.

Pages

Thursday, April 25, 2013

அம்மா

அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா
அன்புடன் புகாரி

10 comments:

  1. தன் அம்மாவிற்கு சிறப்பு சேர்க்கின்ற நல்லதொரு வரிகள்...

    'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'

    தாயின் நலனை என்றென்றும் நாம் பேணிக்காப்போம்

    ReplyDelete
  2. அருமையான வரிகள்... பாராட்டுக்கள்...

    /// மெழுகுவர்த்திப் பிறவி /// அற்புதம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    அம்மா, (தாய்) இதன் சிறப்பை எப்படி பாராட்டுவது?

    அருமை பாராட்டுக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. தாயின் அன்பு பாசத்தோடு உங்களின் சிரிப்பு.

      Delete
  4. அம்மாவின் பாசத்தை அழகுற எளிமைத்தமிழில் இனிமையாய் எடுத்துரைத்து யாவரும் உணரும்படி எத்திவைத்த வரிகள் அருமை.

    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  5. உணர்வின் அலைகள் உயிர்ன் ஓசைகளாய்
    உங்கள் புதுக்கவிதையின் கலைகள்!

    புரிந்துணர்வில் தேர்ச்சி பெற்றோர் எவ்வரிகளையும் புரிந்து கொள்வர்.

    ReplyDelete
  6. இனியவர்கள் அனைவருக்கும் எனதன்பு நன்றிகள்

    ReplyDelete
  7. அம்மான்னா சும்மாவா

    ReplyDelete
  8. jafar ali weaver streetApril 26, 2013 at 12:04 PM

    உன்னை சுமந்தவள்!
    சுமக்கிறாள் சோகம்!
    வந்தவள் சொல்கேட்டு
    சபிக்கிறாய் அதிவேகம்!

    ஊனில்லை! உறக்கமில்லை!
    உன்னை சுமக்கையில்!
    உனர்வில்லை! உறவில்லை!
    இன்று நீ வெறுக்கையில்!

    கருவறை பெட்டியிலே!
    நீ உதைப்பாய்! சுகமுண்டு!
    தெருவறை வந்தபின் - நீ
    வதைத்தாய் துயருண்டு!

    தொட்டியிலே உறங்கிட
    பாடுவாள் அவள் தாழாட்டு!
    கட்டிலை கண்டவுடன்
    தாழிடுவாய் வசைப்பாட்டு!

    தலைகுளிக்க வைப்பாள்!
    தலை வாரி விடுவாள்!
    தலைமகனாய் பிறந்தபோது
    தவப்புதல்வன் என்றாள்!

    பள்ளிக்கு நீ செல்வாய்!
    பார்த்து பார்த்து மகிழ்வாள்!
    துள்ளி குதித்து வருவாய்!
    தாவி வந்து அனைப்பாள்!

    அம்மா என்பாய்!-அவள்
    பேரன்ந்தம் கொள்வாள்!இன்று
    சுமை என்று நினைத்தாய்!
    பெருந்துனபம் கொண்டாள்!

    பினைகைதியாய் இன்றவள்
    உன்னை விட்டு அகன்றாள்!
    வினை செய்த பாவமோ!
    துனையின்றி நின்றாள்!

    ReplyDelete
  9. இந்த உலகத்தில் எத்தனை சொந்தகள் இருத்தாலும் அம்மாவிற்கு இடகுமா?அருமை கவிவரிகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers