.

Pages

Thursday, May 23, 2013

வயதென்ன

கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
... வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

"கவிஞனே... கவிஞனே... உன் வயதென்ன?"

நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

"ஓ..... கவிஞனே... கவிஞனே....
உன் வயதென்ன....?"

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ.... நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ... போ....
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்...
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டது

அன்புடன் புகாரி

12 comments:

  1. // ஙஞணநமனமாய்த் தணிந்த
    கசடதபறச் சூரியன் //

    கவிஞரே இதன் பொருள் என்ன ?

    ReplyDelete
  2. வல்லினச் சூரியன் மெல்லினமாய்த் தணிந்தது

    கொடுஞ் சூரியன் குழையத் தொடங்கியது

    கசடதபற = தமிழின் வல்லின எழுத்துக்கள்
    ஙஞணநமன = தமிழின் மெல்லின எழுத்துக்கள்

    ReplyDelete
  3. // கசடதபற = தமிழின் வல்லின எழுத்துக்கள்
    ஙஞணநமன = தமிழின் மெல்லின எழுத்துக்கள் //

    விளக்கத்திற்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  4. ரசித்து படித்து மகிழ்ந்தேன் :)

    ReplyDelete
  5. ஞானத்தின் திறவுகோல்!

    ReplyDelete
    Replies
    1. // ஞானத்தின் திறவுகோல்! // நாயகம் அல்லவா

      ஹனிபா பாட்டின் முதல் வரி தானே கவிக்குறள் ?

      Delete
  6. மிக அருமையான பதிவு !

    ReplyDelete
  7. கவி நடைகள் ரசிக்கும்படியும் யோசிக்கும்படியும் இருந்தது.

    ///ஓ.... நண்பனே
    கவிஞனுக்கு ஏதடா வயது?//


    வாழ்த்துக்கள் நண்பரே.!

    ReplyDelete
  8. ஆம் ..ஆம் ..கவிஞன்

    பிறக்கும் போது பெரியவன் ..

    இருக்கும் வரை இளையவன் ..

    மிக சரியாக சொன்னீர்கள் ..

    கவிஞர் வாலி ..அறுபது வயதிலும்

    இருபது வயது உள்ளம்

    வைரமுத்து அவர்கள் கவி

    அன்று பூத்தமலரின் மனம்

    ReplyDelete
  9. வல்லினத்தையும்
    மெல்லினத்தியும்
    சூரியனோடு ஒப்பிட்டதில்
    உங்கள் கவித்திறமை
    மேலோங்குகிறது
    கொட்டிய வெயில்தான்
    வார்த்தை பிழையாய் படுகிறது

    ReplyDelete
  10. அருமை வரிகள் கவிக்குறளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers