.

Pages

Monday, May 20, 2013

[ 2 ] வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு.

குறுந்தொடர் : பகுதி - II 

இந்தக் குறுந்தொடரின் முதல் பகுதியை இப்படி முடித்து இருந்தேன். 

//இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை. 
இந்த விவாதம் பொருந்துமா ? தொடர்ந்து பார்க்கலாம்.//

இப்போது பார்க்கலாம்...

கிராமப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 22/= சம்பாதித்து 2400 கலோரி உண்டும் , நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் ரூ. 29/= சம்பாதித்து 2200 கலோரி உண்டும் ஜீவித்து இருக்கலாமென்றும், அதற்குமேல் சம்பாதிப்பவர்கள் வறுமைகோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று கருதி அரசு வழங்கும் உதவித்திட்டங்கள் வழங்கப்படத் தேவை இல்லை என்றும் கூறுகிறது மேதாவிகளை உள்ளடக்கிய திட்ட கமிஷன்.

திட்ட கமிஷன் சில அடிப்படியான காரணிகளை தனது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இப்படி ஒரு  தான்தோன்றித்தனமான அளவுகோலை வழங்கி இருப்பது இத்தகைய மத்திய அரசின் அமைப்புகள் எந்த அளவுக்கு  நாட்டின் நிலையையும், நாடித்துடிப்பையும் உணர்ந்து இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம். 
வறுமைக்கோட்டிற்கு வரையறை வகுக்கின்ற பொருளியல் மேதைகள் கீழ்க்கண்ட சில காரணிகளை அடிப்படியாக வைத்து அளவிட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள்.  

1. ஒரு தனி குடும்பத்துக்கு  பயிரிடத்தகுதி படைத்த விவசாய நிலம் இருக்கிறதா ? 

2. குடி இருக்க வீடு இருக்கிறதா ?

3. சுகாதாரமான கழிப்பறை வசதி இருக்கிறதா ?

4. தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறதா ?

5. ஒழுங்கான வருமானம் தரும் வேலைக்குச்செல்பவர்கள் உள்ளனரா ?

6. பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா ?

7. குடும்பத்தின் உறுப்பினர்களில் விதவைகள், விவாகரத்து ஆனவர்கள் உள்ளனரா ?

8. பாதுகாக்கப்படவும், பராமரிப்பு தேவையும்பட்ட  முதியவர்கள் உள்ளனரா?

9. குடும்பத்தில் ஊனமுற்றவர்கள், மனநலம் குன்றியவர்கள் உள்ளனரா ?

10. பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகள் உள்ளனரா ?

11. அளவிடும் காலகட்டத்தில் அமுலில் உள்ள அரசின் உதவிகள் என்னென்ன ? 
ஆகிய காரணிகள் முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். 
இப்படி எதையுமே கருதாமல் 'மொட்டைத் தத்தன் குட்டையில் விழுந்தான்' என்று ஒரு அளவுகோலை அறிவிக்கிறது முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனரை – இந்நாள பிரதமரை- தலைவராகக்கொண்ட இந்திய திட்ட கமிஷன். ஒருவேளை இந்த கமிஷனில் பணியாற்றும் மேல்சாதியினர் தரும் அறிக்கைகளை இதன் தலைவரும், துணைத்தலைவரும் படிக்காமலேயே கைஎழுத்துப்போட்டு விடுகிறார்களோ என்று பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினர் எழுப்பியுள்ள சந்தேகம் நமக்கும் வருகிறது. 
ஒரு லிட்டர் பால் என்ன விலை விற்கிறது ? ஒரு கட்டுக்கீரையின் விலை என்ன ? ஒரு கோழிமுட்டையின் விலை இவர்களுக்குத் தெரியுமா ? ஒரு உருளைக்கிழங்கின் விலை இவர்கள் அறிந்தார்களா ? இவைகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாதவன் ஒரு உழைக்கத் தகுதி பெற்ற உடல் நலத்துடன் வாழ முடியுமா ? இதற்கு தகுதியற்ற நோஞ்சான்களால் உழைக்க முடியுமா ? உற்பத்தி பெருகுமா? இலவச அரிசி, கோதுமை  இந்தியா முழுதும் வழங்கப்படுகிறதா? இவர்களின் வாதப்படி 2200 கலோரியில் உயிர்தான் வாழமுடியும். உழைக்க முடியுமா ? உயிர் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் போதுமா ? இப்படிப்பட்டக் கேள்விகள் பெருகும். ஆனாலும் பதிலளிக்க எந்த பொறுப்பான பதவி வகிக்கும் கொம்பனுக்கும் தகுதியிருந்தும் திராணி இல்லை.

இன்று நாட்டில் நிலைமை ஏழைகள் அரை வயிற்று சாப்பாட்டுடன் அல்லல்படுகிறார்கள். திரு. அர்ஜுன் சிங் குப்தா என்ற பொருளாதார அறிஞர் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளார். அதில் சாதாரண மக்களில் – அதாவது ஒழுங்கற்ற வருமானம் வருபவர்களில் என்று வைத்துக்கொள்ளலாம்- 23% மட்டுமே ஓரளவு வாழ்க்கைத்தரத்துடன்   வாழ்வதாகவும் பாக்கி 77%  வறுமையில்தான் வாழ்வதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். நாம் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு நமது ஊரை அல்லது சுற்றுப்பகுதிகளை இந்தக்கண்ணோட்டத்துடன் பார்த்து வருவதாக வைத்துக்கொண்டால் திரு. அர்ஜுன் சிங் குப்தா குறிப்பிடுவது உண்மை என்று நாமே உணரலாம். அப்படியே   கவியன்பன் அதிரை அபுல் கலாம் அவர்களின் இந்த அர்த்தமுள்ள கவிதை வரிகளையும் உண்மை என உணரலாம். 

''வலியோ ரெளியோர் மீதினிலே
          வகுத்து வைத்தக் கோடாகும்
பலியாய்ப் போகு மெளியோரும்
         பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

வேலி தாண்டி வரவியலா
         விரக்தித் தருமே இக்கோடும்
நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
       நீசர் செய்த பெருங்கேடாம்''- 

விலைவாசிகள் அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கின்றன என்றும்- இந்த ஆண்டு தரப்பட்ட மாதச்சம்பளம் விலைவாசி அகவிலைப்படிகளோடு ஒத்துப்போகவில்ல என்றும் காரணம் காட்டி வருடத்துக்கு இருமுறை குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள்  ஆகியோரின் அகவிலைப்படியையும் சம்பளத்தையும்  உயர்த்திக்கொள்ள உபயோகிக்கும் அதே அளவுகோலை ஏழை மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு பயன்படுத்த மறுக்கும் காரணம் என்ன? அந்த அடிப்படையில் பார்த்தால் வருடா வருடம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை கூடத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? 
அதுமட்டுமல்லாமல் அவர்களே தந்து இருக்கிற கீழ்க்கண்ட புள்ளி விபரங்களைப் பாருங்கள். 

2004- 2005  ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 37.2%
2010-2011  ஆண்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோர் 29.8%

மேலேகண்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் ஐந்து வருட இடைவெளியில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கையின் சதவீதம் குறைந்து இருக்கிறது. அதன் பொருள், அதிகம் பேர் அதிகம் பொருளீட்டும் நிலைமை உருவாக்கி இருக்கவேண்டும். இதற்கு மாறுபாடாகக் காட்டி இருப்பது புதுமையிலும் புதுமையானதும் புதிரானதுமான அலுவாலியா படித்த பொருளாதாரம். (இவங்க செய்யுற ஒவ்வொரு காரியமும் நெஞ்சைப் பொக்குதே!). வருமானத்தை குறைத்துக்காட்டி வருமானவரி கட்டாமல் ஏமாற்றுவோருக்கு வழங்கப்படும்  தண்டனையை இந்த நீசர்களுக்கும் வழங்க வேண்டும்.

காரணம் இல்லாமல் காரியம் நடக்காதே! இதெற்கெல்லாம் என்ன காரணங்கள் ?

காரணங்கள் இருக்கின்றன.. இந்தக்காரணங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களை அடகுவைக்கும் காரணங்கள்.

அவை என்னென்ன ? தொடர்ந்து பார்க்கலாம்... 

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    சகோ இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் ஆக்கங்கள் அனைத்தும் சிந்திக்க தூண்டக்கூடியவை. இந்த ஆக்கமும் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நல்ல ஆய்வு !

    இதற்கு தீர்வு வேண்டுமெனில் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.

    ஒருவேளே 2007 ம் வருட 2ஜி அலைக்கற்றையின் விலையை 2001ம் வருட விலைக்கே குறைச்சி விற்றது போல !? 2011ம் ஆண்டு வறுமைக்கோட்டை 1976 க்கே வெச்சி கணக்கு பண்ணி ஃபிக்ஸ் பண்ணிருப்பானுங்க போலே :)

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய ஒரு கட்டுரையை வாசித்தது மனமகிழ்வடைகிறது. அய்யாவின் எழுத்துப்பணி வளர்க. நன்றி!

    ReplyDelete
  4. என் இந்தப் பின்னூட்டத்தில் அடியேன் இட்டுத் தங்களின் இக்கட்டுரைக்கு வலுவூட்ட எண்ணிய என் கவிதை வரிகளை, இக்கட்டுரையின் ஊடே அனுமதித்து- என்னையும் மதித்து உள்ள தங்களின் மாண்புக்கு என்றும் நன்றியுடையவானாகிறேன், காக்கா, முனைவர் அவர்களே!

    ReplyDelete
  5. தூங்கிக்கொண்டிருக்கும் மக்களை தட்டியெழுப்பி சிந்திக்க வைக்கும் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம் காக்கா வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்களின் ஆக்கம்.

    ReplyDelete
  6. கவியன்பன் அவர்களே! // என்னையும் மதித்து// என்கிற வார்த்தைகளை வாபஸ் வாங்குங்கள் என அன்புடன் கேட்கிறேன். உலகமே உங்களை மதிக்கிறது. உலகின் மதிப்புக்குரிய தகுதிகள் உங்களுக்குண்டு. அல்லாஹ் உங்களை ஒரு நல்ல கவிஞராக்கி இந்த உலகத்துக்கு ஒப்படைத்திருக்கிறான் என்பது என் கருத்து. பிணைந்திருந்த விரல்கள் வெட்டிவிடாதீர்கள். என்றும் போல் இணைவோம்.

    ReplyDelete
  7. ஓவ்வொரு வரிகளும் சிந்திக்ககூடிய வரிகள்.இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் ஆக்கங்கள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் தொடர

    நம் நாட்டில் வருமான வரிகள் கட்டாமல் பதிக்கி வைத்த பணம் ஏறாலம்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers