.

Pages

Monday, May 13, 2013

வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு !?

குறுந்தொடர் : பகுதி 1 

அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும்   “வறுமைக்கோடு “ என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் ( வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன் ) இந்த வார்த்தை எதிரொலித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே என்றும் வார்த்தை சிலம்புச்சண்டைகள் நாடெங்கும் அரங்கேறின. இதைப்பற்றி சில கருத்துக்களை இந்த பதிவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கோடுகளைப்பற்றி நாம் பேசப்போனால் சின்ன வயதில் நாம் அடித்து விளையாடிய நொண்டிக்கோடு விளையாட்டில் இருந்து, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய இன்னபிற  விளையாட்டுகளின்  மைதானங்களின் கோடுகளிலிருந்து ,  நாடுகளுக்கிடையே போடப்படும் எல்லைக்கோடுகள் வரையும், பூமிப்பந்தின்  மேல் இருப்பதாக புவி இயலில் படித்த பூமத்திய ரேகை, கடக ரேகை மற்றும் மகர ரேகை வரை நமக்குத்தெரியும். அண்ணன்மாரே ! தம்பிமாரே ! வறுமையும்  நமக்குத்தெரியும், புரியும் . கொடிது ! கொடிது ! வறுமை கொடிது ! அதனினும் கொடிது இளமையில் வறுமை ! என்று  ஒளவையார் பாடியதாக ஆறாம் வகுப்பிலேயே  மனப்பாடப்பகுதியில் படித்து இருக்கிறோம். ஆனால் வறுமைக்கோடு தெரியாதே !

வறுமைக்கோடு என்பது என்ன ? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வறுமையையும் ,  வறுமைக்கோட்டையும் விளக்குவதானால் முதலில் வறுமை என்பதை சுருக்கமாக இப்படி விளக்கலாம்.

உயிர்வாழத்தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசியமான பொருள்களையோ, சேவைகளையோ அல்லது சாதனங்களையோ பெறமுடியாத நிலையில் இருப்பவர்களை வறுமையில் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாக விளங்கலாம். STATE OF ONE WHO LACKS AN USUAL AND SOCIALLY ACCEPTABLE AMOUNT OF MONEY, SERVICES OR MATERIAL IN HIS POSSESSION.

இதில் குறைந்தபட்சத்தேவை என்பதை வரையறுக்கும் அளவுகோலுக்கு பொருளாதார மேதைகள் வறுமைக்கோடு POVERTY LINE  என்று பெயர் சூட்டி இருககிறார்கள். இந்த அளவுகோலுக்கு அதிகமாக துய்ப்பவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ABOVE POVERTY LINE என்றும் , இந்த அளவுகோல் அளவு கூட துய்க்க/ பெற முடியாதவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் BELOW POVERTY LINE  என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எந்த ஒரு பொருளாதார அளவுகோலுக்கும் ஒரு அடிப்படை (BASE) இருக்கும். அந்த அடிப்படையை  வைத்தே பொருளாதார புள்ளி விவரங்கள் அளவிடப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படும். இந்த அடிப்படை என்பது உயிரற்ற உடலுக்கு ஊதிவிடும் சுவாசம் போன்றது. இந்த அடிப்படையை தேர்வு செய்வது என்பது மிக மிக முக்கியம். ஏணி வைத்து ஏற வேண்டிய உயரத்துக்கு ஏணி வைத்து ஏறவேண்டும். கால பெருவிரலை ஊன்றி உன்னி ஏறவேண்டியதுக்கு பெருவிரலின் சக்தியே  போதும். இமய மலை ஏறவேண்டி இருக்கும்போது ஏணியைக்கொண்டுபோனால் எதுவும் நடக்காது. கையால் எடுக்க முடிந்த காரியத்துக்கு கார்டர் பில்லர் தேவை இல்லை. உங்கள் ஜேப்பில் உள்ள பணத்தை எடுக்க ஜெ சி பி தேவையா ?
அதனால்

- அளவுகோலை உணடாக்க அடிப்படை (BASE)
- அதன் மூலமான புள்ளி விபரங்கள் (FACTS)
- அந்த புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய திட்டம் (PLAN)  
- திட்டத்தின் அடிப்படியில் செயல் (EXECUTION )

ஆகியன தேவை. இந்த அடிப்படைதான் நாம் போடும் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு வீட்டுக்கும் பொருந்தும் .

வறுமைக்கோட்டுக்கான அடிப்படை என்ன? எதைவைத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை கணக்கிடுவது ? ஆகிய கேள்விகளுக்குரிய விடை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் இந்தியா எடுத்துக்கொண்ட அடிப்படை இமயமலை ஏறுவதற்கு ஏணி கொண்டுபோன கதையாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆக்கத்தின் ஹை லைட்.

வறுமைக்கோட்டின் அடிப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் – ஒரு குடும்பத்தின் மொத்த வருமானMம்ம அடிப்படையாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் HDI  என்று அழைக்கப்படும் HUMAN DEVELOPMENT INDEX  என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. இந்த HUMAN DEVELOPMENT INDEX  என்ற அடிப்படையே  உலகில் பரவலாக பெரும்பான்மை நாடுகளால் பின்பற்றப்படுகின்ற அடிப்படையாகும்.  இலங்கை போன்ற நாடுகள் தங்களது அரசியல், இன , மொழி அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுகின்றன. மக்கள் நலம் பேணாத அரசுகள் உள்ள நாடுகள் இது பற்றி கண்டு கொள்வதே இல்லை. அங்கேயெல்லாம் வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான்.

ஏழ்மையில் உழலும் மக்களை நோக்கிய அரசின் உதவும் கரங்களை நீளச்செய்யும் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் இந்தியாவைப் பொறுத்தவரை கேலிக்கூத்து ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய திட்ட கமிஷனின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு குடிமகனும் அவன் நகர்ப்புறத்தில் வசித்தால்  ஒரு நாளைக்கு Rs. 29/=  ம் கிராமப்புறத்தில் வசித்தால் Rs. 22/= ம் ஈட்ட முடிந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் ; அவனை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவன் என்று கருதி அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அவனுக்கு வழங்கவேண்டியதில்லை என்று கூறாமல் கூறி இருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு Rs. 29/=  சம்பாதித்தால் இந்திய அரசின் திட்ட கமிஷனின் பார்வையில் அவன் பணக்காரன். இந்த அளவுகோல் எவ்வளவு  தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான்.

திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா ? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத் தோன்றுகிறது. இவ்வளவு நாள் இப்படி கலவாணிப்பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம் ? ( நெறியாளர் மன்னிக்கவும் - எனக்கு வருது அப்படி) .

எந்தப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு நகைப்புக்குரிய அளவுகோலை வைத்து நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் நகைப்புக்குரியது. அதாவது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2400  கலோரி சக்தியும் , நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2200 கலோரி சக்தியும் போதுமாம். இந்த அளவு கலோரி உள்ள உணவுகளை இந்த Rs. 22/= & Rs. 29/= ல் பெற்றுக்கொள்ள முடியுமாம்.

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை.

இந்த விவாதம் பொருந்துமா ? தொடர்ந்து பார்க்கலாம்...

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

7 comments:

 1. வறுமைக்கோடு பட்டியலில் வசதி படைத்தோரின் பெயர்கள் உள்ளதால் உண்மையான ஏழைகள் உதவித்தொகை பெற இயலாமல் தவிப்பதை கண்கூடாக் காண்கிறோம்

  பட்டியலை மறுபரிசீலனை செய்வது அரசின் முதன்மையான கடமையாகும்.

  ReplyDelete
 2. நல்லதொரு ஆய்வு !

  தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகர்களுள் நானும் ஒருவன்.

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. வலியோ ரெளியோர் மீதினிலே
  ****வகுத்து வைத்த கோடாகும்
  பலியாய்ப் போகு மெளியோரும்
  ****பயமாய்ப் பார்க்கும் கேடாகும்

  வேலி தாண்டி வரவியலா
  ****விரக்தித் தருமே இக்கோடும்
  நீலிக் கண்ணீர் வடிக்கின்ற
  ****நீசர் செய்த பெருங்கேடாம்

  கானல் நீராய் வாழ்நாளும்
  ****கனவாய்ப் போய்த்தான் ஒடுங்கியது
  வானம் பார்க்கும் பூமிதானே
  ****வறுமைக் கோடு வழங்கியது

  இருளில் வாழ மின்வெட்டில்
  ****எல்லார் வீடும் சமமாக!
  பொருளா தாரக் கோட்டிற்றான்
  ****பொத்தல் விரிசல் வேற்றுமைகள்

  ReplyDelete
 4. அரசியல்வாதிகளே...!

  படித்து பாருங்கள் ..திருந்துங்கள்

  ReplyDelete
 5. வறுமையைப்பற்றி நல்ல விளக்கத்துடன் சிறப்பான கட்டுரை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வறுமையின் ஆக்கம் அருமை தொடர வாழ்த்துக்கள் வறுமையல்ல உங்களின் இந்த அருமையான ஆக்கம்.

  ReplyDelete
 7. பதிவுக்கு நன்றி.

  காக்கா அவர்களின் ஆக்கங்கள் அனைத்தும் அருமை. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers