.

Pages

Sunday, January 20, 2013

அரசியல்வாதிக்கு ஒரு தொண்டனின் கடிதம் !

கட்சித் தொண்டனாய் இருந்து
கட்சித் தலைவனாய்
பதவி உயர்வு பெற்றவனே...

உன் கட்சியில்
உனக்கெவ்வளவு
அதிகாரம் இருந்ததோ
அதைவிட அதிகமாகத்தான்
நானுனை வியாபிதிருந்தேன்

எங்கள் தொகுதி
இடைத்தேர்தலுக்கு முன்பாய்
கைக்கூப்பிக் கொண்டு
ஊர்வலமாய் வந்தபோதுதான்
உன்னை முதன் முதலாய்ப் பார்த்தேன்.

அன்றோ
நம் காதலுக்குமாய் சேர்த்து
வேட்பு மனு தாக்கல்
செய்துவிட்டுப் போனாய்

அதையும் நான்
அப்போதே பரிசீலனைக்கு
ஏற்றுக் கொண்டேன்

தேர்தல் சின்னமாய்
உனக்கு
'மோதிரம்' கிடைத்தது
எவ்வளவு இலாவகமாய் போயிற்று

ஒரு நாள்
பிராச்சார சாக்கில்
என் வீட்டிற்கு வந்து
பெற்றோர் முன்னிலையில்
'எனக்கு மோதிரத்தில் போடுங்கள்' என்று
சிலேடையில் சொல்லி
என்னைக் கடைக்கண்ணால் பார்த்தாய்.

பட்ஜெட்டுக்கு முதல் நாள்
விலைவாசி உயர்வை
ஆவலோடு எதிர்பார்க்கும்
பதுக்கல் பேர்வழிகள் மாதிரி
தேர்தல் நாளுக்காய்
நான் ஆவலோடு காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது,
புத்தாடை உடுத்தி
முதல் ஆளாய்
வாக்குச் சாவடிக்குச் சென்று
நம் காதலுக்கான
முதல்வாக்கை பதிவு செய்தேன்.

தேர்தல் முடிவில்தான்
உனக்கு 'டெபாசிட்'
போய்விட்டதாய் சொன்னார்கள்
கடற்கரையில்
மாநாடு கூட்டி
சாதிக் கட்சிகள்
பலம் காட்டுவது மாதிரி
என்னையும் பலமுறை
அங்கு கூடிச்சென்றுதான்
உன் பலத்தை
நிருபித்திருக்கிறாய்.

பிறகுதான்
தேர்தலில் தோற்றுப்போனஆளுங்கட்சியிலிருந்து
வெளியேறிப்போகும்
கூட்டணிக் கட்சிகள் மாதிரி
மெல்ல மெல்ல...
என்னிடமிருந்து 
விலகத் துவங்கினாய்

அப்போதும் கூட
கள்ள ஓட்டு
கணக்கை நம்பி
வெற்றிக்காய் காத்திருக்கும்
வேட்பாளனைப் போல்
நானும் உன் வரவுக்காய் காத்திருந்தேன்.

மறுநாள் தான்
நீ கட்சி மாறிவிட்டதாய்
செய்தித்தாள் சொன்னது
கொண்ட கொள்கையை மட்டுமல்ல
கூடவே காதலையும்
புதுப்பித்துக் கொண்டாயோ ?

உன் யோக்கியதை
முழுவதுமாய்
புரிந்து போயிற்று !

தலைவர்
தடுக்கி விழுந்ததற்கும்
பேருந்தை எரிக்கும்
அப்பாவி [ ? ]
தொண்டர்கள் மாதிரி...
நானும்
உணர்ச்சி வேகத்தில்
தடுக்கி விழுந்துவிட்டேன்.

உன்
ஆசை வார்த்தைக்குள்
மோசம் போனேன்

சரி சரி
நானாவது இத்தோடு பிழைத்தேன்
மக்கள்...?

அண்ணா சிங்காரவேலு

15 comments:

  1. அதிரை அண்ணா சிங்காரவேலு அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
    சிறந்த பேச்சாளராக இருக்கும் இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று உரையாடி வருகின்றார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பேச்சரங்க நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அழைப்பின்பேரில் சந்தித்து பாராட்டைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பத்திரிக்கைத்துறையோடு நெருங்கிய தொடர்புடைய இவர் 'நதியோர மரவேர்கள்', 'சிறகு முளைக்காமலே', 'இந்தப்பகலும் விடியட்டும்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

    ReplyDelete
  2. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் மனதிலும் இருக்கும் எண்ணங்கள் இங்கு எழுத்தில் வந்திருக்கிறது.

    அரசியல்வாதியின் சாயம் வெளுத்ததை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார் திரு அதிரை அண்ணா சிங்காரவேலு.

    பாராட்டுகள்!

    ReplyDelete
  3. அரசியல் வாதி வாக்குறுதி ..ஒருபுறம்
    எதிர்கால அரசியலுக்கு கட்சி தாவும் அவனின்
    மன நிலை ...பதவியின் ஆயுள் காலம் உள்ளவரை
    கட்சி மீது விசுவாசம் ...
    அதே கண்ணோட்டத்தில் காதலி மீது கொண்ட மோகம் ..அவளை அடையும் வரை காட்டிய அன்பு
    அவளிடம் கிடைத்த இன்பமே பதவி ..பதவி காலத்தின் ஆயுள் எவ்வளவு சிறியதோ அதே போன்று காதலும் என்பதை நன்றாய் கூறிய சகோ
    அதிரை அண்ணா அவர்களுக்கு ஒரு ஜே...
    வாழ்க.! கோசத்துடன் ...அதிரை சித்திக் ..

    ReplyDelete
  4. அனைவரின் சார்பாகவும் அனைத்து
    அரசியல்வாதிகளுக்குமாக எழுதப்பட்ட கடிதம்
    அருமையிலும் அருமை

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தொண்டனின் மனக்குமுறல் அனைவருக்கும் பாடமாக அமையட்டும் !

    அதிரை அண்ணா சிங்காரவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. காதலை மையமாக வைத்து அரசியல்வாதிகளின் உண்மை நிலையை கடிதக்கவியாக படைத்து இருப்பது அருமை.

    வாழ்த்துக்கள் சகோதரர்''அதிரை அண்ணா சிங்காரவேலு''அவர்களே...!

    இந்த சமூக விழிப்புணர்வு பக்கத்தில் இன்னும் தாங்களின் சிறப்பு மிகு விழிப்புணர்வு ஆக்கங்களை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. நல்ல பல கருத்துக்கள்
    ஒளிந்து கிடக்கும்
    அற்புத கவிதை

    ReplyDelete
  8. நல்ல பல கருத்துக்கள்
    ஒளிந்து கிடக்கும்
    அற்புத கவிதை

    ReplyDelete
  9. கடிதத்தின் மைய கருத்து ஜோர்.

    ReplyDelete
  10. இதுலே நிறைய படிப்பினை பெறவேண்டிருக்கு.. அருமை

    ReplyDelete
  11. உன் யோக்கியதை
    முழுவதுமாய்
    புரிந்து போயிற்று !

    இறுதி வரிகள் உண்மையில் பாராட்டுக்குரியது மக்களின் நிலை ?

    ReplyDelete
  12. அண்ணா சிங்காரவேலு முதல் பதிவு அருமை தொண்டனின் கடிதமும் அருமை இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கபடுகிறது.வாழ்த்துக்கள் அண்ணன் சிங்காரவேலு அவர்கள்.

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி.
    அதிரை.

    அரசியல்வாதிக்கு ஒரு தொண்டனின் கடிதம். இது கவிதையின் தலைப்பு.

    கருத்துக்களை பல வாசகர்கள் தெரிவித்தாலும் என்பங்குக்கு நானும் எழுதனுமே, ஆகவே, நான் இப்படி சொல்லலாம் என்று இருக்கின்றேன்.

    கவிவரிகள் எவ்வளவோ அதைவிட விளக்கங்கள்.

    அதெல்லாம் சரி, அந்த INLAND LETTERஐ பார்தீர்களா? அதை வாங்கி வந்து தமிழில் அழகாக எழுதி நம் எல்லோருக்கும் முறையாக பதிவுசெய்த அன்பின் தம்பி சேக்கனா M நிஜாம் அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் பலபடிகள் மேல்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  14. மறந்து போன அரசியலாரை மறந்துபோன கடுதாசியில் கவிமடல் தீட்டியிருப்பதும் பொருத்தமே!

    அதிரை அண்னாவைச் சந்திக்க விழையும் அன்புடன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers