.

Pages

Saturday, February 9, 2013

[ 2 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !



கடைக்கண் திறவாயோ காவிரியே !

சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில்
முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி
நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற்
பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற்
கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில்
இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற்
கடைக்கண் திறக்காதோ காவிரி உன்றன்
மடைத்தாள் திறக்காதோ மனம்

பூக்கள் பூக்க மறந்தனவே
புற்கள் மடிந்து உறங்கினவே
நாட்கட் செல்ல மறுப்பதுமே
நாங்கள் பட்டத் துன்பமாமே

காவிரி நீயும் வீணிலே யாங்குக்
.....கைதியாய் நிற்பதும் ஈண்டுப்
பூவிரிச் சோலை நெற்கதிர் கூட்டம்
.....பூமியில் செத்திடக் காண்பாய்!
பாவிகள் உன்னை அடைத்திடக் கண்டும்
......பாடலில் வடித்திடும் கருத்தை
மேவிடும் தமிழ்நாட் டின்நிலை கண்டும்
....மெச்சவும் கையறு நிலைதான் !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

16 comments:

  1. அழகிய குரலில் குளிர்ச்சியான கவிதை !

    விவசாயிகளின் கண்ணீரை நல்லதொரு கருத்துடன் தந்திருப்பது கவிக்குறளின் தனிச்சிறப்பு !

    உங்களின் கவிதை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. முதற்கண் நன்றியை அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கின்றேன்; அல்ஹம்துலில்லாஹ்= எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      தன் தங்கக் குரலால் என் தமிழைத் தமிழர்களின் செவிகளிற்றேனாய் ஊற்றும் தங்கை ஷைஃபா மாலிக் அவர்கட்கும், என் பாடலின் அழகிய ஓசையையும் , பொருளையும் முற்றிலுமாக உள்வாங்கி அற்புதமான மதிப்புரை வழங்கிய அத்தொகுப்பாளியினி அவர்கட்கும் என் நெஞ்சம் படர்ந்த நன்றிகள்!

      தன் வேலைச் சுமைகட்கிடையிலும் என் பாடலையும், இலண்டன் தமிழ் வானொலியின் இவ்விழிமத்தையும் உடன் இத்தளத்தில் பதிவு செய்து வாசக/வாசகிகளான என் அன்புச் சகோதர/சகோதரிகளின் வாழ்த்துரைகளைப் பெற்றுத் தந்த அன்பின் சகோதரர், விழிப்புணர்வு வித்தகர் சேக்கனா நிஜாம் அவர்கட்கு உளம்நிறைவான நன்றி

      Delete
  2. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி :

    கவிக்குறளின் கவிதை தளத்தில் பதியும் வேளையில், இன்று காலை மகிழ்ச்சியான செய்தியை தின நாளிதழ்களில் பார்க்க நேரிட்டது.

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு, 15,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்; சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்படும்; விவசாயிகள் நிலவரி தள்ளுபடி செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. என் பாடல் பதிவு செய்த இத்தருணத்தில் எம் ஏக்கம் தீர்க்க எம் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க அரசின் உதவிப்பணம் கிட்டியிருப்பதைப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டிய உங்களின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை எண்ணி வியக்கிறேன், மாஷா அல்லாஹ்!

      Delete
  3. காவிரிக்கு அழகு தமிழில் கனிவான வேண்டுதல் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றதொரு அன்புச் சகோதரியின் அழகிய தேன்குரலால் என் பாடல் படிக்கப்பட்டதும், தமிழ்ப் புலமை மிக்க ஈழப்பெண்மணியால் அதற்கான மதிப்புரையும் இவ்விழிமத்தில் காண்பிக்கப்பட்டதும் எனக்கு மிகவும் தாய்க்குலத்தின் பால் மதிப்பு உண்டானது போல், உங்களின் தொடர் வாழ்த்துரைகளைக் கண்டும் உங்களின் பால் பெரும் மதிப்பை வைக்கிறேன். உங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் உளம்நிறைவான நன்றி.

      Delete
  4. கலாமின் கவேரிக்கவி படித்து
    கணப்பொழுதில்
    கண்ணீர் மழை
    காரணம்
    காய்ந்து கிடக்கும் பூமித்தாயும்
    உன் கவி கேட்டு
    பூத்தனவாம்
    முதல்வரின்
    தள்ளுபடி ஆணையாக..!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, என்னே அற்புதமான ஒப்பீடு
      இஃதன்றோ உணமையின் வெளிப்பாடு!

      அன்பினுக்கினிய புதுமைக் கவிஞர் மெய்தனைப் பாடும் மெய்சா அவர்கட்கு என் மனம், மொழி, மெய்களால் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்,

      Delete
  5. பதிவுக்கு நன்றி.

    எங்கள் குடும்ப அன்பின் மச்சான் ஜனாப் அபுல்கலாம் அவர்களுடைய கவி வரிகளை படிக்கவும் கேட்க்கவும் இயன்றமைக்கு இந்த வலைதளத்திற்கு நன்றி, ஒலிபரப்பிய இலண்டன் வானொலிக்கு நன்றி, தக்க சமயத்தில் விவசாய அன்பர்களுக்கு நல்ல செய்தியை கொடுத்த நம் தமிழகஅரசுக்கு நன்றி, என்னதான் இருந்தாலும ஒரு படைப்பு என்பது சாதாரணமானது கிடையாது, அந்த வகையில் எங்கள் மச்சானுக்கு நன்றி.

    நன்றி மட்டும் சொல்வதாவது உணவை பருக கொடுத்துவிட்டு குடிக்க தண்ணீர் கொடுக்காதது மாதிரியாகிவிடும், ஆகவே குடிக்கும் தண்ணீராகிய வாழ்த்துதல்களையும் சேர்த்து சொல்லும்போது முழுநிறைவு கிடைக்கின்றது.

    அனைவருக்கும் நன்றிகளும் நல் வாழ்த்துகளும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. \\என்னதான் இருந்தாலும ஒரு படைப்பு என்பது சாதாரணமானது கிடையாது, அந்த வகையில் எங்கள் மச்சானுக்கு நன்றி.\\

      அன்பின் மச்சான் ஜமால் முஹம்மத் என்னும் மனித உரிமைக் காவலரே! உண்மையை உரத்துச் சொன்னீர்கள்; நன்றி-ஜஸாக்கல்லாஹ் கைரன்.ஆம். பொதுவாகத் தலைப்புக் கொடுத்து எழுதச் சொல்வார்கள்; இவ்வாரம் “விருப்புத் தலைப்பு’ என்று போட்டுவிட்டார்கள்; எனக்கு என்ன எழுதுவது என்ற குழப்பதில் தலைப்பைத் தேடி தலையைச் சொரிந்து கொண்ட போதில், காவிரி நதி நீர்ப் பங்கீடு பற்றிய அரசின் செய்திகளால் என் மனம் ஆட்கொண்டிருந்தது; எனவே நம் தமிழ் நாடே ஆவலுடன் காதலிக்கும் காவிரி நதியை வா என வரவேற்றுப் படைத்தேன் இப்பாடலை; நதிக்கும் ஓட்டம் அழகு; நற்றமிழ்ப் பாடலுக்கும் ஓசை அழகு என்பதைக் கருத்திற் கொண்டவனாய் யாப்பின் நெறி பிறழாமல் அவ்வோசை அழகுடன் அமைத்தேன். அதனால் தமிழ்ப் புலமை மிக்க ஈழப் பெண்மணிகளின் ஈர்ப்பினையும் ஈண்டு வாழ்த்துரைகள் வழங்கிய உங்கள் அனைவரின் கவனத்தையும் பெற்றேன். இன்ஷா அல்லாஹ், இதே இலண்டன் வானொலியில் என்னைப் பேட்டி எடுக்க அழைத்துள்ளனர்; அத்தருணம் நான் பிறந்த அதிரைப்பட்டினத்தின் அருமை பெருமைகளை என் மூலம் அகிலமெலாம் உணர வெளிப்படுத்துவேன், இன்ஷா அல்லாஹ்!

      இஃது என் தற்பெருமையன்று; மாறாக, நான் பிற்ந்து வளர்ந்து படித்த என் ஊரின் பெருமைக்கு என் பேருதவியாகும்; நன்றிக் கடனாகும்.

      Delete
  6. உலகப்புகழ் பெற்ற லண்டன் வானொலியில் கவியன்பர் அபுல் கலாம் ஐயாவின் கவிதையை கேட்டதில் மனம் மகிழ்கின்றது. நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. என்னை “அய்யா” என்று அன்பொழுக அழைக்கும் அன்பரே! நீங்கள் எங்கிருக்கின்றீர்களோ மண்ணுலகில்- ஆனால், மனமென்னும் உலகில் என்றும் நிரந்தரமாகி விட்டீர்கள் உங்களின் மதிப்பிற்குரிய அன்பான அந்த “அய்யா” என்ற சொல்லாலே. என்றும் உங்கட்கு என்றன் நன்றிகள் உரித்தாகுக!

      Delete
  7. வாழ்த்துக்கள். அருமை கவிதை.

    ReplyDelete
    Replies
    1. :ஹபீப்” என்றாலே நண்பர் என்ற பொருளுக்குப் பொருத்தமானவரே! என் கவிதைகள் இடப்படும் இடங்களிலெல்லாம் உங்களின் வருகையும் வாழ்த்தும் காண்கிறேன்; உங்களின் பேரன்பை எண்ணி பேருவகைக் கொள்கிறேன்!

      மிக்க நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

      Delete
  8. கவியன்பன் காக்காவின் கவிதை தொகுப்பு ..
    நூல் வடிவிலும் ....ஒலி பேழை வடிவிலும்
    ஸி டி..,வெளியாக வேண்டும் என்பதே ஏன் அவா ..

    ReplyDelete
  9. அதிரைத் தமிழூற்று அன்பர் சித்தீக் அவர்களின் அவாவும் துஆவும் இணைய இன்ஷா அல்லாஹ் விரைவில் முதற்கண் நூலுருவில் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு வெளிவர ஏற்பாடுகள் செய்து வருகிறேன். பின்னர், ஒலிப்பேழை- குறுந்தட்டு ஆகியவற்றிலும் ஏறி உலா வரும், இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers