.

Pages

Monday, June 3, 2013

திரண்ட வளமும்... சுரண்டல் கொள்கைகளும்...

சிறு வயதில் ஒரு கதை படித்த அல்லது கேட்ட நினைவு.

ஒரு ஊரை அடித்து உலையில் போடுபவனும் மற்றொரு ஒன்றுமறியா அப்பாவியும் கூட்டாக ஒரு தொழில் செய்ய முடிவு செய்தார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்து கடைசியில் விவசாயம் செய்யலாம் என்று தீர்மானித்தார்கள். நெல் பயிரிடுவது என்று முடிவானது. அயோக்கியன் சொன்னான் விளைவதில் நிலத்துக்கு மேலே இருப்பது எனக்கு கீழே உள்ளது உனக்கு என்று. அப்பாவி ஒப்புக்கொண்டான். உழைத்து விளைந்த பயிரை எல்லாம் அயோக்கியன்  அடித்துக்கொண்டு போனான். அப்பாவிக்கு  தரைக்குக் கீழே இருந்த புல் பூண்டே கிடைத்தது. அவன் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்த அயோக்கியன் இந்த முறை இன்னொரு பயிர்  போடலாம். நீ தரைக்கு மேலே இருப்பதை எடுத்துக்கொள் நான் தரைக்கு கீழே இருப்பதை எடுத்துக்கொள்கிறேன் கணக்கு சரியாகிவிடும் என்றான். அப்பாவி சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். விளைவித்த பயிர் மரவள்ளிக் கிழங்கு.   அறுவடை வந்ததும் ஒப்பந்தப்படி தரைக்குக் கீழே இருந்த கிழங்குகளை அநியாயக்காரன் அள்ளிக்கொண்டு போனான். அப்பாவி  தலையில் கைவைத்துக் கொண்டு ஐயோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டான். இந்த கதை போலத்தான் இருக்கிறது இந்தியா அரசு தனது மூலவளங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு மக்கள் தலையில் கை வைத்துக்கொண்டு இருப்பது.

ஒரு நாட்டின் செல்வ வளம் என்பது அந்த நாட்டில் கண்ணுக்குத் தெரியும் இயற்கை வளங்கள் மட்டுமல்ல. நாட்டில் நிலத்துக்கடியில் மறைந்து கிடக்கும் மூலவளங்களும்தான். இந்திய நாட்டின் பூகோளப்பாடத்தை பள்ளிகளில் படிக்கும்போது வாயில் நுழையாத பெயர் கொண்ட  கனிம வளங்கள் எல்லாம் இந்நாட்டில் இருப்பதைப் படித்து இருக்கிறோம். போதாக்குறைக்கு நமது கவிஞர்கள்  நாட்டில் ஓடும நதிகள் முதல் – மலைகள் முதல் –பூமிக்கடியில் புதைந்திருக்கும் இரும்பு, செம்பு, தங்கம், நிலக்கரி முதலிய அனைத்து செல்வங்களைப் பற்றியும் வரிவரியாகப் பாடி இருககிறார்கள்.

அரபு நாடுகளில் கடலுக்கடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் அந்த நாடுகளின் பொருளாதார நிலையை உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டன. அண்மையில் ஆபிரிக்க நாடான அங்கோலாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரச்சுரங்கங்கள் அந்த நாட்டின் பொருளாதார நிலையை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இருக்கின்றன. இதேபோல்  தென் ஆப்ரிக்காவின் தங்க சுரங்கங்களும், சீன, மலேசியா, தாய்லாந்து நாடுகளின்  டின் வளமும், வட அமெரிக்காவின் வெள்ளியும், சீனா, அமெரிக்க, ஆஸ்திரேலியாவின் நிலக்கரியும் , சீன, ரஷ்ய, பிரேசில் நாடுகளின் மக்நீசியமும், ஜெர்மனியின் அலுமணியமும், சீன, ஜெர்மனி, கொரியா, உக்ரைன் நாடுகளின் இரும்புத்தாதுக்களும் அந்தந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர  உறுதுணையாக நிற்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம்  தேசிய சொத்துக்களான கனிம வளங்கள் தேசத்தின் சொத்துக்களாகவே நிர்வாகிக்கப்படுவதுதான். நாட்டின்  மூலவளங்கள் பொது உடமையாக்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் இலாபங்கள் நாட்டின் பொது முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் அரசின் வருவாயாக ஆக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்கள் அந்த வருவாயிலிருந்து செய்யப்படுவதுதான்.

இந்தியாவிலும் மறைத்து கிடக்கும் கனிம வளங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. ஆனால் அது தொடர்பான நிர்வாகம் பாழ்பட்டுக் கிடக்கிறது. இந்த தேசத்தின் மக்களுக்குச் சொந்தமான   தேசியச் சொத்துக்கள். தண்ணீர் உட்பட்ட மூலவளங்கள், கனிம வளங்கள்  தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு சுரங்கம் தோண்டி சுரண்டப்படுகின்றன. இந்த தேசிய சொத்துக்கள் அரசியல்  காரணங்களுக்காக இந்த நாட்டின் பொதுமக்கள் நலனையும் பொருளாதார வளர்ச்சியையும் புறந்தள்ளிவிட்டு சொல்வாக்கும், செல்வாக்கும் படைத்த அரசியல்வாதிகளுக்கு அத்துமீறல்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. ஆந்திராவின் சுரங்க வளங்களை ஒரு சகோதரக் குடும்பம் கோடிகோடியாக கொள்ளையடித்து     குபேரர்களாயினர். இறுதியில் கைதாகி வழக்குத்தொடுக்கப்பட்டு ஜாமீனில் வெளிவர ஒரு நீதிபதிக்கு அவர்களால் கொடுக்கப்பட்ட இலஞ்சப்பணமே பத்துகோடிஎன்றால் அவர்கள் செய்த சுரங்க சுரண்டலின் பரிமாணம் எவ்வளவு இருக்கும் ?

அண்மையில் இரு பெரும் ஊழல்கள் வெட்டவெளிச்சமாகி – உண்மையில் வெட்ட வெட்ட வெளிச்சமாகி – தோண்டத்தோண்ட நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. ஒன்று, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் . இரண்டு, கிரானைட் கற்கள் உள்ளடக்கிய குவாரிகளின் சட்டத்துக்குப் புறம்பான கொள்ளைகள். இந்த இரண்டு கொள்ளைகளுக்கும் பின்னணியில் அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகள் இருந்தன . இருக்கின்றன. ஊடகங்கள் இப்போது இவைகளைப் பற்றி கதைகதையாய் அளந்துவிடுகின்றன. ஐந்து ரூபாய் கையில் இல்லாமல் தேநீர் கூட குடிக்க வசதியில்லாமல் திண்ணைகளில் சாக்கு மறைப்பைக் கட்டிக்கொண்டு படுத்துக்கிடக்கும் இந்நாட்டு    மன்னர்கள் தங்களுக்கு சொந்தமான செல்வங்களை இப்படி தனியார் சூறையாடுவதைப் பற்றி கவலைப்படாமல் கட்சி  ஊர்வலத்துக்கு லாரிகளில் ஆட்களை திரட்டிக்கொண்டு இருககிறார்கள்.

இப்போதெல்லாம் சில வியாபாரங்கள் அந்தப் பெயரால் வியாபாரம் என்று அழைக்கப்படுவதில்லை.  உதாரணமாக மணல் வியாபாரம் அப்படி அழைக்கப்படுவதில்லை. மணல கொள்ளை என்றே அழைக்கப்படுகிறது. அதேபோல் கிரானைட் வியாபாரமும், நிலக்கரி வியாபாரமும்  சுரண்டல் என்றும், சூறை என்றுமே அழைக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் வியாபாரம் நில மோசடி என்றே அழைக்கப்படுகிறது.  இதற்கு காரணம் இந்த துறைகளிலெல்லாம் நடைபெறும் வியாபாரங்கள் ஒரு நியாயமான ஒப்பந்தம், மற்றும்  இலாப உபரியின்  ( PROFIT MARGIN ) அடிப்படையில்  நடைபெறுவதில்லை. ரூபாய் ஐம்பத்தி ஐந்து ஆயிரத்துக்கு வாங்கப்பட்ட ஒரு அரசு ஒதுக்கீடு  மனை சமீபத்தில் ரூபாய் பதினெட்டு இலட்சத்துக்கு விற்கப்பட்டது ஒன்றே இதற்கு உதாரணம்.

நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் கடந்த ஏழு ஆண்டுகளில் தாங்கள் கட்சிகளுக்கு வளர்ச்சி நிதியாக பெற்ற தொகைகள் பற்றிய ஒரு அறிக்கையை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள ஒரு விபரத்தின் அடிப்படையில் தேசிய தேர்தல் கண்காணிப்புத் துறை வெளியிட்டு இருக்கிறது. நாம் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கும் மாநில மற்றும் தேசிய அரசியல் katchகட்சிகள் நடத்தும் அதிகார சூத்திரத்தின் அடிப்படையில் செய்யும் அரசியல் வியாபாரத்தில் அடைந்த இலாபங்களை இப்படி பட்டியலிட்டு இருக்கிறது.

காங்கிரஸ் 2348 CRORES,

BJP  994 CRORES,

BAHUJAN SAMAJ PARTY 484 CRORES,

MAXSIST COMMUNIST 417 CRORES,

SAMAJWADI  PARTY 278 CRORES,

ADMK 59 CRORES,

DMK 44 CRORES

ஆளும் பொறுப்பில் உள்ள கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் இந்த நன்கொடைகள்  செல்லக்காரணம் அவைகளின் வாயடைக்கவே. “நெல்லுக்கு இறைத்த  நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம்” என்று ஆரம்பப்பள்ளியில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது.  எந்த ஒரு தனியாருக்கும் விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கப்படும்  நாட்டின் சொத்துக்களின் இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் நன்கொடையாக செல்ல   வேண்டுமென்பது  தலைநகரில் நடைமுறையில் உள்ள சம்பிரதாயம். இந்த சதவீதத்தில் குளறுபடி  ஏற்பட்டால் அதுவே பாராளுமன்றம் முடக்கப்படுவதற்கும், கூச்சல் குழப்பம் எற்படுத்தப்படுவதற்கும் காரணம் ஆகும். கொடுக்கப்படவேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டால் ஊழலுக்கு காரணமான அமைச்சர் ராஜினாமா  செய்ய வேண்டாம். பெட்டி போய்விட்டால் பிள்ளைகள் சுட்டிப்பிள்ளைகள் ஆகிவிடும்.  

இப்படி அரசியல் கட்சிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் வேளையில் பல சிறு தொழில்கள் நசிந்துவிட்டன. விவசாயம் பொய்த்துவிட்டது. விலைவாசி ஏறிவிட்டது. மக்கள் கடனாளியாகிவிட்டனர். பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். கிராமியப் பொருளாதாரம் தனது அடையாளத்தை இழந்துவிட்டது. அரசு போடும் இலவசப் பிச்சைகளினால்  உழைத்து உண்ணும பழக்கம் மருகிவருகிறது.

வருமானம் வரும் வழி குறுகிப்போன நிலையில், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் வரும் வழிகளையெல்லாம் குறைந்த விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் ஜேப்படி திட்டங்களின் மூலம்  தனக்குத்தானே இழப்பை ஏற்படுத்திக்கொள்ளும் போக்கு, அண்மையில் அதிகமாக இருக்கிறது.

நிலக்கரி, கிரானைட், வெள்ளி, தங்கம், மக்னீசியம், ஜிங்க், இரும்புத்தாதுகள் போன்ற நாட்டின் செல்வங்கள் நிலத்துக்கடியில் நிறைய இருக்கின்றன. இவைகளை மட்டுமல்லாமல் பணி அளவில் 2G, 3 G, மற்றும் சில அரசுக்கு பெரும் இலாபம் ஈட்டித்தரும் துறைகள் சார்ந்தவைகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும்போது அரபு நாடுகளை அல்லது மற்ற உலகின் பாகங்களில் செய்வது போன்ற அரசு முறையான முறைகளை மேற்கொண்டு ஒதுக்கீடு  , விலை நிர்ணயம் மற்றும்   விற்பனை செய்தால் , ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு கோடிக்கணக்கில் இலாபம் வரும். அதை வைத்து அண்மையில் ஏற்பட்ட  டீசல் விலை உயர்வு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும். நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு அந்நிய நாட்டில் பதுக்கப்படுகின்றன. மக்களோ டீசல் விலை உயர்வை எதிர்த்து ஒரு  நாள் உண்ணாவிரதம் இருந்து  அந்த சடங்கை நிறைவு செய்கின்றனர். இப்படி  ஜனநாயகத்தின் பெயரில் நாட்டின் செல்வங்கள் சூறையாடப்பட்டு, மக்கள் நலனின் குரல்வளை நெறிக்கப்படுகிறது.

 ஜனநாயகம் பெற்றுப்போட்ட வேண்டாத பிள்ளைகளில் ஊழல் பிள்ளையே கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டிய  மூத்த பிள்ளை. இதனால் நாடு தனது மூலவளங்களை இழந்துகொண்டு இருக்கிறது. மூலவளங்கள் இழப்பு ஒரு நாட்டை திவாலாக்கி நாட்டு மக்களின் நலனுக்கு வேட்டுவைத்துவிடும்.

ஆபிரஹாம் லிங்கன் கூறினாராம்

DEMACRACY OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY THE PEOPLE –என்று ஆனால் உணமையில் நடப்பது

DEMACRACY OFF THE PEOPLE, FAR THE PEOPLE AND TO BUY THE PEOPLE- என்பதே. ஜனநாயகம் என்பது இன்று நாட்டில் நடப்பதைப்பார்த்தால் மக்கள் நலனை விட்டு விலகி  வெகுதூரம் போய் ஆள்வோர் மக்களை அழும் பிள்ளைக்கு வாழைப்பழம் தருவதுபோல் இலவசம் , மற்றும் ஓட்டுக்குப்  பணம் என்று விலைகொடுத்து வாங்கும் அவலத்துக்கு தள்ளி விட்டது.

எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.

'மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்'
இப்ராஹீம் அன்சாரி

12 comments:

  1. சமூக வளர்ச்சிக்கு பெரும் முற்றுக்கட்டையாக இருப்பது ஊழல் ! இவை முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.

    மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ ஊழல் இல்லாத பாரதம் வேண்டும்.

    நல்லதொரு ஆக்கம் ! வாழ்த்துக்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணருக்கு

    ReplyDelete
  2. // DEMACRACY OF THE PEOPLE, FOR THE PEOPLE AND BY THE PEOPLE –என்று ஆனால் உணமையில் நடப்பது

    DEMACRACY OFF THE PEOPLE, FAR THE PEOPLE AND TO BUY THE PEOPLE- என்பதே. ஜனநாயகம் என்பது இன்று நாட்டில் நடப்பதைப்பார்த்தால் மக்கள் நலனை விட்டு விலகி வெகுதூரம் போய் ஆள்வோர் மக்களை அழும் பிள்ளைக்கு வாழைப்பழம் தருவதுபோல் இலவசம் , மற்றும் ஓட்டுக்குப் பணம் என்று விலைகொடுத்து வாங்கும் அவலத்துக்கு தள்ளி விட்டது.//

    மிகச்சரியாகச் சொன்னீர் !

    இலவசம் என்பதின் பொருள் உங்களிடம் ஒன்றை வழங்கிவிட்டு மற்றொன்றை அதாவது அவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை உங்களிடமிருந்து மறைமுகமாகப் பெறுவதே.

    ReplyDelete
  3. இந்த ஏமாற்று வேலை என்று மாறுமோ...? மக்கள் உணர வேண்டும்... நல்லதொரு கட்டுரைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  4. Assalaamu alaikkum,

    As I am proceeding on vacation,I have disconnected my internet. For three more days, I could not attend all blogs and In Sha Allah, I will attend this blog on Saturday.

    Your article will awake those who dont know current politicians. Well said kaka. Congratulations!

    ReplyDelete
  5. பொருத்தமான உதாரணங்களுடன் ஊழலைப்பற்றிய விளக்க உரை அருமை.வாழ்த்துக்கள்.

    இத்தகைய படைப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் முனைவர் அவர்களே.!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அன்சாரிகாக்க,

    எப்போதாவது விடியுமா என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்,

    ReplyDelete
  7. அன்பின் தம்பி அப்துல் ஜலீல் ! தாங்கள் எனது கட்டுரையைப் படித்து கருத்திட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. தம்பி நிஜாம், கவிஞர் மெய்சா ஆகியோருக்கு நன்றி.

    திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்துக்கு இந்த தளத்தின் பதிவாளர்கள் அனைவரின் சார்பில் நன்றி .

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    திரண்ட வளமும், சுரண்டல் கொள்கைகளும்.... அடேங்கப்பா எடுவானுக்கும் படுவானுக்கும் இடைப்பட்ட தூரமா?

    அருமையான கட்டுரை, நிச்சயமாக ஒரு மாற்றம் வரணும், இல்லையேல் இந்த தூரம் கண்களுக்கு எட்டாத தூரமாக போய்விடும்.

    இன்னும் தொரட்டும் உங்கள் வரிகள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  10. தினசரி இதழ், தொலைக்காட்சி போன்றவற்றில் பார்க்கும் இன்றைய செய்திளில் ஊழலே முக்கிய பங்கு வகிப்பது நாட்டிற்கு பெரிய வெட்கக்கேடு.

    அரசியல் ஊழல், விளையாட்டு ஊழல், 2G ஊழல், நிலக்கரி ஊழல், கால்நடை தீவன ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என அடுக்கிக்கொண்டே இருக்கலாம்.

    இந்திய நாடு ஊழலில் நிரந்தரமாக சுதந்திரம் அடைவது காலத்தின் கட்டாயம்.

    சமூகத்தை புரட்டிப்போடக்கூடிய தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிப்பதில் மனமகிழ்வடைகிறது அய்யா.

    அய்யாவின் எழுத்துப்பணி வளர்க. நன்றி!

    ReplyDelete
  11. .விழிப்புணர்வு ஆக்கம் வாழ்த்துக்கள்.

    எல்லாத்துக்கும் காரணம் ஊழல் அதை கொடுக்கவேண்டிய ஆட்களுக்கு கொடுத்தால் இது போன்று சுரங்க கொள்ளைகள் நடக்கின்றன இது அரசாங்கத்துக்கும் தெறியும் ஆனால் ஊழல் என்ற போர்வையால் மறைக்கப்படுக்கிறது.

    ReplyDelete
  12. தம்பி ஜமால், சகோதரர் தமிழன், மற்றும் ஹபீப் அவர்களுடைய அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers