உலக நாகரிகங்கள் நதிக்கரைகளில் தோன்றியதாக வரலாற்று ஏடுகளில் படித்துள்ளோம். நைல் நதி நாகரீகம், சிந்து நதி நாகரீகம், டைகரடீஸ், யூப்ரடீஸ் நாகரீகம் என்பவை வரலாற்றின் பாலபாடம். மனித இனம் வாழவும், வளரவும் நதிகளின் பங்கு நாடறிந்தது. மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் தேசங்களை தேடிப்போனான் ஆனால் அவன் காலடியிலேயே தண்ணீர் இருக்கிறது என்பதை உணர்ந்து ஏழாயிரம் ஆண்டே ஆகிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
தண்ணீர் என்பது தயாளம் மற்றும் தாராளத்தின் அடையாளம். 'தண்ணி மாதிரி செலவழிக்கிறான்' என்றும் , ' தம்பிக்கு இது தண்ணிப்பட்ட பாடு ' என்றும்' ' தவிச்ச வாய்க்கு தண்ணீர் கூட தரமாட்டான்' என்றும், தண்ணீரின் எளிமையை உணர்த்தும் சொற்றொடர்கள் வழக்கில் உள்ளன. மிக எளிமையாக கைவசப்படும் சொத்துக்களுக்கு LIQUID ASSET என்பது பொருளியல் வழக்கு. தர்மம் செய்ய நினைக்கிறவர்கள் கோடைக்காலங்களில்- சாலை ஓரங்களில் தண்ணீர்ப்பந்தல் அமைப்பார்கள். கவிஞ்ர் வைரமுத்துவின் வரிகளில் தண்ணீரின் பெருமையைச் சொல்லவேண்டுமானால் உயிரை உருக்கும் வரிகளில் இப்படிச் சொல்லலாம்.
முதல் உயிர் பிறந்தது
நீரில் என்பதால் ஒவ்வோர்
உடம்பிலும் இன்னும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது
அந்த உறவுத் திரவம்.
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது.
- வைரமுத்து.
- வைரமுத்து.
ஒரு நாட்டின் மண்ணைநேசிப்பது போலவே அந்நாட்டின் நீர்க்குடும்பத்தின் அங்கங்களான ஆறுகளையும், ஓடைகளையும், சிற்றோடைகளையும், ஏரிகளையும், குளங்களையும் நேசிக்கும் இதயங்கள் எண்ணற்றவை. [ இன்றும் கூட நம்மை வளர்த்த நமது மண்ணின் சி.எம்.பி. வாய்க்காலையும் , செடியன் குளத்தையும் நேசிக்கும் இனியவர்கள் நம்மிடையே உண்டு. ] பல சிறப்புக்களுக்கு தகுதிபடைத்த தண்ணீர் இன்று தனிச்சொத்தாக மாற்றப்பட்டு - ஒரு வணிகப்பொருளாக ஆக்கப்பட்டு – உலகமயமாக்கல் என்ற வித்தைக்காரியின் கரங்களில் அகப்பட்டுக்கொள்ள அஸ்திவாரம் தோண்டப்படும் அவலத்தைப்பற்றித்தான் இங்கு அலச இருக்கிறோம்.
மத்திய அரசில் நீர்வள அமைச்சகம் [ MINISTRY OF WATER RESOURECES ] என்று [ மாநிலங்களுக்கிடையே நடைபெறும் நதிநீர் பங்கீடு சண்டைகளை வேடிக்கை பார்ப்பதற்காக ] ஒரு அமைச்சகம் இருக்கிறது. கடந்த 31.1.2012 அன்று இந்த அமைச்சகம் ஒரு அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்படவேண்டிய இந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அறிவிக்கை இந்த அமைச்சகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான கொள்கை வரைவை உள்ளடக்கிய அறிவிக்கையாகும். [ Draft - National Water Policy 2013 ] . அதாவது எப்படி இரயில்வே அமைச்சகம் தனது நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ, நிதி அமைச்சகம் எப்படி வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடுகிறதோ அதேபோல்தான் இதுவும்.
நியாயமாக இப்படிப்பட்ட அறிவிக்கைகளை வெளியிடும்போது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விவசாயப்பிரதிநிதிகள் உட்பட எல்லாத்தரப்பு மக்களிடமும் இந்த அறிவிக்கையின் சாராமசங்கள் பற்றியும் கூட்டம் கூட்டி விவாதித்து இருக்கவேண்டியதும் அரசுத்தரப்புக் கடப்பாடாகும். பேய் அரசாள வந்தால் பிணம தின்னும் சாத்திரங்கள் என்பதுதான் இன்றைய நிலை. ஆகவே இந்த நடைமுறைகள் கடைப்பிடிக்கப்ப்படவில்லை. இவ்வளவு பீடிகை போட்டு ஆரம்பிக்கிறாயே என்று நீங்கள் நெற்றி சுருக்குவது தெரிகிறது.
இரண்டே வரிகளில் சொல்லப்போனால் பொதுநன்மைக்குரிய வளமாக இருக்கும் தண்ணீரை [ COMMON GOODS ] சந்தைப்பொருளாக – பொருளாதார போகப்பொருளாக [ ECONOMIC GOODS ] மாற்றி வரையறுத்து, தண்ணீரை முற்றிலும் தனியார்மயமாக்குவதே மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இவ்வறிவிக்கை கொள்கை வரைவின் அடிப்படை நோக்கமாகும். சாலைகளைப் பயன்படுத்தும்போது சுங்கம் கட்டுவதுபோல் இனி தண்ணீரை அடிப்படை தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் பயன்படுத்தவும் சுங்கம் கட்டும் நிலைமைக்கு அடிகோலப்பட்டு இருக்கிறது.
நான் குறிப்பிடும் இந்தக் கொடிய தேசிய நீர்க் கொள்கை வரை வின் பத்தி 3.3 கீழ் வருமாறு கூறுகிறது.
"மனித இனம் உயிர் வாழ்வதற்கும், சுற்றுச் சூழல் அமைப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் தேவையான குறைந்த அளவு தண்ணீரைத் தவிர மற்ற தண்ணீரெல்லாம் பொருளியல் வளமாகப் பேணப்பட வேண்டும்". [ TO BE CONSIDERED AS RESOURCES OF ECONOMY ].
தேவையான குறைந்த பட்சத் தண்ணீரின் அளவு என்ன என இக்கொள்கை வரையறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ஆற்று நீரும் ஊற்று நீரும் மழை நீரும் முற்றிலும் தனியார் பெருங் குழுமங்களுக்கு வழங்கப்பட இக் கொள்கை வழிவகுக்கிறது.
மேலும் இந்த அறிவிக்கையின் பத்தியான 13.4 –யில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
"தண்ணீர் தொடர்பான பணிகளில் அரசின் பங்கும் பொறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் பணியைத் தமது அடிப்படைக் கடமையாக அரசு மேற்கொள்ளக் கூடாது. தண்ணீர் தொடர்பான அனைத்துப்பணிகளும் சமூகத்திற்கு அல்லது தனியார் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இதனை ஒழுங்கு படுத்துவது, கட்டுப் படுத்துவது ஆகிய பணிகள் மட்டுமே அரசின் கடமையாக இருக்க வேண்டும்" எனக் கூறுகிறது.
மனிதர்களுக்கும், சுற்றுச் சூழல் தூய்மைக்கும் தேவை யான குறைந்தபட்ச நீர் வழங்கல் கூட தனியாரின் வர்த்தக நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என இக் கொள்கை வரைவு குறிப்பிடுவதிலிருந்தே நாட்டின் நீர் வளம் முழுவதும் வணிகச் சரக்காக மாற்றப்பட இருக்கிறது என்பது உறுதியாகிறது.
இந்த கொள்கைகள் ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்ப்படுமானால், இனிமேல் தண்ணீர் என்பது அரசின் சேவை என்ற தலைப்பில் வராது குடிநீர் வழங்கு துறை இனி குடிநீர் வழங்கல் கண்காணிப்புத்துறையாக மாறிவிடும் .
இப்படி தனியாரை புகவிட்டால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா ? ஆதாயமில்லாமல் அவர்கள் ஆத்தைக்கட்டி இறைப்பார்களா ?
அதைத்தான் அறிவிக்கையின் பிரிவு 7 பேசுகிறது.
ஒரு சொட்டு தண்ணீர் கூட காசில்லாமல் யாருக்கும் வழங்கப்படக் கூடாது என இப்பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காக உப்யோகப்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இன்னும் விசித்திரம். விலைக்குத்தான் விற்கவேண்டும் என்று நேரடியாக சொல்லாமல் தண்ணீருக்கு ஆகும் செலவை திரும்பப்பெருவது என்று கூறுகிறது. (RECOVERY OF TOTAL COST ). முழுச்செலவையும் பயனாளிகளிடமிருந்து திரும்பப் பெறவேண்டுமாம். இனி கையில் பணம் படைத்த செல்வந்தரே குளிக்க முடியும் – குடிக்க முடியும். யார் வீட்டு திண்ணையிலும் போய் உட்கார்ந்து அம்மா குடிக்கக் கொஞ்சம் தண்ணி தா! தாயே! என்று கேட்க இயலாது.
மானியமாகவோ, இலவசமாகவோ தண்ணீரை வழங்கும் அரசின் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றியமைக்க வேண்டுமென்றும் அப்படி மானியமாகவும் இலவசமாகவும் கொடுப்பதால் அதன் உண்மை மதிப்பை உணராமல் வீணடிப்பதை தடுக்க முடியும் என்று இக்கொள்கை வரைவில் பத்தி 7.5 குறிப்பிடுகிறது.
இந்த அறிவிக்கையின் பத்தி 9.5 இந்திய நாட்டின் அடிப்படை வாழ்வாதாரத் தன்மைக்கு எதிமறையானது. "இனி வரும் தண்ணீர் திட்டங்கள் விவசாயத்தையும், குடிநீர் வழங்கலையும் மட்டும் முக்கிய நோக்கங்களாக கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக பலநோக்கு திட்டங்களாக வரையறை செய்ய வேண்டும்" என்று கூறுகிறது.
பலநோக்குத்திட்டங்கள் என்றால் என்ன ? ஒரு விவசாயத்தை அடிப்படையாககொண்டுள்ள விவசாயனாட்டில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்றும்- ஏழைகள் நிறைந்த பூமியில் இலவச குடிநீர் இல்லை என்றும் கூறிவிட்டு பலநோக்குத் திட்டங்களுக்கு தண்ணீரை விற்க வேண்டும் என்றால் அந்த பலநோக்கத்தில் அடங்குவது பன்னாட்டுக் கொள்ளைக்கூட்டத்தின் கேளிக்கை விடுதிகள் , பெரும் முதலீட்டில் உருவாகும் தொழிற்சாலைகள், தண்ணீரில் வாசனையையும், கழிவறை கழுவப்பயன்படும் இரசாயனங்களையும் சமுதாயத்தை சீர்கெடுக்கும் சாராயத்துளிகளையும் கலந்து விற்று காசாக்கும் தந்திரங்களும் என்றுதானே அர்த்தம் ?
இந்த 2013- க்கான கொள்கை வரைவின் 6.3, 6.4 ஆகிய பத்திகளைப் படிக்கும் போது 2002 –க்கான அறிவிக்கையும் ஒப்பிட்டு படிக்க வேண்டியது அவசியமாகிறது. தண்ணீரை மாசுபடுத்துபவர்கள் அப்படி மாசுபடுத்தியற்கான குற்றத்துக்கு பொறுப்பாளர்களாக்கப்பட்டு, தூய்மைப்படுத்துவதற்காக ஆகும் செலவையும் ஏற்கவேண்டுமென்பது 2002-ன் அறிவிக்கையில் சொல்லப்பட்டது (POLLUTER TO PAY) . ஆனால் இப்போது அது மாற்றப்பட்டு நீர் நிலைகளை சாக்கடையாக்கும் முதலாளிவர்க்கத்தை காப்பாற்றும் விதத்தில் அரசே ஊக்குவிப்பு வழங்கி, நீர் சுழற்சிமுறையை ( RECYCLING ) செய்யவேண்டுமென்று 2013- ன் அறிவிக்கை கூறுகிறது.
இதில் கூறப்பட்டுள்ள ஒரு காரசாரமான அம்சம் என்னவென்றால் இதுவரை மாநில அரசின் அதிகாரப்பட்டியலில் இருந்துவரும் தண்ணீரை மத்திய- மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப்பட்டியலுக்கோ அல்லது முழுக்க மத்திய அரசின் பட்டியலுக்கோ எடுத்துசென்றுவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு இருப்பதுதான். இதனால் நதிகள் தேசியமாக்கப்பட்டுவிடும். 'கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை என்ற கதையாகிவிடும்.
நதிகள் தேசியமாகப்பட்டுவிட்டால் நதிகளின்மேல் மாநிலங்களின் பிடிப்பு தளர்ந்து நாடு முழுதும் சீரான நதிநீர் பங்கீடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று இதற்கு ஆதரவானவாதம் வைக்கப்படுகிறது. வாய்ப்புதான் உள்ளது என்று சொல்லலாமே தவிர வாய்க்குமா என்று சொல்ல முடியாது. மத்திய அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளும் என்று நம்புவது கனவு மாளிகைக்கு கால்கோள்விழா நடத்துவதற்கும், காதர்சா குதிரையின் மேல் பணம் கட்டுவதற்கும் ஒப்பானது. அரசியல் காரணங்களால் – அதிகாரவர்க்கத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மத, இன, மொழியினரின் செல்வாக்கால் மாநில உரிமைகள் மத்திய அரசு காலில் போட்டு மிதிக்க வாய்ப்புக்கள் உள்ளன.
இதற்கு உதாரணம்- தமிழ்நாடே.
ஏற்கெனவே ஆற்று நீர் பங்கீட்டின் இறுதி அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும் போதே தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதைக் கண்டு வருகிறோம். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய சிக்கல்களில் நீதி மன்றத் தீர்ப்புகளைச் செயல் படுத்த வேண்டிய தனது சட்டக் கடமையைக் கைகழுவி விட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழிக்க எண்ணுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆறு ஆண்டுகள் அரசியல் காரணங்களால் இந்திய அரசு தயங்கி நிற்பதை பார்க்கிறோம். வானளாவிய அதிகாரம் கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் பல ஆண்டுகள் செல்லுபடியாகவில்லை.
மாநில அரசுகளில் கைகளில் நதிநீர் அதிகாரம் இருந்தால் மாநில நலன்கருதி அந்தந்த மாநிலங்கள் தங்களின் தேவைகளுக்காக போராடமுடியும். அந்த அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டால் முதலாளித்துவத்தின் கைப்பாவையாக மாறிவரும் மத்திய அரசு உனக்கும் பேப்பே, உங்க அப்பனுக்கும் பேப்பே என்று காட்ட வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் நமது அனுபவம், எந்த ஒரு இயற்கை வளமும் மக்களின் பொது உரிமை என்ற நிலையிலிருந்து அரசுடமை என்று மாற்றப்படும்போது அது தனியாருக்கு விற்கப்படுவதற்கு வழிதிறந்து விடுவதாக அமைந்துவிடுகிறது. சுரங்க முறைகேடுகளால் சுரண்டப்பட்ட நாட்டின் செல்வம் கருப்புப்பணமாய் அவதாரம் எடுத்தது எப்படி?
மிகச்சுருக்கமாக இந்த அறிவிக்கையைப் பற்றி கருத்துக்கூற வேண்டுமானால் தண்ணீரையும் பெருவணிகதனியாரிடம் தாரைவார்த்துவிட முயலும் அரசின் அவசரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
நான் ஏற்கனவே "அந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும் " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிந்து இருக்கிறேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.
"இந்திய பொருளாதார கொள்கைகளை வகுப்பவர்கள் யார் ? நாம் நம்பிக்கொண்டிருப்பதுபோல் நமது நிதி அமைச்சகம் அல்ல. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஜி- 8 அமைப்பில் உள்ள நாடுகளும், அந்த நாடுகளின் பன்னாட்டு நிருவனங்களின் நிர்வாகிகளுமே. உலகவங்கியில் என்றைக்கு கடன்வாங்க நாடு கை நீட்டியதோ அன்றே அவர்கள் சொல்லும் இடத்தில் கை எழுத்துப்போடவும் , கூறும் கொள்கைகளை அமுல்படுத்தவும் நாம் தயாராகிவிட்டோம். உதாரணத்துக்கு உலகவங்கியின் வற்புறுத்தலால் மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தபட்டதாக வெட்கமில்லாமல் சட்ட மன்றத்தில் அறிவிக்கின்றனர் அனைத்து மானில ஆட்சியாளர்கள். இதனால் நமது நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மண்ணின் மாண்பு , மக்களின் இயல்பு – பொருளாதார வழக்கில் கூறப்போனால் நுகர்வோர் கலாச்சாரம் [ CONSUMER CULTURE ] ஆகியவற்றின்மேல் தாக்குதல் தொடுக்கும் தாக்கங்கள் அதிகரித்துவிட்டன."
என்று குறிப்பிட்டதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு நாம் விவாதிக்கும் இக் கொள்கை வரைவு தண்ணீர் வள ஆதிக்கத்தை விரும்பும் பன்னாட்டு பெரு நிறுவனங்களின் நிழல் ஆட்களால் உருவாக்கப் பட்ட கொள்கை வரைவு ஆகும்.
இந்த விஷயத்தை கொஞ்சம் கவனமாகப் படியுங்கள். – அதாவது
1. உலக வங்கியின் கீழ் நீர் ஆதாரக்குழு 2030 [ 2030 WATER RESOURCES GROUP ] என்கிற அமைப்பு ஒன்று இயங்குகிறது.
2. இந்த அமைப்பு " தேசிய நீர் ஆதாரத்திட்ட வரைவு ஆய்வு- சீர்திருத்ததுக்க்கான திசைகாட்டி " [ NATIONAL WATER RESOURCES FRAME WORK- STUDY & ROAD MAPS FOR REFORMS ] என்று ஒரு அறிக்கையை தயார்செய்து இந்திய அரசின் திட்டக்குழுவுக்கு வழங்கியது.
3. அறிக்கையை தயார் செய்த நீர் ஆதாரக்குழு 2030- என்கிற அமைப்புக்கு மூணுவேளை சோறு போட்டு- மசால்வடையும் டீயும் வாங்கிக் கொடுத்தது – அதாவது இந்த அமைப்புக்கு நிதிவழங்குவது பெப்சி, கோக், கார்கில், யூனிளிவர், மெக்கன்ஸி ஆகிய பன்னாட்டு பெருங்குழுமங்கள் ஆகும்.
4. கடந்த 2011 அக்டோபர் 11 அன்று இந்தியத் திட்டக் குழுவிற்கு மேற்சொன்ன நீர் ஆதாரக் குழு அளித்த "திசை வழி அறிக்கை"தான் சொல் மாறாமல் அப்படியே "தேசிய நீர்க் கொள்கை 2012" என்ற தலைப்பில் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சூட்சுமம் இப்போது புரிகிறதா ? வேறென்ன வேண்டும் ?
கோக், பெப்சி, கார்கில் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் தண்ணீர் வணிகத்திலும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருள் வணிகத்திலும் கோலோச்சி வருபவை. அவர்களது நிதி ஆதரவு பெற்ற ஆய்வுக் குழு அறிக்கை அப்படியே இந்திய அரசின் கொள்கை வரைவாக வெளி வந்திருப்பதிலிருந்தே இக்குழுமங்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் உள்ள பாசப்பிணைப்பும் அதன் வலைப் பின்னலும் தெளிவாகும். அன்னியர் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்று இனியும் யாரும் சொல்ல முடியுமா? அரசியல் விடுதலை பெற்று இருக்கலாம்- பொருளாதார விடுதலையும் உண்மையில் பெற்றுவிட்டோமா ?
"நள்ளிரவில் பெற்றோம் –ஆனால் இன்னும் விடியவே இல்லை " என்று கவிஞர் கூறியது உண்மையே. இன்னும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றித்தர வக்கற்ற அரசுகள் நாட்டின் மூலவளங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க கச்சை கட்டி நிற்கின்றன.
இந்த தேசிய நீர்கொள்(ல்)கையின் வரைவு அறிக்கை சொல்லுக்குச்சொல் கண்டனத்துக்கும், எதிப்புக்கும் ஆளாக்கப்பட வேண்டியதாகும். இதை வரைவு நிலையிலேயே முறியடிக்க வேண்டும். பொதுநல அமைப்புகள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் இணைந்து இதற்கான எதிப்புக்குரல்களை எதிரொலிக்கவேண்டும்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி
அருமையான ஆக்கம் ஏமாறுப்பவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்ற கூடியவன் இருக்கத்தான் செய்க்கிறான்.
ReplyDeleteஅருமையான தலைப்பு தொடர்ங்கள் உங்கள் சமுகச்சேவையை வாழ்த்துக்கள்.
'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்' மூத்த சகோ. இப்ராஹீம் அன்சாரி அவர்களின் சமூக விழிப்புணர்வூட்டும் இந்த ஆய்வை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ReplyDelete2025-ல் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்களின் கருத்து. மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாற்றத்தால் பனிமலைகள் உருகுதல் உள்ளிட்டவையால் தோன்றும் இதுபோன்ற சவால்களை இப்போதே நாம் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.
முக்கியமான கட்டுரை...
ReplyDeleteவிளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
அய்யா சிறந்ததொரு ஆக்கம்
ReplyDeleteநதிகளை இணைக்கும் திட்டம் தான் இந்தியாவின் நீர் பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்குத் தேவையான நீரைப் பெறுவதற்கும், யாரும் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படாமல் இருப்பதற்கும் இந்த நதி இணைப்புத் திட்டம் தான் மிகவும் சிறந்த சரியான வழியாகும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதாகமா? தாரையா?
தாயா? தாரமா?
பாசமலர். பணமலர்.
பணமா? பாசமா?
முந்தினது முதலில். பிந்தினது பிறகு.
விட்டால் முந்தி வருவது தண்ணீர்தான். அதையே பிடித்து வைத்து பஞ்சாங்கம் படிக்கிறாங்க.இந்தியாவை தவிர ஏனைய நாடுகளில் தண்ணீரின் விழிப்புணர்வு மிக மிக அதிகம்.
அரபு நாடு ஒரு பாலைவனம், அங்கு எதுவுமே விளையாது, போய் பாருங்க, எல்லாமே இறக்குமதி, எல்லாம் கிடைக்கும், லஞ்சம் கிடைக்காது, மின் வெட்டு வராது, சுத்தமான தண்ணீர் கிடைக்கும், ஒரே சீரான நாணயத்தின் மதிப்பு.
நம் பாரதத்தையும் பாருங்க. விடுதலை அடைந்து என்ன சுகம் கண்டோம்? தினமும் பிரச்சனைதான்.
யாரும் எதிர்பார்த்திராத ஒரு ஆக்கம், ஆனால் திருந்துமா? திருந்தவே திருந்தாது.
புதிய தலைமுறைகள் வராத வரைக்கும் திருந்தாது.
உங்கள் ஆக்கம் இடைவிடாது வரட்டும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நீண்ட ஒரு விளக்கம்!. உங்களுக்கு சொல்லவா வேணும். தண்ணி பட்ட பாடாச்சே கட்டுறை எழுதுவது
ReplyDeleteவெயில் காலத்தில் தண்ணீர் குடம் வைக்கும் தயாள குணம் கொண்டோரே உங்களிடம் ஒரு கேள்வி மழை காலத்தில் மசால் வடையும் teaயும் கெடுத்தால் குறைந்தா போய்விடுவீர்?.
எங்கோ படித்தது
தாகம் தீர்க்க வந்த நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteஆதாரபூர்வமான ஆக்கத்தினை. ஆக்கபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.
அத்தனையும் உண்மை வரிகள்.
தாங்களின் விரிவான விளக்கம் படித்ததும் தாகமெடுத்து தண்ணீர் தேடினேன். பாட்டில் காலியாக இருந்தது.
கடையில் போய் காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் கனிம நீரை(mineral water)..!
டாகடர் ..இப்ராஹிம் அன்சாரி காக்காவின்
ReplyDeleteஆய்வு கட்டுரை மிக அருமை ..
பாவிகள் இயற்கை அன்னையின் தண்ணீரை
விலை பேசும் கொடுமை கரிசனமிக்க இந்தியாவிலுமா ..?
கர்நாடகமா..? கர்நாகமா ...?
எல்லாவற்றிலும் இருக்கின்ற எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரைப் பற்றிய ஆக்கம், எங்களின் அறிவுத் தாகம் தீர்த்து வைத்தது.
ReplyDeleteகாலுக்கடியில் தண்ணீர் இருப்பதை மனிதன் அறிந்தது 7௦௦௦ ஆயிரம் ஆண்டு என்பது இபுராஹீம் நபிகாலத்தில் ஜாம் ஜாம் ஊற்று வந்ததே அதுவா
ReplyDelete