.

Pages

Thursday, March 28, 2013

தாமதம்

அவசரச் செய்தியுடன்
அதிகாலை வரும்
செய்தித்தாள் பொடியன்

ஏழுக்கே வரவேண்டிய
எங்களூர்ப் பேருந்து

இதோ வருகிறேனென்ற
சக தொழிலாளி

ஒரு நொடியில்
தயாரென்ற இல்லாள்

எட்டே முக்காலுக்குத்
தரையெட்டும் விமானம்
மாலை வரவேண்டிய
மாண்புமிகு மந்திரி

என்று எல்லோரும் இங்கே
தாமதிக்கிறார்கள்..

வார்த்தை தந்துவிட்டால்
நெஞ்சுக்குள்
மணிச்சத்தம் கேட்காதா

நேரம் தாண்டும்போது
உயிருக்குள்
புயலொன்று வீசாதா

அதெப்படி
ஆறுக்கே வருகிறேனென்றுவிட்டு
ஆறிப்போய் நிற்பது

எட்டுக்கு வருகிறேனென்றவர்
ஏழுக்கு வந்து நிற்பார்
காலைக்குப் பதிலாய்
மாலை

நேரம் தவறாமை
நம் உயிரல்லவா
எத்தனை முறைதான்
அதைத் தூக்கிலிட

இங்கே
நேரத்தே வருவது
வேதனை மட்டுந்தானோ

பசி தாமதித்தால் நோய்
இதயம் தாமதித்தால் மரணம்
மனிதன் தாமதித்தால்
மனநோய்தானே

தாமதமே கௌரவம் என்பவனை
என்னவென்றழைப்பது

தருணத்தில் வாரா ஞாபகமும்
காலத்தே வாரா அறிவும்
துயரக்கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்

பொங்கும்போதே
இறக்காத பால்
பாழ்தானே

நேரத்தே காணா புண்
புற்றுநோயல்லவா

ஏனய்யா தாமதமென்றால்
எலி செத்துவிட்டது
அதன் ஈமக்கடனில்
தாமதமாகிவிட்டது
என்பார் சிலர்

காருக்குக்
கால் தடுக்கிவிட்டது
கைப்பிடியில்
பெட்ரோலும் இல்லை
என்பார் சிலர்

தாமதம் என்ற தப்புத்தானே
நம்மைப் பொய்புனையும்
குற்றவாளியாக்கியது

தாமதிப்போம்
கைமீறும் காரணங்களில்
நாம் தாமதிப்போம்

ஆனால்
தாமதமே சம்மதம் என்று
தரங்குறையலாமா
அன்புடன் புகாரி

11 comments:

  1. சிலர் அதையே சிறப்பாக கருதினால் என்ன செய்வது...?

    எனக்கு பிடிக்காத மதம் : தாமதம்...

    ReplyDelete
  2. இன்றைய பொழுதின் மதிப்பை உணர்ந்து செயல்படுங்கள். தாமதத்தால் வாழ்வில் ஏற்படும் இழப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். காலம் பொன் போன்றது ! கடமை கண் போன்றது !!

    நல்லதொரு கவிதை ! ரசித்து படித்தேன் அருமை

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. தாமதம் நல்லதொரு விழிப்புணர்வு கவி

    அலட்சியப்போக்கினாலும், சிலர் வறட்டு கௌவரவத்தினாலும் தாமதிக்கிறார்கள். பொறுப்புணர்வுடன் செயல் படுபவர்கள் தாமதிக்க மாட்டார்கள். தாமதிப்பதை கொள்கையாய் கொண்டவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    வாழ்த்துக்கள்.நண்பரே.!

    ReplyDelete
  4. அன்புடன் புகாரியை என் வலையில் வைத்துக் கொண்டிருக்க தாமதமானாலும் உங்கள் வலையிலும் விழுந்து விட்டார் .தாமதமும் சமயத்தில் நல்லதை செய்கின்றது. நல்லது செய்வது பரவலாக்கப் படவேண்டும் . மக்கள் பயனடைய வேண்டும் .அதில் நம் பங்கும் சிறிதாவது இருப்பது சிறந்தது .
    இங்கும் வாருங்கள் .பழைமையை புதிதாக்கி கொடுக்கும் முயற்சி
    http://anbudanseasons.blogspot.in/
    anbudanseasons அன்புடன் சீசன்ஸ்

    ReplyDelete
  5. தாமதமாக வந்து தாமதத்திற்கு கருத்திட்ட தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

  6. பொங்கும்போதே
    இறக்காத பால்
    பாழ்தானே

    ரசித்தேன் நல்ல கவி
    தாமதம் என்பது வாக்கு தவறுவது
    வாக்கு தவறுவது மனிதனின்
    கெட்டகுணம்

    ReplyDelete
  7. ஹி..ஹி....

    தளத்திற்கு வர தாமதமாகி விட்டது

    அற்புதமான கவி படித்தேன் சுவைத்தேன்

    தேன்..தேன்...கவிஞர்கள் சில நேரம் சாட்டையை எடுப்பதும்

    உண்டு .நல்ல சாட்டியடி

    ReplyDelete
  8. அன்புடன் புகாரி அவர்கள் என் வாழ்நாளின் வாலிபக் கால நண்பர்; எனக்கு அவர் நட்பு தாமதமாகக் கிடைக்கவில்லை; ஆனால், இத்தளத்திற்குத் தான் தாமதமாகக் கிடைத்தாலும், தரமான கவிதைகளைத் தருபவர். நான் “காலம்” எழுதினேன்; அவர் “தாமதம்” எழுதினார்; ஆக “காலத் தாமதம்” என்பது ஒரே வார்த்தைகளின் கூட்டோ அஃதே போன்றதே எங்களின் கூட்டும் என்பதைச் சொல்லாமற் சொன்னதோ உன்றன் கவிதை, என் அன்பு நண்பா!

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    நல்ல கவிதை. தலைப்பு தாமதம்.
    நானும் தாமதம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  10. பாராட்டிய அத்தனை உள்ளங்களுக்கும் என் அன்பு நன்றி

    ReplyDelete
  11. தாமதமாக வந்தாலும் தரமாகத்தான் பதிந்துள்ளிர்கள் அருமை.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers