.

Pages

Friday, March 29, 2013

சவப்பெட்டிப் பேசுகிறேன் :

ஆவி அடங்கியதும் ஆணிகளே பூட்டாகச்
சாவி தரப்படாமல்  சாத்துவரே கூட்டாக!

பூட்டில்லாப் பெட்டிப் பூவுலகில் வேறுண்டா?
காட்டிவிட்டுக் கதையுங்கள் கல்லாப் பெட்டியே!

நீர்க்குமிழி நேரமுள்ள  .நிலையில்லா உலகம்தான்
ஆர்க்குமிதில் பேதமின்றி அடக்கம்தான் சவப்பெட்டி!

நாவடக்கம் எங்குமில்லை நான்பார்த்தப் பெட்டிகளில்
நானடக்கம் செய்வதனால் நான்மட்டும் கெட்டியாமே!

சென்ற நிமிடம் சிறப்பான கட்டில்
சென்ற உடனே  சவப்பெட்டித் தொட்டில்!

நாற்காலிக் கட்டிலில் நாளை கழிக்கும் நண்பர்காள்
நாலுபேரும் உங்களை நாளை சுமப்பர் என்பெட்டி!

வருபவர்க்கு இடம்வேண்டி வசிப்பவரை இடமாற்றித்
தருவதாற்றான் சவப்பெட்டித் தரைவழியின் புகைவண்டி!

என்னை உணராமல் என்னதான் அடைவீரோ?;
விண்ணை உணரத்தான் வந்துளேன் அறிவீரோ?

மரணமென்னும் கைப்பான மருந்தால் மயக்கத்தின்
தருணமதில் நீள்தூக்கம் தருமிச் சவப்பெட்டி!

கல்லாப் பெட்டிகளே  வாக்குப் பெட்டிகளே
எல்லாப் பெட்டிகளும் எங்கே போவீர்?

மயக்கம் கொட்டிட மாற்றம் செய்தவரே
தயக்கம் விட்டுநீ தங்குவாய் என்னிடமே!

எத்தனையோ வங்கியில் இட்டதெலாம் பங்காகும்
இத்தரையில் தங்கிட இவ்விடமே பங்காகும்!

உங்களின் பெட்டிகள் உங்களோடு வாரா
உங்களின் நண்பனாய் உற்றவனும் நானாம்!

செல்லாக் காசுகளாம் செல்லரிக்கும் உடலுக்குக்
கல்லாப் பெட்டியாகிக் கல்லறையாம் திடலுக்குள்!

என்னைப் பார்த்து அழுதவர்  வாக்குப்பற்றி
எண்ணிப் பார்க்கும் பொழுதில் வாக்குப்பெட்டி!

அஞ்சா நெஞ்சனும் அமைதியாய் எனக்குள்
தஞ்சம்  அடைந்திடும் அஞ்சறைப் பெட்டி!

எல்லாமே எனக்குள் இருப்பதால் தானே
இல்லாத பெருமை உங்களுக்கு வீணே!

கைக்கூலி வேண்டாம் கல்லறைப் பெட்டியில்
மெய்க்கூலி வேண்டும் மேனியின் நற்செயல்!

வாக்கெதுவும் இதுகாறும் வாய்திறந் துதிர்த்ததில்லை;
வாக்குகளை  விலைபேசும் வாக்குகளை உடையவரே!

வாக்குப் பெட்டி வாங்குவது  இலவயம்
கல்லாப் பெட்டிக் காட்டுவது தள்ளுபடி

அஞ்சறைப் பெட்டி அளிப்பது இணைப்பு
நெஞ்சாரச் சொல்லும் நானென்ன கேட்டேன்

சமாதான இடத்தில் சமாதான வழியும்
சமாதான மொழியில் சவப்பெட்டி மொழியும்!

நானா நீயா நாளும் போட்டி
நானோ நியா யத்தின்  பெட்டி

ஓயா துழைத்தவர் ஓய்வினைச் சுவைப்பாரே;
ஓயத் தரப்படும் ஓய்வறைச் சவப்பெட்டி!

அல்லும் பகலும் அயரா உழைப்பால்
அல்லல் படுமே  அனத்துப் பெட்டிகளும்!

நாடி ஒடுங்கும் நாடகம் கட்டுக்குள்
ஆடி அடங்கும்; ஆறடிப் பெட்டிக்குள்!

ஆறடி என்பதே என்றன் சிறப்பு
கூறடி மன்பதைக் காணும் இறப்பு!

அஞ்சறைப் பெட்டிக்கு அளவானச் சிறியனவாய்
அஞ்சறை மட்டுமே அமைந்தாலே பெருமையோ?

கல்லாப் பெட்டிக்குக் குழிகளாய்ச் சிற்றறை
வாக்குப் பெட்டிக்கு வாய்கிழிந்தச் சுற்றறை

நாடாளும் அரசரெலாம் நடந்திட்டார் வம்பாய்;
சாடாமல் அடங்கிடுவர் சவப்பெட்டிப் பாம்பாய்!

கோட்டைக் கட்டியவர் கொடிகட்டிப் பறந்தாலும்
வேட்டைச் சேட்டையர்க்கும் வருமிந்தச் சவப்பெட்டி!

கோடிக் கணக்கினிலே குவலயத்தை வளைத்தாலும்
கோடித் துணியுடுத்திக் குடிபுகுவோம் சவப்பெட்டி(க்குள்)!

ஆசையான நிலவினிலே அமாவாசைச் சவப்பெட்டி;
ஓசையாவும் அடங்குதலே உதட்டுக்குச் சவப்பெட்டி!

அதனாலே,
ஓசையின்றி ஒதுங்கிக் கொள்க
ஓரத்தில் அமர்ந்திடுக எல்லாப் பெட்டிகளும்
நான் மட்டும் நட்ட நடுவில்
நன்றாக அலங்கரிக்கப்பட்டு
உங்கள் உடலோடு ஒட்டியிருப்பேனே !

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

23 comments:

 1. மறுமை சிந்தனையை வரவழைக்கின்ற அருமையான பதிவு

  வாழ்த்துகள் கவிக்குறளுக்கு

  ReplyDelete
 2. 1. நான் மிகப்பெரிய பணக்காரன். எனக்கு ஏக்கர் கணக்கில் நிலபுலன் உள்ளது. ஆகவே எனக்கு மரணம் வரவே வராது எனச் சொல்லவோ...

  2. நான் சமுதாயத்திற்குப் பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவன். ஆகவே எனக்கும் மரணம் வராது என்று சொல்லவோ...

  3. நான் பல முறை ஹஜ் செய்துள்ளேன்; தினமும் தொழுவேன்; பெரிய தாடி வைத்துள்ளேன்; அழகியத் தொப்பி அணிந்துள்ளேன். ஆகவே எனக்கும்தான் மரணம் வராது என்று சொல்லவோ...

  4. அட போங்கங்க... நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க... நான் யாருக்கும் எந்தப் பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனுங்க... ஆகவே என்னை மரணம் அண்டவே அண்டாதுங்கோ என்று சொல்லவோ...

  5. மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான். தினமும் வீடும் மஸ்ஜிதுமாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன். வேண்டும் என்றால், எனது நெற்றியைப் பாருங்கள். கருமை நிறத் தழும்பு அதில் பதிந்து இருக்கும் என்று சொல்லவோ...

  6. என் கணவனுக்கு நல்ல பணிவிடை செய்வதிலும், என் பிள்ளைகளைப் நன்கு பராமரிப்பதிலும் சிறந்த பெண்ணாக விளங்குகிறேன் ஆகவே எனக்கும் மரணம் உடனடியாக வராது என்று சொல்லவோ...

  7. வரதட்சணையாக 100 பவுன் நகைகளோ, மனைக்கட்டு நிலத்தில் புதிய வீடோ, புதிய வாகனமோ, சீர் வரிசைகளோ என எதுவும் பெண் வீட்டிலிருந்து நான் வாங்கவே இல்லை. ஆகவே எனக்கும் மரணம் வராது என்று சொல்லவோ...

  8. வட்டி வாங்குதல், பொய் சொல்லுதல், திருடுதல், மது அருந்துதல் போன்ற ஒழுக்கம் தவறிய செயல்களை நான் செய்ததில்லை. ஆகவே எனக்கும் மரணம் வராது என்று சொல்லவோ எவராலும் முடியாது.

  இது போன்றவற்றைச் சொல்லி மரணத்தைத் தள்ளிப்போட முடியாது. மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று! இம்மரணம் நிகழக்கூடிய நேரத்தையோ, நாளையோ, இடத்தையோ மாற்றி அமைக்க யாராலும் முடியாது. அது எப்போது ? எங்கே ? எப்படி ? எந்த நிமிடத்தில் ? என்பதை யாராலும் கணித்துச் சொல்லவும் முடியாது. இறைவன் ஒருவன்தான் அதை நிர்ணயிப்பான்.

  ReplyDelete
 3. மரணத்தின் நிலைக்கு வந்துவிட்டால்....

  1. இனி நீங்கள் மையித் என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்!

  2. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் மரண அறிவிப்புத் தகவல் அறிவிப்புச் செய்யப்படும்!

  3. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து, உங்களின் மையத் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.

  4. சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்.

  5. ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்!

  6. வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் பெட்டியில் உங்களை (மையத்தை) வைத்து கப்ர்ஸ்த்தான் நோக்கிக் கொண்டுச் செல்லப்படுவீர்கள்.

  7. கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம், முன்று அடி அகலம், ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழியில் அடக்கம் செய்யப்படுவீர்கள்!
  8. “உன் இறைவன் யார்? உன் மார்க்கம் எது? உன் வழிகாட்டி ( நபி ) யார்? போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்! பதில் சொல்லத் தயாராகுங்கள்!

  “உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”
  என்ற அறிவிப்புப் பலகை வாசித்த நினைவு உண்டுதானே ?

  ReplyDelete
  Replies
  1. என் சிந்தனையிற்பட்டச் சிறியதோர் கவிதைக்கு நீண்டதோர் விளக்கம் அளித்து என் கவிதையின் கருவுக்கு வலுசேர்த்தமைக்கும். உடன் பதிவில் கொண்டு வந்தமைக்கும் விழிப்புணர்வு வித்தகர் அவர்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்!

   Delete
 4. ஞானிகளின் பார்வை ..

  ஊத்த சடலமடி ..

  உப்பில்லா பாண்டமடி ..

  என்று நம் உடலை பற்றி பாடிய பாடல்

  நினைவுக்கு வந்து சென்றது ..

  எல்லா பெட்டிகளும் .சவ பெட்டிகளிடம்

  வந்து சேர வேண்டும் ..என்பதை சரியாக சொன்னீர்கள்

  கவியன்பரே ..விழிப்புணர்வின் தாக்கம் நன்றாக தெரியும் கவி

  ReplyDelete
  Replies
  1. மரணம் பற்றிய அறிவே பெரும் ஞானம் என்பதாற்றான் ஞானிகளின் பாடல்களில் மரணத்தை நினைவூட்டிக் கொண்டேயிருந்திருக்கின்றார்கள் என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டியமைக்கு அன்பர் சித்தீக் அவர்கட்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.

   Delete
 5. கவியன்பரின் சவப்பெட்டி
  காலம் தொற்று
  உலாவரும்
  மெய்ப்பெட்டி

  உயர்ந்தோனும்
  தாழ்ந்தொனும்
  ஒருசேர
  உறங்கிடும்
  உன்னதப்பெட்டி


  சகலரும்
  சுமக்குமுன்
  சக நன்மைகள்
  சுமந்திட்டு
  சவப்பெட்டிக்குள்
  செல்வோமாக.!

  ReplyDelete
  Replies
  1. மெய்சா கூறிய
   மெய்ப்பெட்டியால்
   கவிதைக்கு
   வலுசேர்க்கும் கெட்டியாக!

   வாழ்த்துக்கவி வடித்துப் பின்னூட்டமிட்ட கவிஞர் மெய்சாவுக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

   Delete
 6. //அஞ்சா நெஞ்சனும் அமைதியாய் எனக்குள்
  தஞ்சம் அடைந்திடும் அஞ்சறைப் பெட்டி!//

  Migap piditha varigal.... Sabash...

  ReplyDelete
 7. வழக்குரைஞரின் மனத்தினில் வயப்பட்ட வரிகளால் என் கவிதையும் பெருமிதம் அடைகின்றது! மிக்க நன்றி.

  ReplyDelete
 8. பதிவுக்கு நன்றி.

  தலைப்பு சவப்பெட்டி.

  பெட்டிகளில் எத்தனை?
  அத்தனையும் அடங்குவது சவப்பெட்டிக்குள்.
  மனிதனும் ஒரு வகையில் பெட்டியே.

  இதையெல்லாம் மனிதன் உணருவானா?
  மனிதன் உணருகின்றான்,
  மரணம் வரும் என்று நம்புகின்றான்,
  மரணத்திற்குப்பின் நடப்பதையும் நம்புகின்றான்,
  அதை நினைத்து பயப்படுகின்றான்,
  பின் ஏன் இவ்வளவு அட்டூழியம்?

  இங்குதான் பிரச்சனையே,
  அந்த பிரச்னையை சொல்லிவிடவா?
  சொல்லிவிட்டால் அப்புறம்?
  வேண்டாம், நமக்கேன் வம்பு.

  நல்ல கவிதை, மேலும் தொடர பாராட்டுக்கள்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. மரணத்தை மறந்து மனிதன் செய்யும் அட்டூழியங்களை நினைவுபடுத்திய மச்சானுக்கு நன்றி.

   Delete
 9. நீர்க்குமிழி நேரமுள்ள .நிலையில்லா உலகம்தான்
  ஆர்க்குமிதில் பேதமின்றி அடக்கம்தான் சவப்பெட்டி!///

  நிலையில்லா வாழ்க்கை, நீர்க்குமிழி வாழ்க்கை.உங்களுக்கு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லை மறுமையை நினைக்கையில்

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் உங்களின் உள்ளத்தை உருக வைத்து, மறுமையை எண்ண வைத்ததனாற்றான் வாழ்த்துச் சொல்லவும் மனமில்லை என்ற உங்களின் நல்ல மனம் வாழ்க; அல்லாஹ்வின் அருள் சூழ்க என்று துஆச் செய்தவனாக வருகைக்கு நன்றியும் கூறுகிறேன்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 10. இறக்கும் முன் உனக்கு இறைவனை கடன்காரனாக ஆக்கிவிட்டு செல் *** பெர்னாட்ஷா

  ReplyDelete
 11. It is one of the finest poem of brother Abul Kalaam

  Surely God will raise all the dead. But God has His own plan of things. A day will come when the whole universe will be destroyed and then the dead will be resurrected to stand before God. That day will be the beginning of a life that will never end, and on that day every person will be rewarded by God according to his or her good or evil deeds.

  ReplyDelete
  Replies
  1. Jazaakkallah khairan, sister Parvenn Ayesha!

   Sure. I appreciate your EEMAAN (faith) and trust you are fitful to do DA'WAA (propagating Islam) to your friends since you have deserved the knowledge of Islam as well as language power.

   May Allah Bless you!

   Delete
 12. நமக்கு கிடைக்கும் கடைசி பயண பெட்டி அதுதான் சவப்பெட்டி. வரிகளின் மெல்லினம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நேசர் ஹபீப் அவர்கட்கு நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 13. அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்றார் போல் உள்ளது அய்யாவின் ஆக்கம்.

  அநேகமாக நம்மில் அனைவருக்குமே "மரணம்" என்ற சொல்லைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது. சிலருக்கு தங்கள் மரணம் குறித்து கவலை இல்லாமல் இருந்தாலும், தங்களுடைய நண்பர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினரின் மரணம் குறித்து பயம் ஏற்படுகிறது.

  மரணம் அடைந்த ஒருவர் திரும்பிவராத இடம் ஒன்றிக்கு செல்கிறார். ஒருவரின் மரணம் அவருடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த துக்கத்தை அளிக்கின்றது. ஒருவரின் மரணம் அவரைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருக்கும் சொல்ல முடியாத கஷ்டத்தை அளிக்கிறது. ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அழகாக இருந்தாலும் சரி, அழகற்றவனாக இருந்தாலும் சரி - அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. மனங்கள் வேறுபட்டாலும் , மதங்கள் வேறுபட்டாலும் மரணம் என்பது எல்லார்க்கும் ஒன்றே என்பதை நினைவூட்டிய தமிழன் அய்யா அவர்கட்கு நன்றி.

   Delete
 14. உங்களின் மனப்பெட்டிக்குள் எத்தனை சிறப்பு பெட்டிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மரப்பெட்டியான சவப்பெட்டிக்குள் உயிரற்ற உடலுண்டு; மனப்பெட்டிக்குள் உயிருள்ள கவிதைகள் உள என்பதைச் சுட்டிக் காட்டிய சகோதரர்த் திண்டுக்கல் தன்பாலன் அவர்கட்கு நன்றி

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers