.

Pages

Thursday, March 14, 2013

என் குடும்பம்

சில்லறையை அள்ளி 
தொப்பைக்குள் போட்டுக்கொண்டு
கள்ளச்சாராயச் சந்தைக்குச் 
சலாம் அடிக்கும் காவல்காரர் 

என் மச்சான்

எதைக் கொடுத்தாலும் 
குடிப்பேனென்று குடித்துவிட்டு 
நாக்குத்தள்ளி செத்துப்போன 
குடிகாரன் 

என் அண்ணன்

பட்டம் வாங்கிவிட்டேன் 
வங்கியில் மட்டும்தான் 
வேலை பார்ப்பேனென்று 
தெருத் தெருவாய்த் திரியும் 
வேலையில்லாப் பட்டதாரி 

என் தம்பி

மாவட்ட ஆட்சித்தலைவன் தொட்டு 
அடிமட்ட சேவகன் வரை 
கை நீட்டிப் பை நிரப்பும் 
அரசு நிர்வாகிகள் 

என் சகலைப்பாடிகள்

ஊரை அரித்து உலையில் போட்டு 
கைத்தட்டல் வாங்கும் 
அரசியல்வாதி 

என் மாமா

ஓர் எவர்சில்வர் குடத்திற்காக 
எவனுக்கும் ஓட்டுப் போடும் 
இந்நாட்டு அரசி 

என் அம்மா

உள்ளூரில் வேலையில்லை 
என்று திசைமாறிப் பறந்து 
அத்தோடு தொலைந்துபோன 
அமெரிக்கப் பிரஜை 

என் அக்கா

சுதந்திரம் 
வாங்கித்தந்தத் தியாகி 
என்ற பெருமையோடு 
சாய்வு நாற்காளியில் 
சலனமற்றுக் கிடப்பது 

என் தாத்தா

வார்த்தைகள் உயர்த்தி 
விடியல் திறக்கும் வலிய பேனாவால் 
தொலைந்துபோன காதலிக்காக 
புலம்பல் கவிதைகள் 
வடிக்கும் அற்புதக் கவிஞன்

நான்
அன்புடன் புகாரி

15 comments:

  1. உலகம் மறந்த குடும்பம் ..

    ReplyDelete
  2. குடும்பத்தை தலைப்பாய் வைத்து நாட்டில் நடக்கும் அவலங்களை உறவு முறையிட்டு கவியாய் தந்துள்ளது அருமை.

    வாழ்த்துக்கள்.

    இன்னும் பல விழிப்புருந்துணர்வு பதிவுகளை தாங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. குடும்பத்தைக் கவிதையாய்ச் சொன்னீர்; கவிதையைக் குடும்பமாய்ச் சொன்னீர்.

    ReplyDelete
  4. பொறுப்பற்ற குடும்பம் பற்றிய பொறுப்பான கவிதை. எளிமை! இனிமை!

    ReplyDelete
  5. உலக நடப்பை சமூக கோலங்களை விளக்கும் அருமையான கவிதை . வாழ்த்துகள் காணக் கிடைக்க தந்தமைக்கு

    ReplyDelete
  6. குடும்பத்தை வைத்து அழகிய விழிப்புணர்வு ! இப்படியும் எழுதலாம் என்பது சிறப்பு

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    தனிக்குடும்பமாக இருந்தாலும் மிகவும் விரிந்த குடும்பமாக இருக்குதே, அதெல்லாம் சரி, குடும்பத் தலைவன் அப்பா எங்கே போய்விட்டார்?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. குடும்ப உறுப்பினர்களை வைத்து விழிப்புணர்வு கவிதை சிறப்பு.

    ReplyDelete
  9. // அதெல்லாம் சரி, குடும்பத் தலைவன் அப்பா எங்கே போய்விட்டார்? //

    அவலத்தைக் கூறுவதே அப்பா தானே

    ReplyDelete
  10. யாருமே சரியில்லையா? சரி விடுங்கள்.
    உங்க குடும்பத்தைப் பற்றிப் படித்துவிட்டு எங்க குடும்பத்தை பற்றி நினைத்தால் ....எனக்கு கவிதை எழுத வராது என்று சொல்லி நழுவிடலாம்!ஏன் வம்பு?

    சிறப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  11. அனைத்துப் பாராட்டுக்களுக்கும் என் அன்பின் விருதுகள்

    ReplyDelete
  12. உலக நடப்பை கவியாய் தந்த உங்களுக்கு சிறப்பான என் வாழ்த்துகள் ரொம்ப அருமை. சமூதாயத்தில் நடக்கும் அவலத்தை அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete
  13. ஒரு குடும்பத்தில் இத்தன்னை அவலங்கள் இருந்தும் அவரவர் வைராக்கியங்கள் விட்டு கொடுக்க ஆளில்லை.புது வடிவம் புது உணர்வு கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள் புகாரி காக்கா அவர்களே.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers