.

Pages

Saturday, March 2, 2013

[ 4 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ காணொளி ] !



திருத்தம் :

ஒற்றுமை நாடினால் உள்ளம் திருந்திடும்
கற்றவர் கேண்மைக் களவைத் திருத்திடும்
பெற்றோர் அறிவுரை பெற்றுத் திருந்துவோர்
இற்றைப் பொழுதில் இலார்.

நேசித்தற் கிட்ட நிலைமை திருத்தவும்
வாசித்தல் நாடும் வரிகள் அழகாய்
எழுதலின் வேண்டியே ஏற்பாய்த் திருத்தம்
உழுதலைப் போல ஒழுகு.

முடியைத் திருத்த முகமும் எழிலாம்
குடியை ஒழித்தால் குடும்பம் எழிலாம்
நடிக்கும் மனிதரை நன்றாய்த் திருந்த
படிக்கும் பொழுதே பழகு.

திருத்தம் விழைந்தால் திருட்டும் ஒழியும்
வருத்தம் தெரிவித்தால் வல்லோன் அருளும்
விரைவாய் நெருங்கி வருதலைக் காண்பாய்ப்
பெறுவாய்ப் புகழுடன் பேறு.

உன்னைத் திருத்தி உலகைத் திருத்துவாய்
தன்னைத் திருத்தினால் தன்னேரில் லாதவன்
உண்மை வழியை உனக்காய்த் திறப்பதில்
நன்மை புரிதலை நாடு.

தீர்ப்புகளில் எங்கும் திருத்தம் வரலாம்
பார்புகழும் வேதத்தில் பழுதே வராது
திருத்தங்கள் செய்யத் திருநபி வந்தார்
கருத்துக்கள் எல்லாம் கனிந்து.

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

13 comments:

  1. சமூகம் நலன் பெற தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தம் செய்யப்பட வேண்டும்.

    கவிக்குறளின் மற்றுமொரு அருமையான விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து என் ஆக்கங்களை உங்களின் வலைத்தளத்தில் பதியம் இடும் உங்களின் ஆதரவுக்கு என் உளம்நிறைவான நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன். “திருத்தம்” என்னும் இத்தலைப்பை இலண்டன் தமிழ் வானொலியின் நிர்வாகம் அனுப்பி என்னைக் கவிதை வனைய வேண்டினர். ”தன்னை மாற்றிக் கொள்ளாதவரை இறைவனும் மாற்றம் வழங்குவதில்லை” என்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்வெண்பாவை வனைந்தனன். வெண்பாவின் அடிகள் மாறாமல் அப்படியே பதிவு செய்த உங்கட்கு மீண்டும் என் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      Delete
  2. திருத்தமெனும்
    தலைப்பிட்டு
    திருந்தா மனமும்
    திருந்த நினைக்கும்
    பொருத்தமானதொரு
    பொற் கவிதையிது

    நல்லோர்கள்
    நயம் படத்திருந்தி
    நாட்டிளுல்லோர்கள்
    நாணயமாய் திருந்தி

    பண்பாளர்
    பகை போகி திருந்தி
    பாரினில் வாழ்ந்திடுவோம்
    வேற்றுமை களைந்து
    ஒற்றுமையாய் திருந்தி.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் அவர்களே! கவிஞர்கள் சமுதாயச் சீர்திருத்தம் செய்யும் சீர்மிகுப் பணியைச் செய்கின்றோம் என்பதாற்றான், உங்களின் இனிய வாழ்த்துரையிலும் அவ்வண்ணம் சீர்திருத்தம் பற்றிய சிறப்பான பக்கத்தை எடுத்தாண்டிருக்கின்றீர்கள். உங்களின் இனிய வாழ்த்துரைக்கும் அருமையான கவிதைக்கும் என் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      Delete
  3. வாழ்க்கையில் திருத்தம் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும் அருமையான வரிகள் அபுல் கலாம் காக்காவின் கவிதைகள் சொல்லவே தேவையில்லை எல்லா பதிவுகளும் அருமையாக இருக்கும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நேசர் என்னும் பெயரினைக் கொண்ட ஹபீப் அவர்களின் நேசமிகு வாழ்த்துரைக்கு என் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    திருத்தம், எல்லாவகையிலும் திருத்தம் வேண்டும், அனுசரணையில் திருத்தம் வேண்டும், மீன் கடைகளில் மீன் விற்பதில் திருத்தம் வேண்டும், போட்டி போடுவதில் திருத்தம் வேண்டும், மாப்பிள்ளை பெண் பார்ப்பதில் திருத்தம் வேண்டும். ஆகா மொத்தத்தில் இந்த உலகம் திருந்த வேண்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. என் கவிதையின் தாக்கம் என் மச்சானுக்கு “ஊரைத் திருத்த வேண்டும்” என்ற ஆர்வம் உண்டாக்கி விட்டது என்பதே என் கவிதையின் பெற்றி(சிறப்பு); அஃதே எனக்குக் கிட்டிய வெற்றி; அல்ஹம்துலில்லாஹ். உங்களின் இனிய பின்னூட்டத்திற்கு என் உளம்நிறைவான நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்,

      குறிப்பு: இன்ஷா அல்லாஹ் நீங்கள் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள்- மாற்றங்கள் வர வேண்டுமானால், இன்ஷா அல்லாஹ் நீங்கள் பேரூராட்சித்தலைவராக வர வேண்டும்; அதற்கான முழுமையான தகுதிகள் உங்களிடம் நிரம்ப உள. அதிலும் அதிகாரிகளிடம் உங்கட்கு உண்டான நெருக்கம் மற்றும் பணிகளை விரைவில் முடித்துக் காட்டும் வேகம் எல்லாம் உங்களிடம் உண்டென்பதால் இக்கோரிக்கையை இச்சபையோர் முன்னிலையில் பதிவு செய்கிறேன்.

      Delete
  5. உன்னைத் திருத்தி உலகைத் திருத்துவாய்
    தன்னைத் திருத்தினால் தன்னேரில் லாதவன்
    உண்மை வழியை உனக்காய்த் திறப்பதில்
    நன்மை புரிதலை நாடு.

    அற்புதமான வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய சகோதரி சசிகலா அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றி.

      நாலடியார், மற்றும் நற்போதனைப் பாடல்கள் எல்லாம் நாலடியில் அமையும் வெண்பா என்னும் மரபுப்பாவினத்தில் தான் வனையப்பட்டிருக்கின்றன என்பதால், அடியேனும் இப்பாடலை அவ்வண்ணம் அமைத்தேன்; நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ள அப்பாடலின் பகுதிதான் இச்செய்யுளின் முழுக் கருத்தையும் உள்ளடக்கியதாகும்.ஆம். தன்னைத் திருத்திக் கொள்ளாத சமூகத்தை இறைவனும் திருத்த மாட்டான் என்ற அடிப்படையை முன்வைத்தே இச்செய்யுளை வனைந்தனன்;அதனை நீங்களும் உள்வாங்கியிருக்கின்றீர்கள் என்பதை உணரும் போதில் உண்மையில் உங்களின் திறன் வியந்து வாழ்த்துகிறேன். இப்படிப்பட்ட அறிவுத்திறன் வாய்ந்தவர்கள் இத்தளத்தின் தொடர் வாசகியாக இருப்பதும் இத்தளத்திற்குக் கிட்டிய பேறு என்பேன்.

      Delete
  6. கருத்துள்ள வரிகள்

    நன்றி அய்யா

    ReplyDelete
  7. தமிழன் அய்யாவுக்கு என் உளம்நிறைவான நன்றி .

    ReplyDelete
  8. திரு ...திருத்தத்தின் இரு எழுத்து மரியாதைக்குரியது

    அதே போன்றே கவியன்பன் கலாமின் கவிதைகளும்

    மரியாதைக்குரியது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers