.

Pages

Thursday, May 30, 2013

வாழப் பரிந்துரைக்கும் வண்ணக் கவிதைகள்

கவிதை

உச்சரிக்கும் ஒவ்வொருமுறையுமே
உள்ளக் கிளைகளிலிருந்து
ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகள்
சிறகடித்துப் பறக்கின்றன

உள்ளுக்குள் வாழும் கல்லுக்கும்
... சிறகுகள் முளைத்து
உயரே உயரே
எழுந்து எழுந்து பறக்கின்றது

எந்தப் புண்ணியவான் சூட்டியது
இத்தனை அழகுப் பெயரை

கவிதை

உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

தன்னுள் கிளர்ந்த உணர்வுத் தீயை
துளியும் தணியாமல்
வெள்ளைத் தாள்களில்
பற்றியெரிய வைப்பதெப்படி
என்னும் கடுந்தவிப்பில்
கவிஞன் தன்னையே செதுக்கி
உயிர்ப்பித்த தவம்

சத்திய கவிதைகளில்
சித்தம் நனையும்போது
இளமை துளிர்க்கின்றது
அந்த உயிர் நீடிக்கின்றது

கவிதை

இயந்திரங்கள் மனிதனை இயக்க
பழுதாகும் இன்றைய வாழ்வை
கருணையோடு அள்ளியணைத்துச்
சரிசெய்யும் மருத்துவம்

கற்பனையிலும்
வந்துபோகாத மனித இயல்பைக்
கர்ப்பமாய்ச் சுமந்து
மனித குலத்தின்மீது
மழையாய்ப் பொழிவிக்கும் அக்கறை மேகம்

அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களையெல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது
கூடவே சுருங்கிப்போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித்தரும் சந்தனக் காற்று

இறுக்கத்தின் எண்ணங்களில்
தேங்கித் தேங்கி நிரம்பி வழியும்
விரக்திக் கேள்விகளால்
வெட்டுப்படும் பந்தங்களை
ஒட்டவைக்கும் உயிர்ப் பசை

பொருள்மட்டுமே தேடும் சிறுமை வாழ்வை
ரசித்துச் சுவைத்து வாழும்
அருமை வாழ்வாக்கும் அழகு தேவதை

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

கவிதை
அன்புடன் புகாரி

12 comments:

 1. உயிர்ப் பெட்டகம்...

  வண்ணமிகு கவிதைகள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
  நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
  இயல்பு வாழ்க்கைக்குள்
  இழுத்துச் செல்லும் அன்புக் கரம்.
  உண்மை தான் அழகாக சொன்னீங்க. அன்பு, ஆதங்கம் அனைத்தையும் சொல்ல தேர்ந்தெடுத்த கருவி கவிதை .

  ReplyDelete
 3. கவிதைக்கே கவிதையா ! :)

  ReplyDelete
  Replies
  1. ஒரு வரியில் ..

   ஓராயிரம் அர்த்தம்

   Delete
 4. உன்வரவு பொய்யுலகின் திரைவி லக்கி

  உண்மையினைத் துலக்கிற்று துருப்பிடித்த

  புன்மைகளைப் போக்கிற்று ! தெய்வீ கத்தின்

  புகழ்க்குரிய செழும்பொருளை விளக்கிக் காட்டி

  இன்மையிலும் உண்மையிலும் விரவி நிற்கும்

  இயற்கையெழில் நுட்பத்தை இனங்காட் டிற்று !

  நன்மையெனும் சிறப்புரைக்கும் நாவைக் கொண்டோய் !

  நறுக்கவிதைக் குயிலேநீ இன்னும் பாடு !

  ReplyDelete
 5. கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கண்ணுக்கு மெய்யழகு
  கவிதைக்கு பொய்யழகு
  என்ற வரிகளை பொய்யாகி
  கவியை மெய்யான வார்த்தைகளால்
  அலங்கரித்து மெருகூட்டிருக்கும்
  அன்பு நண்பர்
  புகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. கவிஞனின் சிந்தனை ..

  வித்தியாசமானது ...

  ஒவ்வொரு பொருளையும் ...

  ஒவ்வொரு நிகழ்வையும் ..

  பிறரை விட வேறு பார்வை பார்ப்பான்..

  என்..மேல் விழுந்த மழை துளியே ..

  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ..

  என்னுள் இருந்த என் கவியே ..

  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ..

  இப்படி ..ஒவ்வொன்றின் நதி மூலம்

  தேடும் கவிஞன் ...இன்று கவிதைக்கே

  பெயரழகு என்று சிலாகிப்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை

  தேன் என்றால் இனிமை தான் ..கவி என்றால் ...

  சுவைப்பவர் நிலை அறிந்த விஷயம் ...

  ReplyDelete
 8. தன்னைக் குறித்து மிகச் சரியாகச்
  சொல்லப்பட்ட கவிதையென்று அந்தக் கவிதை
  நிச்சயம் பெருமிதம் கொண்டிருக்கும்
  மனம் தொட்ட அருமையான கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கவிதை! கவிஞர்!

  காட்டில் காயும் நிலவல்ல -கடலில் பெய்யும் மழையல்ல. சமுதாயத்தின் நடுவே சில நேரம் சாட்டை எடுக்கும் பலநேரம் பயிற்றுவிக்கும். கவிதை உருவில் தரப்படும் உணவு உடனே செரிக்கும். மனக் குடலின் உறிஞ்சிகள் உடனே உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கும் . உற்சாகப்படுத்தும்.

  கவிஞர் புகாரி அவர்களைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 10. அன்புடன் கருத்திட்ட வாழ்த்திய பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் என் ஆனந்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றியுடன்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers