.

Pages

Thursday, May 2, 2013

அன்பு நெஞ்சே

ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு
ஏணியைப் பள்ளத்தில் இறக்கிவிட்டு
ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு 
உள்ளமே இல்லாத கள்வர்களாய்
ஊரிலே பலபேர் நல்லவரே
உன்தலை மீதேறி நடப்பவரே
யாரிவன் யாரவன் என்பதைநீ
எண்ணி நடப்பாயென் அன்புநெஞ்சே

தோளிலே கையிடும் நண்பனென்பான்
துணைக்குநீ அழைக்காமல் வந்துநிற்பான்
நாளிலே பலமுறை தேடிவந்து
நன்றியே நானென்று கூறிநிற்பான்
ஏழைநீ துயர்பெற்ற நாட்களிலோ
எங்கும் உன்கண்களில் படமாட்டான்
தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
தெரிந்துநீ நடப்பாயென் அன்புநெஞ்சே 

யாருமே போற்றிடும் ஏற்றதொழில்
எவனையோ குறைகூறித் திரிவதென
ஊரிலே பலபேர் அப்படித்தான்
உன்னையே குறைகூற வந்துநிற்பார்
யாரினைக் கண்டும் நடுங்காதே
எவர்சொல் கேட்டும் நீ சிதையாதே
பேருக்கு அவர்முன் செவிமடுத்து
பிறகதைத் தனிமையில் எடைபோடு

ஏனெனுங் கேள்வியைக் கேட்பதற்கு
என்றும் எவருக்கும் அஞ்சாதே
ஆனது ஆகட்டும் என்பதுபோல்
அசைய வெறுத்துமட்டும் விலகாதே
ஆனது உன்னால் எவையெவையோ
அனைத்தையும் செய்து நீ முன்னேறு
ஊனமே எதுவென அறிவாயோ
உடைந்து கைகட்டிக் கிடப்பதுதான்

தேனினைப் போலே இனியதெது
தெளிந்தநல் லறிவுக்கு ஏற்றதெது
மானிட மொழிகளில் உயர்ந்ததெது
மௌனமே யல்லாது வேறெதது
தூணிணைப் போலே அமைதியினைத்
தூக்கி நிறுத்துவதப் பேரழகு
வேணும் போதே வாய்திறந்தால்
வேதனை ஒண்டாது அன்புநெஞ்சே 

சாதிகள் சிறிதெனத் தள்ளிவிடு
சமத்துவம் பெருஞ்சுகம் போற்றிவிடு
சேதிகள் கேட்டிட அனுதினமும்
செவியினைப் பிறருக்காய் வளர்த்துவிடு
பாதியை மெழுகிப் பொய்யுரைக்கும்
பகட்டினை மதியாதே என்றென்றுமே
தேதியொன் றானதும் நிலைமறந்து
தேவையைப் பெருக்காதே அன்புநெஞ்சே 

ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
ஆயிரம் படிகீழே தாழ்ந்திருப்பார்
ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
ஆயிரம் படியேறி உயர்ந்திருப்பார்
ஆயினும் அவற்றையே பெரிதாக்கி
ஆணவம் அவமானம் அத்துமீறும்
நோயினில் வீழ்ந்தே நோகாமல்
நேர்வழி நடப்பாயென் அன்புநெஞ்சே

சாதனை ஆயிரம் செய்துவிடு
சாவினை அழிக்கப் பெயர்நாட்டு
வேதனை வேண்டாம் தோல்விகளில்
வேண்டும் திடநெஞ்சம் எப்போதும்
சோதனை எத்தனை வந்தாலும்
சோர்வது கூடவே கூடாது
பாதம் பணிந்திட ஆசைகளைப்
பழக்கப் படுத்திவை அன்புநெஞ்சே

அன்புடன் புகாரி

9 comments:

 1. அன்பு நண்பர் அன்புடன் புகாரியின் அடுக்கு மொழிக்கவிதைக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.

  இவ்வுலகவாழ்வை உஷாராக கடந்து செல்ல உன்னத விழிப்புணர்வுக்கவிதை.

  வாழ்த்துக்கள் நண்பரே.!

  ReplyDelete
 2. நெஞ்சுக்கு நீதி

  சொன்ன கவி

  நட்பிற்குள்ளும் நய வஞ்சகம் உண்டா

  நம்ப முடியவில்ல என்னால் ..

  உயர செய்யும் ஏணியை பள்ளம் செல்லவும்

  செய்ய முடும் கவியில் ரணம் கலந்துள்ளது

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உங்களின் கவிதையை வாசிக்க... வாசிக்க... எனக்கும் கவிதை எழுத ஆர்வம் பிறக்கிறது.

  வாழ்த்துகள் கவிஞர் அவர்களே...


  ReplyDelete
 4. \\தோளிலே கையிடும் நண்பனென்பான்
  துணைக்குநீ அழைக்காமல் வந்துநிற்பான்
  நாளிலே பலமுறை தேடிவந்து
  நன்றியே நானென்று கூறிநிற்பான்
  ஏழைநீ துயர்பெற்ற நாட்களிலோ
  எங்கும் உன்கண்களில் படமாட்டான்
  தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
  தெரிந்துநீ நடப்பாயென் அன்புநெஞ்சே \\


  வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவோம்; சூழ்க பலமுடன் என்று சூளுரைப்போம். அதனால், சூழ்ந்திடும் சூழ்ச்சிகளைப் பின்னும் வலைகளை அறுத்திடலாம்!

  அமைதியே அருமருந்தென்று அருமையாய்ப் போதித்த அருமை நண்பர் கனடா கவிஞர்க்கு என் அகம்நிறைவான வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.

  நல்ல ஆக்கம்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 6. கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சுநிறை நன்றி

  ReplyDelete
 8. சிறந்த கருத்துக்கள். சிறப்பான கவிதை.வாழ்க்கைப் பாடத்தை வடித்துத் தரும் வரிகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. உங்கள் கவிவரிகளில் அர்த்தங்கள் ஆயிரம்.

  தொடர வாழ்த்துக்கள் அன்புடன் புகாரி காக்கா அவர்களே.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers