுவிய பிரச்சினை. ஒவ்வொரு
    இடத்திலும் ஒவ்வொரு பிரச்சினை. எங்கெல்லாம் பேராசை இருக்கிறதோ...
    எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ...எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்
    படுகிறதோ...அங்கெல்லாம் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைக்காக வெடித்துக்
    கிளம்புகின்ற வன்முறைக்குத்தான் பயகரவாதம் என்று மறுபெயர்
    வைத்திருக்கிறோம்.

    ஒரு மண் புழுவைக் கூட ஊசியால் குத்தினால் அது வாலைத் தூக்கி அடிக்கிறது.
    அது ஒரு புழுவாக இருந்தாலும் கூட தன்னைத் துன்புறுத்துகின்ற அந்த ஊசியை
    தன் உயிர் போவதற்கு முன்னால், தனது சக்தியையெல்லாம் திரட்டி , அடித்து
    நொறுக்கப் போராடுகிறது. அது இயலுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.

    ஆனால்.. இந்த பயங்கர வாதத்திற்கு மாற்று மருந்து என்ன என்று கேட்டால்,
    அந்த மாற்று மருந்து இஸ்லாம்தான். ஒரு மனிதனுக்கு மூன்று உறவுகள்.
    ஒன்று... தனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது. இரண்டு..தன்னை சுற்றி
    இருப்பவர்களோடு ஏற்படுத்திக் கொள்வது. மூன்று...அவனுக்கும் இறைவனுக்கும்
    உள்ள உறவு. இதில் எதில் விரிசல் வந்தாலும் அங்கே பயங்கரவாதம் தோன்றி
    விடுகிறது.

    மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே பயங்கரவாதம் தோன்றி இருக்கிறது.
    விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பயங்கரவாதத்தின் காட்சிகள் நம் வீட்டிற்கே
    கொண்டு வந்து காட்டப் படுகிறது.

    சமீபத்தில் நாம் பார்த்தது.. அமெரிக்க பயங்கரவாதம். தன்னுடைய நாட்டின்
    தேவைக்காக ஆப்கானிஸ்தான் மீதும்..ஈராக் மீதும் வீண் பழி சுமத்தி, அந்த
    நாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது அமெரிக்கா.
    ஆயிரக்கணக்கான லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
    குழந்தைகள், பெண்கள் என்றும் பாராமல் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன்
    உச்ச கட்டமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனும் தூக்கிலேற்றப்பட்டு கொலை
    செய்யப்பட்டார்.

    உலகம் முழுவதும் இன்று அமெரிக்காவின் பயங்கரவாதப் பிடியில் சிக்கி
    இருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய
    பயங்கரவாத நாடு அமெரிக்காதான். ஆனால்...அமெரிக்க பயங்கரவாதத்தை எதிர்த்து
    போரிடுகின்ற முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது பெரும்
    கொடுமை.



    *** சென்னையில் நடை பெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பீட்டர்
    அல்போன்ஸ் MLA அவர்கள் பேசியது. நன்றி..நமது முற்றம் ..ஜூலை 2007)

    ReplyDelete
  4. தலைவா நல்ல கடிதம், பால் அபிசேகம் செய்யும் ரசிகனுக்கு நல்ல ஒரு பாடம்

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை உள்ள கடிதம் ..
    கமலின் பார்வைக்கு செல்ல வேண்டிய கடிதம்

    ReplyDelete
  6. அருமையான ஆக்கம் மனச்சாட்சி இருந்தால் கமல் உணர்வார்.ஏன் இப்படி படம் எடுத்தோம் என்று.

    ReplyDelete
  7. எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் பார்வையில் விஸ்வரூபம்............!!

    எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் பார்வையில் விஸ்வரூபம்............!!

    விஸ்வரூபம் பற்றி எழுத வேண்டாம் என்று இருந்தேன். அதற்குப் பல காரணங்கள். கஷ்டத்தில் இருப்பவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நல்லெண்ணமும் ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் இப்போது சினிமாத் துறையில் உள்ளே இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது சொல்லி வைத்து அது என்னோடு சம்பந்தப்பட்டிருப்பவர்களை எந்த விதத்திலும் பாதித்து விடக் கூடாது. என்னை எதிரியாக நினைப்பவர்கள் அங்கே மிகவும் அதிகம். ஆனால் இதையெல்லாம் மீறி இப்போது எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

    ஹே ராம், உன்னைப் போல் ஒருவன் என்ற இரண்டு படங்களுக்கும் நான் உயிர்மையில் எழுதியுள்ள விமர்சனங்களே விஸ்வரூபம் படத்துக்கும் பொருந்தும். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ கமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக மோசமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இதை நான் விரிவாக என் மதிப்புரைகளில் உயிர்மையில் எழுதியிருக்கிறேன். விஸ்வரூபத்தில் அந்த இஸ்லாமிய விரோதம் உச்சக் கட்டத்தில் உள்ளது. நான் ஆஃப்கானிஸ்தானைப் பற்றித்தானே எடுத்தேன் என்பதெல்லாம் வாதம் ஆகாது. அல் குரானின் வசனங்களைச் சொல்லிக் கொண்டே கொலை செய்கிறார்கள் என்றால் இந்தப் படத்தைப் பார்க்கும் non muslims-க்கு என்ன தோன்றும்? அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே குண்டு வெடிக்கிறார்கள் என்றால் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் அல்லாஹ் அக்பர் என்று சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

    இது ஆஃப்கனிஸ்தானில் நடக்கிறது என்றால் அதை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள்? அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே பெரியவன் என்று பொருள். ஆனால் அல்லாஹ் அக்பர் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்தில் குண்டு போடுகிறார்கள் என்றால் அது பாமர சினிமாவை மட்டுமே பார்த்து வெறும் பாமர ரசனையை மட்டுமே வளர்த்துக் கொண்ட பாமர ரசிகனுக்கு என்ன பொருளைத் தரும்? கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு மதத்தை அவமானப்படுத்துவதும், கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிப்பதும்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் அதைத் தடை செய்வதும் சரிதான். கருத்துச் சுதந்திரத்தை விட மனித உயிர்கள் உயர்வானவை. பொறுப்பு (Responsibility) இல்லாத கருத்துச் சுதந்திரம் மனித குலத்துக்கே விரோதமானது. அதற்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

    இதற்கு மேல் நான் எதுவும் எழுத விரும்பவில்லை. ஒரு எழுத்தாளன் என்பவன் கூடு விட்டுக் கூடு பாய்பவனாக இருக்க வேண்டும் என்று பலமுறை நான் சொல்லி இருக்கிறேன். நான் ஒரு ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதினால் நான் பெண்ணாக மாறியாக வேண்டும். அந்தப்படியே விஸ்வரூபத்தை நான் ஒரு இஸ்லாமியனாகவே பார்த்தேன். அப்படிப் பார்த்த போது அது என்னை மிகவும் கேவலப்படுத்தியது.

    வார்த்தைகளால் விளக்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பை அள்ளி வீசியது. சிறு குழந்தைகள் கூட கை விரல்களால் துப்பாக்கி பிடித்தபடி சுடுகிறார்கள் படத்தில். ஆனால் அமெரிக்கா ஈராக்கையும் ஆஃப்கனிஸ்தானையும் சுடுகாடு ஆக்கியது பற்றி விஸ்வரூபத்தில் எதுவுமே இல்லை. ஏதோ அமெரிக்க ஏஜண்ட் எடுத்தது போல் இருக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் கை இழந்த கால் இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கான பேர் இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வீச்சினால் என் ஐந்து வயது குழந்தைக்கு கை கால் போனால் என் மனநிலை எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஆஃப்கனிலும் ஈராக்கிலும் அப்படி உடல் உறுப்புகளை இழந்த குழந்தைகள் ஆயிரக் கணக்கானோர்.

    விஸ்வரூபத்தைப் போல் இதுவரை ஹாலிவுட்டில் 50 கமர்ஷியல் படங்கள் வெளியாகி உள்ளன. ஒரு வியாபார மசாலா சினிமாவை இங்கே ஏதோ ஒரு மகத்தான கலைப் படைப்பைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    முஸ்லீம்களை அவமதித்து, அவர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்துப் படம் எடுத்து விட்டு நான் தெருவுக்கு வந்து விடுவேன், நாட்டை விட்டுப் போய் விடுவேன் என்று சொல்வதெல்லாம் மிக மிகக் கீழ்மையான தந்திரம். மகாநதி போன்ற ஒரு படத்தைக் கொடுத்த ஒருவர் இப்படி மாறிப் போனது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது…

    (விஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய கட்டுரை.இப்படி எழுதிய இவரும் இன்றுமுதல் ஒருவேளை கலாசாரதீவிரவாதி என்று அழைக்கப்படலாம்....)

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers