.

Pages

Friday, May 24, 2013

கவியன்பன் கலாமின் 'அன்பு'

அன்பெனும் இனியநீர் மனமெனும் கேணியில்
     ஆழமாய் ஊறிட உயிராம் __  கயிற்றால்
     ஆங்குள உணர்வெனும் வாளி __ கொண்டுக்
கண்களாம் குடங்களில் ஊற்றிடக் கொட்டிடும்
    கண்களில் நீர்மழை கண்டால்__ அந்தக்
     கணபொழுது அன்பினை அறிவாய் !

அள்ளிநீ கொடுப்பதால் குறைவிலாச் செல்வமாய்
     அளவிலா வகையினில் திரும்பிக் __ கிடைக்கும்
      அற்புதச் சூட்சமம் அறிந்தால் __ மீண்டும்
உள்ளமே நிரப்பிடும் அன்பெனும் சுவையினை
    உலகெலாம் பரப்பிட நினைப்பாய் __ இந்த
    உன்னத விலையிலா அன்பை!

பக்தியாய்ப் பாசமாய் நட்பெனும் காதலாய்ப்
    பலவேறுக் கிளைகளைக் கொணட __ இம்மரம்
    பாரெலாம் நிறைவுடன் காண்பாய்__ இதன்
சக்திதான் என்னவாம் சந்தேகப் புயலிலும்
   சரிந்திடா வண்ணமாய் உறுதி __ கொள்ளும்
   சாதனை ஆணிவேர் அன்பே !

உலகமும் சுழல்வது உன்னத அன்பினால்
   உண்மையை உணர்வது உன்றன் __ கடனாம்
   உலகினைச் சுற்றியும் அன்பின்___ வேலி
கலகமும் தடுத்திடும் மெல்லிய நூலிழைக்
    காவலாய் அன்பெனும் உணர்வு ___ இருத்தல்
    கண்டுநீ போற்றிடு அன்பை!

மன்னவன் அன்பினால் அடிமையாய் மாறிட
     மயக்கிடும் மருந்தென அன்பு __செய்யும்
     மாயையை வியந்தனன் அஃதே __ போலச்
சின்னவன் குழந்தையாய்க் கிழவரும் மாறிடச்
    செய்திடும் வேலையும் அன்பு__ மட்டும்
    சிறந்தவோர் அற்புதமாய்க் கண்டேன்!

தட்டிடும் வேளையில் உறவுகள் சினத்தினால்
    தள்ளியே போய்விடும் எட்ட __ இயலாத்
    தூரமாய் விரைவுடன் என்பதால்- அன்பால்
கட்டிடும் உத்தியே சிறப்பென நெருக்கமாய்க்
   கட்டிநீ அணைப்பதால் எவரும் ___ உன்னைக்
   கலந்துதான் பேசுவர் அறிக!

குழந்தைகள் கிறுக்கலைக்  கொஞ்சியே மதித்திடு
    கவிதையாம் அஃதென வாழ்த்து__ உன்னைக்
    கண்டதும் அன்புடன் வருவர்__ என்றும்
பிழைகளைப் பொறுத்தலில் மிஞ்சிடும் அன்பினால்
    பிஞ்சுளம் பொழிந்திடும் பாச __ மழையாய்ப்
     பின்னரும் வருவரே  பேச!

என்பினை அசைத்திடும் இசையென அறிந்திடு
.  எதுவுமே அன்பினில் அடங்கும் __ இயக்கம்
    என்பதை உணர்ந்திட வேண்டும் __ அதனால்
அன்பினால் மோத்திடும் சப்தமே இசையென
    அறிந்திட முடியுமே அன்பு __ மனத்தில்
    ஆழமாய்ப் பதிந்திடும் போதில் !

(வேறு)

அடைக்கின்ற தாள்களின்றித் திறந்த உள்ளம்
      அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
      தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
       படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
      கிளைகளையும் கேண்மையையும அன்பால் நேசி

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 25-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

19 comments:

  1. கவிக்குறளைப் போல கவிதையும் மிக அன்பாக இருக்கிறது.

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பரந்த மனம் படைத்தது உங்களின் மனம் மட்டுமன்று; இந்த சமூக விழிப்புணர்வுப் பக்கங்களும் தான் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டிருக்கும் உங்களின் அன்புக்கு ஈடுமுண்டோ, விழிப்புண்ர்வு வித்தகரே!

      அண்மை காலமாக, அடியேன் மன அழுத்தம் குறைவதற்கான “பயிற்சி வகுப்பு”க்குச் சென்று வருகிறேன்; அங்குச் சொல்லப்பட்ட ஒரு போதனையில்:

      “அடுத்தவர்க்கு ஊக்கம் என்னும் “இன்ஸ்பிரேஷன்” கொடுக்கும் பொழுது கொடுத்தவரும், கொடுக்கப்பட்டவரும் மகிழ்ச்சி என்னும் பேரின்பத்தை அடைகின்றார்கள்”

      இந்த பாடத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சத்தியமாக உங்களின் நினைப்புத் தான் என் மனத்தினில் தோன்றியது விழிப்புணர்வு வித்தகரே! அதனை நிரூபிக்கும் வண்னம், எல்லாக் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் “ஊக்கப்படுத்தும்” இன்ஸ்பிரேஷன் என்னும் மருந்தினை உங்கள் கைவசம் வைத்திருப்பதை அறிந்து கொண்டேன்.

      உங்களின் அன்பான வாழ்த்துரைக்கு என் அகம் நிறைவான நன்றிகள்.

      Delete
  2. Replies
    1. jazakkaallahu khaira, my dear niece Parveen Ayisha.

      I have not seen your comments for some weeks. Anyway, Now I am so glad to see your memorable comment.

      Delete
  3. கவிதைக்கு ..

    கரு மட்டும் போறாது..

    அதற்கு சூழல் அமைத்து ..

    உயிரற்ற பொருளாக இருந்தாலும்

    அதன் பயண அறிந்து ..மனித குணத்தை

    அதனுடன் பொருந்தும் படி அமைத்து

    நல்ல கவி பாடும் திறமை கவியன்பரிடம்

    கொட்டி கிடக்கிறது ..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. காணும் காட்சிகளில், பொருட்களில் எல்லாம் “கரு” உள்ளது; அதனைக் கவிக் குழந்தையாய் உருவாக்கிப் பிரச்விப்பதே கவிஞர்களில் பணி என்பதை மிக அழகாகச் சுட்டிக் காட்டி வாழ்த்துரையளித்த அதிரைத் தமிழூற்று அவர்கட்கு என் நன்றி; குறிப்பாக, நீங்கள் சென்ற வாரம் எழுதிய ஆக்கத்திற்கும் இக்கவிதைக்கும் ஒரு தொடர்புள்ளதைக் கவனித்தீர்களேயானால்,
      மீண்டும் சொல்லலாம். உங்களின் எண்ணமும் எழுத்தும் என்னுடைய எண்ணமும் எழுத்துக்கும் ஒத்துப் போகும் ஒரே மாதிர்யானவைகள் என்பதை உணரலாம்.

      Delete
  4. கவி அய்யா அவர்கட்கு,

    அன்புக்கு மொழி உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. கிடையாது, அஃதே போல், இசைக்கும் மொழி என்பது கிடையாது. என் இந்தக் கவிதையில் :

      \\என்பினை அசைத்திடும் இசையென அறிந்திடு
      . எதுவுமே அன்பினில் அடங்கும் __ இயக்கம்
      என்பதை உணர்ந்திட வேண்டும் __ அதனால்
      அன்பினால் மோத்திடும் சப்தமே இசையென
      அறிந்திட முடியுமே அன்பு __ மனத்தில்
      ஆழமாய்ப் பதிந்திடும் போதில் ! \\

      என்ற வரிகள் கூறும் பேருண்மையும் அஃதே!

      வினா விடுத்து விடையறிய நாடி வாழ்த்தும் அளித்த தமிழன் அய்யா அவர்கட்கு நன்றி.

      Delete
  5. சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வாசித்த அன்பு மொழிகள்

    1. இசைக்கு மொழியில்லை என்பதைப் போல அன்புக்கும் மொழி தேவையில்லை! - அன்னை தெரசா

    2. அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்பவராகக் கருத முடியாது! - விவேகானந்தர்

    3. பயன் கருதி அன்பு காட்டுவதைவிட, காட்டாமல் இருப்பதே மேல்! - செனகல்

    4. அன்பான செயல் மருந்து மட்டுமல்ல, நல்ல வாழ்த்தும்கூட! - கதே

    5. அன்பின் தன்மைக்கேற்பவே, செயல்களும் இருக்கும்! - சாக்ரடீஸ்

    6. அன்பும் மரியாதையும் கொண்டிருப்பவன் இந்த உலகில் எதையும் சாதித்து விடுவான்! - ரிக்டர்

    7. அன்புதான் உலக மகா சக்தி! - புத்தர்

    8. தூய அன்பு அச்சத்தைத் துரத்தி விடும்! - பைபிள்

    ReplyDelete
    Replies
    1. "நிழலைப் போல அன்பு என்னும் ஆற்றலைப் பின் தொடரும், அமைதி! “

      Delete
  6. அன்பின் கவியன்பரின் அன்புக்கவி
    ஆதங்கப்பட வைத்த கவி.

    அன்பை அளவிட முடியாத வரிகளில் நிரப்பியிருந்தீர்கள்.அருமை.

    வாழ்த்துக்கள் அன்புடன்.

    ReplyDelete
  7. ஆம். அன்புக் கவிஞரே! அன்பை என்றும் எதிலும் அளவிட இயலாது. வரி வரம்புகள் இன்றியே வனைய முடியும்; ஆயினும், வாசிப்பின் வரம்பை எண்ணி விரிவஞ்சி விடுத்தனன்.

    அளவிலா உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    கவிதையில் அன்பு.
    பதிவில் அன்பு.
    படிப்பதில் அன்பு.
    பின்னூட்டத்தில் அன்பு.
    இன்னும் எத்தனை அன்பு.

    கவிதை அருமை, மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. எதுவரை உங்களின் அன்பும் ஆதரவும் உளவோ, அதுவரை என் கவிதைகளும் பதியப்பெறும். அன்பு மச்சானின் அன்பு வர்ணணைக்கும் வாழ்த்துரைக்கும் என் அன்பான நன்றிகள்!

      Delete
    2. மச்சான் உங்கள் நன்றியை ஏற்றுக்கொண்டேன்.

      Delete
  9. அம்மா என்றால் அன்பு

    அப்பா என்றால் அறிவு

    அன்பிலார் என்றும் தமக்குரியர்
    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

    ReplyDelete
    Replies
    1. அம்மாவின் அன்புக்கு ஈடில்லை என்பதாற்றான், “அம்மா என்னும் அன்பை நேசி” என்று முந்தைய கவிதைக்குத் தலைப்பிட்டேன்; அதனால், தொடரும் இக்கவிதைக்கு “அன்பு” என்ற கருவெடுத்து அமைத்தேன்; என் இந்த அன்புக் கவிதைக் குழந்தைக்கு உங்களின் பாச முத்தங்களாய்ப் பாராட்டுகள் கிடைக்க, என் கவிதைக் குழந்தையும் அன்பால் நன்றி கூறிக் கொண்டேயிருக்கும்.

      வாழ்த்துக்கு நன்றி, தொழிலதிபர் அவர்களே! இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் ஊரில்-நேரில் சந்திப்போம்.

      Delete
  10. அன்பிற்க்கு ஏது ஈடு அளவில்லா அன்பு ஒருபோதும் பொய்யாகாது படைப்புக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.அன்பர் கவிக்குறள் அபுல் கலாம் காக்கா அவர்களே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. என் அன்பு நேசர் என்பால் வைத்திருக்கும் அன்பால் எங்கெலாம் என் கவிதைகள் பதியப் பெற்றுள்ளதோ, அங்கெலாம் சென்று தன் அன்பைச் சொல்லும் உங்களின் அன்புக்கும் ஈடில்லை நேசரே!

    உங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் என் அன்பான நன்றிகள்!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers