.

Pages

Friday, May 17, 2013

திருப்பம்

தடுக்கி விழுந்தால் தயங்காது மீண்டும்
அடுத்து வருமே அழகு திருப்பம்
இடுக்கண் வருதல் இயம்பும் திருப்பம்
படுத்து விடாது பற.

வாய்ப்புகள் வந்தால் விரைவுடன் பற்றுக
வாய்த்திடும் வேளை வருதல் திருப்பமே
ஒய்ந்திடா வண்ணம் ஒதுங்கும் திருப்பத்தை
ஆய்ந்திட வேண்டுமே ஆங்கு

அனுதினம் நம்மை அணுகும் பயிற்சி
அனுபவம் என்னும் அழகு திருப்பம்
மனிதனாய்ச் செய்யும் மடைமை திருந்த
புனிதனாய் மாற்றும் புவி

வண்டியின் வேகம் வளைவின் திருப்பத்தில்
தண்டனைச் சொல்லும் தவற்றின் திருப்பத்தில்
பண்டிதன் ஆதல் படிப்பின் திருப்பத்தில்
கண்டவுண் மையே கவி
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 09-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் ஒலிப்பேழை இதோ...

21 comments:

  1. திருப்பத்தை ஏற்படுத்துகின்ற வரிகள் !

    வாழ்த்துகள் கவிக்குறள்...

    ReplyDelete
  2. பதிவிலிட்டமைக்கும், வாழ்த்துரைக்கும் என் உளம்நிறைவான நன்றிகள், விழிப்புணர்வு வித்தகர் அவர்கட்கு!

    ReplyDelete
  3. அனுபவம் என்னும் அழகு திருப்பம்....
    அனைத்து வரிகளுமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதிகமாக அனுபவங்கற்றான் திருப்பங்களாக வாழ்க்கையில் அமைகின்றன என்பதை அனுபவித்து வாழ்த்திய உங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி, அன்புச் சகோதரி சசி கலா அவர்களே!

      Delete
  4. திருப்பத்தை திரும்பிப்பார்க்குமாறு திருப்பிய வரிகள் அருமை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். அன்புக் கவிஞரே! ஒவ்வொரு நொடியிலும் திருப்பங்களைத் திரும்பிப் பார்க்கிறேன். மிக்க நன்றி.

      Delete
  5. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அருமையான வாழ்த்துக்கு அகமகிழ்வான நன்றிகள்.

      Delete
  6. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் திருப்புமுனை அமையத்தான்

    செய்கிறது அதை அவன் பற்றி பிடித்தால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் கவியன்பரே

    ReplyDelete
    Replies
    1. இக்கவிதைக்கானத் தலைப்பை இலண்டன் தமிழ் வாலொலியத்தார் வழங்கிய போது, எனக்கும் வாழ்வில் சில திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அதனால் எளிதாக இவ்வெண்பாக்களை வனைந்தனன். ஆம். அதிரைத் தமிழூற்று சித்திக் அவர்களே!, திருப்பங்களிலிருந்து பாடம் படித்துக் கொண்டால், வெற்றி என்னும் இலக்கை நோக்கி மீண்டும் எழுந்து ஓடினால், நாம் அடைய நினைப்பதை அடையலாம்.

      மாநிலத்தில் +2 தேர்வில் முதலாவதாக வந்த ஜெயசூர்யா என்ற மாணவனின் நேர்காணலை இன்று படித்தேன்; கண்ணீர் வடித்தேன்; அவனிடமிருந்தும் பாடம் படித்தேன்!

      இதோ அவன் கூற்று:

      ‘’ என் தந்தைக்கு விபத்தில் கால் ஊனமாகி விட்ட பின்னர், எங்கள் குடும்பம் வறுமையில் பிடியில் சிக்கிய பின்னர், நான் படித்து எலும்பு முறிவு மருத்துவராக வேண்டும் என்ற துடிப்புடன் ஒரே இலக்கை நோக்கிப் படித்தேன்; இன்று மாநிலத்தில் முதல் மாணவனானேன்; இதற்கும் எனக்கு ஊக்கமளித்தவைகள் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்களின் பேச்சு தான்; அவர்கள் சொன்னார்கள்: “ நீ எதை அடைய நினைக்கின்றாயோ அதனையே தினமும் நினைத்துக் கொண்டு கனவு காண்பாயானால், அதற்காகவே உழைத்தாயேயானால், உறுதியாக நீ நினைத்தவை உனக்குக் கிடைக்கும்” என்றார்கள். இன்று நான் நினைத்தவைகள் கிடைத்தன. நான் மருத்துவராகி என் தந்தைக்கு மருத்துவம் செய்வேன்”

      இந்த மாணவன் நமக்கு ஓர் ஊக்கம் தரும் உன்னதமான ஓர் உதாரண மானவன்!

      உங்களின் வாழ்த்துக்கு உளம்நிறைவான நன்றிகள்.

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    மனிதன் பிறந்து இறக்கும் வரை எத்தனை திருப்பங்களை சந்திக்கின்றான்? யாருக்காவது தெரியுமா? விரல் விட்டு சொன்னால் எல்லோருக்கும் நடக்கின்ற வழமையான சடங்குகளை திருப்பமாக சொல்லலாம், ஆனாலும் இருக்கவே இருகின்ன்றது என்ன முடியாத திருப்பங்கள்.

    அன்பு மச்சானின் இந்த கவிதை என் சிந்தையை ஒரு திருப்பு திருப்பிவிட்டது.

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. மச்சானை என் கவிதையும் திருப்பி விட்டதென்றால், அஃதே என் கவிதையின் தாக்கம் என்பதில் மிக்க மகிழ்ச்சியை அடைகிறேன். என் உளம்நிறைவான நன்றியை ஏற்பீராக!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கனிவான நன்றியை ஏற்றுக்கொண்டேன் மச்சான்.

      Delete
  9. கவி வரிகள் அருமை.

    வாழ்கையில் ஏற்ப்படும் திருப்பங்கள் இருந்தால் தான் மாற்றங்கள் ஏற்ப்படும்.

    ReplyDelete
  10. அன்பு நேசர் ஹபீப் அவர்களும் வாழ்க்கையில் திருப்பங்களைக் கொண்டு தான் மாற்றங்கள் உண்டாகின்றன என்ற ஆழமான ஓர் உண்மையைத் தன் கருத்துரையில் வழங்கி என் கவிதையின் கருவுக்கு வலுவூட்டியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. நம்பிக்கையூட்டும் அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. எம்மால் இயன்ற அளவுக்கு எமக்கு எளிதாக வாய்த்துள்ள “கவிதையாத்தல்” என்னும் முயற்சியால் நம்பிக்கையூட்டி வருகின்றேன். இன்னும், இஃதே போன்று வேறொரு இடத்திலிருந்தும்,( அதுவும் எனக்கு யாப்பிலக்கணம் கற்றுத் தரும் இணையக் குழுவிலிருந்து) இதே மாதிரியான ஒரு தலைப்பைத் தந்து இணையக் கவியரங்கிற்கு ஆயத்தமாகப் பணித்தனர். அதன் தலைப்பு: “திசைமாற்றிய திருப்பங்கள்” அவர்கள் இத்தலைப்பை முன்னரே கொடுத்திருந்தால் இக்கவிதையையே அடியேன் சிறிது மாற்றி அத்தலைப்புக்கு ஏதுவாக அமைத்திருப்பேன். எனினும், அத்தலைப்புக்குப் பொருத்தமாக அடியேன் வனைந்துள்ள கவிதை இதோ:



      ஈற்றடித் தந்ததும் இன்னிசை வெண்பாவின்
      மாற்றடிக் கோக்கும் மரபினைக் காட்டி
      அசைசீர் தளைகள் அலகிட வைத்தத்
      திசையே திருப்பமாய்ச் சொல்.




      விருத்தம் எழுத வினைந்தனன் யானும்
      வருத்தம் எதற்கென வந்து கவிதைத்
      திருத்தும் பணியில் திகழும் இலந்தை(யார்)
      திருப்பம் வழங்கும் திசை.



      புதுமை உரைவீச்சின் போக்கை மறுத்து
      மதுவாய் இனிக்கும் மரபுக்கு மாற்றி
      அதிரை அகமத் அளித்தத் திருப்பம்
      விதையாய் மனத்தில் விழுந்து


      ஈழம் வழங்கிய ஈடிலாக் காப்பியக்கோ
      ஆழ மரபின்பால் ஆர்வத்தைக் கற்பித்துத்
      தோழன் உறவுபோல் தொய்வின்றி யாப்புடன்
      வாழத் திருப்பும் வகை

      ஆக, என் கவிப்பயணத்தில் “திருப்பங்களை”க் காட்டிய என் ஆருயிர் ஆசான்களை என்றும் நினவிற்கொண்டவனாகவே இவ்வெண்பாவை வனைந்தனன். இறையருளால், 03-06-13 அன்று இணையக் கவியரங்கில் இவ்வெண்பாவும் அரங்கேறும்.

      உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

      Delete
  12. திருப்புமுனைகள் வாழ்வைத் தீர்மானிக்கும் .திருப்புமுனைகளைத் தேர்ந்தெடுக்கத் தவறுவோர் அல்லது தவறான திருப்புமுனைகளைத் தேர்ந்தேடுப்போர் வாழ்வில் தடுமாறுவர். கவியன்பனின் கவிதைகள் காட்டும் திருப்புமுனை ஒரு நன்னம்பிக்கை முனை.

    ReplyDelete
    Replies
    1. ஆஃபிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுட்டும் அழகானச் சொல்லாடலில் என் கவிதைகளை அதிரையின் நன்னம்பிக்கை முனை என்று உள்ளார்ந்தப் பொருளுடன் வாழ்த்துரையளித்த என் அன்பிற்கினிய முனைவர்--பொருளாதார வல்லுநர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு என் உளம்கனியும் நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன். தங்களையும், தங்களின் உடல்நிலையையும் நேரில்-ஊரில் கண்டு களிக்க ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன், காக்கா!

      Delete
  13. அய்யாவின் கவிதையை நீண்ட நாட்களுக்குப்பின் வாசித்தது மனமகிழ்வடைகிறது.வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று

    ReplyDelete
  14. தமிழன் அய்யா அவர்களைத்தான் நீண்ட நாட்களாய்க் காணாது என் உள்ளம் தேடியது; இப்பொழுது உங்களின் வருகையும், வாழ்த்தும் கண்டேன்; அகமெங்கும் பேரானந்தம் கொண்டேன்; மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers