.

Pages

Thursday, March 14, 2013

காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!

அண்மையில் இராமநாதபுரம் சென்று வந்தோம். அங்குள்ள ஒரு கல்லூரியில் எனது  தோழர் முதல்வராகப் பணியாற்றுகிறார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அவருடைய மேசையின் மேல் கையால் எழுதப் பட்ட கவிதை ஒன்று  கிடந்தது. கவிதை வடிவம் என்றாலே அது  நமது கண்களைக் கவர்ந்துவிடுமே! அனுமதி பெற்று  எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

அது ஒரு கவிதை மட்டுமல்ல. ஒரு மாவட்டத்தின் கதறல். அந்தக் கதறலில் நாமும் தெரிந்து கொள்ள வேண்டிய பல உண்மைகள் இருந்தன. அத்துடன் நாமும் இப்படி இவருடன் சேர்ந்து  கதற வேண்டிய  நிலையில்தான் இருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைக்கப்பட்டு இன்று தமிழகமெங்கும் தழைத்தோங்கி வளர்ந்திருக்கும் காட்டுக் கருவை பற்றிய செய்திகள் நிறைந்த கவிதை . நான் படித்துப் பார்த்த  இந்தக் கவிதை பல உண்மைகளைத் தோண்ட என்னைத் தூண்டி விட்டது.

இன்றைய தண்ணீர் பற்றாக்குறைக்கும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்க் கொண்டே வருவதற்கும்   காலாகாலத்தில் மழை பெய்யாத நிலைமைகளுக்கும் காட்டுக் கருவைச் செடிகளின் வளர்ப்பும் வளமும் காரணமாக இருப்பதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொண்டேன் ; தெரிந்து கொண்டேன். அவற்றைப்  பகிர்ந்து கொள்வோம்.

அதற்கு முன் ஒரு அறிமுகத் தகவல் இந்தக் காட்டுக் கருவைச் செடிகள் அறிமுகப் படுத்தப் பட்டது கல்விக் கண் திறந்த காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் என்பதாகும்.   இராமநாதபுர மாவட்டத்து மக்களின் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த விஷச்செடியின் விதைகள் விளைந்து காடாகி பல விபரீதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் கவிதையைப் படிக்கலாம்.

தலைப்பு: மாறும் தொன்மம். 
தெற்கத்திச் சீமையை தெம்பாக்க 
மரம்  வளர்ப்புத் திட்டம் தந்த 
மகராசரே !

"கல்விக்கண் திறந்தவரு 
கண்மாய்குலம் கண்டவரு" னு 
கட்சிக்காரங்க பாடுற பாட்டைக் 
காதுகொடுத்துக் கேட்டிருக்கேன் 
காமராசரே !

நீ தந்த திட்டத்தால் 
நாங்க படும் பாட்டையும் 
கோவிச்சுக்காம கொஞ்சம் கேளு !

வருணபகவானுக்கு வழிதெரியாத 
எங்கஊருக் காடு கழனியில் 
வேலை  எதுவும் இல்லாம 
வெட்டியா இருந்த எஞ்சனங்களுக்கு
வெட்டிவேலை தந்த 
கெட்டிக்காரரே!
ஆமா.....

நீ தந்த கருவேலவிதைகள் 
உன்புகழச் சொல்லிச்சொல்லி
உன்புகழச் சொல்லிச்சொல்லி
'ஒய்யாரமா' வளந்திருக்கு 
அதுனாலே நீ
கர்மவீரர் மட்டுமல்ல 
கருவேலரும் தான் !   

வெறகு வெட்டி மூட்டம் போட்டு 
வருமானத்தை பெருக்கச் சொல்லி 
நீதந்த வெதைவித்துக்களை 
அறுவடைசெய்ய
எஞ்சனங்களும்
வெட்றாங்க... வெட்றாங்க
வெட்டிக்கிட்டே இருக்காங்க
அருவாளும் அழுகுது 
இடைவேளை கேட்டு !

அண்ணா தந்த அரிசி கூட 
அள்ள  அள்ளக் குறையுது 
ஆனா-
நீ தந்த அட்சய மரம்...
அடடா...!

உன்னால நான் படிச்ச பாடம் 
"வெட்ட வெட்ட 
வேகமாத் தழையிறது 
வாழைமரம் மட்டுமில்ல 
நீ தந்த 
வேலமரமும் தான்!"

நீதந்த அதிசய மரங்கள் 
என்னைக்காவது ஏமாந்ததனமா 
வழிதவறிப் பெய்யுற 
கொஞ்ச நஞ்ச மழைத்தண்ணியவும்
அடையாளம் தெரியாத அளவுக்கு 
அப்பவே சாப்பிட்டுருதே..! 

ஒருகாலத்துல –
முத்துமுத்தா நெல்லு வெளஞ்ச
எங்க சேதுசீமையோட 
சொத்துக்களைக் காப்பாத்த- 
வறட்சியத் தாங்குற 
புரட்சியச் செஞ்ச கர்மவீரரே! – நீ 
என்னைக்குமே எங்களுக்குக் 
'கர்மா வீரர்' தான்!

அரசியல் வளர்ச்சிக்கு
நீதந்த ' K Plan '  ஐ 
ஆட்சியில மாறிமாறி 
அமருறவங்க நினைவுல 
இருக்கோ இல்லையோ 
நீ தந்த இந்த ' K Plan ' ஐ 
மாத்தி- எங்க 
மண்ணைக் காக்குற திட்டம் 
மருந்துக்குக்கூட இல்லை!
காந்திக்குக் கதர் மாதிரி 
ஒருவேளை – உன் 
நெனவுக்கு அடையாளம்னு 
நெனக்கிறாங்களோ என்னமோ ...!

இன்பச்சுற்றுலான்னு    
கேட்டிருக்கேன் – ஆனா 
என்னைக்காவது 
இராமநாதபுரத்துப் பக்கம்
யாரும் வந்ததுண்டா?
எது எப்படியோ –
ஆனை கட்டிப் போரடிச்ச 
பாண்டியனார் தேசத்துக்கு 
இப்போ 

' தண்ணியில்லாக்காடு'னு 
பேருவாங்கித் தந்த 
பெருமையெல்லாம் 
உங்களைத்தான் சேரும்...
இத்தனைக்கும் உத்தமரே – இது 
நீ பொறந்த மண்ணு இல்லையா...!

இதுக்குமேல உன் புகழச் சொன்னா
'இவன் ஏதோ 
சாதிக்கலவரத்த தூண்டுறான்டா ' னு 
சங்கத்தைக் கூட்டி சிலபேரு 
சந்திக்கு வந்துருவாங்க
ராசரே...!
நேரமாச்சு ,
நான் போறேன் வெறகு வெட்ட 

- பெயர் சொல்ல விரும்பாத மண்ணின் மைந்தரான ஒரு பேராசிரியர். #

காட்டுக் கருவேல மரங்கள் ! காட்டுக் கருவை என்றும் வேலிக்கருவை என்றும்   இதை அழைக்கலாம். Proposis Juli Flora என்று  தாவர இயலில் இதை அழைக்கிறார்கள்.  சுட்டெரிக்கும் வெயிலும் வறட்சியும்  தலைவிரித்துத்  தாண்டவம் ஆடினாலும் என்றும்  பசுமையாக  இருக்கும் இந்த மரத்தினையும் செடிகளையும்  பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்கமுடியாது. விதைபோடாமல் நீர் ஊற்றாமல் பராமரிக்காமல்  ஒரு தாவரம்   தழைத்து வளருமென்றால் அது இதுதான்.  

கொடியவைகள்தான் தமிழ்நாட்டில் இலகுவாக தழைத்து வளரும் என்பதற்கு இந்தத் தாவரமும் ஒரு உதாரணம்.  தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்  பரவி வியாபித்து வளர்ந்து கொண்டு இருக்கிறது இந்த ஒரு மரம். எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம்.  சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது . 
தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று வல்லுனர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.  இந்தக் காட்டுக்  கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியவை. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு காட்டுக் கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடிநீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவுபெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னைச்  சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறதாம். காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும் எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுவதாக உணரப் படுகிறது. 

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கியகாரணம் என்பது புரியவேண்டிய யாருக்கும் இதுவரை புரியவில்லை.

ஆனால் இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். தங்கள் வீடுகளுக்கும் தோப்புகளுக்கும்  வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்தமரத்தை வளர்த்துவருகின்றனர். அத்துடன் இம்மரத்தை வெட்டி மூட்டம் போட்டு எரிபொருள் கரியாக மூட்டை மூட்டையாக பெரு நகரங்களின் தேநீர்        விடுதிகளின் பாய்லரில் போட அனுப்புகிறார்கள். இந்த மரம்  நம் வாழ்வை கரியாக     ஆக்குகிறது என்கிற உண்மையையும்  இந்த மண்ணின் நீர் வளத்துக்கும்  பேராபத்தை உருவாக்குகிறது  என்பதையும்  அவர்கள் அறியாது  இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும்  பயன்படாது. இதன் காயை வெட்டிப் போட்டு சாம்பார் வைக்க முடியாது. இதன் பூவைப் பறித்துப் போட்டு ரசம் வைக்க முடியாது. பழங்களைப் பறித்து பைகளில் போட்டு யாருக்கும் பரிசளிக்க முடியாது. ஆடுமாடுகள் கூட இதன் பக்கம் நெருங்காது. இதன் ஒரே உபயோகமாக நாம் காண்பது நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள் நடக்கும் பாதையில் இதன் கிளைகளை வெட்டிப் போட்டு இடையூறு செய்யலாம் என்பது மட்டுமே.  வேறொரு முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடுமாம்,  கருத்தரிக்காதாம்.   ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமேஅது ஊனத்துடன்தான் பிறக்கும். கருவைக் கலைக்கும் மரத்துக்கு கருவை மரம்  என்று பெயர் வைத்து இருப்பதே ஆச்சரியமானது. 

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில்வேறு எந்தச்  செடியும் வளராது .  தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடு கட்டுவதும் இல்லை. தேனீக்கள் கூடுவதும் இல்லை.  காரணம் என்னவென்றால் இந்த வேலிக்கருவை  கருவேல மரங்கள், ஆக்சிஜனை  மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன , ஆனால் கார்பன் டை ஆக்சைடு என்கிற கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புறக்  காற்று மண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள்.  சில ஆண்டுகளுக்குமுன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்தமரத்தை அவர்கள் தேடித்  தேடி அழித்து இருக்கிறார்கள்.  அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது. நமதூர் வனத்துறையினர் குருவி பிடிப்பவர்களை சுடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோஅதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம். அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த காட்டுக்  கருவேல மரம் தான். அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணின் மாண்பைக் காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி ! தமிழ்நாட்டில் அகற்றப்பட வேண்டியவை அரசியலிலும் சமுதாயத்திலும் மட்டும்தான் என்று நினைக்க வேண்டாம். மண்ணிலும் வேரூன்றி இருக்கின்றன.  ஆகவே கருவேலமரங்களை  கண்ட இடங்களில் உடனே ஒழிப்போம் ! நம் மண்ணின் தன்மையைக் கட்டிக் காப்போம் !

# இந்தக் கவிதையை எழுதிய கல்லூரியின் பேராசிரியர் " உயிர் வாழப் போராடும் கருவாடு " என்கிற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிட இருக்கிறார். இந்தக் கவிதைத் தொகுப்பு இராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்வின் பல பரிமாணங்களைப் பேசும் .  நாமும் பகிர்வோம்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

22 comments:

  1. நல்லதோர் தகவல் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மரத்தால் நன்மை என்று இதுவரையில் கருதிய நமக்கு சற்று அதிர்ச்சியளிப்பதாகவே இருகின்றன !

    நான் வசிக்கும் பகுதியில் காட்டு கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளது அவற்றால் நன்மை இருக்கின்றனவா என்றால் இல்லை என்றே கூறலாம். சுகாதார கேடை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. இதற்கு மாற்றாக வேம்பு, ஆலமரம், அரச மரம் போன்ற பயன்தரக்கூடிய கன்றுகளை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முயற்சிக்கலாம்.

    இதுவரையில் யார் சிந்தனையிலும் படாத நல்லதொரு விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கருவேல மரத்தின் தீமைகளை இக்கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

    இத்தனை காலமாக தெரியாத ஒரு உண்மையை தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    இனி பயனளிக்கக் கூடிய மரங்களை வளர்த்து பயனடைவோமாக..!

    ReplyDelete
  4. சித்திரை நோக்கி வந்த அக்கினி நட்சத்திரமோ
    எப்பொழுதாவது தோன்றும் வால் நட்சத்திரமோ
    அன்சாரி அண்ணன் அவர்கள்!?
    என்றென்றும் நிலைத்திருக்கும் விடி வெள்ளியாய்
    இத்தளத்தில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்


    வேலிக்கருவை ஒரு டன் 2800
    கருவேலம் 3300

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    இதுவரை நான் கேட்காத, பார்க்காத, பேசாத, எழுதாத, சிந்திக்காத ஒரு ஆக்கத்தை தந்து என்னை ஒரு மாதிரியாக்கி விட்டீர்கள்.

    இவ்வளவு கொடுமை தனம் கொண்ட மரத்தைப்பற்றி கொடுமை இல்லாத வார்த்தைகளைக்கொண்டு வரைந்து விட்டீர்கள், உண்மையில் இதை பாராட்டினால் மட்டும் போதாது, விழிப்புணர்வோடு செயலில் இறங்க வேண்டும்.

    மரம் வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை ஆனால் வெட்டுவது மிகவும் சுலபம், இது மாதிரி துரோகம் செய்யும் மரங்களை கண்டால் தாமதிக்காது வெட்டி அடியோடு அகற்றி விடவேண்டும்.

    உண்மை சம்பவம், என் வீட்டிற்கு முன் ஒரு சிறிய செடி வளர்ந்து கொண்டு இருந்தது, இந்த ஆக்கத்தை படித்தவுடன் அடியோடு அகற்றிவிட்டேன்.

    நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் ஆக்கத்தை தந்தீர்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு.

    இது மாதிரி சிந்தனையைத் தூண்டும் ஆக்கத்தை தருமாறு கடும்பசியுடன் கேட்க்கின்றேன், தருவீர்களா?

    நம்பிக்கையுடன் இருக்கின்றேன்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஆக்கம் மிக நன்று

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள், வாழ்த்துக்கள்.

    ஆனால் கருவேலம் என்பது வேற, நீங்கள் சொல்வது சீமைக் கருவேலம். கருவேலம் நம் மண்ணின் மரம், சீமைக் கருவேலம் போல் தீமையானது அல்ல.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் கருவேலம் என்பது வேற, நீங்கள் சொல்வது சீமைக் கருவேலம். கருவேலம் நம் மண்ணின் மரம், சீமைக் கருவேலம் போல் தீமையானது அல்ல.
      நன்றி //

      வருகைக்கும / கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே !
      கருவேலம் - சீமைக் கருவேலம் என்ன வித்தியாசம் என்று சற்று தெளிவாக கூறுங்கள் நண்பரே

      Delete
    2. கருவேலம் is Acacia nilotica, native to india,சீமைக் கருவேலம் is Prosopis juliflora , native of mexico

      Delete
  8. திரு ஜீவா பரமசிவம் அவர்களின் திருத்தக் குறிப்புக்கு நன்றி.

    நான் காட்டுக் கருவேலம் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். சீமைக் கருவேலம் என்பதும் அதுவாகவே இருக்கலாம். காரணம் இதன் விதைகள் வெளிநாட்டில் இருந்து வந்தவையாம். அதைத்தான் கவிஞர் கோடிட்டுக் காட்டுகிறார்.

    வெறும் கருவேலம் என்று நீங்கள் குறிப்பிடுவது புரிகிறது. அது அங்கிங்கு ஒன்று இரண்டு நிற்கும். இப்படி தனது கொடிய சாம்ராஜ்யத்தைப் பரப்பாது. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  9. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. பெயரறியாத பேராசிரியருக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. இந்த மரம் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன் கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  11. அற்புதமான ஆக்கம்

    கருவேல மரம் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்தியாவின்

    நட்புறவு நாட்டின் உதவியால் வறட்சிபகுதிகளுக்கு ஏற்ற தாவரம்

    என்ற ஒரே காரணத்திற்காக அறிவுறுத்த பட்டு வளர்க்கபட்டவை

    என்று கேள்வி பட்டிருக்கிறேன் ..

    ReplyDelete
  12. I ve written a related article bro. based on my xperience as a vet. doctor in these dry areas http://walkingdoctorcom.blogspot.in/2013/02/blog-post.html

    ReplyDelete
  13. கடும் கண்டனத்திற்குறிய பதிவு.
    நீங்கள் காட்டிலோ அல்லது அதன் வளிம்பில் வாழ்வதால் காட்டு விலங்குகள் உங்களது வளர்ப்பு பிராணிகளையோ அல்லது மனிதர்களையோ அடித்து சாப்பிடுகிறது என்கிற காரணத்தால் அவ்விலங்குகளை அழிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏனென்றால் நீங்கள் அவைகளுக்கான உரிமையான எல்லகளுக்குள் வாழ்கிறீரகள் என அர்த்தம். எனவே நீங்களதான் அவைகளின் வாழ்விடங்களை விட்டு அகன்று விலகி வாழ வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. எல்லா உயிரினங்களைப்போல் மிருகங்களும் இப்பூமியின் மரங்களும் மதிக்கப்பட வேண்டியவை. அது மட்டுமில்லாமல் காட்டு மிருகங்கள் போல் காட்டின் மரங்களின வாழ்விடங்களை மண்ணை மனிதன் தன் சுய நலத்திற்காக அத்துமீறி ஆக்கிரமித்து கடைசியில் இவைகளின் வாழ்வாதாரத்தை அழித்து இயற்கையை மதியாமல் உலக அனத்து உயிர்களுக்கும் அழிவை தேடி வருகிறான். எந்த காரணத்தை கொண்டும் எந்த மரத்தையும் மனிதன் அழிக்க கூடாது. தண்ணீர் இல்லாத போதும் வரண்ட நிலத்திலும் அணல் கக்கும் வெப்ப நிலைகளை தாண்டியும் உயிர் வாழ பக்குவப்ட்ட இது போன்ற அற்புத மரங்களை மடத்தனமாக அழிக்க அறிவுரை தருவது உங்கள் அறியாயமைத்தான் காட்டுகிறது. மனிதன் இயற்கைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இயற்கையை மனிதன் ஒருபோதும் தன் சுய இன்பத்திற்காக மாற்ற முயற்சிக்க கூடாது.
    மரங்களை அழிக்க தூண்டும் கருத்துகளை கொண்ட இப்பதிவிறகு மீண்டும் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் - கருத்துக்கும் மிக்க நன்றி !

      மனிதர்களில் தீயவர்கள் - நல்லவர்கள் இருப்பது போல் மரங்களிலும் தீயவை இருப்பது இயற்கையே ! இவற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது என்பது கடமை... எப்படி நம் நாட்டை நம் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்கின்றோமோ அதுபோல...

      காட்டுக் கருவேலமரங்களின் நன்மைகள் என்ன ? என்பது பற்றி சற்று தெளிவாக கூறுங்களேன்.

      Delete
    2. பிறப்பில் மனிதர்கள் கள்ளம் கபடமற்ற பரிசுத்த பிறவிகளாகவே இம்மண்ணில் உருவெடுக்கின்றனர். கால்ப்போக்கில்தான் இவர்களது குணங்கள் மாறுபடுகின்றன. மரங்கள் அப்படியல்ல.

      மனிதர்களுக்கு காட்டுக்கருவேல மரங்களினால் நன்மை என்னவென்று உங்களை யார் எதிர்பார்த்துன் ஏங்கி இருக்க கேட்டார்கள். நீங்களாக உங்களுக்குள் வளர்த்துக்கொண்ட வீண் மேலோட்ட தேவைகளுக்கு இது போன்ற மரங்களோ விலங்குகளோ உதவவில்லை என்கிற காரணத்திற்காக அவைகளை அழிக்க கூடாது. மரங்கள் அனைத்தும் இம்மண்ணில் தம் வாழ்க்கையை சரிபட நடத்தி வருகின்றன. மரங்களுக்கு உயிர் உள்ளது என்பதை மறந்துவிட கூடாது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மரங்கள் இம்மண்ணில் பிறவி எடுக்கவில்லை.

      ஊரில் கிராமங்களில் பரம ஏழைகளோ அல்லது புத்தி சுவாதீனம் அற்ற மற்றும் ஊனமுற்றவர்களால் சமுதாயத்திற்கு எந்த வித பலனும் இல்லை என்பதாலும், மேலும் இவர் போன்றவர்களால் வீண் செலவு, பராமறிப்பு பொறுப்புகள் அதிகம் என்கிற காரணத்தால் அவர்களை அழித்துவிட முடியுமா?

      கேஸ் மற்றும் மின் அடுப்பு வசதிகள் இக்காலங்களில் இது போன்ற கருவேல மரங்கள் தேவைப்படுவதில்லை. 10, 20, 30 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற மரங்களின் உதவியுடன்தான் அக்கலத்தைய சராசரி மக்களின் வீடுகளில் சமையல் செய்யப்பட்டது. இன்று, இவைகளின் தேவைகள் ஓரங்கட்டப்பட்டதால் இம்மர இனமே தேவையில்லை என்கிற அளவுக்கு மனிதன் அவைகளை ஊதாசீனபடுத்துவது மனிதனின் நன்றி கெட்டத்தனத்தையே காட்டுகிறது.

      மனிதனுக்கு ஒருவனுக்கு மட்டும் இதனால் என்ன பயன் என தன் தொப்புளை மட்டும் சுற்றி ஆராய்ச்சி செய்து தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் இம்மரத்தை சார்ந்து வாழும் எறும்புகள், புழுக்கள் இம்மர நிழலில் பாதுகாப்பில் வாழும் பறவைகள் போன்ற ஏனைய உயிரினங்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதுவதும் சிறந்ததாக் இருக்கும்.

      Delete
  14. Iqbal M. Salih சொன்னது…
    'கண்ணப்பரின் நம் நாட்டு மூலிகைகள்' என்ற அருமையான நூலில் இந்தக் கொடிய கருவேலமரத்தின் தீமைகள் பற்றி, முன்பு படித்திருக்கிறேன். விழிப்புணர்வு தரும் பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர்.

    ReplyDelete
  15. The WORLD ENVIRONMENT ASSOCIATION recognize a list of 10 trees which are all place an important role in making the ENVIRONMENT HARMFUL gives the first place to the BABOOL TREES (ie) KARUVELAM TREES Termed in tamil.This trees can able to absorb more moisture present in air surrounding it and emits only low oxygen but emits more carbondioxide to the atmosphere.
    Almost all countries banned this karuvelam trees in their country.
    This tree will grow in least water/water scarcity areas like Ramanathapuram, Sivagangai, pudukottai, virudunagar and Theni districts in Tamil nadu. That's why the above said districts found dry always eventhough they are coastal. Viceversa the neighbor state kerala there is no cultivation of this plant so they are always found greeny and wealthy.So we are going to educate and to create awareness among the people in the above districts. First we are going to start this campaign in Athiviranpatti Village in Virdhunagar District and we will continue this campaign in most of the villages in the above districts
    - By Mr. Ibn Abdul Wahid. from Adirai Nirubar.

    ReplyDelete
  16. கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

    நண்பர் மாசிலா அவர்கள் இயல்பில் ஒரு இயற்கை ஆர்வலர் என்று நினைக்கிறேன். ஆகவே பொதுவில் மரங்களை அழிப்பது என்றதும் அவருக்குக் கோபம வருகிறது. இந்த உணர்வைப் பாராட்டுவோம்.

    மேலும் அவர் எழுப்பியுள்ள சில கேள்விகள் விவாதத்துக்கு மட்டும் சரியானவையே. உதாரணமாக இவ்வளவு காலம் பயன்படுத்திவிட்டு இப்போது ஒதுக்குவதன் மூலம் நன்றி கெட்ட தனமாக நடப்பது- எறும்பு உட்பட்ட உயிர் இனங்களுக்கு புகலிடமாக இருப்பது ஆகியவை.

    இந்தக் காரணங்களுக்காக வயல் வெளிகளில் இதைப் பயிராக விளைவித்து உணவுப் பஞ்சத்தை நீக்கிவிட முடியாது என்பதையும் - நாட்டின் பொருளாதாரத்தை இதை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்டிவிட முடியாது என்பதையும் அவருடைய அன்பான பார்வைக்கு சமர்ப்பிப்போம்.

    காட்டுக் கருவை அல்லது சீமைக் கருவை ஆகியவற்றை அழிக்கும் இடங்களில் அன்றே பயன்தரும் மற்ற மரம் செடிகளை நட்டு பேணி பாதுகாத்து இயற்கை ஆர்வலர்களை மகிழ்வுரச்செய்வதுடன் இயற்கை வளத்தையும் பேண நாமும் உறுதிகள் மேற்கொள்வோம்.

    ReplyDelete
  17. முதலில் படிக்கும்போது திக்கென்றது. பின்னூட்டங்களின் மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதம் ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி!
    தொடரட்டும் இதுபோல விழிப்புணர்வுப் பகிர்வுகள்!

    ReplyDelete
  18. திருமதி ரஞ்சனி அவர்களின் மகிழ்ச்சியை நிலை நிறுத்த முயல்வோம். நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers