.

Pages

Friday, May 31, 2013

பணம் படுத்தும் பாடு

உழைப்பென்னும்  நான்கெழுத்துத்  தாயின்  சேயே !
        ****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே
மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்
       ***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்
தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்
      ****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்
பிழைப்போரும் உன்பின்னா லோட  நாட்டம்
    ****பிச்சையெடுப் போருமுன்றன்  மீதே  நோட்டம்

பொருளாதா ரப்போட்டி  நீண்ட நாளாய்ப்
     ****போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்
இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்
     ****இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்
வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி
     ****வறியோரைக் கொல்லுதலே குறியா  யாக்கி
ஒருமான  மில்லாத கூட்டம் சேர்த்தாய்
    ****ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய்  நீயே

விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு
    ****விலகித்தான் போகின்றாய்; விலகிப் போனால்
விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய
    ****வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும் ?
நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்
    ****நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்
வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்
   ***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 30-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் ஒலிப்பேழை இதோ...

22 comments:

  1. நாணயத்திற்கு இருபக்கம் போல் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களுக்கும் இரு பக்கங்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தால் ஒரு பக்கம் நன்மை விளைகிறது மறுபக்கம் தீமை விளைகிறது.

    ReplyDelete
  2. சில மாதங்களுக்கு முன்பு நடந்த விவாதம் ஒன்றில்....

    பணம் இன்றைய மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. பணம் எல்லோருக்கும் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிப்பது தப்பில்லை. அது அவர்களது திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்த விஷயம்.

    பணம் நிறைய நல்லது செய்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு கொடுத்து நல்லது செய்யமுடியும். பணத்தால் விளையும் நன்மைகளை பட்டியல் போடத் தொடங்கினால் அது வெகு நீளமாகும். அதுபோல் பணத்தால் உருவாக்கும் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு “ அதிகம் விளைவது.... “ என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறோம். அதனால் அதிகம் எது விளைகிறது ? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

    முன்பு ஒருவர் சம்பாதித்து ஒரு குடும்பமே நடந்தது. ஒரு வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம்தான் இருந்தது. ஒரே ஒரு டி.வி. தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக சாப்பிட்டர்கள். நன்றாக இருந்தார்கள்.

    ReplyDelete
  3. தொடர்ச்சியாக....................

    இன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர் சம்பாதிக்கிறார்கள், வீட்டிற்கு இரண்டு, மூன்று பாத்ரூம்கள். இரண்டு, மூன்று டி.வி.க்கள். சவுகரியங்கள் என்று நினைத்து மனிதர்கள் தனித்தனியாக பிரிந்தார்கள். பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக அதிக பணம் சேர்ந்ததே அந்த பிரிவுக்கு காரணம்.

    இளம் வயதிலே நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள், அந்த பணத்தால் எதை எல்லாம் அனுபவிக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நேற்றை பற்றிக் கவலை இல்லை. நாளையை பற்றிய நினைப்பும் இல்லை. இன்றுதான் என் கையில் இருக்கிறது அதை முடிந்த அளவு சுவையாக அனுபவித்துவிட வேண்டும் என்று அலைபாய்கிறார்கள்.

    உணவில், வீடு உணவின் ஆரோக்கியத்தை மறந்து தினமும் சுவைக்கு பாஸ்ட் புட் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் உடலை குண்டாக்கி, பாஸ்ட்டாக அவர்கள் வாழ்கையை முடிக்கப் பார்க்கிறது தேவையற்ற பொழுதுபோக்குகள் அவர்கள் உடலை கெடுக்கிறது. முறையற்ற வாழ்க்கை அவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கிறது. அதனால் பலர் நாற்பது வயதுக்கு முன்பே நடை பிணம்போல் ஆகிவிடுகிறார்கள்.

    அதிகமாக சம்பாதிக்கும் இளைஞர்கள் “ நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை என் தந்தை ஒரு வருடம் சம்பாதிக்கிறார் “ என்று கர்வத்துடன் பேசுகிறார்கள். அதனால் குடும்பத்தில் சுயமரியாதை இழப்பும், தவிப்பும், பிரிவும் உருவாகிறது. இது குடும்பத்தில் ஏற்படும் தீமை.

    சமூகத்தை கணக்கிட்டு பார்த்தல், அதிக பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள் என்ற இடைவெளி தற்போது அதிகமாகிறது. பணம் படைத்தவர்கள் மென்மேலும் பணம் சேர்த்து கொண்டாடுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் மென்மேலும் ஏழையாகி திண்டாடுகிறார்கள். பணம் படைத்தவர்களின் கொண்டாட்டங்களையும், சவுகரியங்களையும் பார்த்து பணமற்றவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கங்கள் சமூக பிரச்சனைகளை உருவாக்கிறது.

    ReplyDelete
  4. தொடர்ச்சியாக...

    பணம் ஒரு தரப்பினரிடம் குவியும்போது அங்கே மனித தரம் குறைகிறது பணத்தால் விளையும் தீமைக்கு பல முகங்கள் இருக்கின்றன. அதனை நாம் தினமும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம். அந்த அடிப்படையில், “ இளம் வயதில் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது தீமையே ! “

    என்று விவாதம் நிறைவுற்றது.

    ReplyDelete
    Replies
    1. விவாதமும் தீர்ப்பும் உண்மை... இளம் வயதினரை ஊக்குவிக்கும் பெற்றோர்களையும் "கவனிக்க" வேண்டும்...

      Delete
    2. என் செய்யுள்கட்கு விளக்க உரை எழுதும் திறனும் ஆர்வமும் விழிப்புணர்வு வித்தகர்க்கு நீண்ட நாட்களாக அமைந்த ஓர் அற்புதமான வழிமுறை; இன்றும் என் செய்யுளை விளக்கும் நீண்ட விளக்கங்களுடன் கூடிய ஆதாரம் மற்றும் புள்ளிவிவரங்களைத் தந்து வாழ்த்தியமைக்கு என் நெஞ்சம் படர்ந்த நன்றிகள்.

      படிப்பாளிதான் படைப்பாளியாவான்
      எழுது; எழுதப்படுவாய்;
      பேசு; பேசப்படுவாய்

      இவ்வாக்கியங்களில் நிஜம் தான் எங்கள் நிஜாம்!

      Delete
  5. வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்
    ***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்//
    நிறைவான வரிகள் ...வங்கியில் நம் கணக்கில் பணம் இருக்கணும்
    இல்லையெனில் ..கடனாளியாக போக வேண்டி வரும் ...

    காலத்திற்கு ஏற்ற கவி ...கவியன்பரே

    ReplyDelete
    Replies
    1. பணம் கொழிக்கும் நாட்டிலிருந்து பக்குவப்பட்ட மனத்திலிருந்து வரப்பட்ட நிதர்சனமான இந்த விமர்சனத்தை மனமார ஏற்கிறேன்; என் மனம்நிறைவான மக்ழ்வான நன்றியை ஏற்பீராக!

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    பணம் படுத்தும் பாடு.
    உண்மையான தலைப்பில் ஒரு ஆக்கத்தை கவிதை நடையில் வார்த்து இருக்கின்றீர் மச்சான். பணம் படுத்தும் பாடு, பணம் பாதாளம் வரை செல்லும், பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இன்று அளவுக்கு அதிக பண வரவால் சிறுவர்கள் மட்டும்மல்ல, எத்தனையோ இல்லத்தரசிகள் குடித்தனம் நடத்த தகுதியற்றவர்களாக இருக்கின்றனர், எத்தனயோ கணவன்மார்கள் தறிகெட்டு போய் செய்வது அறியாது முழிக்கின்றனர். இதற்க்கெல்லாம் காரணம் பணம்.

    பணத்தை பற்றி நான் குறை சொல்ல வில்லை, பணம் பணமாகத்தான் இருக்கின்றது. அதை கையாளுகின்ற திறமை எத்தனை பேருக்கு இருக்கு?

    பல நாட்கள் பட்னியாக இருப்பவனுக்கு பத்து கிலோ உணவை கொடுத்தால், அவன் வயிறு நிரம்பு வரை மட்டும் தான் உணவை உண்ணமுடியும்.

    பல நாட்கள் பணம் இல்லாமல் இருப்பவனுக்கு பத்து ஆயிரம் பணத்தை கொடுத்தால், அவன் ஒரு நொடியில் விரயம் ஆக்கிவிடுவான்.

    மச்சான் உங்கள் சிந்தனைக்கு நன்றி, பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. மச்சானின் ஆய்வுக்கும் வழிகாட்டுதலுக்கும் வாழ்த்துரைக்கும் என் உளம் நிறைவான நன்றிகள்.

      Delete
  7. உழைப்பென்னும் நான்கெழுத்துத் தாயின் சேயே !////

    உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பதன் பொருளோ?
    உங்கள் முதல் வரி [சிறப்பு]

    ReplyDelete
    Replies
    1. எதையும் ஏனோ தானோ என்று “நுனிப்புல் மேயாமல்” உளமார உள்வாங்கி எழுதும் தொழிலதிபர், இவ்வரிகளையும் ஆய்ந்து கேட்டுள்ள வினாவிற்கும், வாழ்த்துக்கும் முதற்கண் நன்றியை நவிலிகிறேன்.

      1) பல முறைச் சுட்டிக் காட்டிய வண்ணம், இச்செய்யுளும், ஹைக்கூ என்னும் கருவையும்; புதுக்கவிதை என்னும் உயிரும் உணர்வும்; இவைகளை ஓசை என்னும் வாய்பாட்டின் அளவொத்து மரபு என்னும் உடலுக்குள் செலுத்திச் செதுக்கியவைதான் இச்செய்யுள் வரிகள்.(செய்தலால்= செய்யுள்; பாடுவதால்= பாடல்; விதைப்பதால்= க”விதை’)

      இச்செய்யுளைக் கோத்தவனும் யாத்தவனுமாகிய அடியேனால் மேற்கூறிய ஹைக்கூ(கரு) , புதுக்கவிதை (உயிர், உணர்வு); மரபுப்பா(உடல்) என்பதாக இவ்வரிகளைத் தனித்தனியாகப் பிய்த்து- பிரித்துக் காண்பிக்க முடியும்!
      அவ்வண்ணம் அமைக்கப்பட்ட வரிகளில் , நீங்கள் கண்டெடுத்த அர்த்தமுள்ள முத்தும் அடங்கும்!

      Delete
  8. Thanks uncle, It is good topic

    Struggling to Earn Halal income is also a Virtue in Islam while Earning Money from Haram ways is a big sin in Islam such as interest, gambling or Fraud ways. Also there are many bad effects of Haram Income and according to Hadith Dua of that person is also not accepted who Earns money by Haram ways.

    ReplyDelete
    Replies
    1. Jazaakkallahu khaira, dear niece!

      I am so glad to realize that you are not only highly educated in worldly studies but also well versed with ISLAMIC WISDOM which shows your EEMAAN thru your comments on Hala/Haram money issue.

      I think you may lead perfect Islamic family with your Islamic knowledge, And, I request you to spread Islam to your friends too. This is why Allah has given wisdom and high education to you.

      I am happy to say you that I have been teaching English Grammar since 1980 until now, for FREE OF COST. Even now, I am teaching to two Tamil muslim familiy's girls who are studying here in Abu Dhabi. One of my said student wants to make stage programm and she asked an English poem on this topic MONEY. Please find below is my English poem which I have given to her based on this Tamil poem.

      Kindly check and tell you comment:

      MONEY OH MONEY
      YOU ARE OUR HONEY

      BECAUSE YOU MAKE MANY!


      You are the child of our hard work
      You are controlling the world as network
      You are as soul as rainfall to earth
      You have given coins as your birth
      You are root of wealth focus
      You are acting as token of status
      Workers are running behind you
      Beggars are too watching upon you!




      Wars are being ignited for getting you
      Economic competitions are being produced by you
      Darken age has been reverted by you
      As the God faith is defeated by you
      Zealotry is the creation of you


      Even though we like you like crazy
      But you are not being caught very easy
      While we don’t like to be with us
      You are coming quickly with bliss
      Where did you get this magic?
      I can’t understand your logic!
      You have put on dress of greed;
      And have impressed towards need

      Delete
  9. உங்கள் வரிகளின் சிறப்பு படிப்பதற்கோ வரும் பொறுப்பு.

    கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எத்தளத்தில் என் கவிதைகள் இடப்பட்டாலும், அங்கே சென்று உங்கள் அன்பைச் சொல்லும் அன்பு நேசர் ஹபீப் அவர்களின் அன்புக்கு முன்னால் என் கவிதை ஒரு சிறப்பன்று! இருப்பினும், உங்களின் சிறப்பான வாழ்த்துக்கு என் சிறப்பான நன்றியை உங்கள் பக்கமாக இணைத்துக் கொள்கிறேன்; ஏற்பீராக!

      Delete
  10. கவியன்பனின் இந்தக் கவிதைக்கு பண மாலை சூட்டவேண்டும்.

    ReplyDelete
  11. அன்பின் காக்கா முனைவர் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். தயைகூர்ந்து என்னைப் புரிந்து கொள்வதற்காக என்னிலை விளக்கம் தருகிறேன்(யாரும் கர்வம்/ தற்பெருமையுடையோன் என்று கருத வேண்டா)

    நான் பணத்துக்கு அடிமையானவன் அல்லன்;
    பணம் எனக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுப்வன

    1980 முதல் இந்த நிமிடம் வரை “இலவயமாக” ஆங்கில இலக்கணம் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்கள் நடத்துகிறேன்

    எனக்கென்று நான் எதனையும் வைத்துக் கொள்ளாமல்,

    மனைவி, மக்கட்காகவே உழைக்கிறேன்; கொடுக்கிறேன்.

    இன்னும், இன்ஷா அல்லாஹ், என் கவிதைத்தொகுப்பு வெளிபிட்டு விநியோகித்தாலும் அதனையும் “இலவயமாகவே” விநியோகிப்பேன்.

    ஏனென்றால், பணமாலை பெறுவதற்காகவே அடியே பாமாலை கோத்தவன் அல்லன்.

    “யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக” என்பது மட்டுமே என் கொள்கையாகும்.

    எனவே தங்களின் பணமாலை என்ற சொல்லை பாசமாலை என்பதாகவே ஏற்கிறேன். தங்களின் உளம்நிறைவான வாழ்த்துக்கு என் உளம்நிறைவான நன்றிகள்.

    பொருளாதாரம் கற்பிக்கும் பேராசானாகிய தங்களால் இச்செய்யுளின் தாக்கம் உணர முடியும் என்றே கருதிக் கொண்டே வனைந்தனன்; அந்த என் எண்ணமே, தங்களின் பின்னூட்டத்தின் வண்ணத்தில் காட்டியது!

    ReplyDelete
  12. அய்யாவின் கவிவரிகள் ஒவ்வொன்றும் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெறுவதற்குரிய தகுதியுள்ள கவிதைகள்

    வாழ்க தமிழ் வளர்க அய்யாவின் தமிழ்ப்பற்று

    ReplyDelete
    Replies
    1. இறைவன் நாடினால் நடக்கும்; காரணம் என் கவிதைகள் மரபென்னும் உடலுக்குள் செருகப்பட்ட புதுக்கவிதையின் உயிரும் உணர்வும் ஹைக்கூ வின் கருவும் இணைந்த ஒரு “முழுமைப் பெற்ற” கவிதை என்னும் குழந்தையை யான் தினமும் பிரசவிக்கிறேன். என் ஆசான்களின் வழிகாட்டுதலில், அவர்கள் தினமும் எனக்கு நடத்தும் யாப்பிலக்கண மரபுப்பாக்களின் வாய்பாட்டை அடித்தளமாக வைத்து எனக்குத் தரும் “வீட்டுப் பாடங்களே” என் கவிதைகளாய்ப் பதிவுக்கு வருகின்றன( அந்த ஆசான்களின் திருத்தங்களுடன்). எனவே, இவ்வீட்டுப்பாடங்களே ஒரு காலத்தில் பள்ளிப்பாடங்களாகலாம். இஃது என் தன்னம்பிக்கை தான்; தற்பெருமை அன்று.

      மாறாகச் சிந்திப்பவர்கள் “புரிந்துணர்வில் குறைபாடு” உடையோராவார்கள். அடுத்துக் கீழே உள்ள பின்னூட்டத்தைக் கவனியுங்கள். அப்பின்னூட்டத்தை எழுதியவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். ஜனாப். முஹம்மத அலி ஜின்னா அவர்கள் வழக்குரைஞர். ஆங்கிலமும் தமிழும் இலக்கணத் தூய்மையுடன் அறிந்தவர்கள்; அவர்கள் என் பாடலை விரும்புகின்றாரகள்; அவர்களின் தளத்தில் போட விழைகின்றார்கள் என்றால், அவர்கள் தான் புரிதலில் மேன்மையானவர்கள்; அவர்கட்கும், உங்கட்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

      Delete
  13. அண்ணன் -கவியன்பன் அபுல் கலாம் அவர்களின் கவிதைகள் சிறப்பானவை . பணம் படுத்தும் பாட்டை சுவைபட தந்துள்ளார் .அதில் அனுபவ அறிவும் கிடைத்திருக்கலாம் .
    அண்ணன் ஆங்கில கவிதை தந்திருப்பதனை படித்து மகிழ்ந்தேன் . இறைவன் தந்த அருள் அவருக்கு இத்தகைய வல்லமையைத் தந்து அதனை அவர் ஆற்றல் அதனை சிறப்பிக்கின்றது .மனநிறைவோடு வாழ்த்துகின்றேன் . இன்ஷாஅல்லாஹ் அவரது ஆங்கிலக் கவிதையை http://seasonsali.blogspot.in/ வெளியிட விரும்புகின்றேன்

    ReplyDelete
  14. அன்பின் முஹம்மத் அலி ஜின்னா என்னும் என் அண்ணா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,

    முதன்முதலாக முகநூலில் யான் வடித்த “மெய்தீண்டும் மைவிழியாள்” என்னும் என் கவிதையை முதன்முதலாக தாங்கள் தான் தங்களின் “நீடூர் சன்ஸ்” வலைத்தளத்தில் என்னைக் கேட்காமலே பதிந்து எனக்கு அனுப்பினீர்கள்; அன்று முதல் தங்களை யான் அவதானிக்கிறேன்; அஃதே போல் தாங்களும் என்னை அவதானித்துக் கொண்டே வருகின்றீர்கள் என்பதற்கான காட்டு: தங்களின் பின்னூட்டத்தில் தங்களின் உளம்நிறைவான வாழ்த்துரை; என் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகிறேன்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    என் ஆங்கிலக் கவிதையைத் தங்களின் தளத்தில் பதியலாம்; என்றும் தங்கட்கு அனுமதி உண்டு.

    தேனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜூதீன் என்னும் இஸ்லாமிய பாடகர் அவர்களிடம் தாங்கள் என்னைப் பற்றிப் புகழ்ந்ததாகச் சொன்னார்கள்; என்பால் தாங்கள் வைத்திருக்கும் அன்பால் நான் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன். ஒருமுறை அவர்க்கு நான் பாடல் எழுதினேன்; அவரால் அப்பாடலைப் பாட முடியாமல் அழுது விட்டார்கள்; அப்பாடலில் நான் நமது நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்களைக் கனவில் கண்டதைப் பற்றி எழுதினேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers